திரைப்பட விமர்சனம்: கவண்

    • எழுதியவர், கே. முரளிதரன்
    • பதவி, பிபிசி தமிழ்

திரைப்படம்: கவண்

நடிகர்கள்: விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன், டி. ராஜேந்தர், போஸ் வெங்கட், ஜெகன், பாண்டியராஜன், விக்ராந்த், ஆகாஷ் தீப், நாசர்

இசை: ஹிப்ஹாப் தமிழா

இயக்கம்: கே.வி. ஆனந்த்

கோ படத்திற்கு அடுத்து, கே.வி. ஆனந்த் ஊடகப் பின்னணியில் இயக்கியிருக்கும் இரண்டாவது படம் இது.

ஊடகங்களில் வர்த்தக நோக்கத்தில் நடக்கும் அநியாயங்களை பார்த்து கோபமடையும் பத்திரிகையாளன், அந்த அநியாங்களை எப்படி அம்பலப்படுத்துகிறான் என்பதுதான் படத்தின் 'ஒன் - லைன்'.

முன்னணி தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிக்குச் சேரும் திலீப் (விஜய் சேதுபதி), அந்த சேனலின் உரிமையாளர் (ஆகாஷ் தீப்) ரியாலிட்டி ஷோவிலும், செய்திகளிலும் வர்த்தக நோக்கத்திற்காக செய்யும் மோசடிகளைப் பார்த்து அதிர்ந்து போகிறார். அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறும் அவர், மற்றொரு சிறிய தொலைக்காட்சி நிறுவனத்தில் தன் நண்பர்களுடன் இணைந்து, இந்த மோசடிகளை அம்பலப்படுத்துகிறார்.

கே.வி. ஆனந்த் ஒரு படத்தின் மையப்புள்ளியாக எதை எடுத்துக்கொள்கிறாரோ, அதை முடிந்தவரை துல்லியமாகத் தர முயற்சிக்கும் ஓர் இயக்குனர். அவரது முந்தைய படங்களான கனா கண்டேன், அயன், கோ, அநேகன் ஆகிய படங்களில் வரும் அலுவலகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம் இதற்கு ஒரு உதாரணம். இந்தப் படத்திலும் நிஜமாகவே ஒரு தொலைக்காட்சி அலுவலகத்தை கண்முன் கொண்டு வர முயல்கிறார் கே.வி. ஆனந்த். படத்தின் துவக்கத்திலேயே, ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் தொழில்நுட்ப அம்சங்களை விளக்கி கதைக்குள் அழைத்துச் செல்வதும் நல்லதொரு முயற்சி.

ஆனால், சாதாரணமாகப் புரிந்துவிடக்கூடிய விஷயங்களையும் மிக விளக்கமாக வெகுநேரத்திற்கு திரும்பத் திரும்ப சொல்வது அலுப்பூட்டுகிறது. சிறந்த கலைஞர்களைத் தேர்வு செய்யும் ஷோவில் நடுவர்கள், சேனல் முதலாளி சொல்வதைச் செய்கிறார்கள் என்பதைக் காட்ட கிட்டத்தட்ட அரைமணி நேரம் செலவாகிவிடுகிறது.

முற்பகுதியில் விறுவிறுப்பு; பிற்பகுதியில் தொய்வு

அதேபோல, அரசியல்வாதி தீரனுக்கும் (போஸ் வெங்கட்) சேனல் உரிமையாளருக்கும் இடையில் "டீல்" இருக்கிறது என்பதை பல காட்சிகளில் காட்டுவது அயரவைக்கிறது. பல தருணங்கள் 80களில் வந்த திரைப்படங்களை ஞாபகப்படுத்துகின்றன. அரசியல்வாதியை பிரமோட் செய்வதற்காக ஒளிபரப்பப்படும் பேட்டியை நேரலையாக பதிவுசெய்வது போன்ற லாஜிக் மீறல்களும் படத்தில் உண்டு.

முற்பாதியில் சற்று விறுவிறுப்பாக நகரும் படம் பிற்பாதியில் மிக தொய்வாக நகர்கிறது. படத்தின் உச்சகட்ட காட்சி கிட்டத்தட்ட 40 நிமிடங்களுக்குச் செல்வது இதற்கு முக்கியமான காரணம்.

ஊடகங்களில் உள்ள மோசடி, சுற்றுச்சூழல் பிரச்சனை, அரசியல்வாதியின் அராஜகம், காவல் துறையின் மோசமான செயல்பாடு என பல பிரச்சனைகளை பிற்பாதியில் பேச நினைப்பதால், இலக்கு தவறியிருக்கிறது.

படத்திற்குப் படம் மெருகேறும் விஜய் சேதுபதியின் நடிப்பு, இந்தப் படத்திலும் சிறப்பாகவே இருக்கிறது. சில இடங்களில் மட்டும் மிகை நடிப்பின் எல்லையைத் தொட்டுள்ளார். மடோனா செபாஸ்டியனுக்கு தமிழில் இரண்டாவது படம். குறை சொல்ல எதுவுமில்லை. இரண்டாவது பாதியில் வரும் டி. ராஜேந்தர், இடைவேளைக்குப் பிறகு வரும் தொய்வை மறக்க வைக்கிறார்.

ஹிப்ஹாப் தமிழாவின் பின்னணி இசை ஓகே என்றாலும் பாடல்களில் "தீராத விளையாட்டுப் பிள்ளை" மட்டுமே மீண்டும் கேட்கத் தூண்டுகிறது.

ஊடகங்களின் அரசியல், வர்த்தக நோக்கம் ஆகியவற்றைப் பேசவிரும்பும் இந்தப் படம், அவற்றை நல்லவன் - கெட்டவன் என கறுப்பு-வெள்ளையாகக் காட்ட முயல்கிறது. இன்னும் சற்று நேர்த்தியாகவும், நீளம் குறைவாகவும் இருந்திருந்தால் குறிப்பிடத்தக்க படங்களில் ஒன்றாகியிருக்கும்.

இதுவும் படிக்கப் பிடிக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்