You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட்: அம்பானி இல்ல விழா சர்வதேச கவனம் பெற என்ன காரணம்?
குஜராத்தில் உள்ள சிறிய நகரான ஜாம்நகர், சர்வதேச கவனம் பெற்றுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, அவரது வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய விழாவே அதற்குக் காரணம்.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், பிரபல பாடகி ரிஹானா, முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவாங்கா, பல நாடுகளின் பிரதமர்கள் மற்றும் பல பிரபல பாலிவுட் நடிகர்கள் ஜாம் நகருக்கு வருகை தந்தனர்.
பாப் பாடகி ரிஹானா முதல் பஞ்சாபி பாப் நட்சத்திரம் தில்ஜித் டோசன்ஜ் வரை ஜாம்நகரில் மேடை நிகழ்ச்சிகளை நடத்தினர். ஊடகங்கள், சமூக ஊடகங்களில் வெளிவரும் வீடியோக்களில், அந்த நகரம் முழுவதும் ஒரு திருவிழா போலக் காட்சியளிப்பது தெரிகிறது.
பணக்கார வீட்டு திருமணத்தை மக்கள் எவ்வாறு பார்க்கின்றனர்?
பிரபல அரசியல் சிந்தனையாளரும், இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற ஆங்கில நாளிதழின் பங்களிப்பு ஆசிரியருமான பிரதாப் பானு மேத்தா, இந்தத் திருமணம் குறித்து "திருமணம் நம்பர் ஒன்" என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
"ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய விழா பெற்ற ஈர்ப்பு, இந்தியாவின் கலாசாரம் மற்றும் அரசியல் பொருளாதாரத்தில் நடக்கும் பரந்த மாற்றங்களைக் காண ஒரு சாளரம்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு கண்ணோட்டத்தில், பணம், அதிகாரம், கவர்ச்சி, குடும்ப மதிப்புகள், பக்தி ஆகியவற்றின் கச்சிதமான சங்கமத்தைக் கொண்டுள்ள மிகச் சிறந்த கதையாகப் படுகிறது. இங்கு ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தன் சொந்தப் போராட்டம் உண்டு. இது சூரஜ் பர்ஜாத்யாவால்கூட சிந்திக்க முடியாத கதை. மக்களும் அங்கே என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதில் ஆர்வமாக உள்ளனர்.
இதுபோன்ற காட்சிகள் மக்களிடையே கோபத்தையோ எரிச்சலையோ உருவாக்குவது அரிது. பொறாமை எந்தச் சூழ்நிலையிலும் அருகில் போட்டி இருக்கும்போது மட்டுமே ஏற்படுகிறது.
பொதுவாக பணக்காரர்களிடம் அப்படியோர் உணர்வு இருக்காது. இந்தியா போன்ற சமத்துவமற்ற சமூகத்தில் இதுபோன்ற காட்சிகள் அரங்கேறும்போது, அது மிகவும் விசித்திரமாகவும் மக்களை திசை திருப்புவதாகவும் இருக்கிறது. ஒருவரின் வெற்றி மற்றும் செல்வத்தால் எரிச்சல் அடைவது ஒரு சிதைந்த சிந்தனை. பண பலத்தை இப்படிக் காட்டுவது தேவையற்றது என்றால் அதை வெறுப்பதும் தேவையற்றது.
பணம், அதிகாரம், கவர்ச்சி மூன்றும் ஒரே இடத்தில்...
ஆடம் ஸ்மித் கூறியது போல் - பணக்காரர்களிடம் 'தனிப்பட்ட, வித்தியாசமான அனுதாபம்' உள்ளது. அதாவது பணக்காரர்கள் நிச்சயமாக சாதாரண மக்களுக்கு ஓர் உத்வேகமாகத் திகழ்கிறார்கள்.
உலகெங்கிலும் உள்ள சாதாரண மக்கள் பணக்காரர்களின் வெற்றியில் ஈர்க்கப்படுவதற்கு இதுவே காரணம். அவர்கள் பணக்காரர்களிடம் அனுதாபம் கொள்கிறார்கள், அவர்களிடம் இருந்து உத்வேகம் பெறுகிறார்கள், எரிச்சலை உணர மாட்டார்கள்.
ஆனால் இது கொஞ்சம் வித்தியாசமானது. பொதுவாக, பணக்காரர்களின் நிகழ்வுகள் பிரிக்கப்படுகின்றன. சிலரிடம் கவர்ச்சி, சிலரிடம் தொழிலால் குவிந்த பணம், சிலரிடம் அதிகாரம் தெரிகிறது. இங்கே அவை அனைத்தும் ஒரே இடத்தில் காணப்பட்டனர்.
மற்றொரு முக்கியமான அம்சம் இந்த நிகழ்வு பொதுவில் காட்டப்பட்ட விதம். இங்குள்ள பெரிய திரைப்பட தயாரிப்பாளர்கள் திரைப்படங்களாக மாறினர், கேளிக்கைத் துறையைக் கட்டுப்படுத்துபவர்கள் இங்கு பொழுதுபோக்காக மாறினர், செய்திகளின் உரிமையாளர்கள் தாங்களாகவே செய்திகளாயினர்.
பிரதாப் பானு மேத்தாவும் இந்த நிகழ்ச்சியை சமூக ஊடக உலகத்துடன் இணைக்கிறார். சமூக ஊடகங்களில் நடிப்பின் அழுத்தம் இருப்பதாக அவர் கூறுகிறார். இந்த முழு நிகழ்வையும் பார்க்கும்போது மூன்று விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன.
பணம் படைத்தவனுக்கு அதிகாரம் உண்டு என்பது பழமொழி. ஆனால் பெரிய மூலதனம் என்ன செய்ய முடியும் என்ற வரையறை மாறிவிட்டது. சில கட்டுமானங்களை அம்பானி அல்லது அதானியால் மட்டுமே செய்ய முடியும்.
பெரிய சுத்திகரிப்பு நிலையங்கள், வேகமாகக் கட்டமைக்கும் துறைமுகங்கள், மலிவான தொலைத்தொடர்பு, 'பெரிய மூலதனம்' மட்டுமே ஒரே வழி. இதில், விதிகளைச் சீர்குலைப்பதன் மூலம் இதைச் சாத்தியமாக்குவதில் இருந்து ஒருவர் பின்வாங்கக் கூடாது.
இரண்டாவதாக, அம்பானியின் விஷயத்தில், உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் பார்க்கும் ஒரு காட்சி காணப்பட்டது. கத்தாரின் ஷேக் முதல் ரிஹானா வரை. உலகமே இந்தியாவில் இப்படி ஒரு காட்சியை பார்த்துக் கொண்டிருந்தது. இந்தியா ஒரு பணக்கார நாடாக இல்லாவிட்டால் என்ன செய்வது, குறைந்தபட்சம் அது உலகின் பணக்காரர்களைக் கொண்டுள்ளது.
மூன்றாவது இந்திய மூலதனம் இந்து தேசியவாதத்துடன் இணைந்தது. மூலதனம் கண்ணுக்குத் தெரியும். அதேநேரம் மக்கள் நலனுக்கான அர்ப்பணிப்பும் வெளிப்பட வேண்டும். இதைக் காட்ட ஒரு சரியான முதலாளித்துவ பண்பட்ட குடும்பத்தைவிட வேறு என்ன இருக்க முடியும்.
இந்த மூன்றும் சேர்ந்து அதை ஒரு சரியான தேசியவாத நிகழ்வாக ஆக்குகிறது.
முகேஷ் அம்பானி மகன் ஆடம்பர திருமணம்
அடுத்தடுத்து சிறப்பு விமானங்கள், புகழ்பெற்ற பாடகி ரிஹானாவின் நிகழ்ச்சி, பாலிவுட் நடிகர்கள் ஆகிய இவை அனைத்தும் மார்ச் 1 அன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிய இந்தியாவின் பணக்காரரின் மகனின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.
அம்பானி குடும்பத்தின் பூர்வீக கிராமமான ஜாம்நகரில் திருமண விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சி மூன்று நாட்கள் கொண்டது.
அம்பானியின் மூன்று குழந்தைகளில் ஒருவரான 28 வயதான ஆனந்த் அம்பானி பல ரிலையன்ஸ் நிறுவனங்களின் குழுக்களில் இயக்குநராக உள்ளார்.
ரிலையன்ஸின் நியூ எனர்ஜி லிமிடெட், நியூ சோலார் எனர்ஜி லிமிடெட், ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் ஆகியவற்றின் இயக்குநராக உள்ளார். ராதிகா என்கோர் ஹெல்த்கேர் போர்டில் வணிக இயக்குநராக உள்ளார்.
அம்பானியின் மகள் இஷாவின் திருமணம் 2018ஆம் ஆண்டு நடைபெற்றது. அது இந்தியாவின் மிகவும் ஆடம்பரமான திருமணம் என்று கூறப்படுகிறது. இதற்குத் தோராயமாக 700 கோடி ரூபாய் செலவானதாக நம்பப்படுகிறது. மும்பையில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் அமெரிக்க பாடகி பியான்ஸ் கலந்து கொண்டார்.
விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து
ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முன்னதாக ஜாம்நகர் விமான நிலையத்திற்கு 10 நாட்களுக்கு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 25 முதல் மார்ச் 5 வரை பல சர்வதேச விமானங்கள் விமான நிலையத்திற்கு வரக்கூடும் என்று தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், சுகாதார அமைச்சகம், நிதி அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் விமான நிலையத்திலேயே சுங்கம், குடிவரவு மற்றும் தனிமைப்படுத்தல் வசதிகளைத் தயார் செய்துள்ளன.
ஜாம்நகர் ஒரு ராணுவ விமான நிலையம் என்று தி இந்து நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. அங்கு பொதுமக்கள் விமானங்களும் தரையிறங்க அனுமதிக்கப்படுகின்றன. இங்கு விமான நிலைய ஆணையம் தனி பயணிகள் முனையத்தை உருவாக்கியுள்ளது. ஆனால் ஆனந்த் அம்பானி திருமணத்தின்போது விமான நிலையத்தில் கூட்டம் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, இந்திய விமானப் படையும் அதன் முக்கியமான 'தொழில்நுட்பப் பகுதிகளுக்கு' அணுக அனுமதி அளித்துள்ளதாக அந்த செய்தித்தாள் கூறுகிறது.
பெயர் குறிப்பிட விரும்பாத விமான நிலைய அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டியுள்ள தி இந்து நாளிதழ், "ஒரு குறிப்பிட்ட நேரத்தில், மூன்று விமானங்கள் விமானப்படையின் தொழில்நுட்பப் பகுதியில் வைக்கப்பட்டுள்ளன. ஆறு சிறிய மற்றும் 3 பெரிய விமானங்கள் விமான நிலையத்தின் சிவில் பகுதியில் வைக்கப்பட்டுள்ளன," என்று குறிப்பிட்டுள்ளது.
வழக்கமாக, ஆறு விமானங்கள் விமான நிலையத்தில் இருந்து ஒரு நாளில் இயக்கப்படுகின்றன, வெள்ளிக்கிழமை இந்த எண்ணிக்கை 140ஐ எட்டியது. இவற்றில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை சர்வதேச விமானங்கள்.
பிசினஸ் ஸ்டாண்டர்டில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, "ஜாம்நகர் விமான நிலையத்தில் பார்க்கிங் இடம் இல்லை. எனவே வாடகை விமானங்கள் அருகிலுள்ள ராஜ்கோட், போர்பந்தர், ஆமதாபாத், மும்பையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன," என்று விமான நிலைய இயக்குநர் தனஞ்சய் குமார் சிங் கூறினார்.
முகேஷ் அம்பானியின் மகன் திருமணத்திற்கு வரும் விருந்தினர்களின் பட்டியல், டாவோஸ் வருடாந்திர மாநாட்டின் பட்டியலையும் தாண்டும் வகையில் இருப்பதாக அந்த நாளிதழ் எழுதுகிறது. இதில் கௌதம் அதானி, குமார் மங்கலம் பிர்லா, அஜய் பரிமல், ஷாருக்கான், தீபிகா படுகோன், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரும் அடக்கம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)