You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒரே நாளில் அம்மா, மனைவி, குழந்தைகள் உட்பட 103 உறவினர்களை இழந்து தனி மரமான நபர் - என்ன நடந்தது?
- எழுதியவர், லூஸி வில்லியம்ஸன்
- பதவி, பிபிசி நியூஸ், ஜெரிகோ
தன் ஒட்டுமொத்த குடும்பத்தையே அழித்துவிட்ட குண்டுவெடிப்பில் இருந்து அஹ்மத் அல்-குஃபேரி தப்பினார்.
காஸா நகரில் உள்ள அவரது குடும்ப வீட்டில் குண்டுவெடித்து அதில் அவரது 103 உறவினர்கள் கொல்லப்பட்டபோது, அவர் 50 மைல்கள் (80 கி.மீ.) தொலைவில் உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை நகரமான ஜெரிகோவில் சிக்கிக் கொண்டிருந்தார்.
அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் இஸ்ரேலைத் தாக்கியபோது அஹ்மத், டெல் எவிவ் கட்டுமான தளத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அதைத் தொடர்ந்து நடந்த போர் மற்றும் இஸ்ரேலின் ராணுவ முற்றுகை காரணமாக தனது மனைவி மற்றும் மூன்று இளம் மகள்களிடம் அவரால் திரும்ப முடியவில்லை.
தொலைபேசி இணைப்புகள் அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்தில் அவர் ஒவ்வொரு நாளும் அவர்களுடன் பேசுவார். டிசம்பர் 8-ஆம் தேதி மாலை தாக்குதல் நடந்தநேரத்திலும் அவர் தனது மனைவி ஷிரீனிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார்.
"தான் இறந்துவிடுவோம் என்று என் மனைவிக்கு தெரிந்துவிட்டது. எப்போதாவது ஏதாவது தவறு செய்திருந்தால் அதை மன்னித்து விடுங்கள் என்று அவள் என்னிடம் சொன்னாள். அப்படி சொல்லாதே என்று நான் சொன்னேன். அதுதான் எங்களுக்கு இடையே நடந்த கடைசி அழைப்பு," என்று அவர் கூறினார்.
அன்று மாலை அவரது மாமாவின் வீட்டில் இஸ்ரேல் நடத்திய ஒரு பெரிய குண்டுவெடிப்புத் தாக்குதலில் அவரது மனைவி மற்றும் அவரது மூன்று இளம் மகள்கள் - தலா, லானா, மற்றும் நஜ்லா கொல்லப்பட்டனர்.
அஹ்மதின் தாயார், அஹ்மதின் நான்கு சகோதரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள், பல சித்திகள், சித்தப்பாக்கள், அத்தைகள், மாமாக்கள் ஒன்றுவிட்ட சகோதர்கள் என்று பலரும் உயிரிழந்தனர். மொத்தம் 100க்கும் மேற்பட்டோர் இதில் இறந்தனர். சம்பவம் நடந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஆகிவிட்டது. ஆயினும் சிலரது உடல்கள் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளன.
சென்ற வாரம் அவரது இளைய மகளுக்கு இரண்டு வயது பூர்த்தியாகியிருக்கும். அஹ்மத் இன்னும் அந்த துக்கத்திலிருந்து வெளிவரமுடியாமல் தவிக்கிறார்.
தனது குழந்தைகளின் உடலை கைகளில் ஏந்தவோ அல்லது அவசரமாக நடத்தப்பட்ட அவர்களது இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளவோ முடியாத அவர், இப்போதும் அவர்கள் அனைவரும் உயிருடன் இருப்பதுபோலவே பேசுகிறார். கண்களில் இருந்து வழியும் கண்ணீருக்கு கீழே அவரது முகம் சலனம் ஏதுமின்றி உள்ளது.
"என் மகள்கள் என்னுடைய சிறிய பறவைகள்," என்று அவர் கூறினார். "நான் ஒரு கனவில் இருப்பது போல் உணர்கிறேன். எங்களுக்கு என்ன நடந்தது என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை."
கான்கிரீட் மேடாக காட்சியளிக்கும் குடியிருப்பு
அவர்களது நினைவுகளால் நிலைகுலைந்து போகக்கூடாது என்பதற்காக, தனது தொலைபேசி மற்றும் மடிக்கணினி திரைகளில் இருந்து தனது மகள்களின் படங்களை அவர் அகற்றிவிட்டார்.
உண்மையில் என்ன நடந்தது என்பதை தப்பிப்பிழைத்துள்ள சில உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டாரிடமிருந்து அவர் கேட்டுத்தெரிந்துகொண்டார்.
அவருடைய குடும்ப வீட்டின் வாசலை முதலில் ஏவுகணை தாக்கியதாக அவர்கள் சொன்னார்கள்.
“அவர்கள் அவசரமாக வெளியேறி அருகில் உள்ள என் மாமா வீட்டிற்குச் சென்றார்கள். பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு ஒரு போர் விமானம் அந்த வீட்டைத் தாக்கியது," என்று அவர் சொன்னார்.
அஹ்மதின் குடும்பம் வசித்துவந்த நான்கு மாடி கட்டிடம் காஸா நகரின் ஜேய்டோன் பகுதியில் உள்ள சஹாபா மருத்துவ மையத்தின் மூலையில் இருந்தது.
அது இப்போது இடிந்துபோன கான்கிரீட் மேடாக காட்சி அளிக்கிறது. இடிபாடுகள், ஒரு பச்சை பிளாஸ்டிக் கப், தூசி படிந்த ஆடைகள் சிதறிக்கிடக்கின்றன. நொறுங்கிய நிலையில் ஒரு வெள்ளி நிற கார் கான்கிரீட் பாறைகளின் கீழ் கிடக்கிறது.
'கண்முன் நிகழ்ந்த மரணம்'
வான்தாக்குதல்கள் தொடங்கியபோது மலையை நோக்கி ஓடியவர்கள் உயிர் பிழைத்ததாகவும், வீட்டில் தஞ்சமடைந்தவர்கள் கொல்லப்பட்டதாகவும் அஹ்மத்தின் உயிர் பிழைத்த உறவினர்களில் ஒருவரான ஹமித் அல்-குஃபேரி பிபிசியிடம் கூறினார்.
"இந்தப்பகுதி முக்கிய தாக்குதல் இலக்காக இருந்தது. என் வீட்டிற்கு அருகில் உள்ள நான்கு வீடுகளில் தாக்குதல்கள் நடந்தன. அவர்கள் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு வீட்டைத் தாக்கினார்கள்," என்று அவர் குறிப்பிட்டார்.
"குஃபேரி குடும்பத்தைச் சேர்ந்த 110 பேர் - எங்கள் குழந்தைகள் மற்றும் உறவினர்கள் அங்கு இருந்தனர். ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் கொல்லப்பட்டனர்," என்றார் அவர்.
உயிரிழந்தவர்களில் மிக அதிக வயதானவர் 98 வயதான பாட்டி என்று கூறிய அவர் ஒன்பது நாட்களுக்கு முன்பு பிறந்த ஒரு ஆண் குழந்தையும் இறந்துபோனதாக தெரிவித்தார்.
விமானத் தாக்குதலின்போது இரண்டு பெரிய வெடிப்புகள் நிகழ்ந்ததாக அஹ்மத் என்று அழைக்கப்படும் மற்றொரு உறவினர் விவரித்தார்.
"முன்கூட்டிய எச்சரிக்கை எதுவும் அளிக்கப்படவில்லை," என்று அவர் கூறினார். "இந்தப் பகுதியை விட்டு மக்கள் ஏற்கனவே வெளியேறாமல் இருந்திருந்தால் இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். இப்போது அந்தப் பகுதி முற்றிலும் வித்தியாசமாகத் தெரிகிறது. ஒரு கார் பார்க்கிங், தண்ணீர் சேமிக்க ஒரு இடம், மூன்று வீடுகள் மற்றும் ஒரு பெரிய வீடு அங்கு இருந்தது. முழு குடியிருப்பு பகுதியையும் குண்டுவெடிப்பு அழித்துவிட்டது," என்று அவர் குறிப்பிட்டார்.
இடிபாடுகளில் இருந்து உடல்களை வெளியே எடுக்க உயிர் பிழைத்தவர்கள் அதிகாலை வரை வேலை செய்ததாக ஹமித் கூறினார்.
"விமானங்கள் வானத்தில் பறந்து கொண்டிருந்தன. நாங்கள் அவர்களை வெளியே இழுக்க முயன்று கொண்டிருந்தபோது குவாட்காப்டர்கள் எங்களை நோக்கி சுட்டுக் கொண்டிருந்தன," என்று உறவினர் அஹ்மத் கூறினார்.
"நாங்கள் வீட்டில் அமர்ந்திருந்தோம். திடீரென்று நாங்கள் இடிபாடுகளுக்கு அடியில் இருந்தோம்," என்று உம் அஹ்மத் அல்-குஃபெரி பிபிசியிடம் கூறினார். "நான் ஒரு பக்கத்திலிருந்து மறுபுறம் தூக்கி எறியப்பட்டேன். அவர்கள் என்னை எப்படி வெளியே எடுத்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நாங்கள் எங்கள் கண்களுக்கு முன்னால் மரணத்தைப் பார்த்தோம்," என்று அவர் தெரிவித்தார்.
'நான் என்ன தவறு செய்தேன்?'
தாக்குதல் நடந்து இரண்டரை மாதங்கள் ஆகிவிட்டன. இப்போதும் அவர்கள் இடிபாடுகளுக்கு அடியில் புதையுண்டு இருக்கும் சில உடல்களை அடைய முயற்சி செய்துகொண்டுள்ளனர். இடிபாடுகளை அகற்றித் தோண்டுவதற்காக ஒருவரை பணியமர்த்த குடும்பம் பணம் திரட்டியுள்ளது.
"நாங்கள் நான்கு உடல்களை மீட்டோம்," என்று அஹ்மத் பிபிசியிடம் கூறினார். "எனது சகோதரனின் மனைவி மற்றும் எனது மருமகன் முகமது, துண்டுகளாக வெளியே இழுக்கப்பட்டனர். அவர்கள் 75 நாட்களாக இடிபாடுகளுக்கு அடியில் இருந்தனர்,” என்றார்.
அவர்களின் தற்காலிக கல்லறைகள், அருகிலுள்ள வெற்று நிலத்தில், குச்சிகள் மற்றும் பிளாஸ்டிக் தாள்களால் குறிக்கப்பட்டு காணப்படுகின்றன.
ஜெரிகோவில் சிக்கிக்கொண்ட அஹ்மது அவர்களை சந்திக்கவில்லை.
"என் அம்மா, என் மனைவி, என் குழந்தைகள் மற்றும் என் சகோதரர்களை இழக்க நான் என்ன தவறு செய்தேன்?" சாதாரண மக்கள்," என்கிறார் அவர்.
தாங்கள் வான்வழித் தாக்குதல்களால் குறிவைக்கப்பட்டதாக குடும்பம் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து நாங்கள் இஸ்ரேலிய ராணுவத்திடம் கேட்டோம். இதற்குப் பதிலளித்த ராணுவம், அந்த தாக்குதல் குறித்து தங்களுக்குத் தெரியாது என்றும், ஹமாஸுக்கு எதிரான போரில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (ஐ.டி.எஃப்), சிவிலியன் பாதிப்பைக் குறைக்க சாத்தியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது," என்றும் கூறியது.
அஹ்மத் குடும்பம் கொல்லப்படுவதற்கு சில நாட்கள் முன்பும் பின்பும், அல்-குஃபேரி வீட்டின் தெற்கே உள்ள ஷெஜய்யா பகுதியில் இஸ்ரேலியப் படைகளுக்கும் ஹமாஸ் ஆயுதமேந்தியவர்களுக்கும் இடையே கடுமையான சண்டை நடந்தது.
பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளுடன் ஆயுதம் ஏந்திய பல பயங்கரவாதிகள் ஷெஜய்யாவில் துருப்புக்களை அணுகுவதை தான் அடையாளம் கண்டுள்ளதாக டிசம்பர் 9-ஆம் தேதி தனது தினசரி செய்தியில் ராணுவம் கூறியது. மேலும் அவர்கள் மீது ஹெலிகாப்டர் தாக்குதலுக்கும் அழைப்பு விடுத்தது.
'அன்பே என யார் அழைப்பார்?'
காஸா பகுதியில் உள்ள பயங்கரவாத இலக்குகள் மீது போர் விமானங்கள் தாக்குதல் நடத்தி வருவதாகவும், தரைப்படை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் ராணுவம் கூறியது.
முன்பு அஹ்மதின் குடும்ப வீடு இருந்த ஜேய்டோன் பகுதி, இப்போது IDF-இன் புதிய தாக்குதல்களின் மையப்புள்ளியாக உள்ளது.
தனது தந்தையுடன் ஜெரிகோவில் சிக்கிக்கொண்ட கட்டுமானத் தொழிலாளியான அஹ்மத், இப்போதும் சில சமயங்களில் காஸாவில் எஞ்சியிருக்கும் தனது உறவினர்களை தொலைபேசியில் அழைக்கிறார். ஆனால் தனது பிரியமான வீட்டிற்கு வெளியே பல மாதங்கள் சிக்கி, திரும்பி வரத் துடித்த அவர் இனி எப்போதாவது அங்கு திரும்பிச் செல்வாரா என்று அவரால் உறுதியாகச்சொல்ல முடியவில்லை.
"காஸாவில் என் கனவு சிதைந்து போனது. இப்போது யாருக்காக நான் திரும்பிச் செல்வது? என்னை யார் இனி அப்பா என்று அழைப்பார்கள்? என்னை அன்பே என்று யார் அழைப்பார்கள்? என் வாழ்க்கையே நீங்கள்தான் என்று என் மனைவி என்னிடம் சொல்லுவாள். இப்போது அதை யார் சொல்வார்கள்?" என்று ஆற்றமுடியா துயரத்துடன் அவர் குறிப்பிட்டார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)