You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆண்டவன் தீர்மானித்தால் அரசியலில் ஈடுபடுவேன்: எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் ரஜினிகாந்த் பேச்சு
ஆன்மிகத்தை முழுமையாக நம்பும் தான், ஆண்டவன் தீர்மானித்தபடியே செயல்படுவதாகவும், ஒருவேளை நாளை அரசியலில் ஈடுபட ஆண்டவன் தீர்மானித்தால் அது நடைபெறும் என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
பணம் சம்பாதிக்க அரசியலில் ஈடுபடமாட்டேன் என்றும், ஒருவேளை அரசியலில் ஈடுபடும் நிலை ஏற்பட்டாலும் கூட பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை உடன்சேர்க்க மாட்டேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இதன்மூலமாக தான் அரசியலில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவே ரஜினிகாந்த் கருத்து வெளியிட்டுள்ளார் என்று விமர்சகர்கள் கருதுகின்றனர்.
சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று தொடங்கி நான்கு நாட்களுக்கு தனது ரசிகர்களை நேரில் சந்திக்கும் ரஜினிகாந்த், அவர்களுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் தொடக்க நாளான இன்று திங்கள்கிழமை, ரசிகர்கள் மத்தியில் உரையாடிய ரஜினிகாந்த் இவ்வாறு கூறினார்.
மேலும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவே இத்தனை ஆண்டுகள் தன்னால் தனது ரசிகர்களை சந்திக்க முடியாமல் போனதாக கூறிய ரஜினிகாந்த், இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் தன்னை வற்புறுத்திய காரணத்தால்தான் தற்போது இந்த ஏற்பாடுகளை செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
தான் ஒரு முறை அரசியல் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த சம்பவம் என்பது தனக்கு ஏற்பட்ட விபத்து போன்றதொரு சம்பவம் என்று குறிப்பிட்ட ரஜினிகாந்த், அதன் பிறகே தனது 'ஒரு சில' ரசிகர்கள் பணத்தாசையால் அரசியலில் ஈடுபட ஆர்வம் காட்டுவதாக குற்றம் சாட்டினார்.
அதன் காரணமாகவே தான் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதை தேவைப்படும் போதெல்லாம் வெளிப்படுத்த நேரிடுவதாகவும் ரஜினிகாந்த் விளக்கமளித்தார்.
தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த் தனக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்த காரணத்தால் தான் பல இன்னல்களை சந்தித்தாகவும் கூறினார்.
குறிப்பாக, குடும்பம் குழந்தை மீது அக்கறை காட்டுங்கள் என்று கூறிய ரஜினிகாந்த், மது, சிகரெட், போதை பொருள் போன்ற தீய பழக்கங்களை விட்டொழியுங்கள் என்று தனது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அரசியல் தலைவர்களின் கருத்து
ரஜினிகாந்தின் இன்றைய பேச்சு அரசியல் கட்சியினரின் கவனத்தை மட்டுமன்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட்டால் அதை வரவேற்பேன் என திமுகவின் செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவர் தொல்.திருமாவளவன், ரஜினிகாந்தை அரசியலுக்கு நண்பனாக வரவேற்பேன் என்றார்.
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளும் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை வரவேற்போம் என்றார்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்