ஐரோப்பியர்கள் மது அருந்தும் முறை ஆரோக்கியமானது என்பது உண்மையா?

நான் பல்கலைக்கழக படிப்புக்காக வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முந்தைய நாள் எனக்கு 18 வயதானது. பிரிட்டனில் மது வாங்குவதற்கான வயது வரம்பை நான் அப்போது கடந்திருந்தேன். எனது புதிய வீட்டிற்கு அருகில் உள்ள மருத்துவர் ஒருவரிடம் நான் சென்றபோது, வாரத்திற்கு எத்தனை யூனிட் மது அருந்துவீர்கள் எனக் கேட்டார். பிரிட்டனில் 1.5 யூனிட் என்பது, தோராயமாக ஒரு சிறிய கோப்பை அளவிலான ஒயினுக்கு சமம். நான் தோராயமாக “ஏழு” என பதிலளித்தேன்.

"இந்த எண்ணிக்கை இனியும் உயரும்” என சிரிப்புடன் பதிலளித்தார். அதிக மது அருந்துவது, ஆயுட்காலம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எனக்குத் தெரியும். ஆனால் 30, 40 அல்லது 50 வயதுடைய ஒருவருடன் ஒப்பிடும்போது எனது இளமை கூடுதல் ஆபத்துகளைக் கொண்டுவரும் என்று நான் கருதவில்லை. எல்லா பெரியவர்களுக்கும் மதுவால் ஏற்படும் ஆபத்துகள் ஒரே மாதிரியாக இருக்குமா?

மதுபானம் இளம் பருவத்தினரின் மூளையை எப்படி பாதிக்கும் என்பது குறித்து எனக்கு இப்போது தெரிந்த விஷயங்களை முன்கூட்டியே நான் அறிந்திருந்தால், நான் சற்று எச்சரிக்கையாக இருந்திருப்பேன். இளம் வயதில் மது அருந்துவது நமது அறிவாற்றல் வளர்ச்சியில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும்.

இளைஞர்களிடையே மதுவின் தாக்கம் பற்றி ஆராய்ச்சியாளர்களிடம் பேசுகையில், அதுகுறித்து எனக்குத் தெரியவந்த தகவல்கள் என்னை ஆச்சரியப்படுத்தியது.

இளைஞர்களை வீட்டில் உணவுடன் மது அருந்த அனுமதிப்பது அவர்களுக்கு பொறுப்புடன் மது அருந்த கற்பிக்கிறது. ஆனால், மதுவின் தாக்கம் ஏற்படுத்தும் பிரச்னைகள் குறித்து அறிந்துகொள்வது, தங்கள் வீட்டில் மதுவை எவ்வாறு கையாள்வது என்பதைப் பெற்றோர்கள் தீர்மானிக்க உதவலாம்.

இளைஞர்களுக்கு மதுவால் மூளையில் அதிக பாதிப்பு ஏற்படுவது ஏன்?

ஆல்கஹால் ஒரு நச்சு. கல்லீரல் நோய் மற்றும் பல வகையான புற்றுநோய்கள் இதனால் ஏற்படுகின்றன. "மது அருந்தும்போது, ​​ஆரோக்கியத்தைப் பாதிக்காத பாதுகாப்பான அளவு என்று எதுவும் இல்லை" என உலக சுகாதார மையம் கூறுகிறது.

மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகளை மட்டுப்படுத்த பல நாடுகளில் சில வரம்புகள் உள்ளன. அமெரிக்காவில் ஆண்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு பானங்களுக்கு மேல் இல்லை என்றும், பெண்களுக்கு ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பானங்கள் இல்லை என்றும் வரையறுக்கப்படுகிறது. பல நாடுகளும் இதேபோன்ற வழிகாட்டுதலை வழங்குகின்றன.

பீர் மற்றும் ஒயின் பொதுவாக பாதுகாப்பான பானங்களாகக் கருதப்பட்டாலும், அமெரிக்க வழிகாட்டுதலின்படி, பானத்தின் வகையைக் காட்டிலும் அதில் உள்ள ஆல்கஹால் அளவுதான் பிரச்னை. "12-அவுன்ஸ் பீரில், ஐந்து-அவுன்ஸ் அளவு கோப்பை ஒயின் அல்லது 1.5-அவுன்ஸ் மதுபானத்தில் இருக்கும் ஆல்கஹால் இருக்கிறது." பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில், மது வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது 18. அமெரிக்காவில் 21 வயது.

எவ்வாறாயினும், இளம் வயதினருக்கு மதுபானம் மிகவும் ஆபத்தானது என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. இளம்பருவத்தினர் 21 வயது வரை தங்கள் வயது உயரத்தை எட்ட மாட்டார்கள், மேலும் அவர்கள் செங்குத்தாக வளர்வதை நிறுத்திய பின்னரும்கூட, 30 அல்லது 40 வயதையொட்டியவர்களின் உடலமைப்பை அடைந்திருக்க மாட்டார்கள்.

"ஒரு கோப்பை மது அருந்துவதால், பெரியவர்களைவிட இளைஞர்களுக்கு ரத்தத்தில் அதிகளவு ஆல்கஹால் சேர்கிறது" என்று மாஸ்ட்ரிச் பல்கலைக் கழகத்தின் முதுகலை ஆராய்ச்சியாளரும் மது அருந்துவதற்கான குறைந்தபட்ச வயதை உயர்த்துவது குறித்து ஆய்வு செய்பவருமான ரூட் ரூட்பீன் கூறுகிறார்.

இளம் பருவத்தினரின் ஒல்லியான தேகமும் இதற்கு ஒரு காரணம். நீங்கள் மது அருந்தும்போது, ​​அது உங்கள் ரத்த ஓட்டத்தில் நுழைந்து உங்கள் உடலில் பரவுகிறது. ஐந்து நிமிடங்களுக்குள் அது உங்கள் மூளையை அடைந்து, பொதுவாக உங்கள் மூளையை தீங்கு விளைவிக்கும் பொருட்களில் இருந்து பாதுகாக்கும் தடையை எளிதில் கடந்துவிடும்.

"இளைஞர்கள் மது அருந்தும்போது அதன் பெரும்பகுதி அவர்களின் மூளையைச் சென்றடைகிறது. இது, இளைஞர்கள் ஆல்கஹால் நச்சுத்தன்மையைப் பெறுவதற்கான மற்றொரு காரணம்" என்று ரூட்பீன் கூறுகிறார்.

'மோசமான நடத்தைக்கு வழிவகுக்கும்'

மண்டை ஓட்டில் ஏற்படும் மாற்றங்களையும் கவனிக்க வேண்டும். கடந்த காலத்தில், நமது பதின்பருவத்தில் நரம்பு வளர்ச்சி நின்றுவிடும் என்று கருதப்பட்டது. ஆனால் சமீபத்திய ஆராய்ச்சியின்படி, இளம்பருவ மூளையானது ஒரு சிக்கலான மறுபின்னலுக்கு உட்படுகிறது, அது குறைந்தது 25 வயது வரை முடிவடையாது.

ஒரு செல் மற்றொன்றுடன் தொடர்புகொள்ள அனுமதிக்கும் ஒத்திசைவுகளை மூளை கத்தரிக்கும்போது "கிரே மேட்டர்" எனப்படும் சாம்பல் நிற திசுக்களைக் குறைப்பது, ஆல்கஹாலின் மிக முக்கியமான விளைவுகளுள் ஒன்று என அவர் கூறுகிறார்.

மூளையில் நடத்தை மற்றும் உணர்வுகளுடன் தொடர்புடைய லிம்பிக் அமைப்பு முதலில் முதிர்ச்சியடைகிறது. நெற்றிக்குப் பின்னால் அமைந்துள்ள ப்ரீஃப்ரன்டல் கோர்டெக்ஸ் எனப்படும் முன்புறணி வளரும் வேகம் மெதுவாக இருக்கும். இந்தப் பகுதி, உணர்ச்சிக் கட்டுப்பாடு, முடிவெடுத்தல் மற்றும் சுய கட்டுப்பாடு ஆகியவற்றுடன் தொடர்புடையது.

இந்த இரண்டு பிராந்தியங்களின் வளர்ச்சியின் ஒப்பீடு, இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் ஏன் பெரியவர்களைவிட அதிக ஆபத்தைச் சந்திக்கிறார்கள் என்பதை விளக்கலாம். குறிப்பாக, உற்சாகமான பதின்ம வயதினருக்கு, ஆல்கஹால் மோசமான நடத்தை மற்றும் குற்றத்தின் சுழற்சியை உருவாக்கும் .

"அதாவது, அதிக மனக்கிளர்ச்சி கொண்ட இளம் பருவத்தினர் அதிகமாகக் குடிக்க முனைகிறார்கள், பின்னர் குடிப்பது மேலதிக மனக் கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது," என்கிறார், சௌத் கரோலினா பல்கலைக்கழகத்தின் நரம்பியல் உளவியலாளர் லிண்ட்சே ஸ்குக்லியா.

இளம்பருவத்தினரின் மதுப்பழக்கம் நீண்டகால வளர்ச்சியை பாதிக்கலாம். பல ஆய்வுகள், ஆரம்பக்கால மதுப்பழக்கம் சாம்பல் நிற திசுக்கள் மிக விரைவாகக் குறைவதுடன் தொடர்புடையது என்று சுட்டிக்காட்டுகின்றன. அதே நேரத்தில் வெள்ளை நிற திசுக்களின் வளர்ச்சியும் தடைபடுகிறது," என்கிறார் அவர்.

அறிவாற்றல் சோதனைகளில் விளைவுகள் உடனடியாகத் தெரிவதில்லை; இளம் பருவத்தினரின் மூளையில், சிக்கலைத் தீர்ப்பதற்குப் பொறுப்பான பகுதிகள் பற்றாக்குறையை ஈடுசெய்யச் சிறிது கடினமாக உழைக்கலாம். இருப்பினும் இது என்றென்றும் நீடிக்காது. "பல வருட மதுப்பழக்கத்திற்குப் பிறகு, மூளையில் குறைவான செயல்பாடு மற்றும் மோசமான செயல்திறன் ஆகியவற்றைக் காண்கிறோம்," என்கிறார் ஸ்குக்லியா.

ஆரம்பக்கால மதுப்பழக்கம் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். மேலும் எதிர்கால வாழ்க்கையில் மதுவைத் தவறாகப் பயன்படுத்துவதன் அபாயத்தை அதிகரிக்கிறது. குடும்பத்தில் ஏற்கெனவே மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு இது அதிகளவில் ஏற்படுகிறது.

ஐரோப்பிய மதுப்பழக்கம் ஆரோக்கியமானதா?

இந்தக் கண்டுபிடிப்புகள் ஓர் இளம் பருவத்தினரின் தேர்வுகளை எவ்வாறு பாதிக்கலாம்? எப்படி, எப்போது வீட்டில் குடிக்க அனுமதிக்க வேண்டும் என்பது பற்றிய பெற்றோரின் முடிவு என்னவாக இருக்க வேண்டும்?

"முடிந்தவரை மதுப்பழக்கத்தைத் தொடங்கும் வயதைத் தாமதமாக்க வேண்டும். ஏனெனில் உங்கள் மூளை பதின்பருவத்தில் இன்னும் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. மதுப்பழக்கத்தை தொடங்குவதற்கு முன் உங்கள் மூளை முடிந்தளவு ஆரோக்கியமாக இருக்கட்டும்," என்கிறார் அவர்.

இந்த அறிவுரை சட்டத்தில் இணைக்கப்பட வேண்டுமா என்பது வேறு விஷயம். மது அருந்துதல் பற்றிப் பொது வெளிகளில் தாம் பேசும்போது, "ஐரோப்பிய மதுப்பழக்க மாதிரி" குறித்துக் கேள்வி எழுப்பப்படுவதாக ஸ்குக்லியா கூறுகிறார். பிரான்ஸ் போன்ற சில நாடுகளில், சிறார்களுக்கு ஒரு கிளாஸ் ஒயின் அல்லது பீர், குடும்ப உணவுடன் சேர்த்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

ஐரோப்பாவிற்கு வெளியேயும்கூட, கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் மதுவை மெதுவாக அறிமுகப்படுத்துவது இளைஞர்களுக்குப் பாதுகாப்பாக மது அருந்த கற்றுக் கொடுக்கிறது என்றும், பிற்காலத்தில் அதிகமாக மது அருந்துவதைக் குறைக்கிறது என்றும் பல பெற்றோர்கள் நம்புகிறார்கள்.

இதுவொரு கட்டுக்கதை. "ஆல்கஹாலை பயன்படுத்துவதில் பெற்றோர்கள் எவ்வளவு அதிகமாக அனுமதிக்கிறார்களோ, அந்த அளவுக்கு ஒரு சிறார் பிற்காலத்தில் மதுவால் பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும் என்று ஆராய்ச்சிகள் சுட்டிக் காட்டுகின்றனர்" என்கிறார் ஸ்குக்லியா. "இளமைப் பருவத்தில் மது அருந்துவது தொடர்பான கடுமையான விதிகளைப் பெற்றோர்கள் விதிப்பது மதுபழக்கம் மற்றும் அதுதொடர்பான ஆபத்தான நடத்தைகளுடன் பெருமளவில் தொடர்புடையது," என்று ஓர் ஆய்வு கூறுகிறது.

ஆஸ்திரியாவில் உள்ள ஜோஹன்னஸ் கெப்லர் பல்கலைக்கழக லின்ஸில் அலெக்சாண்டர் அஹம்மர் மேற்கொண்ட ஆய்வைக் கவனியுங்கள். அங்கு 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் சட்டப்பூர்வமாக பீர் அல்லது ஒயின் வாங்கலாம். கடுமையான சட்டங்கள் மது அருந்துவதற்கான விருப்பத்தை மட்டுமே அதிகப்படுத்தினால், அமெரிக்காவைவிட ஆஸ்திரியா ஆரோக்கியமான மதுப்பழக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். அங்கு மது அருந்துவதற்கான குறைந்தபட்ச சட்டப்பூர்வ வயது 21. ஆனால் இது விஷயமல்ல.

இரு நாடுகளிலும் ஒருவர் குறைந்தபட்ச வயதைக் கடந்த பிறகு அதிகமாக மது அருந்துகின்றனர். "ஆனால் இந்த எண்ணிக்கை, அமெரிக்காவில் 21 வயதில் இருந்ததைவிட ஆஸ்திரியாவில் 16 வயதில் 25% அதிகமாக இருந்தது," என்று அலெக்சாண்டர் அஹம்மர் கூறுகிறார்.

அமெரிக்கர்கள் மது அருந்துவதற்கான சட்டப்பூர்வ வயது சற்று அதிகமாக இருப்பது, மதுபானங்களை வாங்க அனுமதிக்கப்படும்போது மிகவும் பொறுப்பான நடத்தையை ஊக்குவித்ததாகத் தோன்றியது.

"ஆல்கஹால் சட்டப்பூர்வமாக மாறும்போது, ​​​​பதின்வயதினர் முன்பைவிட மிகவும் குறைவான அபாயத்திற்கு ஆளாகின்றனர்," என்று அஹம்மர் கூறுகிறார். 16 வயதில், அத்தகைய தவறான பாதுகாப்பு உணர்வு ஆபத்தானதாக இருக்கலாம், அதேநேரம் 21 வயதில், அதிக முதிர்ச்சியடைந்த மூளை மதுபானத்தைக் கையாளுவதற்கு ஓரளவு சிறப்பாக மாறியுள்ளது.

ஐரோப்பிய மதுப்பழக்கம் ஆரோக்கியமானது என்பது முற்றிலும் உண்மையில்லை. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஐரோப்பிய பிராந்தியத்தில் ஆல்கஹால் காரணமாக ஏற்படும் புற்றுநோய்களில் மிதமான ஆல்கஹால் உட்கொள்வதால் ஏற்படுகிறது என்று தரவு சுட்டிக்காட்டுகிறது.

அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில், அரசாங்கங்கள் சட்டப்பூர்வ குறைந்தபட்ச வயதை 25 அல்லது அதற்கு மேல் அமைக்க வேண்டுமா? தனிப்பட்ட சுதந்திரம் பற்றிய மக்களின் கருத்துகளுக்கு எதிராக பொது சுகாதார நலன்கள் சமநிலைப்படுத்தப்பட வேண்டும் என்பதால், இது அவ்வளவு எளிதல்ல என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

"ஒரு கட்டத்தில் மக்கள் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க அனுமதிக்க வேண்டும்" என அஹம்மர் ஒப்புக்கொள்கிறார்.

இளம் பருவத்தினருக்கு மதுவின் அபாயங்கள் மற்றும் மதுவால் மூளையில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சிறந்த கல்வியை வழங்கலாம் என்று, ஹாமில்டனில் உள்ள மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தில் போதைக்கு அடிமையாதல் குறித்து ஆய்வு செய்து வரும் ஜேம்ஸ் மெக்கிலாப் பரிந்துரைக்கிறார்.

நீண்ட கால உடல்நல அபாயங்களை அறிந்திருந்தும், இன்றும் நான் மது அருந்துகிறேன். ஆனால் சுற்று கூடுதலாக மதுபானங்களை வாங்குவதற்கு முன் நான் இரண்டு முறை யோசிக்க இவை வழிவகுக்கலாம்.

*டேவிட் ராப்சன் விருது பெற்ற அறிவியல் எழுத்தாளர். அவரது அடுத்த புத்தகம் `தி லாஸ் ஆஃப் கனெக்‌ஷன்: தி டிரான்ஸ்ஃபர்மேட்டிவ் சயின்ஸ் ஆப் பீயிங் (The Laws of Connection: The Transformative Science of Being Social), ஜூன் 2024இல் கனோகேட் (பிரிட்டன்) மற்றும் பெகாசஸ் புக்ஸ் (அமெரிக்கா&கனடா) ஆகியவற்றால் வெளியிடப்படும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)