கொடைக்கானலில் வெளிநாட்டவர், இளைஞர்களை ஈர்க்கும் 'மேஜிக் காளான்' - அதில் என்ன இருக்கிறது?

    • எழுதியவர், மகாலட்சுமி தி.ரா
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கொடைக்கானலில் வட்டக்கானல் என்ற மலைப்பகுதியில் மேஜிக் காளான்கள் எனப்படும் போதை காளான்களை விற்பனை செய்ததாக, ஐந்து பேரை கொடைக்கானல் காவல் துறை சமீபத்தில் கைது செய்தது.

கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் போதை காளான்கள் கொரியர் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெளியூர்களில் யார், யாருக்கு இது விற்பனை செய்யப்பட்டது என்பதையும் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டில் கேரளாவைச் சேர்ந்த இளைஞர்கள் சுற்றுலாவுக்காக கொடைக்கானல் வந்தபோது போதை காளானை உட்கொண்டதில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து இறந்தனர்.

வெளிநாட்டவர்களால் கொடைக்கானலில் அறிமுகமான மேஜிக் காளான்கள்

இதுகுறித்து பேசிய கொடைக்கானல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனர் வீரபத்திரன், “ஓடைகள், நீர்வீழ்ச்சிகள், அடர்ந்த வனப்பகுதி என அனைத்தும் நிறைந்த பகுதி வட்டக்கானல். அதிகம் யாரும் அறியாத இடமாகவும் திகழ்கிறது.

1863ல் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த ஆங்கிலேயர் சர் வீரே ஹென்றி உயர் அதிகாரிகளின் பணிச சுமையை போக்க இதனை ஒரு மருந்தாக அறிமுகம் செய்து வைத்தார். சைலோசைபின் (Psilocybin) எனப்படும் மேஜிக் காளான் முந்தைய காலத்தில் வெளிநாட்டவரால் தான் பெருமளவில் மருந்தாக பயன்படுத்தபட்டது.

ஐந்து துண்டு காளான்களை மருந்தாக எடுத்துக் கொண்டனர். அதிகளவில் உடல் சோர்வு, வயிற்று வலி போன்றவற்றால் பாதிப்புக்கு உள்ளான வெளிநாட்டினர் இதனை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தனர்” என கூறினார் வீரபத்திரன்.

ஆம்லெட்டோடு மேஜிக் காளானை உட்கொள்ளும் இஸ்ரேலியர்கள்

மேலும் தொடர்ந்த அவர், ”கடந்த 25 ஆண்டுகளாக இஸ்ரேல் சுற்றுலா பயணிகளின் வருகை இங்கு ஆரம்பித்தது. அதன்பின் வருடம் தவறாமல் இஸ்ரேல் மக்களின் வருகை நவம்பர் முதல் மார்ச் வரை அதிகமாக இருக்கும். அங்கு அவர்கள் ஒன்று கூடி கூட்டு பிரார்த்தனையிலும் ஈடுபடுவர். இது மருத்துவ குணம் நிறைந்தது என்று இஸ்ரேல் மக்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் அவர்கள் அதனை போதைப்பொருளாக பயன்படுத்த ஆரம்பித்தனர்” என கூறுகிறார் வீரபத்திரன்.

”இஸ்ரேலியர்கள் மேஜிக் காளான்களை துண்டுகளாக மாற்றி சூப், ஆம்லெட், வாழைப்பழத்தோடு சாப்பிடுகின்றனர். அதன் கசப்புத் தன்மையை போக்க இப்படி உட்கொண்டனர். இன்றளவும் வட்டக்கானல் உணவகங்களில் ஹீப்ரூ எழுத்துகளை காண முடியும்.

இதன் பின்னரே தமிழ்நாட்டில் உள்ள உள்ளூர் மக்கள் அதனை தேடி எடுத்து சுற்றுலாப் பயணிகளுக்கு விற்க ஆரம்பித்தனர். தற்போது பெங்களூரு, சென்னை மற்றும் கேரள நகரங்களில் உள்ள கல்லுரிகளுக்கு கொரியர் மூலம் விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் புகையிலையோடு கலந்தும் தனியாக காய வைத்தும் சாப்பிடுகின்றனர்.

இப்பொழுது அந்த மேஜிக் காளான்கள் கொடைக்கானலில் அதிகம் கிடைப்பதில்லை. அதனால் கடந்த ஒரு ஐந்து வருடங்களாக மேஜிக் காளான்கள் என்ற பெயரில் விஷ காளான்களை விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளனர். விஷ காளான்கள் என தெரியாமல் அதனையும் சுற்றுலாப் பயணிகள் வாங்கி உட்கொள்கின்றனர்.

இந்த காளானை உட்கொண்டால் 8 மணி நேரம் வரை போதை நிற்கும். அதனை தாண்டி ரத்த ஓட்டம் அதிகரித்து மாரடைப்பு வரவும் வாய்ப்பு உள்ளது. கஞ்சாவை போலவே தான் இதன் பக்கவிளைவுகளும் இருக்கும்” என கூறுகிறார் சமூக ஆர்வலர் வீரபத்திரன்.

மேஜிக் காளான்களுக்கு உண்மையிலேயே மருத்துவ குணம் இருக்கிறதா?

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கிருஷ்ணமூர்த்தி, “மேஜிக் காளான்களுக்கு மருத்துவ குணம் அதிகமாக இருக்கிறது. ஆனால், அதன் விஷத்தன்மை நிறைந்த பகுதிகளை எடுத்துவிட்டு முறையான மருத்துவ பரிந்துரைப்படி உட்கொள்ள வேண்டும். மேஜிக் காளான்களில் அல்கலாய்டு அதாவது உடலை அமைதிப்படுத்தும் மற்றும் உறக்க உணர்வு கொள்ளச்செய்யும் போதைப்பொருள் அல்லது மருந்து நிறைந்துள்ளது. இதனை மனஅழுத்தம், உடல்வலி போன்றவற்றைக்கு மருந்தாக வெளிநாடுகளில் பயன்படுத்த ஆரம்பித்தனர்.

மெக்ஸிகோ, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தற்போது இதனை உபயோகித்து வருகின்றனர். இந்தியாவில் காளான்களுக்கான விழிப்புணர்வு இன்றளவும் ஏற்படவில்லை. போதைக்காக விஷ காளான்களை கூட சாப்பிட முற்படுகின்றனர்.

கொடைக்கானல் முழுக்க முழுக்க 100 முதல் 120 வகையான காளான்கள் நிறைந்து இருக்கும். இதில் பல சத்து மிகுந்த உண்ணக்கூடிய காளான்கள் இருக்கும். அதேபோல, விஷ காளான்களும் இருக்கும். மாணவர்கள் யூடியூபில் மேஜிக் காளான்களை கண்டறிவது எப்படி என தெரிந்துகொள்கின்றனர்” என்றார்.

ட்ரெக்கிங் செய்பவர்கள் காளான்களை சாப்பிடலாமா?

மேலும் தொடர்ந்த அவர், “ஒரு சில காளான்களில் ஒரு பகுதி மட்டும் விஷம் நிறைந்ததாக இருக்கும். தெருவோரங்களில் இருக்கும் குப்பைக்காளானைக் கருப்பு அடிக்கும் தருவாயில் அது உண்ணக்கூடியது. அதுவே சற்று விரிந்து விட்டால் அது விஷம் நிறைந்ததாக மாறிவிடும்.

பலர் ட்ரெக்கிங் செய்யும் பொழுது காளான்களை எடுத்து உட்கொள்கின்றனர். யூடியூபில் உள்ள தவறான வழிகாட்டுதலோடு இப்படி செய்கின்றனர். காளான்களை உண்ணும் முன் பல விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும்.

சிலர் வெள்ளை நிறத்தில் இருக்கும் காளான்களை சாப்பிடலாம் என்று கூறுவார்கள். அது முற்றிலும் தவறு.

நிறங்கள் நிறைந்த காளான்களை சாப்பிட கூடாது என்று சொல்வார்கள். அதுவும் தவறு. ஷிடேக், கூன், ருசுலா போன்ற காளான்கள் நிறங்கள் கொண்டவை. கூடவே அதிகம் சத்து நிறைந்தது. சில காளான்களில் உள்ளே வழுவழு என இருக்கும் அதனை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். காளான்களை பற்றி தெரியாமல் அதனை உட்கொள்ளவது மிகவும் ஆபத்தானது." என்றும் கூறினார்.

போதை காளான் பேக்கேஜோடு செயல்படும் விடுதிகள்

வட்டக்கானல் தற்போது அதிக அளவில் தனியார் விடுதிகள் நிறைந்த இடமாக மாறிவருகிறது. இங்கு போதை காளான் பேக்கேஜ் என்ற பெயரில் தங்கும் விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன. சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் தனியாக வாட்சப் குழுக்களும் இணையதளங்களும் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார் வீரபத்திரன்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய போதைப்பொருட்கள் கட்டுப்பாட்டு பணியகத்தின் (NCB) சென்னை மண்டல இயக்குநர் அரவிந்தன், ”இதனை 50 கிராமிற்கு மேலாக வைத்திருந்தாலே கண்டிப்பாக கைது நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவில் வெளிநாட்டினரைக் கண்டுபிடித்து கண்காணிக்க உதவும் படிவம் ’சி’ மூலம் கண்காணித்து வருகிறோம். இதனை விற்கும் உள்ளூர் மக்களையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

கொடைக்கானல் முழுக்க உண்ணக்கூடிய காளான்கள் அதிகமாகவே இருக்கிறது. அதனால் மேஜிக் காளான்களுக்கு என தனியாக தடை கொண்டுவருவது இயலாத ஒன்று.

தற்போது மாணவர்கள் பலர் இதனை தேடி பெருமளவில் கொடைக்கானல் வருகின்றனர். அப்படி காவல்துறையிடம் அவர்கள் சிக்கினால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்” என தெரிவித்தார் அரவிந்தன்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்,எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)