துணிவே துணை என தனித்து பயணிக்கும் பெண்கள்

    • எழுதியவர், சங்கீதா ராஜன்
    • பதவி, பிபிசி தமிழ்

பெண்களின் இடம் சமையலறை என்ற காலம் வேகமாக மாறிவருகிறது. பெரும்பாலான துறைகளில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் கல்வி கற்பது மட்டுமல்ல பணியிலும் சிறந்து விளங்குகிறார்கள். ஆனால் பொழுதுபோக்கு என்று வரும்போது பெண்கள் தமது குடும்பத்திற்கே முன்னுரிமை அளிப்பது தான் அதிகம்.

ஆண்களை போல தமக்கு பிடித்த இடங்களுக்கு தமது நண்பர்களுடனோ அல்லது தனியாகவோ பெண்கள் சுற்றுலா செல்வதில்லை. ஆனால் அந்த நிலைமை தற்போது மாறிவருகிறது. தனியாகவே சுற்றுலா செல்ல பல பெண்கள் தொடங்கிவிட்டனர். அதேபோல பெண்கள் குழுவாக பயணம் செய்யும் போக்கும் தற்போது அதிகரித்துவருகின்றது. சிலர் சிநேகிதிகளுடன் பயணிக்கிறார்கள். அப்படி தன்னை போல சுற்றுலா செல்ல விரும்பும் சிநேகிதி இல்லாத பெண்கள் என்ன செய்கிறார்கள்? பெண்களுக்காக பெண்களால் உருவாக்கப்பட்ட பயண நிறுவனங்களை தொடர்பு கொண்டு புதிய பெண் குழுக்களுடன் சுற்றுலா செல்கிறார்கள்.

பெண்கள் குழு பயணங்கள்

இந்தியாவில் சமீபத்தில் பெண்களுக்காக பெண்களால் உருவாக்கப்பட்ட பயண நிறுவன்ஙகளில் ஒன்று தான் 'விமன் ஆன் கிலவுட்ஸ்' அதாவது 'மேகங்களில் பெண்கள்'. புதிய பயண அனுபவங்களையும் நண்பர்களையும் தேடும் பெண்களுக்கு உதவவே இது உருவாக்கப்பட்டதாம். குழுவாக பயணம் மேற்கொள்ள விரும்பும் பெண்களுக்கும், பயணம் செய்ய பெண் நண்பர்களை தேடும் பெண்களுக்கும் இந்த நிறுவனம் சுற்றுலாப் பயணங்களை ஏற்பாடு செய்கின்றது. இந்தியாவின் பெரும்பாலான இடங்களுக்கு சுற்றுலாப் பயணங்களை ஏற்பாடு செய்யும் இந்த குழுவின் பேஸ்புக் பக்கத்தில் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

பெண்கள் குழுவாக பயணிக்க விரும்பும் போக்கு தற்போது அதிகரித்துவருவதாக இந்த பயண நிறுவனமான விமன் ஆன் கிலவுட்ஸ்-இன் மேலாளர் ஷிரீன் மெஹ்ரா கூறுகிறார். அவர்கள் 2007ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தை தொடங்கியபோது மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு சுற்றுலா பயணத்தை மட்டுமே ஏற்பாடு செய்திருந்ததாகவும், தற்போது ஒவ்வொரு மாதமும் இரண்டு அல்லது மூன்று சுற்றுலா பயணங்களை ஏற்பாடு செய்வதாகவும் ஷிரீன் கூறுகிறார். பணிக்கு செல்லும் பெண்கள், படிக்கும் பெண்கள், ஓய்வுபெற்ற பெண்கள் என பல தரப்பட்ட பெண்கள் பயணங்கள் மேற்கொள்வதாக ஷிரீன் கூறுகிறார். முதலில் 25 முதல் 45 வயதுக்கு உட்பட்ட பெண்களே பயணங்களுக்கு வந்ததாகவும், தற்போது 15 வயது முதல் 65 வயது வரையிலான பெண்கள் வருகின்றனர் என்றும் இவர் கூறுகிறார்.

இந்த நிறுவனம் தொடங்கப்பட்ட பிறகு அதற்கென்று எந்த பெரிய விளம்பரங்களும் வெளியிடப்படவில்லை. பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களிலும், வாய் வார்த்தை மூலமாகவும் மட்டுமே இவர்களது இந்த முயற்சி பிரபலமடைந்துள்ளது. இதில் ஆண்களின் உதவியின்றி பெண்களே எல்லா ஏற்பாடுகளை செய்வதாகவும், ஒரு பெண் சுற்றுலா வழிகாட்டி இவர்களுடன் பயணிப்பதாகவும் அந்த நிறுவனம் கூறுகின்றது. இரவு நேர பயணங்களுக்கு மட்டும் ஒரு ஆண் உதவியாளரை பயன்படுத்துகின்றனர்.

பெண்கள் தனியாகவும் குழுவாகவும் சுற்றுலா செல்லும் போக்கு அதிகரித்துவருவதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று பெண்களுக்கு கிடைக்கும் பொருளாதார சுதந்திரமே என்கிறார் எழுத்தாளரும் செய்தியாளருமான சாருகேசி ராமதுரை. அத்துடன் சுற்றுலா துறையின் உள்கட்டமைப்புகளிலும், பயண திட்டமிடல் மற்றும் செயலாக்கம் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பெண்கள் பயணிப்பதை எளிதாக்குகிறது என்றும் சாருகேசி குறிப்பிடுகிறார்.

பயணங்களும் இணையத்தளங்களும்

சமூக வலைத்தளங்கள் பல பெண்களின் சுற்றுலா பயணங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. வலைப்பதிவுகள், பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் பெண்கள் தமது சொந்த அனுபவங்களை பகிர்வது மற்ற பெண்களுக்கும் ஊக்கமளிக்கின்றது. ட்ரிப் அட்வைசர் போன்ற இணையதளங்கள், சுற்றுலா தலங்கள், அங்கிருக்கும் உணவகங்கள், இருப்பிடங்கள் குறித்த செய்திகளை வெளியிட்டுவருவதும் கூட சுற்றுலா துறையில் பல மாற்றங்கள் ஏற்படுத்தியுள்ளது. எனவே இதுவரை தாம் பயணிக்காத இடங்களுக்கு செல்வதற்கு முன்பாகவே அந்த இடத்தைப்பற்றியும் அதற்கு பயணித்தவர்களின் அனுபவங்கள் குறித்தும் பெண்களால் நிறையவே அறிந்துகொள்ளமுடிகிறது.

இந்தியாவில் சுற்றுலா பயணங்கள் சில நேரங்களில் மோசமான அனுபவமாக கூட மாறலாம். ஊடகங்களில் இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற போக்கிலேயே பல நேரங்களில் நாம் செய்திகளை வாசிக்கிறோம். தனியாக பயணிக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் முக்கிய சிக்கல்களில் ஒன்று யாராவது அவர்களை பின்தொடர்ந்து வந்து ஆளில்லா நேர தாக்குவார்களோ என்ற அச்சம் தான் என்கிறார் சாருகேசி. இந்தியாவில் இது போன்ற பல சம்பவங்கள் இதற்கு முன்னர் இடம்பெற்றிருப்பதாலேயே இந்த அச்சம் என்றும் அவர் கூறுகிறார்.

அத்துடன் பெண்கள் பயணிக்கும்போது போதுமான பாதுகாப்பும் சுகாதாரமும் உள்ள விடுதிகள், பொது கழிப்பிடங்கள் ஆகியவற்றை எல்லா இடங்களிலும் காண முடியாது. மேலும் பயணம் செய்யவிரும்பும் பெண்களின் குடும்பத்தாரும் கூட பல நேரங்களில் இதற்கு ஒத்துழைப்பதில்லை. பெண்கள் தனியாக பயணிப்பது பாதுகாப்பானது அல்ல என்ற ஒரு பொதுவான எண்ணமே இதற்கு காரணம்.

ஒவ்வொரு பெண்ணும் தனது மனதளவில் தன்னை மேலும் வலிமையாக்கிக்கொள்ள தனியே பயணிப்பது மிகவும் அவசியம் என்கிறார் சாருகேசி. எந்த ஒரு பிரச்சனையையும் சிக்கலையும் கையாளும் தைரியமும் தன்னம்பிக்கையும் இது போன்ற பயணங்களில் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். குழுவாக சென்றாலும் சரி தனியாக சென்றாலும் சரி நம்மை ஒரு சிறந்த சிந்தனை கொண்ட ஆளாக இந்த பயணங்கள் மாற்றிவிடும் என்கிறார் சாருகேசி.

சரி, இதை படிக்கும் பெண்களே, அடுத்த பயணத்துக்கு தயாரா?உங்கள் பயணத்துக்கு உதவக்கூடிய சில குறிப்புகள் இதோ