You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கனடா ஹெலிகாப்டர் மீது வெப்ப அலைகளை உமிழ்ந்த சீன போர் விமானம் - நடுவானில் என்ன நடந்தது?
சில வாரங்கள் முன்புவரை இந்தியாவுடனான இராஜதந்திரப் பதற்றத்திற்காகச் செய்திகளில் அடிபட்ட கனடா, தற்போது சீனாவுடன் ஒரு மோதலில் உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனாவும் கனடாவும் சர்வதேசக் கடல் எல்லைகளை மீறுவதாகவும், தேவையற்ற ராணுவ மோதலை தூண்டுவதாகவும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த விவகாரம், மிகவும் சிக்கலான தென் சீனக் கடல் தொடர்பானது.
இந்தப் பெரிய கடல் பகுதி தனக்குச் சொந்தமானது என்று சீனா உரிமை கோரி வருகிறது. அதேசமயம் அந்தப் பகுதியில் உள்ள பல நாடுகள் இதை மறுத்துவருகின்றன.
தற்போது, தென்சீனக் கடல் வழியாகச் சென்ற தனது ஹெலிகாப்டருக்கு சீனாவின் போர் விமானங்கள் ஆபத்தை விளைவிப்பதாக கனடா குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால், சில அறியப்படாத காரணங்களுக்காக கனேடிய ஹெலிகாப்டர் தனது தீவுகளை நோக்கி பறந்ததாக சீனா கூறுகிறது.
சீனாவின் 'ஆபத்தான நடவடிக்கைகள்' குறித்து கனடா என்ன சொன்னது?
தென் சீன கடலில் சர்வதேசக் கடல் எல்லையில் பறந்து கொண்டிருந்த தனது ஹெலிகாப்டருக்குச் சீன போர் விமானங்கள் ஆபத்தை ஏற்படுத்தியதாக கனேடிய பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேர் தெரிவித்துள்ளார்.
இந்தப் போர் விமானங்கள் கனேடிய ஹெலிகாப்டருக்கு மிக அருகில் வந்து அதன் மீது உயர் வெப்ப அலைகளை உமிழ்ந்ததன் மூலம் பணியாளர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக அவர் கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சீன ஜெட் விமானங்கள் நேரடியாக ஹெலிகாப்டரை கடந்து சென்றதாகவும், அதனால் அது தள்ளாடியதாகவும் பிளேர் கூறினார். பின்னர் மற்றொரு ஜெட் விமானம் ஹெலிகாப்டருக்கு மிக நெருக்கமாக வந்து அதன் மீது உயர் வெப்ப அலைகளை உமிழ்ந்தது. அதைத் தவிர்க்க ஹெலிகாப்டர் திடீரென்று தனது பாதையை மாற்ற வேண்டியிருந்தது, என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “இதன் மூலம், தேவையில்லாமல் அனைவரும் ஆபத்தைச் சந்திக்க நேர்ந்தது. சீனப் போர் விமானங்களின் இந்த நடவடிக்கைகள் மிகவும் ஆபத்தானவை,” என்றார் அவர்.
கனடாவின் நோக்கங்களை விமர்சித்த சீனா
பிளேரின் கூற்றுகளுக்குப் பதிலளித்த சீனா, 'கனேடிய ஹெலிகாப்டர் சில ரகசிய நோக்கங்களுக்காக, தீங்கிழைக்கும் வகையிலும், எதிர்வினையைத் தூண்டும் வகையிலும் செயல்பட்டது,' என்று கூறியிருக்கிறது.
சீனாவின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாங் ஷோகாங், கனடாவின் போர்க்கப்பலின் பெயரை மேற்கோள் காட்டி ஆன்லைனில் வெளியிட்ட அறிக்கையில், "சமீபத்தில், கனடாவின் எச்.எம்.சி.எஸ் ஒட்டாவாவில் இருந்து வந்த ஹெலிகாப்டர், சில அறியப்படாத நோக்கங்களால், சீனாவின் சிஷா தீவுகளை நோக்கி வந்தது,” என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அவர் தனது அறிக்கையில், இச்சம்பவத்தை விசாரிக்கச் சொல்லி கடற்படை மற்றும் விமானப்படையை சீன இராணுவம் கேட்டுக்கொண்டதாகவும், பல எச்சரிக்கைகளை விடுத்தும் கனேடிய ஹெலிகாப்டர் பதிலளிக்கவில்லை என்றும், மிகத் தாழ்வாகப் பறந்ததாகவும் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவத்தை கனடா பூதாகரப்படுத்துவதாகச் சீனாவின் பாதுகாப்பு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் குற்றம் சாட்டினார்.
மேலும் அவர், “கனடாவின் நடவடிக்கைகள் சீனாவின் உள்நாட்டுச் சட்டங்களையும் சர்வதேச சட்டங்களையும் மீறுவதாகவும், சீனாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்துவதாகவும் உள்ளது. விபத்துகளைத் தவிர்க்கும் வகையில், கனடாவின் விமானப்படையின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துமாறு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்,” என்றார்.
சீனா மீது குற்றம் சுமத்தும் அமெரிக்கா
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, 'சீனாவின் இராணுவ விமானங்கள் சமீபத்திய நாட்களில் ஆபத்தான முறையில் நடந்து கொள்கின்றன' என்று அமெரிக்கா கூறியிருக்கிறது.
மே மாதம், 'தென் சீனக் கடலில் சர்வதேச வான்வெளியில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க ராணுவ விமானத்தின் அருகே வந்து சீன போர் விமானங்கள் தேவையற்ற மோதல் போக்கைக் காட்டியுள்ளன,' என்று அமெரிக்கா கூறியிருந்தது.
இதற்கு முன்பும், தென் சீனக்கடல் வழியாகப் பல்வேறு நாடுகளின் கப்பல்கள் மற்றும் விமானங்கள் செல்வதற்குப் பல சந்தர்ப்பங்களில் சீனா எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
சனிக்கிழமையன்று, சீனாவின் வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் ஜாங் ஷோகாங், "சீன இராணுவம் அதன் இறையாண்மை, பாதுகாப்பு, கடல் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்கும், தென் சீனக்கடலில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் எப்போதும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்," என்று கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)