You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சினிமா விமர்சனம்: டோரா
- எழுதியவர், கே. முரளிதரன்
- பதவி, பிபிசி தமிழ்
படம்: டோரா
நடிகர்கள்: நயன்தாரா, தம்பி ராமையா, ஹாரிஸ் உத்தமன்; இசை: விவேக் - மெர்வின்; இயக்கம்: தாஸ் ராமசாமி
நயன்தாரா நடித்து இதற்கு முன்பாக வெளிவந்த திகில் படமான மாயா வெற்றி பெற்றிருந்ததால், தயாரிப்பில் இருந்த காலகட்டத்திலேயே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் டோரா
தந்தை வைரக்கண்ணு(தம்பி ராமையா)வுடன் தனியாக வசித்துவருகிறார் பவளக்கொடி (நயன்தாரா). ஒரு சந்தர்ப்பத்தில் கால் டாக்ஸி நிறுவன உரிமையாளராக இருக்கும் அவர்களது உறவினர் ஒருவர் இவர்களை அவமானப்படுத்திவிட, பவளக்கொடியும் கால் டாக்ஸி நிறுவனத்தை துவங்க நினைக்கிறார். அதற்காக ஒரு பழைய ஆஸ்டின் - கேம்ப்ரிட்ஜ் காரை வாங்குகிறார்கள். ஆனால், அந்தக் காரை டோரா என்ற ஒரு நாயின் ஆவி பிடித்திருக்கிறது.
மற்றொரு பக்கம், தனியாக இருக்கும் ஒரு பெண்ணிடம் கொள்ளையடிக்கும் மூவர், அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்து கொல்கின்றனர். இது தொடர்பான விசாரணையைத் துவங்குகிறது காவல்துறை. அப்போது அந்த குற்றவாளிகளில் ஒருவர் கொல்லப்படுகிறார்.
இந்த இரண்டு கதைகளையும் இணைக்கும் புள்ளியாக இருக்கிறார் பவளக்கொடியும் டோராவும்.
முழுக்க முழுக்க நயன்தாராவை நம்பி உருவாக்கப்பட்டிருக்கும் படம். தாயின்றி தந்தையுடன் வசிக்கும் பெண்ணாக வரும் நயன்தாரா படம் முழுக்கவே ஆதிக்கம் செலுத்துகிறார். எந்தத் தருணத்திலும் மிகை நடிப்பை வெளிப்படுத்தாமல், படத்தைத் தாங்கிப் பிடிக்கிறார் இவர். ஒரு காட்சியில் அன்னியன் படத்தின் விக்ரமைப் போல, மாற்றி மாற்றிப் பேசி அசர வைக்கிறார்.
நயன்தாராவுக்குத் தந்தையாக நடித்திருக்கும் தம்பி ராமையா எல்லாப் படங்களைப் போல, இதிலும் தனியாகப் பேசி சிரிக்க வைக்க முயற்சிக்கிறார். பல இடங்களில் இந்த முயற்சிக்கு வெற்றி கிடைப்பதில்லை.
இவர்களை விட்டுவிட்டால் காவல்துறை அதிகாரி, கொள்ளையர்கள் மூவர் என மிகக் குறைவான கதாபாத்திரங்களே படத்தில்.
இருக்கும் ஒரே ஒரு பாடல் கேட்கும்படி இருக்கிறது என்றாலும் விவேக் - மெர்வினின் பின்னணி இசை பல இடங்களில் தடுமாறுகிறது.
மாயாவைப் போல டோராவும் ஒரு திகில் படம் என்ற எதிர்பார்ப்புடன் சென்றால் ஏமாற்றமே மிஞ்சும். பேய் ஒரு காரில் புகுந்துகொண்டு பழிவாங்குகிறது என்பதால், பயமுறுத்தும் காட்சிகள் ரொம்பவுமே குறைவு. பளீரென்ற படமாக்கம், ஒரே ஒரு பாடல் மட்டுமே இடம்பெற்றிருப்பது, சண்டைக் காட்சிகள் இல்லாதது ஆகியவை படத்தின் சாதகமான அம்சங்கள்.
இதுவரை வந்த படங்களில் மனிதர்களின் ஆவி அட்டகாசம் செய்யுமென்றால், இந்தப் படத்தில் ஒரு நாயின் ஆவி, காருக்குள் புகுந்து கொள்வதாக காட்டியிருப்பது சற்று ஆசுவாசமளிக்கிறது. மேலும் கார் ஓடும்போது, நாய் ஓடுவதைப் போல நிழல் தெரிவது போன்றவையும் குறிப்பிடத்தக்க அம்சங்கள்.
ஆனால், படம் துவங்கி வெகு நேரத்திற்குப் பிறகே பிரதான கதைக்குள் நுழைவதால், முதல் பாதியில் பெரும் ஆயாசம் ஏற்படுகிறது. தமிழகத்தில் வந்து பணிபுரியும் வட மாநில இளைஞர்கள் குறித்து ஏற்கனவே மோசமான பிம்பங்கள் உலவும் நிலையில், இந்தப் படத்திலும் குற்றவாளிகளாக வடமாநில இளைஞர்களைக் காட்டுவது நிலைமையை மேலும் மோசமாக்கவே உதவும்.
நயன்தாராவின் ரசிகர்களுக்கான ஒரு திரைப்படம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்