ஓ. பன்னீர்செல்வத்திற்கு இன்று மட்டும் 5 அ.தி.மு.க எம்பிக்கள் ஆதரவு

தமிழ்நாட்டில் தற்போது நிலவும் அதிகாரப் போட்டியில் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு இன்று மட்டும் ஐந்து அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் அவருக்கு ஆதரவு தெரிவித்த எம்பிக்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. 

வேலூர் தொகுதியின் எம்பி செங்குட்டுவன், தூத்துக்குடி தொகுதியின் எம்பி ஜெய்சிங் தியாகராஜ், பெரம்பலூர் தொகுதியின் எம்பி மருதராஜ் ஆகியோர் இன்று காலையில் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்குச் சென்று அவருக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். 

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு எம்பிக்கள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களில் ஒருவரைக் கட்சிப் பதவியிலிருந்து நீக்கி சசிகலா உத்தரவிட்டிருக்கிறார்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் லட்சுமணனும் அத்தொகுதியின் மக்களவை உறுப்பினர் ராஜேந்திரனும் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

மாநிலங்களவை உறுப்பினர் லட்சுமணன் அ.தி.மு.கவின் விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளராகவும் இருந்துவந்தார். முதல்வரை சந்திக்க வரக்கூடும் என்று செய்திகள் வெளியாக ஆரம்பித்தபோதே லட்சுமணனை மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா, புதிய மாவட்டச் செயலாளராக அமைச்சர் சி.வி. சண்முகத்தை நியமித்தார்.

ஏற்கனவே மைத்திரேயன், அசோக்குமார், சுந்தரம், சத்தியபாமா, வனரோஜா ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவை ஓ. பன்னீர்செல்வத்திற்குத் தெரிவித்துள்ளனர். 

தற்போது, முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.

நடிகர்கள் ராமராஜன், தியாகு ஆகியோரும் ஆதரவு

அ.தி.மு.கவில் நட்சத்திர பேச்சாளராக இருக்கும் நடிகர்கள் ராமராஜன், தியாகு ஆகியோர் இன்று காலை ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திரைப்பட நடிகருமான அருண் பாண்டியன் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்