இருவாச்சி: ஒருவனுக்கு ஒருத்தியாக வாழும் இந்த பறவைகளில் ஒன்று இறந்தால் மற்றொன்று என்ன செய்யும் தெரியுமா?

    • எழுதியவர், ச.பிரசாந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வாழும் மலை இருவாச்சி பறவைகள், சோலைக்காடுகளின் அடையாளச் சின்னமாகக் கருதப்படுகிறது. அவை இறுதிவரை ஒரே துணையுடன் பேரன்போடு வாழும் முறை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

இந்தியாவின் உயிர்நாடியான முக்கிய பல்லுயிர் பெருக்க மண்டலமான மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர், குஜராத் மாநிலத்தில் தொடங்கி தமிழகத்தில் முடிவடைகிறது. 1.6 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் பல்வேறு அரிய வகை காட்டுயிர்கள், தாவரங்கள் மற்றும் பறவைகள் உள்ளன.

இதில், சோலைக்காடுகளின் சின்னமாக, இயற்கைச்சூழல் ஆரோக்கியமாக உள்ளதை உணர்த்தும் அடையாளமாக விளங்குகிறது மலை இருவாச்சிப் பறவை.

மேற்குத்தொடர்ச்சி மலைகளைப் பொறுத்தவரையில், மலை இருவாச்சிகளும் (இந்தியன் கிரேட் ஹார்ன்பில்), பெரிய மலபார் சாம்பல் இருவாச்சி (மலபார் பைடு ஹார்ன்பில்), மலபார் சாம்பல் இருவாச்சி (மலபார் கிரே ஹார்ன்பில்), சாம்பல் இருவாச்சி (கிரே ஹார்ன்பில்) ஆகிய நான்கு வகைகள் உள்ளன.

இதில், மலை இருவாச்சி தனக்கென பல தனித்துவமான சிறப்புகளைக் கொண்டிருப்பதுடன், இவற்றின் இனப்பெருக்க முறையும், வாழ்வியலும் கேட்போரை மலைக்க வைப்பதைப் போன்று உள்ளது. மலை இருவாச்சியின் வாழ்க்கையில் அப்படி என்ன சிறப்பு?

‘காட்டின் காவலன் மலை இருவாச்சி’

மலை இருவாச்சிகள் காட்டின் பாதுகாவலனாக உள்ளதுடன், ஒருவனுக்கு ஒருத்தி என்பது போன்ற வாழ்க்கைமுறையில் பேரன்போடு வாழ்வதாகத் தெரிவிக்கிறார், பறவை ஆய்வாளரும் இறகுகள் அம்ரிதா இயற்கை அறக்கட்டளையின் தலைவருமான ரவீந்திரன் நடராஜன்.

மலை இருவாச்சி குறித்து பிபிசி தமிழிடம் விளக்கிய ரவீந்திரன் நடராஜன், ‘‘மலை இருவாச்சிகள் அதிகமாக சோலைக்காடுகள் போன்ற அடர் காட்டில்தான் வாழ்கின்றன. இவை பழங்கள் முதல் பாம்புகள் வரை சாப்பிடுவதுடன், தனது எச்சம் மூலம் காட்டில் மரங்களைப் பரப்பும் முக்கியப் பணியைச் செய்து வருகின்றன. ஓரிடத்தில் புலியைப் பார்த்தால் காடு எப்படி செழிப்பாக இருப்பதாக நாம் உணர்கிறோம். அதேபோலத்தான் சோலைக்காடுகளின் ஆரோக்கியச் சின்னமாக மலை இருவாச்சிகள் உள்ளன," என்றார்.

மேலும், ஒருவனுக்கு ஒருத்தி என்பது போல், ஒரே இணையுடன் இறுதி வரை வாழ்வதும், பெண் பறவை முட்டைகளை அடைகாத்து குஞ்சுகளை வளர்ப்பது வரையில் ஆண் பறவை பேரன்புடன் அதற்கு உதவுவதுதான் இதன் சிறப்பு என்றும் விளக்கினார் அவர்.

"ஆண் மலை இருவாச்சி முதலில் பெண் இருவாச்சிக்கு பழம், பூச்சிகள் போன்றவற்றை வழங்கும். பெண் இருவாச்சி அதில் ஈர்க்கப்பட்டால் மட்டுமே ஆண் பறவையைத் தனது இணையாகத் தேர்வு செய்யும். தேர்வு செய்தவுடன் பல ஆண்டுகள் அல்லது இறுதி வரையில் அந்த ஒரே துணையுடன் அவை அன்பாக வாழ்வது ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது."

பல ஆண்டுக்காலம் இணைந்து வாழ்ந்த ஆண் அல்லது பெண் பறவை இறந்துவிட்டால், அதன் துணையும் உணவு சாப்பிடாமல் தன்னைத்தானே வருத்திக்கொண்டு மரணிப்பதாக" அவர் தெரிவித்தார். இருப்பினும் இந்தப் பழக்கம் சில காலமே இணைந்து வாழ்ந்து பிரியும் சூழல் ஏற்படும்போது இருவாச்சிகளிடம் காணப்படவில்லை என்றும் கூறினார் அவர்.

இருப்பினும், இந்தக் குறிப்பிட்ட செயல்பாடு குறித்துப் பரவலாகப் பேசப்பட்டாலும் அது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்று கூறுகிறார் பறவை ஆராய்ச்சியாளர் முனைவர் வெ.கிருபாநந்தினி.

அவரது கூற்றின்படி, தமது இனத்தைப் பெருக்குவதற்கான வழிகளையே பரிணாம வளர்ச்சி உயிரினங்களுக்கு அளிக்கிறது. அப்படியிருக்கும் சூழலில் ஒரு பறவை இணையை இழந்த பிறகு தன்னைத் தானே வருத்திக்கொள்ளுமா என்பது சந்தேகத்திற்கு உரியது என்கிறார் அவர்.

பிரமிக்க வைக்கும் ஆண் பறவையின் அன்பு

"பெண் இருவாச்சி தனது ஆண் துணையைத் தேர்வு செய்ததும் தங்கள் காதலை வெளிப்படுத்த, இரண்டும் உயரமாகப் பறந்து தங்கள் அலகுகளைக் கவ்விக்கொண்டு கீழ்நோக்கிப் பறந்து வரும். பிறகு பலமுறை இணைந்தே வானில் பறக்கும். அதன்பிறகுதான் இனப்பெருக்க செயல்முறையைத் தொடங்கும்," என்றும் ரவீந்திரன் விளக்கினார்.

"இனப்பெருக்கம் முடிந்ததும், மிகவும் உயரமான மரங்களின் பொந்துகளில் 2 – 3 முட்டையிட்டு 30 நாட்கள் வரையில் பெண் பறவை அடைகாக்கும். அந்தப் பொந்துகளில் மரப்பாம்புகள் வருவதைத் தடுக்க, தனது எச்சில் மற்றும் எச்சம், நச்சுத்தன்மையுள்ள காய்களைக் கொண்டு அந்தப் பொந்தை ஆண் பறவை அடைத்துவிடும். அதில் பெண் பறவை தனது அலகை வெளியிடும் அளவிற்கு மட்டுமே ஓட்டையிருக்கும்.

‘உள்ளே இருக்கும் பெண் பறவை, முட்டைகளை அடைகாக்கத் தொடங்கியதும் தனது சக்தியைச் சேமிக்கத் தனது சிறகுகளைத் தானே உதிர்த்துவிடும். எங்கும் செல்லாமல் அந்தப் பொந்திலேயே அடைந்திருக்கும் பெண் இருவாச்சிக்கு ஆண் பறவைதான் உணவுகளைக் கொண்டு வந்து ஊட்டிவிடும். இந்தக் காலகட்டத்தில் ஆண் பறவையின் அன்பும், பெண் மற்றும் குஞ்சுகளைக் காப்பதில் அவை செய்யும் அளப்பரிய பணியும்,’’ பிரமிக்க வைப்பதாகக் கூறுகிறார் ரவீந்திரன்.

சோலைக்காடுகள் சுருங்கி வருவது, காட்டில் உயரமான மரங்கள் வெட்டப்படுவது, அடர்காட்டை ஊடுருவி சாலைகள் அமைக்கப்படுவது போன்ற பல்வேரு காரணங்களால் இருவாச்சிகளின் வாழ்விடம் பாதிப்புகளைச் சந்தித்து வருவதாகவும் தனது கவலையை வெளிப்படுத்தினார் பறவை ஆர்வலர் ரவீந்திரன்.

"மனிதர்கள் பயணிக்கும் காடுகளில் அயல் தாவரங்கள் உற்பத்தி, வாகன இரைச்சல், கரிம வெளியீடு போன்ற பிரச்னைகளால் அவை பாதிக்கின்றன. மற்றபடி அவற்றின் எண்ணிக்கை குறையாமல்தான் வாழ்ந்து வருகின்றன.

"அரிதாகக் காணப்படும் இருவாச்சி, அதிக எண்ணிக்கையில் ஒரே இடத்தில் பார்த்தால் அந்த ஆண்டு மழை அதிகமாக இருக்கும் எனவும் பழங்குடியின மக்கள் நம்புகின்றனர். அவற்றை மலைமுழுங்கி எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்,’’ என்றும் குறிப்பிட்டார் அவர்.

இந்தியாவில் இருவாச்சிகளின் முக்கியத்துவம் என்ன?

உலக அளவில் இருவாச்சி பறவை இனங்கள் அழிந்து வரும் பறவைகளாக, சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு சங்கம் (ஐ.யு.சி.என்) அறிவித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் அதிகம் வாழ்கின்றன. தமிழ்நாடு, கேரளா, கர்நாடக, அருனாச்சல பிரதேசத்தில் இருவாச்சிகள் உள்ளன. கேரளா மற்றும் அருனாச்சல பிரதேசத்தின் மாநிலப் பறவையாக இருவாச்சி அறிவிக்கப்பட்டு, பாதுகாக்கப்படுகிறது.

இருவாச்சிகளை தங்கள் கலாசாரத்தில் முக்கிய பங்காகக் கருதும் நாகாலாந்து மாநில பழங்குடியின மக்கள், ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இருவாச்சி திருவிழாவை நடத்துகின்றனர்.

மேற்குத்தொடர்ச்சி மலைகளைத் தவிர அஸ்ஸாம், மேற்கு வங்கம் மற்றும் இமயமலைத் தொடர்களிலும் இருவாச்சிகள் இருப்பதை ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர். இயற்கையின் பாதுகாவலனாக, அன்பின் இலக்கணமாகத் திகழும் இருவாச்சிகளைப் பாதுகாக்க வேண்டுமென்ற குரல் சமீப காலமாக இந்தியா முழுவதிலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இருவாச்சிகள் தொடர்பான தகவல்கள் பாடப் புத்தகங்களிலும் சேர்க்கப்பட்டுள்ளதால், இனிவரும் தலைமுறையினரும் இருவாச்சிகளின் சிறப்பைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இருவாச்சி பறவைகளுக்கு உள்ள ஆபத்து என்ன?

பிபிசி தமிழிடம் பேசிய சாலிம் அலி பறவைகள் ஆராய்ச்சி மைய பணியாளரும் பறவைகள் ஆய்வாளருமான முனைவர் வெ.கிருபாநந்தினி, ‘‘மலை இருவாச்சிகள் இனப்பெருக்க நேரத்தில் ஒரே நாளில் பலமுறை பெண் பறவைக்கு உணவு கொடுக்க வேண்டியிருக்கும். இதற்காக கூடு அமைத்துள்ள பகுதிக்கு அருகில்தான் சுற்றித் திரிந்து ஆண் பறவை உணவு சேகரிக்கும்.

அப்போது, கூட்டுக்கு அருகே ஏதேனும் பிரச்னைகள் இருந்தாலோ, அல்லது அப்பகுதியில் மனித தலையீட்டால் பிரச்னை இருந்தாலோ, அவை நீண்ட தொலைவுக்குப் பயணித்து உணவு தேடி வரும். அப்போது ஆண் பறவை வேட்டை மற்றும் இதர காரணங்களால் மரணித்து, பெண் பறவையும் மரணிக்க அதிக வாய்ப்புள்ளது,’’ என்கிறார் அவர்.

‘‘சுற்றுலாப் பயணிகளும், காட்டுயிர் புகைப்படக் கலைஞர்களும், இருவாச்சிகளின் கூடு இருக்கும் மரத்திற்கு அருகிலேயே செல்வதுடன், அங்கு உணவுப்பொட்டலம், பிளாஸ்டிக் கழிவுகளைப் போடுகின்றனர். அங்கேயே நீண்ட நேரம் அவர்கள் காத்திருப்பதால், இருவாச்சிகள் அச்சுறுத்தலைச் சந்தித்து கூட்டிற்கே வராமல்கூட இருப்பதை நாங்கள் ஆய்வுகள் மூலம் பதிவு செய்துள்ளோம்.

சுற்றுலா பயணிகள் பயணிக்கும் பகுதிகளில் இருவாச்சிகளின் கூடுகள் இருந்தோல் அந்தப் பகுதிகளிலாவது, வனத்துறையினர் அடிக்கடி கண்காணிப்பு மேற்கொண்டு அச்சுறுத்தலைக் குறைக்க வேண்டும். அச்சுறுத்தலின்றி புகைப்படம் எடுக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

அதேபோல், காட்டின் எல்லைப்பகுதி மற்றும் காட்டினுள் இருக்கும் தேயிலைத் தோட்டங்களில் அதிக நச்சுத்தன்மையுள்ள, ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளால் நீண்ட கால அடிப்படையில் இருவாச்சிகள் பாதிக்கப்படுகின்றன,’’ என்கிறார் முனைவர்.வெ.கிருபாநந்தினி.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)