You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கருத்தடை அறுவை சிகிச்சை செய்தும் கருவுற்றால் அரசிடம் நிவாரணம் பெறுவது எப்படி?
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
ஆணுக்கோ பெண்ணுக்கோ செய்யப்படும் கருத்தடை அறுவை சிகிச்சை என்பது நிரந்தர கருத்தடை சிகிச்சையாகும். 110 கோடிக்கும் மேலான மக்கள் தொகை கொண்டுள்ள இந்தியாவில் கருத்தடை சிகிச்சை அரசால் ஊக்குவிக்கப்படுகிறது.
இது நிரந்தர சிகிச்சை என்றாலும், சில நேரங்களில் இந்த சிகிச்சை தோல்வியுற்று சிலரது வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தி விடுகிறது. குறிப்பாக ஏழை மக்களுக்கு சுமையாகி விடுகிறது.
அப்படி நேர்ந்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்?
கருத்தடை அறுவை சிகிச்சைக்கு பின்னரும் கருவுற்ற கூலித் தொழிலாளியின் மனைவிக்கு மாதம் ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை அவனியாபுரத்தை சேந்தவர் ராக்கு, 2007 ஆம் ஆண்டில் காசி விஸ்வநாதன் என்பவரோடு அவருக்கு திருமணம் ஆகியது.மூன்று மகள்கள், ஒரு மகன் என நான்கு குழந்தைகள் பிறந்த பிறகு 2014 ஆம் ஆண்டில் அவர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனால் அதன் பிறகும் ஐந்தாவது முறையாக அவர் கருவுற்றார்.
கருத்தடை அறுவை சிகிச்சைக்குப் பிறகும் கருவுற்றால் என்ன செய்ய வேண்டும்?
இதுகுறித்து பிபிசி தமிழிடம் ராக்கு பேசினார்.
“2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் எனக்கு மாதவிடாய் ரத்தப்போக்கு நின்றுவிட்டது. ஆனால் கருவுற்றிருக்கலாமோ என சந்தேகம் வரவில்லை. நான் அப்போது ஒரு தையல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். பணியிடத்தில் சூடு காரணமாக மாதவிடாய் நின்றிருக்கலாம் என நினைத்தேன். வயது 37 ஆகிவிட்டதால் மாதவிடாய் வருவதே நின்றுவிட்டிருக்கக் கூடும் என்றும் யோசித்துக் கொண்டிருந்தேன். இதே நிலைமை மூன்று மாதங்களாகியும் தொடர்ந்தது. குமட்டல் இல்லை, உடல் சோர்வோ மயக்கமோ இல்லை. லேசான முதுகுவலியும், வயிற்று வலியும் மட்டும் இருந்தது."
"கருத்தடை சிகிச்சைக்கு பின் உடல் இளைத்துவிட்டிருந்ததால் வயிறும் கூட வித்தியாசமாக தெரியவில்லை. இருப்பினும் உடலில் ஏதாவது கட்டி வந்திருக்கலாம் என அக்கம்பக்கத்தினர் சொன்னதால் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளலாம் என மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சென்றேன். 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற்ற பரிசோதனையில் நான் கருவுற்றிருப்பது தெரியவந்தது. ஆனால் நான் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்டிருப்பதை அவர்களிடம் கூறினேன். உடனே நீங்கள் எந்த இடத்தில் சிகிச்சை பெற்றீர்களோ அங்கேயே செல்லுங்கள் என தெரிவித்தார்கள். எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை” என்றார்.
தன்னுடைய நான்காவது பிரசவத்திற்காக விருதுநகர் மாவட்டம் நரிக்குடி என்ற குக் கிராமத்திற்கு அவர் சென்றிருந்தார். அங்குதான் அவருடைய தாயார் விவசாயக் கூலியாக பணியாற்றிவருகிறார். நரிக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவருக்கு பிரசவம் ஆனது. பின்னர் அங்கேயே 2014ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி கருத்தடை அறுவை சிகிச்சையும் செய்துகொண்டார். ஆனால் ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் அவர் மீண்டும் கருவுற்றது அவருக்கே அதிர்ச்சியாக இருந்தது. ஐந்தாவதாக ஒரு குழந்தையை பெற்று வளர்க்கும் பொருளாதார சூழல் இல்லை என்பதால் கருவினை கலைத்துவிட முடிவு செய்தார். கருவுற்றதை தெரிந்துகொள்ளவே 3 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், கருக் கலைப்பிற்கு நீதிமன்றத்தின் அனுமதி தேவைப்பட்டது.
“எனது வழக்கு மார்ச் மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது நான் ஐந்து மாதங்கள் கர்ப்பமாக இருந்தேன். குழந்தை வயிற்றில் முண்டுவதை உணர முடிந்தது. எனக்கே அதுவொரு போராட்டமாகத்தான் இருந்தது. அழுகையாக வரும். குழந்தையை வளர்க்க முடியாத என்னுடைய நிலைமையை நினைத்து நானே அழுவேன். குழப்பமான நிலையில்தான் இருந்தேன்” என்று அவர் விவரித்தபோது விசும்பினார்.
வழக்கினை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு மனநல ஆலோசனைக்கு ஏற்பாடு செய்தது. கருக்கலைப்பு சாத்தியமில்லாத சூழலில் அவரை குழந்தை பெற்றுக்கொள்ள தாயார்ப்படுத்துமாறும் உத்தரவிட்டது. “நீதிமன்றத்தின் ஆதரவு எனக்கு ஆறுதலாக இருந்தது. அதன் பிறகுதான் நம்பிக்கையும் வந்தது” என்றார் ராக்கு.
'நிவாரணம் எளிதாக கிடைப்பதில்லை'
வழக்கறிஞர் மனோகரன் கூறுகையில், “பொதுவாக கருத்தடை அறுவை சிகிச்சை தோல்வியடைந்தால் ரூ.30 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும் என அரசாணை உள்ளது. பலருக்கு இந்த தகவல் கூட தெரிவதில்லை.
ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணே புகார் செய்தும் கூட நிவாரணமோ பிற உதவிகளோ அரசால் ராக்குவுக்கு வழங்கப்படவில்லை. நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவிற்கு பின்னரே ரூ.30 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்பட்டது.
குழந்தை பிரசவத்திற்காக சென்றபோதும் ராஜாஜி மருத்துவமனை அலட்சியமாகவே அணுகியது. இரத்தம் செலுத்த வேண்டிய அளவிற்கு அவர் பலவீனமாக இருந்தார். எனவே நேரில் சென்று நீதிமன்றத்தில் புகார் செய்வோம் என்று சுட்டிக்காட்டிய பிறகே நிலைமை மாறியது ” என்றார். 2020 ஆகஸ்ட் மாதத்தில் ராக்கு ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.
பெண் கருத்தடை அறுவை சிகிச்சை (ட்யூபெக்டமி) எப்படி நடைபெறும்?
பெண்ணின் உடலில் உள்ள கருமுட்டை குழாய்கள் ஒரு செ.மீ அளவுக்கு வெட்டி எடுக்கப்பட்டு தைக்கப்படும். இதன் மூலம், ஒவ்வொரு மாதமும் உருவாகும் கருமுட்டை., கர்ப்பப்பயை சென்றடையாமல் தடுக்கப்படும். இதனால் கருமுட்டை விந்தணுக்களுடன் சேர்வதை தடுக்க முடியும். இது ஒரு நிரந்தர கருத்தடை சிகிச்சையாகும். எனவே கருத்தரித்தலை தடுக்க ஆணுறை உட்பட எந்த பாதுகாப்பும் தேவை இல்லை. எனினும் சிலருக்கு இந்த சிகிச்சை தோல்வியடையலாம்.
எந்தெந்த சூழல்களில் அறுவை சிகிச்சை தோல்வியடையலாம்?
மகப்பேறு மருத்துவர் ஜோஸ்பின் வில்சன் கருத்தடை அறுவை சிகிச்சைகள் எதனால் தோல்வியடைகின்றன என விளக்கினார், “கருமுட்டை குழாய்க்கு பதிலாக அருகில் உள்ள வேறு திசுக்கள் அகற்றப்படும் தவறு நேரலாம். எனவே,அறுவை சிகிச்சையில் வெட்டி எடுக்கப்பட்ட பகுதியைபகுப்பாய்வு செய்து, கருமுட்டை குழாய் தானா என உறுதி செய்துக் கொள்ள வேண்டும். சரியாகவே செய்திருந்தால் கூட, சில நேரங்களில் கருமுட்டை குழாய்கள் மீண்டும் இயற்கையாகவே இணைந்துக் கொள்ளவும் வாய்ப்பு உண்டு. கருமுட்டை குழாய்கள் என்பவை தண்ணீர் குழாய்களை போன்றவை அல்ல. மைக்ரோ மில்லிமீட்டர் அளவிலான விந்தணுக்கள் பயணிப்பவை. எனவே சில நேரங்களில் அறுவை சிகிச்சை சரியாகவே செய்திருந்தால் கூட அது பிற்காலத்தில் தோல்வியடையலாம். கருத்தடை அறுவை சிகிச்சை செய்த பெண்களில், கர்பப்பை அல்லாமல் வேறு இடங்களில் கருத்தரிக்கும் ஆபத்தும் உண்டு. பொதுவாக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்கு இது போன்று ஏற்படலாம்.” என்றார்.
எத்தனை சிகிச்சைகள் தோல்வியடைகின்றன?
தமிழ் நாட்டில் 2010-11ம் ஆண்டு காலகட்டத்தில் கருத்தடை செய்துகொண்ட 318 பேருக்கு அறுவை சிகிச்சை தோல்வியடைந்துள்ளது. 2011-12 காலகட்டத்தில் 217 கருத்தடை சிகிச்சைகளும், 2012-2013 ஆண்டுகளில் 39 கருத்தடை சிகிச்சைகளும் தோல்வியுற்றுள்ளன.
இந்தியா முழுவதும் 2013-14ம் ஆண்டில் 3767 குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள் தோல்வியடைந்துள்ளன.2014-15ம் ஆண்டு 5928 குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகளும், 2015-16ம் ஆண்டில் 7960 குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள் தோல்வியுற்றுள்ளன.
தமிழ்நாடு குடும்ப நலத்துறையில் பணியாற்றும் உயர் அதிகாரி ஒருவர் பி.பி.சி தமிழிடம் பேசியபோது, “குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள் தோல்வியடைவது மிகவும் அரிதாக நடைபெறக்கூடியதாகும். தமிழ்நாட்டில் நடக்கும் கருத்தடை சிகிச்சைகளில் 2 சதவீதத்திற்கும் குறைவான எண்ணிக்கையிலேயே தோல்வியடைகின்றன. அதற்கும் பல்வேறு காரணங்கள் உள்ளன. இவ்வாறு பாதிக்கப்படுவோருக்கு தமிழ்நாடு அரசு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்குகிறது. இது பல ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. கருத்தடை அறுவை சிகிச்சை தோல்வியடைந்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட தர உறுதிப்பாட்டு குழு பரிசீலனை செய்யும். அதன் பின்னர் மாநில அளவிலான தர உறுதிப்பாட்டு குழுவும் உறுதி செய்து நடவடிக்கை மேற்கொள்ளும். கருவுற்றதற்கான சான்று, அறுவை சிகிச்சை மேற்கொண்டதற்கான சான்று ஆகியவைகளை உள்ளடக்கி விண்ணப்பம் செய்தால் இந்த நிவாரணத்தை பெறலாம். பகுதியளவு சிகிச்சையளித்ததால் தோல்வி, இயற்கையாகவே மீண்டும் இணைந்திருக்கலாம்., காயம் ஏற்பட்டு அதனால் தொற்றுக்கு ஆளாகுதல் ஆகிய காரணங்களுக்காக விண்ணப்பிக்கலாம்” என்று தெரிவித்தார்.
தனியாரிலும் நிவாரணம் கிடைக்குமா?
தனியார் மருத்துவமனையில் செய்யப்பட்ட கருத்தடை அறுவை சிகிச்சை தோல்வியுற்றாலும் இதே வழியில் நிவாரணம் பெற முடியும். ஆனால் அந்த மருத்துவமனை கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதற்காக அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையாக இருக்க வேண்டும். அப்போது, குடும்ப கட்டுப்பாடு காப்பீடுத் திட்டத்தின் கீழ் அரசே அந்த தொகையை வழங்கும்.
நீதிமன்றம் உத்தரவிட்ட நிவாரணம் எவ்வளவு?
ராக்குவின் வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தற்போது இறுதித் தீர்ப்பினை வழங்கியுள்ளது. அதன்படி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்குவதுடன், அவரின் ஐந்தாவது குழந்தைக்கு அரசுப் பள்ளியிலோ தனியார் பள்ளியிலோ இலவச கல்வி வழங்கவேண்டும். மேலும் அந்த குழந்தைக்கு 21வயது ஆகும் வரை, மாதம் ரூ.10ஆயிரம் நிவாரணமாக வழங்கிட வேண்டும். ஏற்கெனவே, 2022ம் ஆண்டு ஜனவரி மாதத்திலும், 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலும் இது போன்ற வழக்குகளில் அரசு நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த வழக்கிலும் அதே போன்று உத்தரவு வழங்குவதே சரி என்று கருதி இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். 2013ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை படி, அந்த பெண்ணுக்கு ஏற்கெனவே ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மீத தொகையை அவருக்கு செலுத்த நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மற்றொரு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில்,“மருத்துவரின் அலட்சியம் இல்லாமல், இந்த சிகிச்சை தோல்வியுறாது என்பதால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மத்திய அரசு குறிப்பிடும் நிவாரணம் எவ்வளவு?
குடும்ப கட்டுப்பாடு திட்டம் தேசிய அளவில் அமல்படுத்தப்படுவதாகும். மத்திய அரசு வகுத்துள்ள விதிகளின் படி, குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்யும் போதோ. அல்லது டிஸ்சார்ஜ் செய்யபட்டு ஏழு நாட்களுக்குள் ஒருவர் இறந்து போனால் ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். அதுவே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு எட்டு நாட்கள் முதல் 30 நாட்களுக்குள் இறந்து போனால் ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். அறுவை சிகிச்சை தோல்வியுற்றால், ரூ.30 ஆயிரம் நிவாரணமாக கொடுக்கப்படும். அறுவை சிகிச்சை செய்யும் போது சிக்கல்கள் ஏற்பட்டால், அதற்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.
கூடுதலான நிவாரணம் வழங்கிட நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும் ராக்குவின் வாழ்க்கை கடினமாகவே உள்ளது. “ ஐந்தாவது குழந்தைக்கு குடல் இறக்கம் உருவாகியுள்ளது. எனக்கும் குடல் இறக்கம் ஏற்பட்டுள்ளது. கட்டிட தொழிலாளியாக பணியாற்றிய கணவருக்கு சிறுநீரகங்கள் இரண்டும் பாதிக்கப்பட்டிருப்பதால் வாரத்தில் 3 நாட்கள் டயாலிசிஸ் செய்துகொள்ளும் நிலைமையில் இருக்கிறார். எனவே எனது ஒருத்தியின் உழைப்பை நம்பித்தான் குடும்பம் உள்ளது. பகுதி நேரமாக ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தில் ரூ.6,500 சம்பளத்தில் பணியாற்றுகிறேன். என்னுடைய வருவாய் முக்கியம் என்பதால்,குடல் இறக்க பிரச்சனைக்கு சிகிச்சையை தள்ளிப்போட்டு வருகிறேன்.” என்று அழுது கொண்டே தெரிவித்தார். நீதிமன்றம் உத்தரவிட்ட நிவாரணம் கிடைக்கும்போது ராக்குவின் வாழ்க்கையில் சிறு மாற்றம் ஏற்படலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)