கூவத்தூரில் இருந்து மாறுவேடத்தில் தப்பி வந்தேன்: ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ

கூவத்தூரில் சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் விடுதியிலிருந்து மாறுவேடத்தில் தப்பிவந்து, முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு கொடுப்பதாக மதுரை தெற்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தெரிவித்திருக்கிறார்.

முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை இன்று அவரது இல்லத்தில் சந்தித்த சரவணன், சசிகலா கூவத்தூருக்கு வருவதற்கு முன்பாக டி-ஷர்ட், அரைக்கால் சட்டை அணிந்து, அடையாளம் தெரியாத வகையில் கூவத்தூர் விடுதியிலிருந்து வெளியேறியதாகத் தெரிவித்தார்.

கூவத்தூரில் தங்கியுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும் மன உளைச்சலில் உள்ளதாகவும் அவர் கூறினார். இதன் மூலம் ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவளிக்கும் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.

மதுரைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணனும் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்து தன் ஆதரவைத் தெரிவித்தார். நடிகர் ராகவா லாரன்ஸும் முதலமைச்சருக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளார்.