மாவோயிஸ்ட் தொடர்பு வழக்கு: ஜிஎன் சாய்பாபாவை விடுவித்த மும்பை உயர்நீதிமன்றம் – முழு விவரம்

மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாகத் தொடரப்பட்ட வழக்கில் 54 வயதான டெல்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவை மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு விடுவித்துள்ளது.

நீதிபதி வினய் ஜோஷி, நீதிபதி எஸ்.ஏன்.மெனேசஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, சாய்பாபா உள்ளிட்டோர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட 2017-ம் ஆண்டு அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது.

அரசின் மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றம் முடிவு செய்யும் வரை, குற்றம் சாட்டப்பட்டவர்களை ரூ.50,000 பிணையில் விடுவிக்கலாம் என்று நீதிமன்றம் கூறியது. இந்த முடிவுக்கு மகாராஷ்டிரா அரசு இன்னும் தடை கோரவில்லை.

அக்டோபர் 2022-ல், உச்சநீதிமன்றம் மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தடை செய்ய மறுத்து, உயர்நீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டுமென்று கூறியது.

தற்போது மீண்டும் விசாரணை செய்த பிறகு, ஜி.என். சாய்பாபாவை விடுவிப்பதாக உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு தீர்ப்பளித்துள்ளது. 54 வயதான சாய்பாபா சக்கர நாற்காலியின் உதவியுடன் நடக்கும் மாற்றுத்திறனாளி. இவர் கடந்த 11 ஆண்டுகளாக நாக்பூர் மத்திய சிறையில் இருந்தார்.

சாய் பாபாவின் மனைவி வசந்தகுமாரி பிபிசியிடம் பேசுகையில், “ஊடகங்கள் மூலம்தான் நாங்கள் அதை அறிந்தோம். இந்தச் செய்தியைக் கேட்டு நானும் எனது மகள் மஞ்சிராவும் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். எந்தத் தடையும் இல்லாமல் அவர் விடுவிக்கப்படுவார் என நம்புகிறோம். இத்தனை ஆண்டுகளாக சாய்பாபாவும் நாங்களும் மிகவும் துன்பப்பட்டோம். இந்த வழக்கில் மீதமுள்ள குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் விரைவில் நீதி கிடைக்கும் என் எதிர்பார்க்கிறோம்,” என்று கூறினார்.

பிரபல மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய் சிங், சாய்பாபாவை விடுவிக்கும் முடிவு குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள அதேவேளையில், தீவிர கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “சாய்பாபா விடுவிக்கப்பட்டார். ஆனால், எவ்வளவு காலத்திற்குப் பிறகு? அவரது உடல்நிலைக்கு ஏற்பட்ட பாதிப்பை யார் திருப்பிக் கொடுப்பார்கள்? நீதிமன்றமா? அவமானம். இன்னும் எத்தனை பேர் பிணை வேண்டிக் காத்திருக்க வேண்டும்? சுதந்திரத்திற்கான வழியை இழந்ததற்கு யார் விலை கொடுப்பார்கள்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு சமூக சேவகர் என்ற முறையில், பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா புரட்சிகர ஜனநாயக முன்னணி என்ற அமைப்புடன் தொடர்புடையவர். அவர் ‘புரட்சிகர ஜனநாயக முன்னணி’யின் துணைச் செயலாளராக இருந்துள்ளார். இந்த அமைப்புக்கு மாவோயிஸ்டுகளுடன் இருந்த தொடர்புகளுக்காக உளவுத்துறையின் கண்காணிப்பில் உள்ளது.

முன்பு உச்சநீதிமன்றத்தில் என்ன நடந்தது?

சாய்பாபா மற்றும் இரண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் நக்சலைட் இலக்கியங்கள் இருப்பதாகவும் அவர்கள் கச்சிரோலியில் மறைந்து வாழும் நக்சலைட்டுகளுக்கு அதை விநியோகிக்கப் போவதாகவும், அங்கு மக்களைப் பிரித்து வன்முறையைப் பரப்ப விரும்புவதாகவும் செஷன்ஸ் நீதிமன்றம் கூறியது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து சாய்பாபா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

அக்டோபர் 14, 2022 அன்று உயர்நீதிமன்றம் சாய்பாபாவை விடுவித்தது. அதோடு, இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய தேசியப் புலனாய்வு முகாமுக்கு அனுமதி வழகியது.

பயங்கரவாதம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் அதற்கு எதிராக சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும், ஆனால், ஒரு குடிமகனின் உரிமைகள் மற்றும் அதன் செயல்முறையைப் புறக்கணிக்க முடியாது எனவும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

பயங்கரவாதம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும், அதற்கு எதிராக சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும், ஆனால் ஒரு குடிமகனின் உரிமைகள் மற்றும் அதன் செயல்முறையை புறக்கணிக்க முடியாது என்றும் உயர்நீதிமன்றம் கூறியது.

இதற்குப் பிறகு, அக்டோபர் 2022-ல் உச்சநீதிமன்றம் மும்பை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பைத் தடை செய்ய மறுத்து, வழக்கை மறுவிசாரணை செய்யுமாறு உத்தரவிட்டது.

இந்த வழக்கின் முழு பின்னணி?

ஹேம் மிஸ்ரா மற்றும் பிரசாந்த் ராஹி ஆகியோர் 2013இல் கைது செய்யப்பட்டனர்.

அவர் மாவோயிஸ்ட் தலைவர்களைச் சந்திக்க இருப்பதாகவும், பேராசிரியர் சாய்பாபா உதவியுடன் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதற்குப் பிறகு, 2013இல் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவின் வீட்டில் கச்சிரோலி மற்றும் டெல்லி காவல்துறையின் கூட்டுக் குழுக்கள் சோதனையிட்டன.

அப்போது பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா தனது லேப்டாப், நான்கு பென் டிரைவ்கள், நான்கு எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் சில புத்தகங்களை போலீசார் எடுத்துச் சென்றதாகக் கூறியிருந்தார்.

கடந்த 2014இல், பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா டெல்லியிலுள்ள அவரது வீட்டில் இருந்து மகாராஷ்டிரா காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் பல்கலைக்கழகத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

மகாராஷ்டிரா மாநிலம் கச்சிரோலி நீதிமன்றம், யுஏபிஏ பிரிவு 13, 18, 20, 39இன் கீழ் பேராசிரியர் சாய்பாபா குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது.

பேராசிரியர் சாய்பாபா ஒரு பக்கவாத நோயாளி, 90 சதவீத மாற்றுத்திறனாளி பிரிவில் வருபவர். உச்சநீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகு, உடல்நலக் குறைவு காரணமாக ஜூலை 2015இல் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து அவரது ஜாமீனை ரத்து செய்த உயர்நீதிமன்றம், சரணடையுமாறு உத்தரவிட்டது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)