சசிகலா அணி எம்.எல்.ஏக்களுக்கு கோடிக் கணக்கில் பணம் கொடுக்கப்பட்டதா?

    • எழுதியவர், முரளீதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, செய்தியாளர்

சசிகலா அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள், அந்த அணியை ஆதரிக்க 6 கோடி ரூபாய் வரை பணம் கொடுக்கப்பட்டதாக அந்த அணியிலிருந்து ஓ. பன்னீர்செல்வம் அணிக்கு தாவிய சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பேசிய காட்சிகள் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால், இதில் சம்பந்தப்பட்ட அனைவருமே இதனை மறுத்திருக்கின்றனர்.

ஜெயலலிதா உடல்நலக் குறைவால் காலமான பிறகு, ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்துவந்தார். இந்த நிலையில், அவர் ராஜினாமா செய்த பிறகு அ.தி.மு.கவில் தனக்கென அணி ஒன்றை உருவாக்கினார்.

இந்நிலையில் சசிகலா பிரிவுக்கு ஆதரவாக இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள், புதிய அரசுக்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்வரை சென்னைக்கு அருகில் உள்ள கூவத்தூரில் ஒரு தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

சசிகலா தனது தலைமையில் அரசமைக்க ஆளுனர் அழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் தண்டிக்கப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்டார். அதற்குப் பிறகு எடப்பாடி கே. பழனிச்சாமி புதிய முதல்வராகத் தேர்வுசெய்யப்பட்டார்.

இந்த காலகட்டம் முழுவதும் சசிகலா ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அந்த விடுதியில்தான் தங்கவைக்கப்பட்டிருந்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த தினத்தில்தான் அவர்கள் நேரடியாக சட்டப்பேரவைக்கு அழைத்துவரப்பட்டனர்.

இதற்கிடையில், மதுரை மேற்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான எஸ்.எஸ். சரவணன், அங்கிருந்து புறப்பட்டுச் சென்று, ஓ. பன்னீர்செல்வத்தைச் சந்தித்து ஆதரவு அளித்தார். இருந்தபோதும், நம்பிக்கை வாக்கெடுப்பில் பழனிச்சாமி அரசு வெற்றிபெற்றது.

கூவத்தூரில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டதாகவும் பணம், தங்கம் ஆகியவை வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. ஆனால், அவை உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் திங்கட்கிழமையன்று தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சியில் எஸ்.எஸ். சரவணன் பேசுவது போன்ற ரகசியமாக பதிவுசெய்யப்பட்ட காட்சி ஒன்று ஒளிபரப்பானது.

தொடர்புடைய கட்டுரைகள்:

"எனது குரலைப் போல டப்பிங் செய்யப்பட்டிருக்கிறது"

அவரவர் தொகுதியிலிருந்து சென்னைக்கு வந்த சட்டமன்ற உறுப்பினர்களை சசிகலா தரப்பினர் விமான நிலையத்திலேயே சந்தித்து, 2 கோடி ரூபாய் தருவதாக வாக்குறுதியளித்ததாகவும் பிறகு ஆளுனரைச் சந்திக்கச் சென்றபோது, 4 கோடி ரூபாய் வரை தருவதாகக் கூறியதாகவும் பிறகு கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டிருந்தபோது 6 கோடி ரூபாய் வரை தருவதற்கு முன்வந்ததாகவும் சரவணன் கூறுவது போன்ற காட்சிகள் அதில் இருந்தன.

அதேபோல, அ.தி.மு.கவின் சின்னத்தில் போட்டியிட்ட பிற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 10 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாகவும் அதில் அவர் கூறினார். இதேபோல, சூலூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான கனகராஜும் கூறியதாக காட்சிகள் ஒளிபரப்பாயின.

இந்தக் காட்சிகளை ஒரு தனியார் தமிழ் தொலைக்காட்சியைச் சேர்ந்தவர்கள் பதிவுசெய்து, ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அளித்திருந்தனர்.

இந்தக் காட்சிகள் திங்கட்கிழமையன்று மாலையில் ஒளிபரப்பானதும், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ். சரவணன், கனகராஜ் ஆகியோர் இந்தக் காட்சிகளை மறுத்துள்ளனர். "அதில் கூறப்பட்டுள்ள எந்தக் கருத்தையும் நான் கூறவில்லை. எனது குரலைப் போல டப்பிங் செய்யப்பட்டிருக்கிறது" என எஸ்.எஸ். சரவணன் ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார்.

போலியான வீடியோக்கள்

கனகராஜ், இதுபோல தன்னைப் பற்றி அவதூறு பரப்புபவர்கள் மீது வழக்குத் தொடரப்போவதாகக் கூறியிருக்கிறார்.

அ.தி.மு.கவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட பிற கட்சியின் எம்.எல்.ஏக்களுக்கு பத்து கோடி வரை பேசப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், கருணாஸ், தமீமுன் அன்சாரி ஆகிய பிற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் இதனை மறுத்துள்ளனர்.

கூவாத்தூரில் தங்கவைக்கப்பட்டிருந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாக வாக்குறுதியளிக்கப்பட்டு, பணம் கொடுக்கப்பட்டதா என அங்கு தங்கியிருந்த மதுரையைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பாவிடம் பிபிசி கேட்டபோது, "கட்சி உணர்வுக்காக மட்டுமே ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும் என நினைத்தோம். அதனால்தான் எடப்பாடியை முதல்வராக்க ஒப்புக்கொண்டோம். பணம் வாங்கியதாகச் சொல்வது அபாண்டம்" என்று தெரிவித்தார்.

கூவத்தூரில் தான் நடனமாடியதைப் போல போலியான வீடியோக்கள் எல்லாம் வெளியானதைச் சுட்டிக்காட்டும் ராஜன் செல்லப்பா, சரவணனே இதனை மறுத்துவிட்டதால், இது குறித்து விவாதிக்கவே வேண்டியதில்லை என்று கூறினார்.

பேரம் நடக்கவில்லை

தற்போது சசிகலா அணியில் உள்ள ராஜன் செல்லப்பாவும் ஓ. பன்னீர்செல்வம் அணியில் உள்ள சரவணனும் ஒரு விழாவில் ஒரே மேடையில் பங்கேற்றனர். அப்போது, சரவணனுக்கு பேரம் பேசப்பட்டதாகவும் அவர் விரைவில் சசிகலா அணிக்கு மாறவிருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

"அவர் அ.தி.மு.கவின் சட்டமன்ற உறுப்பினர். ஒரு விழாவில் ஒன்றாக பங்கேற்றால் பேரம் பேசுவதாகக் கூறுவதா? அப்படியான பேரம் ஏதும் நடக்கவில்லை" என்று தெரிவித்தார் ராஜன் செல்லப்பா.

இதற்கிடையில், தமிழக சட்டப்பேரவையில் பழனிச்சாமி அரசு மீது பிப்ரவரி 18ஆம் தேதி நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக்கோரி ஏற்கனவே தி.மு.க. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தது. அந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை - 15ஆம் தேதி நடக்குமென அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக ஆஜரான தி.மு.கவின் வழக்கறிஞரான சண்முகசுந்தரம், நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக புதிய ஆதாரங்கள் வெளியாகியிருப்பதால் வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டுமெனக் கோரினார்.

இதையடுத்து இந்த வழக்கு வரும் வெள்ளிக்கிழமையன்று விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சசிகலா தரப்போ, முதல்வர் எடப்பாடி தரப்போ எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர்செல்வம், "சரவணன் விரிவான விளக்கத்தை அளித்திருக்கிறார். நாங்களும் அவரிடம் விசாரிப்போம்" என்று மட்டும் கூறிவிட்டு, வேறு கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

பரபரப்பான இந்தச் சூழலில் தமிழக சட்டப்பேரவை நாளை கூடவிருக்கிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்