தனியே சுற்றுலா செல்லும் பெண்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை

'சோலோ டிராவிலிங்' அதாவது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் துணையின்றி தனியாக சுற்றுலா செல்ல பலர் விரும்புவார்கள். இது ஆண்களால் எளிதில் செய்யுமளவுக்கு பெண்களாலும் செய்ய முடியுமா?

இவ்வாறு தனிச் சுற்றுலா செல்ல விரும்பும் பெண்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. சுத்தம், சுகாதாரம், வேண்டாத கேள்விகள், தகாத பிரச்சனைகள், பின்தொடரல்கள், தொல்லைக்கொடுக்கும் ஆண்கள் என பல சிக்கல்களை பெண் என்ற ஒரு காரணத்தினாலேயே அவர்கள் சந்திக்கிறார்கள்

பெண்கள் இந்தியாவில் தனியாக பாதுகாப்பாக சுற்றுலா பயணம் செல்வதற்கு தேவையான சில குறிப்புகளை பிரபல எழுத்தாளரும், செய்தியாளரும், தனியே பல சுற்றுலா பயணங்களை மேற்கொண்டுள்ள பெண்மணியுமான சாருகேஸி ராமதுரை பிபிசி தமிழுக்காக எழுதியுள்ளார்.

இதுவரை இந்தியாவில் மொத்தம் 22 மாநிலங்களுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள இவர், தனது ஒவ்வொரு அனுபவமும் ஒவ்வொரு விதத்தில் தனித்துவமான ஒன்று என்று கூறுகிறார். இந்தியாவின் எல்லா மாநிலங்களும் தனக்கென்ற ஒரு தனி சிறப்பம்சத்தை கொண்டுள்ளதாக கூறும் இவர் பெரிய நகரங்களை விட சிறிய கிராமங்களின் மக்கள் தாராள மனமுடையவர்கள் என்றும் விருந்தோம்பலில் சிறந்து விளங்குபவர்கள் என்றும் குறிப்பிடுகிறார்.

இந்தியாவில் தனியே சுற்றுலா செல்லும் பெண்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய பத்து முக்கிய டிப்ஸ்/குறிப்புகள் :

  • கலாசாரத்தை மதிக்க வேண்டும் : நீங்கள் பயணிக்கும் ஊரின் உள்ளூர் கலாசாரம் மற்றும் பழக்கவழக்கங்கள் பற்றி தெரிந்துவைத்திருக்க வேண்டும். எந்த ஒரு பொருளையும் கொடுக்கும்போதும் வாங்கும்போதும் வலது கையை பயன்படுத்துவதுதான் மரியாதைக்குரிய செயலாக பார்க்கப்படும்.
  • ஆள் பாதி ஆடை பாதி : ஒழுக்கமான உடை அணிவது பாதுகாப்பானது. இது பெண் உரிமைக்கு எதிரான ஒரு அறிவுரையாக பார்க்கப்படலாம். பொதுவாக ஏற்கப்படும் வகையிலான ஆடைகளை அணிவதே நாம் தனியாக பயணிக்கும்போது நம்மை பாதுகாத்துக்கொள்ளவும் தேவையற்ற கவனத்தை ஈர்க்காமல் இருக்கவும் உதவும்.
  • முன்கூட்டியே திட்டமிடல்: பயணத்துக்கு தேவையான அனைத்தையும் முன்கூட்டியே திட்டமிட வேண்டும். பயணச் சீட்டுகள், ஹோட்டல் அறைகள் போன்றவற்றை முன்பதிவு செய்துகொள்வது நல்லது.
  • இரவு நேரப் பயணங்களை தவிர்க்கவும் : நீங்கள் சென்று சேரும் இடத்திற்கு இருட்டில் சென்று சேரவேண்டாம். இது எல்லா இடங்களுக்கு பொருந்தினாலும், சிறிய கிராமப்புற இடங்களுக்கு பயணிக்கும்போது குறிப்பாக பொருந்தும். தங்கும் இடத்தைத் தேடி இரவில் செல்வது என்பது பாதுகாப்பானது அல்ல.
  • தகவல் பரிமாற்றம் வேண்டாம் : தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிர வேண்டாம். நீங்கள் தனியாக பயணிக்கிறீர்களா என்று கேட்கப்படும் சில நேரங்களில் உங்களுக்கு ஒரு கணவர் இருப்பதாக பொய் சொல்வது உங்கள் பாதுகாப்புக்கு உதவலாம்.
  • மதுவை தவிர்ப்பது நல்லது : இந்திய கலாச்சாரத்தின்படி பெண்கள் மது அருந்துவது என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு சமூக பழக்கம். அதைப் பார்க்கும் பலர் முகம் சுளிப்பார்கள். எனவே நீங்கள் என்ன அருந்த விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் இருக்கும் சூழலை மனதில் வைத்து முடிவெடுங்கள்.
  • கைத்தொலைப்பேசி எண் அவசியம் : உங்கள் கைத்தொலைப்பேசி ஒரு இடத்தில் பணி செய்யவில்லை என்றால் ஒரு உள்ளூர் தொலைப்பேசி எண்ணை வாங்கிக்கொள்ளுங்கள். எப்போதும் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் இருங்கள். அவசர உதவி தேவைப்பட்டால் அவர்களை அணுக அது உதவும்.
  • நண்பரிடம் பகிர வேண்டும் : நீங்கள் எந்த நேரத்தில் எந்த இடத்தில் இருப்பீர்கள் என்ற தகவல்களை உங்கள் நண்பர் அல்லது உறவினர் ஒருவரிடம் எப்பொழுதும் தெரிவித்துவிடுங்கள்.
  • பொறுமை அவசியம் : சாந்தமாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள். இந்தியா போன்ற இடங்களில் நாம் நினைத்த காரியங்கள் நாம் நினைத்த வேகத்தில் நடைபெறுவதில்லை. அதனால் கோபமடையாமல் சகித்துக்கொள்ள வேண்டும். எதுவொன்றையும் சமாளிக்க கோபம் அல்லாத ஒரு சிறந்த வழி இருக்கவே செய்யும்.
  • தைரியமும் மன உறுதியுமே விடை : பொறுமையாக இருக்கும் அதே நேரத்தில் உறுதியாகவும், கடுமையாகவும் இருப்பதாக காட்டிக்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள். சில நேரங்களில் வேண்டாம் என்று நாம் சொல்வது போதாது. நமக்கு பிடிக்காத அல்லது சங்கடமான சூழல்களில் சத்தமாக ஆக்கரோஷமாக கத்திப்பேசி உதவி கோர தயங்காதீர்கள். இந்தியர்கள் உதவிக்கு வர தயங்கமாட்டார்கள்.