திருப்பூர் தீண்டாமைச் சுவர் சர்ச்சை: கனிமொழியிடம் முறையிட்டதும் சுவரின் ஒரு பகுதி இடிப்பு - பின்னணி என்ன?

- எழுதியவர், ச.பிரசாந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே, தீண்டாமைச்சுவரால் அரசு ரோட்டை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுவதாக பட்டியலின மக்கள் கனிமொழி எம்.பியிடம் மனு கொடுத்தனர். இதன் தொடர்ச்சியாக அந்த சுவர் உடனடியாக இடிக்கப்பட்டு பாதை உருவாக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது?
தீண்டாமைச் சுவர் சர்ச்சை - பின்னணி என்ன?
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த சேயூர் ஊராட்சியின், தேவேந்திரன் நகரில் பட்டியலின மக்கள் வசிக்கின்றனர். இதற்கு அருகே வி.ஐ.பி கார்டன் பகுதியில் மற்ற சமூகத்தினர் உள்ளனர்.
‘‘இந்த இரண்டு பகுதிக்கும் மத்தியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு தீண்டாமைச்சுவர் கட்டப்பட்டுள்ளது. இதனால், அரசு சாலைகளை பயன்படுத்த முடியாமல் அதிக தொலைவு நடக்க வேண்டியுள்ளது, தீண்டாமைச் சுவரை இடித்து வழி ஏற்படுத்த வேண்டும்,’’ என, தேவேந்திரன் நகர் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருந்தனர்.
கடந்த ஓராண்டாக தொடர்ச்சியாக மனு கொடுப்பது, ஆட்சியரை சந்திப்பது என, இப்பகுதி மக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். முதல்வரின் தனிப்பிரிவு அதிகாரிகளும், ‘தீண்டாமைச் சுவரை அகற்ற வேண்டும்’ என, இரண்டு மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தனர்.
ஆனால், எதிர் தரப்பில் வி.ஐ.பி கார்டன் பகுதியில் வசிப்பவர்கள், ‘‘இது தீண்டாமைச்சுவர் அல்ல குடியிருப்புக்கான பாதுகாப்புச்சுவர்,’’ என்று கூறினர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் கொடுத்திருந்தனர்.
கே.சி.பழனிசாமி என்பவர், ‘‘தேவேந்திரன் நகரில் இருக்கும் சுவர் தங்களுக்கு பாத்தியப்பட்டது எனவும், சுவருக்கு அருகேயுள்ள அரசு ரோட்டிலும் தனக்கு இடம் உள்ளது,’’ எனக்கூறி, மாவட்ட ஆட்சியரிடம் கடந்த வாரம் மனு கொடுத்திருந்தார்.
இருதரப்பு மனுக்களையும் பெற்று, மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரித்து வந்தனர்.

கனிமொழியிடம் மனு – சுவரின் ஒரு பகுதி இடிப்பு!
இப்படியான நிலையில், பிப்ரவரி 10ம் தேதி அவிநாசியில் தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிக்காக மக்கள் கருத்து கேட்புக்கூட்டத்தில் தி.மு.க எம்.பி கனிமொழி பங்கேற்றார். அங்கு, தேவேந்திரன் நகரைச் சேர்ந்த மனோன்மணி என்பவர் கனிமொழியிடம், ‘‘தீண்டாமைச்சுவரை அகற்றி வழி ஏற்படுத்தித்தர வேண்டும்,’’ என்று மனு கொடுத்திருந்தார்.
இதையடுத்து, கனிமொழி உடனடியாக மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜை தொடர்பு கொண்டு, தீண்டாமைச் சுவரை இடித்து பட்டியலின மக்களுக்கு பாதை ஏற்படுத்தித்தர வேண்டுமென வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக சுவரை இடிக்க உத்தரவிட்டார். அதன் பேரில், அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் மேற்பார்வையில் சுவரின் ஒரு பகுதி இடித்து அகற்றப்பட்டு பாதை உருவாக்கப்பட்டது.

‘20 ஆண்டு கால போராட்டத்திற்கு வெற்றி’
கனிமொழியிடம் மனு கொடுத்தது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய மனோன்மணி, ‘‘எங்கள் பகுதியில் இருக்கும் அரசு சாலைக்கு அருகில் இந்த தீண்டாமைச்சுவர் கட்டப்பட்டுள்ளது. சுவருக்கு அந்தப்பக்கம் வி.ஐ.பி கார்டன் பகுதியினர் மூன்று சாலைகளை ஊராட்சியிடம் ஒப்படைத்துள்ளனர். அந்த மூன்று சாலைகளையும் அரசு நிதியில் ஊராட்சி நிர்வாகம் அமைத்துள்ளது. இந்த மூன்று அரசு சாலைகளும், எங்கள் பகுதி சாலையும் இணையும் இடத்தில் தான் இந்த தீண்டாமைச்சுவர் இருக்கிறது.
மூன்று இடத்திலும் சுவற்றை இடித்து பாதை ஏற்படுத்தித் தர வலியுறுத்தி போராடி வந்தோம். கனிமொழி எம்.பி உத்தரவின் பேரில் முதற்கட்டமாக ஒரு பகுதியில் சுவர் இடிக்கப்பட்டு, பாதை ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இது எங்கள் 20 ஆண்டுகால போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. மீதமுள்ள இரண்டு பகுதியிலும் சுவரை இடித்து பாதை அமைத்துத் தர வேண்டும்,’’ என்கிறார் அவர்.

இது தொடர்பான எதிர்தரப்பான கே.சி.பழனிசாமி மற்றும் வி.ஐ.பி கார்டன் குடியிருப்போர் நலச்சங்கத்தை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டது. ஆனால், அவர்கள் இது தொடர்பாக கருத்து தெரிவிக்க விருப்பம் இல்லை என்று கூறிவிட்டனர்.
‘ஆட்சியர் உத்தரவை பின்பற்றியுள்ளோம்’
சுவர் இடிக்கப்பட்டது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், ‘‘மாவட்ட ஆட்சியர் மூன்று இடங்களில் சுவரை இடித்து பாதைகள் உருவாக்க உத்தரவிடார். முதற்கட்டமாக ஒரு பகுதியில் சுவர் இடிக்கப்பட்டு பாதை உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால், எதிர்தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளதால், ஆட்சியர் விசாரித்து வருகிறார். விசாரணை முடித்து ஆட்சியர் உத்தரவிட்டால் மற்ற இரு பகுதிகளிலும் சுவர் இடிக்கப்படும்,’’ என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)








