செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகும் ஜாமீன் மறுப்பு - என்ன காரணம்?

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைதாகியுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. வழக்கை மூன்று மாதங்களுக்குள் முடிக்கும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது.

அமலாக்கத் துறையால் கடந்த ஜூன் 2023ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைதுசெய்யப்பட்ட செந்தில் பாலாஜி தற்போது வரை சிறையில் இருந்து வருகிறார்.

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதனைத் தள்ளுபடி செய்ததோடு, விசாரணையை தினமும் நடத்தி, மூன்று மாதங்களுக்குள் வழக்கை முடிக்கும்படி விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.

செந்தில் பாலாஜி அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்ப லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறை வழக்குப் பதிவுசெய்திருந்தது. இதற்குப் பிறகு இந்த விவகாரம் தொடர்பாக பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் மத்திய அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவுசெய்தது.

ஜாமீன் கேட்ட செந்தில் பாலாஜி

2023ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத் துறை ரெய்டு நடத்தியது. அன்று நள்ளிரவில் செந்தில் பாலாஜி கைதுசெய்யப்பட்டார். இதற்குப் பிறகு நெஞ்சு வலியின் காரணமாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் செந்தில் பாலாஜி. இதையடுத்து அவரது மனைவி ஆட்கொணர்வு மனு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதற்குப் பிறகு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடைபெற்றது.

ஒரு மாதத்திற்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு செந்தில் பாலாஜி மாற்றப்பட்டார். அவர் கைதுசெய்யப்பட்ட பிறகு அவர் வசம் இருந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு - ஆயத்தீர்வை துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசுவுக்கும் முத்துசாமிக்கும் மாற்றிக்கொடுக்கப்பட்டன. இருந்தபோதும் இலாகா இல்லாத அமைச்சராக அவர் நீடித்தார்.

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார். அவர் அமைச்சராக இருப்பதால் வெளியில் வந்தால் சாட்சியங்களைக் கலைத்துவிடக்கூடும் என அமலாக்கத்துறை வாதிட்டது. இதில் கடந்த அக்டோபர் மாதம் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் அவர் அமைச்சராக இருப்பதாலும் அவருடைய சகோதரரும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருப்பவருமான அசோக் தொடர்ந்து தேடப்பட்டு வருவதாலும் ஜாமீன் மறுக்கப்படுவதாகக் கூறினார்.

இதற்குப் பிறகு, உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார் செந்தில் பாலாஜி. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரமும் அமலாக்கத்துறையின் சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசனும் வாதிட்டனர். வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார்.

இத்தனை நாட்களாக நீதிமன்றக் காவலில் இருக்கும் செந்தில் பாலாஜி எப்படி அமைச்சராக இருக்கலாம் எனக் கேள்வியெழுப்பிய நீதிபதி, ஒரு சாதாரண பணியாளர் 48 மணி நேரத்திற்கு மேல் சிறையில் இருந்தால் இடைநீக்கம் செய்யப்படுகிறார் என்பதைச் சுட்டிக்காட்டினார். இதைத் தொடர்ந்து தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தார். பிப்ரவரி 13ஆம் தேதியன்று அவரது ராஜினாமா ஏற்கப்பட்டது.

ஜாமீன் மறுப்பு - காரணம் என்ன?

அதற்குப் பிறகு, "செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார். அதனால் சாட்சியங்களை கலைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே, ஜாமீன் வழங்க வேண்டும்" என்று அவரது தரப்பு வாதிட்டது.

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணைகள் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதியன்று முடிவுக்கு வந்தன. இதற்குப் பிறகு வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பளித்தார். “இந்த மனுவில் புதிதாக எதுவும் இல்லை என்பதால் தள்ளுபடி செய்யப்படுகிறது. செந்தில் பாலாஜி 250 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருப்பதால் அவர் மீதான வழக்கின் விசாரணையை மூன்று மாதங்களுக்குள் முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்து முடிக்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டார்.

செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமாரை விசாரிக்க அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியும் இதுவரை அவர் ஆஜராகவில்லை. அவருக்கு எதிராக லுக் - அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கடந்த 9ஆம் தேதி செந்தில் பாலாஜியின் வீட்டில் உள்ள சிசிடிவி பதிவுகளை அமலாக்கத் துறையினர் ஆய்வு செய்தனர். அசோக் குமார் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வருகிறார்.

செந்தில் பாலாஜி வழக்கின் பின்னணி

கடந்த 2011 முதல் 2015 வரை அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தபோது ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அந்தப் பணியிடங்களை நிரப்புவதில் அவர் முறைகேட்டில் ஈடுபட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பலர் புகார் அளித்திருந்தனர். காவல்துறை உரிய விசாரணை நடத்தவில்லை எனக் கூறி சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு மெட்ரோ போக்குவரத்து கழகத்தின் தொழில்நுட்ப ஊழியரான அருள்மணி என்பவர் போக்குவரத்து கழகத்தில் வேலைகளைப் பெற்றுத்தர பலரிடம் லஞ்சம் பெற்றப்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட பலர் மீது புகார் அளித்திருந்தார். இதற்குப் பிறகு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2018ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்.

மோசடியில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கியது.

மத்திய குற்றப்பிரிவின் வழக்கை ரத்து செய்யும்படியும் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை கோரியும் செந்தில் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். இதில், மத்தியக் குற்றப்பிரிவு வழக்குகள் ரத்து செய்யப்பட்டு, அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத் துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

அதே நேரம் பழைய வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்கிற உத்தரவை எதிர்த்து அமைச்சர் செந்தில் பாலாஜியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை ரத்து செய்ய மறுத்ததுடன் தமிழ்நாடு காவல்துறை முறையாக விசாரணை நடத்தி இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் தேதி சென்னை மற்றும் கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடுகளில் காலை முதலே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அடுத்த நாள் அதிகாலையில், விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை அழைத்து சென்றனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், அவர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

அவரது இருதய நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு இதுவரை 20க்கும் மேற்பட்ட தடவைகள் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)