You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
15 ஆண்டுகளாக சசிகலாவால் துன்பத்தை அனுபவித்தேன்: பன்னீர்செல்வம்
அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் கூவத்தூர் விடுதியில் குண்டர்கள் காவலுக்கு இருப்பதாகவும் அவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியிருக்கிறார்.
கூவத்தூரில் சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்த சிறிது நேரத்திற்குப் பிறகு சென்னையில் தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.க்கள் தமது தொகுதி மக்களின் மன நிலையை அறிந்த பிறகு தங்கள் ஆதரவு யாருக்கு என்பதை முடிவுசெய்ய வேண்டுமெனக் கூறினார்.
உள்துறை முதல்வர் வசம் இருப்பதால், அந்த எம்.எல்.ஏ.க்களை ஏன் காவல் துறை மூலம் மீட்கக்கூடாது என கேள்வியெழுப்பப்பட்டபோது, அசாதாரண சூழல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் அம்மாதிரி நடவடிக்கையில் இறங்கவில்லையென்று கூறினார்.
சசிகலா தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்திப்பது குறித்துப் பேசிய ஓ. பன்னீர்செல்வம், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவர் மட்டுமே ஜெயலலிதாவைப் பார்த்து வந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்து உண்மை நிலையை ஏன் தெளிவுபடுத்தவில்லையென்று கேள்வியெழுப்பினார்.
மேலும் முதல் முறையாக ஜெயலலிதா தன்னை முதலமைச்சராக்கிய காலகட்டத்திலிருந்து தற்போது வரையிலான 15 ஆண்டு காலத்தில் சசிகலாவால் தான் பட்ட துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் அளவில்லையென்றும் ஜெயலலிதா யாரோடு அன்பு பாராட்டினாலும் சசிகலாவால் பொறுக்க முடியாது என்றும் பன்னீர்செல்வம் கூறினார்.
ஜெயலலிதாவின் ரத்த சொந்தமான தீபாவை ஜெயலலிதா இறந்த பிறகுகூட அவரது சடலத்தின் அருகில்கூட அனுமதிக்கவில்லையென பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார்.
சசிகலா எம்எல்ஏக்கள் மத்தியில் பேசும்போது தன்னைத்தானே சிங்கம் என்று சொல்லிக்கொள்வது வடிவேலு நானும் ரவுடிதான் என்று கூறிக்கொள்வதைப் போல இருக்கிறது என்று கேலியாகச் சொன்னார்.
மேலும் திங்கட்கிழமை தமிழக தலைமைச் செயலகத்திற்குச் சென்று பணிகளைக் கவனிக்கப்போவதாகவும் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை தன்னால் நிரூபிக்க முடியுமென்றும் பன்னீர்செல்வம் கூறினார்.
ஜெயலலிதா 145 படங்களில் பெரும் சிரமப்பட்டு நடித்து சம்பாதித்த சொத்துகள் கட்சிக்குத்தான் சொந்தமென்றும் பன்னீர்செல்வம் கூறினார்.
இதற்கிடையில் தேனி தொகுதியின் எம்.பி.யான ஆர். பார்த்திபனும் தனது ஆதரவை ஓ. பன்னீர்செல்வத்திற்குத் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் அவருக்கு ஆதரவளிக்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்