You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டில் யானை வேட்டையா? ஆன்லைனில் தந்தம் விற்க முயன்ற 3 பேர் சினிமா பாணியில் கைது
- எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
- பதவி, பிபிசி தமிழ்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த வத்திராயிருப்பு பகுதியில் யானை தந்தத்தை விற்பனை செய்வதற்காக சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஒரு கும்பல் பிடிபட்டிருக்கிறது.
அவர்களிடம் யானை தந்தத்தை வாங்குபவர்கள் போலச் சென்ற சுங்கத்துறை அதிகாரிகள் காட்டின் அருகே வைத்து மூன்று நபர்களை பிடித்து அவர்களிடம் இருந்த 23 கிலோ எடை கொண்ட யானை தந்தத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் இது தொடர்பாக 3 பேரைப் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
சுங்கத்துறை அதிகாரிகளின் விசாரணையின் போது யானைத் தந்தம் விற்பனை செய்ய வந்த கும்பலில் ஒருவர் மாடியில் இருந்து குதித்து தப்ப முயன்றதில் காலில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சுங்கத்துறை அதிகாரிக்கு தந்தம் விற்பனை குறித்து தகவல் கிடைத்தது எப்படி? யானையை வேட்டையாடி தந்தம் எடுக்கப்பட்டு விற்பனைக்கு வந்ததா? ராஜபாளையம் வனப் பகுதியில் நடந்தது என்ன? யானை தந்தம் விற்பனை கும்பலைச் சேர்ந்தவர்கள் பிடிபட்டதன் பின்னணி என்ன?
சமூக வலைதளத்தில் யானை தந்தம் விற்பனை
சமூக வலைதளத்தில் யானை தந்தம் விற்பனை செய்யப்படுவதாக ஒரு பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதனை பார்த்த சுங்கத்துறை அதிகாரி ஒருவர் அந்த பதிவை செய்த நபருக்குத் தொடர்பு கொண்டு பேசி யானை தந்தத்தை தான் வாங்க விரும்புவதாக விருப்பம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அந்த சம்பந்தப்பட்ட நபர் சுங்கத்துறை அதிகாரியை விருதுநகர், ராஜபாளையத்தை அடுத்துள்ள வன்னிவேலம்பட்டி காட்டுப் பகுதிக்கு நவம்பர் 5 ஆம் தேதி வரும்படி கூறி இருக்கிறார்.
சினிமா பாணியில் கைது
இதனையடுத்துச் சுங்கத்துறை அதிகாரிகள் இணைந்து தந்தம் வாங்கும் வியாபாரிகள் போல வேலம்பட்டிக்குக் காரில் சென்றுள்ளனர். அப்போது காட்டுப் பகுதியில் மூன்று பேர் நின்று கொண்டு இருந்தனர். அவர்கள் அருகில் சென்று பார்த்தபோது உண்மையிலேயே கையில் இரண்டு யானை தந்தம் வைத்து இருந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து யானை தந்தத்தை விற்பனைக்கு கொண்டு வந்த மூன்று நபர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சுற்றி வளைத்து பிடித்து சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
எத்தனை கிலோ யானை தந்தம் சிக்கியது?
யானை தந்தம் விற்பனை செய்யும் கும்பலிடம் இருந்த கைப்பற்றப்பட்ட இரண்டு யானை தந்தத்தின் எடை 23 கிலோ இருந்தது. இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தியதில் யானை தந்தம் விற்பனை சம்பந்தமாக மேலும் 3 நபர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறியுள்ளனர் அவர்களையும் சுங்கத்துறை அதிகாரிகள் பிடித்தனர்.
யானை தந்தம் விற்பனை தொடர்பாக பிடிக்கபப்ட்ட 6 பேரையும் சுங்கத்துறை அதிகாரிகள் ராஜபாளையம் வனச் சரகர் சரண்யாவிடம் ஒப்படைத்தனர்.
விசாரணயில் தப்ப முயன்ற நபர்
சுங்கத்துறை அலுவலகத்தில் வைத்து மாவட்ட வன உதவி காவலர் நிர்மலா ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் திலீப் குமார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தொடர்பாக ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த முருகன் (34), சதீஸ் குமார் (34), ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கணேசன் (21), கார்த்திக் ராஜா (24), நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்த முத்து, சின்னச்சாமி ஆகிய 6 பேர் என்பது தெரிய வந்தது.
மேலும், விசாரணையின் போது முருகன் என்பவர் தப்ப முயன்று மாடியில் இருந்து குதித்துள்ளார். இதில், காலில் காயம் ஏற்பட்டு முருகன் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின் 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
யானை வேட்டையாடி தந்தம் எடுக்கப்பட்டதா?
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, "கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இறந்த யானையிடம் இருந்து தந்தம் மாயமானது. அதனை எடுத்த சிலர் தற்போது விற்பனைக்காக முயன்ற போது சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கினர். அந்த ஆறு பேர் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்,” என்றார்.
மேலும், “இந்த தந்தம் விற்பனை செய்யும் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வேட்டையாடும் கும்பலை சேர்ந்தவர்கள் போலத் தெரியவில்லை. வேட்டையாடும் கும்பலாக இருந்தால் யானையை வேட்டையாடினால் உடனே தந்தத்தை விற்பனைக்கு எடுத்துச் சென்று விடுவார்கள்,” என்றார்.
இதுதொடர்பாக பிடிபட்ட 6 பேர் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
“மேலும் இந்த வழக்கில் இன்னமும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்தது. வனத்துறையினர் விற்பனைக்காக வந்த இடம், தந்தம் கிடைத்த இடம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சிலரை தேடி வருகின்றோம். அவர்களை விரைவில் கைது செய்வோம்", என்று கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)