You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'செளதி அரசர் ஷா சல்மானின் மனதில் கத்தார் மக்களுக்கு இடம் உண்டு'
மெக்காவில் உள்ள புனித அல்-ஹரம் மசூதிக்கு செல்ல கத்தாரை சேர்ந்த சிலருக்கு தடை விதிக்கப்பட்டதாக அரபிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
மெக்காவில் இருக்கும் அல்-ஹரம் மசூதி இஸ்லாமியர்களின் புனித மதத்தலம் ஆகும்.
அல்-ஹரம் மசூதிக்கு செல்ல முயன்ற சிலர் தடுக்கப்பட்டதாக கத்தார் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு புகார் வந்ததாக கத்தார் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை மேற்கோள்காட்டி தோஹாவைச் சேர்ந்த அல்-ஷர்க் நாளிதழ் இந்தச் செய்தியை வெளியிட்டது.
"இது மனித உரிமைகள் உடன்படிக்கையின் கீழ் வழங்கப்பட்டுள்ள மத சடங்குகளுக்கான உரிமைகளை அப்பட்டமாக மீறுகின்ற செயல்" என்று கத்தார் தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் அலி பின் ஷேக் அல் மர்ரி, அல்-ஷர்க் நாளிதழிடம் தெரிவித்தார்.
இது குறித்து செளதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், "செளதி அரசர் ஷா சல்மானின் இதயத்தில் இடம் பெற்றவர்கள் கத்தார் மக்கள்" என்று கூறப்படுள்ளது.
"கத்தார் நாட்டு மக்கள் செளதி அரேபிய மக்களின் சகோதரர்கள் போன்றவர்கள். செளதி அரசர், கத்தார் மற்றும் செளதி குடும்பங்களின் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளை கேட்கத் தயாராக உள்ளார்" என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுபோன்ற புகார்களை தெரிவிக்க, செளதி அரேபியா உள்துறை அமைச்சகம் ஹாட்லைன் எண்ணை வழங்கியுள்ளது
கத்தார் மற்றும் வளைகுடா நாடுகளிடையேயான உறவுகளில் கடந்த சில நாட்களாக பதற்றம் நிலவுகிறது.
கத்தார் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக குற்றம்சாட்டிய செளதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏமன், எகிப்து ஆகிய நாடுகள், உறவைத் துண்டித்துக் கொள்வதாக அறிவித்தன. கத்தாருக்கான பயணத்தடையையும் இந்த நாடுகள் அமல்படுத்தின. இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த கத்தார், இது, தங்கள் நாட்டின் இறையாண்மை மீதான தாக்குதல் என்று விமர்சித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமையன்று, இரான் பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் கொண்ட பல விமானங்களை கத்தாருக்கு அனுப்பியது.
இது உதவிக்காக அனுப்பப்பட்டதா அல்லது வணிக பரிமாற்றத்தின் ஒரு பகுதியா என்பது தெளிவாக தெரியவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்