You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'லிப்ஸ்டிக் அண்டர் புர்கா' படத்துக்கு தணிக்கைக் குழு அனுமதி
விருது பெற்ற ஹிந்தி மொழி திரைப்படம் ஒன்றை சில விதிகளுக்கு உட்பட்டு வெளியிடலாம் என அனுமதி வழங்கியுள்ளது தணிக்கை குழுவின் மேல்முறையீட்டு குழு.
`லிப்ஸ்டிக் அண்டர் புர்கா` என்ற அந்த திரைப்படம், "பெண்கள் தொடர்பானதாக" உள்ளது என்றும் பாலியல் ரீதியான காட்சிகளும், தவறான உரையாடல்களும் இருப்பதாக கூறி, தணிக்கைக் குழுவால் சான்றிதழ் மறுக்கப்பட்டது.
இந்தியாவின் ஒரு சிறிய நகரத்திலிருந்து வரும் நான்கு பெண்களின் வாழ்க்கையை அந்த திரைப்படம் சித்தரிக்கிறது.
தணிக்கைக் குழுவின் மேல்முறையீட்டு குழு, அந்த படத்திற்கு "ஏ" சான்றிதழ் வழங்கியுள்ளது மேலும் அப்படத்தில் சில காட்சிகளை நீக்குமாறு இயக்குநரிடம் கோரப்பட்டுள்ளது.
கொங்கனா சென் ஷர்மா, ரத்னா பதாக் ஷா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன் லிப்ஸ்டிக் அண்டர் புர்கா, டோக்கியோவில் திரையிடப்பட்டது; அதன்பின் சர்வதேச திரைப்பட விழாக்கள் பலவற்றில் பல விருதுகளையும் பெற்றது.
திரைப்படத்தில் கூடுதலாக சில காட்சிகளை நீக்கினால், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்படும் "ஏ" சான்றிதழ் வழங்கப்படும் என மேல்முறையீட்டு குழு தெரிவித்துள்ளது.
பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களைக் குறிப்பிடும் காட்சி உட்பட சில காட்சிகளில் சத்தத்தை நீக்குமாறு கோரப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
முன்னதாக, அலைபேசியில் பாலுறவு குறித்து பேசுவது, முஸ்லிம் மக்களின் மனதை காயப்படுத்தும் விதமான காட்சிகள் ஆகியவை `லிப்ஸ்டிக் அண்டர் புர்கா` திரைப்படத்தில் இடம்பெற்றிருப்பதாக தணிக்கைக் குழு தெரிவித்திருந்தது.
திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடை, பெண் உரிமை மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இயக்குநர் அலன்க்ரிதா ஸ்ரீவட்சவா முறையிட்டார்.
பிபிசியிடம் பேசிய அவர், இத்திரைப்படம் பெண்கள் தரப்பை குறித்து பேசுவதால் தணிக்கை குழு "கவலையடைந்துள்ளதாக" தெரிவித்தார்.
சமீப காலமாக இந்தியாவின் தணிக்கை குழு, முரண்பாடாக, பொதுப்படையாக இல்லாமல், இந்தியாவில் மாறிவரும் சமூகத்திற்கு ஏற்ப முடிவுகளை எடுக்காமல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக, திரைத்துறையைச் சார்ந்தவர்களிடமிருந்து பல விமர்சனங்களை பெற்று வருகிறது என பிபிசியின் கீதா பாண்டே தெரிவிக்கிறார்.
கடந்த வருடம் `உட்த்தா பஞ்சாப்` என்ற ஹிந்தி படத்தில் 94 காட்சிகளை நீக்க வேண்டும் என தணிக்கைக் குழு தெரிவித்திருந்தது.
போதைப் பொருள் பயன்பாடு குறித்த அந்த திரைப்படத்தில், ஆபாச வசனங்கள், பஞ்சாப் நகரங்கள் சிலவற்றை குறிப்பிடுவது, ஆகியவற்றுடன் போதைப் பொருள் பயன்படுத்துவது போன்ற காட்சிகளையும் நீக்க கோரியது வினோதமானதாக கருதப்பட்டது.
அனால் அத்திரைப்படத்தின் இயக்குநர் அனுராக் கஷ்யப் மற்றும் தயாரிப்பாளர்கள் இந்த ஆணையை எதிர்த்து மும்பை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்; அதன்பிறகு படத்தின் நாயகன் தனது ரசிகர்கள் மீது சிறுநீர் கழிப்பது போன்ற ஒரே ஒரு காட்சியை மட்டும் நீக்குமாறு மும்பை நீதிமன்றம் தெரிவித்தது.
2015 ஆம் ஆண்டு, `என் ஹெச் 10` என்ற ஹிந்தி படத்தில், ஆணவக் கொலைகள் தொடர்பான வன்முறை காட்சியின் நீளத்தை வெட்டுமாறும், மற்றொரு படத்தின் `லெஸ்பியன்` என்ற வார்த்தையை நீக்குமாறும் தணிக்கைக் குழு கூறியிருந்தது.
இது தொடர்பான பிற செய்தி:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்