You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நஜிப் - ரஜினி சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததா?
மலேசியப் பிரதமர் நஜீப் ரஸாக், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்திருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததா என்று கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
சென்னையில் வெள்ளிக்கிழமையன்று நஜீப் ரஸாக், ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பு, மரியாதை நிமித்தமானது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.
இந் நிலையில், இந்தச் சந்திப்பு அரசியல் ரீதியாக குறிப்பாக மலேசிய தமிழ் மக்களிடையே எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கோலாலம்பூரில் உள்ள சமூக ஆர்வலர் மோகனன் பெருமாளிடம் கேட்டபோது, தமிழக ரசிகர்களுடன் மலேசியத் தமிழர்களை ஒப்பிட்டுப் பார்க்க முடியாது என்று கருத்துத் தெரிவித்தார்.
"இந்தியாவில் இருந்து திரைப்பட நட்சத்திரங்கள் மலேசியா வரும்போது, அவர்களை உபசரிப்பது மலேசிய பிரதமர் மற்றும் அவரது மனைவியின் வழக்கம். அது புதிதல்ல. ஆனால், இந்த சந்திப்பில் நிச்சயமாக அரசியல் முக்கியத்துவம் இல்லை. இந்தியர்களின் ஆதரவு தற்போதைய மலேசிய அரசுக்குத் தேவை என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த ஆதரவைத் திரட்ட, அரசியல் ரீதியாக சமூக பொறுப்புணர்வு திட்டங்கள் நிறைய நடந்துள்ளன," என்றார் அவர்.
"இந்தியர்களின் வாக்குகளை மீட்டெடுக்க நஜிப் அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது உண்மை. ஆனால், ஒரு சினிமாக்காரரை தெய்வமாகவோ, தலைவராகவோ பார்க்கும் அளவுக்கு இது தமிழ்நாடு அல்ல. ரஜினி - நஜிப் சந்திப்பால் அவருக்கு வாக்களிக்கும் சூழல் இல்லை. மலேசிய சமூக அமைப்பில், அது ஒரு பெரிய ஆதரவாக இருக்க வாய்ப்பில்லை. அவர்களை, தமிழக மக்களின் அரசியல் போக்கோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. இங்கு சினிமாக்காரர்களை ரசிக்க மட்டுமே செய்வார்கள்," என்றார் மோகனன் பெருமாள்.
இந்தச் செய்தியும் நீங்கள் விரும்பலாம்:
மாதவிடாய் சோதனைக்காக 70 மாணவிகளை நிர்வாணப்படுத்திய கொடுமை
உத்தரப்பிரதேச மாநிலம் முஜாஃபர் நகர் மாவட்டத்தில், கதெளலி பகுதியில் உறைவிடப் பள்ளி ஒன்றில் மாணவிகளை நிர்வாணப்படுத்தி மாதவிடாய் சோதனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் படிக்க