You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவில் வசிக்கும் ஆஃப்ரிக்க பழங்குடியின மக்கள்
- எழுதியவர், நீலிமா வல்லாங்கி
- பதவி, பிபிசி
சரித்திரத்தை படித்தவர்கள் 'யாகூத்' பற்றி அறிந்திருக்கலாம். யாகூத் நீக்ரோ இனத்தை சேர்ந்தவர், டெல்லியின் சுல்தானா ரஜியாவுக்கு நெருக்கமான தளபதி. அது வரலாற்று ரீதியான ஒரு கதை. தற்போது, ஆஃப்ரிக்க பழங்குடியினர் எங்கு வசிக்கிறார்கள்? அவர்களின் பின்னணி என்று தெரிந்துக் கொள்ள்ளாமா?
'நீக்ரோ' என்பது பாரசீக வார்த்தை. இதன் பொருள் அபீசினியா வாசிகள். ஆப்பிரிக்க நாடான எதியோப்பியாவின் முந்தைய பெயர் அபீசினியா ஆகும்.
இன்றும் இந்தியாவில் பெருமளவிலான ஆஃப்ரிக்க பழங்குடியின மக்கள் வசித்துவருகின்றனர். இன்று இவர்கள் நீக்ரோக்கள் என்று அழைக்கப்படுவதில்லை, 'சித்தி' என்று அழைக்கப்படுகிறார்கள்.
இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர்.
இந்தியாவில் வசிக்கும் ஆஃப்ரிக்க வம்சாவளியைச் சேர்ந்த இவர்களின் எண்ணிக்கை தற்போது ஏறக்குறைய 20 ஆயிரமாக இருக்கலாம். கர்நாடகா, மகாரஷ்டிரா, குஜராத்தின் சிறிய கிராமங்களிலும், ஹைதிராபாதிலும் வசிக்கும் இவர்கள், ஆப்பிரிக்காவின் கிழக்குப்பகுதியின் 'பந்தூ' வம்சத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் எத்தியோப்பியாவில் இருந்து ஏழாம் நூற்றாண்டுவாக்கில் போர்ச்சுகீசியர்கள் மற்றும் ஆங்கிலேயர்களால் அடிமைகளாக அழைத்துவரப்பட்டனர்.
அடிமைகளாகவும், வணிகர்களாகவும், மாலுமிகளாகவும், கூலிப்படையினராகவும் அழைத்துவரப்பட்ட இந்த மக்கள் காலப்போக்கில் இங்கேயே தங்கிவிட்டார்கள். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலும் 'சித்தி' மக்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர்.
18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டதும், மீண்டும் யாரும் தங்களை அடிமைப்படுத்திவிடாமல் இருக்க, இந்த சமுதாயத்தினர் காடுகளுக்குள் சென்று வாழத் தொடங்கிவிட்டனர். இன்றும் இந்த சமுதாயத்தினர் ஆங்காங்கே வசிக்கின்றனர்.
ஆஃப்ரிக்காவில் இருந்து அடிமைகளாக அழைத்து வரப்பட்டவர்கள் 'ஹப்ஷீஸ்' என்று அழைக்கப்பட்டாலும், யாகூப் போன்ற பலர், தங்களது திறமையினால் உயர் பதவிகளை அடைந்தபோது, 'சித்தி' என்று சிறப்பு பட்டப்பெயர் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 'திறமை மிக்கவர்' என்ற பொருள்கொண்ட சையத்/சையீத் என்ற அரபு வார்த்தையில் இருந்து மருவி வந்த பெயர் இது. இந்தியாவில் 'ஹப்ஷீஸ்' என்ற பெயர் 'சித்தி' என்று எப்போது மாறியது என்று தெரியவில்லை. ஆனால், தற்போது இந்தியாவில் வசிக்கும் ஆஃப்ரிக்க பழங்குடியினர் சித்தி என்றே அழைக்கப்படுகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் வடக்கு கன்னட மாவட்டத்தில் இந்த சமூகத்தினர் பெருமளவில் வசிக்கின்றனர். காடுகளில் வசிக்கும் இந்த மக்களைப் பார்த்தால், ஆஃப்ரிக்க வம்சா வளியினர் என்று சொல்ல முடியாது. ஆனால், நெருங்கிச் சென்று பார்த்தால் அவர்களது சுருள்முடி, பரம்பரையை பறைசாற்றிவிடுகிறது.
இந்தியர்களைப் போன்ற வாழ்க்கைமுறை
கன்னடம் மற்றும் கொங்கணி என உள்ளூர் மொழிகளையே பேசும் இந்த சித்தி மக்கள், உடுத்துவதும் இந்தியர்களைப் போலவேதான். மஞ்சுளா, செலெஸ்டியா, ஷோபீனா, ரோம்நச்னா போன்ற இந்திய, அரேபிய மற்றும் போர்த்துகீசியர்களின் பெயர்களையே வைத்துக் கொள்கின்றனர். குடும்பப் பெயராக கர்மேகர் மற்றும் ஹர்னோட்கர் போன்ற இந்திய பெயர்களையே வைத்துக் கொள்கின்றனர்.
சித்தி சமூகத்தை சேர்ந்தவர்களில் பலர் சூஃபி முஸ்லிம்கள். கர்நாடக மாநிலத்தில் வசிப்பவர்களில் பெரும்பான்மையோர் கிறித்துவ மதத்தின் கத்தோலிக்கப் பிரிவை சேர்ந்தவர்கள்.
இந்தியாவில் வசிக்கும் ஆப்பிரிக்க சமுதாயத்தினர், சிறப்புமிக்க, பிரபலமான பல கட்டிடங்களை கட்டியுள்ளனர். அகமதாபாதில் உள்ள புகழ்பெற்ற சித்தி சையத் மசூதி, மும்பைக்கு அருகே 'முருத்' தீவில் அமைந்துள்ள கோட்டை சித்தி மாலிக் அம்பரால் கட்டப்பட்டது.
இந்தியாவில் நீண்டகாலமாக வாழ்ந்துவரும் இவர்கள், உணவு, உடை, பழக்க-வழக்கங்கள் என எல்லாவிதங்களிலும் இந்தியர்களாகவே மாறிவிட்டார்கள்.
அவர்கள் இந்தியர்களாகவே மாறிவிட்டாலும், அரசும், பிற மக்களும் இவர்களை முழுமையாக தங்களுடையவர்களாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பது வருத்தத்திற்குரிய விசயம். விவசாய தொழிலாளிகளாகவும், இதர உடல் உழைப்பு பணிகளிலும் ஈடுபடும் இவர்கள் காடுகளிலும், தொலைதூர கிராமங்களிலும் வசிக்கின்றனர், கடுமையான உழைப்பையே வாழ்வாதாரமாக கொண்டிருக்கின்றனர்.
சித்தி சமுதாயத்தினர் இந்தியாவில் மைய நீரோட்டத்தில் இருந்து விலகி இருப்பதால், அவர்களுக்கான வேலைவாய்ப்பும், முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளும் குறைவாகவே இருக்கின்றன. வறுமை காரணமாக கல்வி என்பது எப்போதுமே இவர்களின் முன்னுரிமையாக இருந்ததில்லை. வலிமையான உடலைக் கொண்ட சித்தி இன மக்கள் முன்னேறுவதற்கான ஒரே வாய்ப்பு விளையாட்டுத் துறைதான்.
அவர்களிடம் இருக்கும் இயல்பான விளையாட்டுத் திறனை ஊக்குவித்தால், பதக்கம் வெல்லும் வாய்ப்புகள் இருப்பதை 1980-களில் இந்திய அரசு கண்டறிந்தது. அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் மார்கரெட் ஆல்வா தலைமையிலான இந்திய விளையாட்டு ஆணையம், ஆஃப்ரிக்க சமூகத்தினருக்கு ஒரு தடகள பயிற்சி வழங்கும் திட்டத்தை தொடங்கியது.
ஆஃப்ரிக்க வம்சாவளியைச் சேர்ந்த சித்தி சமூகத்தினரின் திறமையை, வலிமையை விளையாட்டுத் துறைக்கு திருப்பிவிடும் இந்தத் திட்டம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்த சமூகத்தினரை மேம்படுத்துவதற்கான சிறப்பான திட்டம் நிர்வாக சிக்கல்களில் சிக்கி முடங்கிப் போனதோடு, அவர்களின் முன்னேற்றப் பாதைக்கான வழிக்கும் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இருந்தபோதிலும், முதன்முறையாக நாடு முழுவதும் இருந்த சித்தி இன மக்கள் ஒருவரையொருவர் சந்தித்து, தங்களது வம்சாவளி, பரம்பரை குறித்த தகவல்களை பரிமாறிக்கொள்ள ஒரு தளம் கிடைத்த்து.
ஆஃப்ரிக்க பழங்குடியின இளைஞர்களுக்கு, 'ஆஸ்கர் அறக்கட்டளை' மற்றும் 'ஸ்கில்ஷேர் சர்வதேச அமைப்பு' போன்ற அமைப்புகள் பல்வேறு விளையாட்டுகளில் பயிற்சி கொடுக்கின்றன. அவர்களிடையே கால்பந்து விளையாட்டு பிரபலமானதாக இருக்கிறது. சிலர் ஓட்டப் பயிற்சியும், இதர விளையாட்டுக்களிலும் பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்திய விளையாட்டு ஆணையத்தின் திட்டத்தின் பலன்களைப் பெற்றவர்களில் ஒருவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஜுஜே ஜாக்கி ஹர்னாட்கர். இந்தத் திட்டத்தின்படி, 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் அவர் பயிற்சி பெற்றார். ஆனால், 1993-இல் அரசின் திட்டம் மூடப்பட்டதும், அரசு வேலைக்கு முயற்சி செய்த ஹர்னாட்கரின் முயற்சி வெற்றியடைந்தது.
தற்போது ஜாக்கி ஹர்னாட்கர், 14 சித்தி இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். நம்பிக்கை நட்சத்திரங்களான இவர்களை 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கச் செய்வதுதான் ஹர்னாட்கரின் லட்சியம். மூன்று தசாப்தங்களுக்கு பிறகு ஒரு நம்பிக்கை மீண்டும் முளைத்திருக்கிறது.
இதனிடையே, 2015 முதல் 2024 வரையிலான பத்தாண்டுகளை, ஆப்ரிக்க வம்சாவளியினரின் தசாப்தமாக ஐ.நா அனுசரிக்கிறது. எனவே இந்த முறையாவது விடாமுயற்சியுடன் சித்தி சமூகத்தினரை உயர்த்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், மறக்கப்பட்ட அந்த சமூகம் உயர்வதற்கும், ஒட்டுமொத்த சித்தி பழங்குடியினரும் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்