You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹூத்தி தாக்குதலில் பற்றி எரிந்த கப்பல் - 22 இந்தியர்கள் என்ன ஆயினர்? கடற்படை விரைவு
ஏமனை தளமாகக் கொண்ட ஈரான் ஆதரவு இயக்கமான ஹூத்தி கிளர்ச்சிக்குழு, "அமெரிக்க-பிரிட்டன் தாக்குதலுக்கு" பதிலடி கொடுக்கும் விதமாக வெள்ளிக்கிழமையன்று மார்லின் லுவாண்டா கப்பலை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த கப்பலை மீட்கும் முயற்சியில் இந்திய கடற்படையின் கப்பல் உள்ளிட்ட பிற நாடுகளின் கப்பல்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்க, பிரிட்டன் தாக்குதலுக்கு பதிலடி
செங்கடல் பகுதியில் செல்லும் கப்பல்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் ஹூத்தி குழுவின் நடவடிக்கைகளுக்கு எதிராக சமீபத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இணைந்து வான்வழி தாக்குதலை நடத்தினர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏடன் வளைகுடா பகுதியில் பயணித்து கொண்டிருந்த மார்லின் லுவாண்டா கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது ஹூத்தி கிளர்ச்சிக்குழு.
தற்போது பிரான்ஸ் , இந்தியா மற்றும் அமெரிக்க கடற்படை கப்பல்கள் அந்த கப்பலுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன.
கப்பல் மீது தாக்குதல்
தற்போது ஹூத்திக்கள் தாக்குதல் நடத்தியுள்ள மார்லின் லுவாண்டா கப்பலை இயக்குவது ஓஷியோனிக்ஸ் சர்வீசஸ் லிமிடெட் (Oceonix Services Ltd) என்ற இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகும்.
இந்த டேங்கர் கப்பலானது மார்ஷல் தீவுகளின் கொடியின் கீழ் , டிராஃபிகுரா (Trafigura) என்ற பன்னாட்டு வர்த்தக நிறுவனத்தின் சார்பில் இயக்கப்படுகிறது.
சனிக்கிழமையன்று(27.1.2024) கிடைத்த புதிய தகவலின்படி, கப்பலின் அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும், டேங்கரில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டுவிட்டதாகவும் கூறியுள்ளது டிராஃபிகுரா நிறுவனம் . கப்பல் தற்போது பாதுகாப்பான துறைமுகத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹூத்தி பொறுப்பேற்பு
இது செங்கடல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஹூத்திக்களால் வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட சமீபத்திய தாக்குதலாகும். இஸ்ரேல் ஹமாஸுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், காசாவில் உள்ள பாலத்தீனர்களுக்கு ஆதரவாக இந்த பகுதியில் வரும் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தி வருவதாக ஹூத்தி அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து ஹூத்தி செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்லின் லுவாண்டா ஒரு பிரிட்டிஷ் கப்பல் என்றும், "எங்கள் நாட்டிற்கு எதிரான அமெரிக்க-பிரிட்டிஷ் தாக்குதலுக்கு" பதிலளிக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து அரசு, வணிக கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்கள் "முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை" என்றும், பிரிட்டனும் அதன் நட்பு நாடுகளும் "இதற்கு தகுந்த முறையில் பதிலளிக்கும்" என்றும் தெரிவித்துள்ளது.
நவம்பர் மாதத்திலிருந்து, உலகின் முக்கியமான கடல் வழித்தடங்களில் ஒன்றான செங்கடல் வழியாகப் பயணிக்கும் வணிகக் கப்பல்கள் மீது ஹூத்திக்கள் டஜன்கணக்கான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் செங்கடல் பகுதியில் வணிக கப்பல்களின் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் எங்கே நடந்தது?
ஏடனுக்கு தென்கிழக்கே திசையில் 60 கடல் மைல் தொலைவில் இந்த தாக்குதல் நடந்ததாக இங்கிலாந்து கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் (UKMTO) அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் மற்ற கப்பல்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறும், சந்தேகத்திற்கிடமான செயல்கள் ஏதேனும் பார்த்தால் உடனே தகவல் தருமாறும் எச்சரித்துள்ளது.
இதற்கு பின்னர், சனிக்கிழமையன்று உள்ளூர் நேரப்படி 03:45 மணிக்கு (00:45 GMT) அமெரிக்க படை, “ செங்கடலை குறிவைத்து ஏவத் தயாராக இருந்த கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளுக்கு எதிராக” ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கமாண்ட் தெரிவித்துள்ளது. அவர்கள் “ தற்காப்புக்காக அந்த ஏவுகணைகளை அழித்து விட்டதாக” சென்ட்காம் தெரிவித்துள்ளது.
இந்திய கடற்படை விரைவு
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, ஏடன் வளைகுடாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்தியக் கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் உடனடி நடவடிக்கையில் இறங்கியது.
தாக்குதல் நடத்தப்பட்ட கப்பலில் இருந்து உதவிக்கான அழைப்பு வந்ததையடுத்து, இந்திய கடற்படையின் ஏவுகணை அழிப்பு கப்பலான ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் உதவிக்கு அனுப்பப்பட்டதாக இந்திய கடற்படை சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இந்தக் கப்பலில் 22 இந்தியர்களைத் தவிர, வங்கதேசத்தைச் சேர்ந்த பணியாளர் ஒருவரும் இருக்கிறார்.
வெள்ளிக்கிழமை இரவு இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. அதனை தொடர்ந்து உடனடியாக விரைந்த ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் கப்பல் குழுவின் முயற்சியால் கப்பலில் பற்றியிருந்த தீ அணைக்கப்பட்டு விட்டதாக இந்திய கடற்படை தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் வணிக கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் உறுதியாகவும், ஈடுபாட்டோடும் இந்திய கடற்படை தொடர்ந்து செயல்படும் என்றும், கடல் பரப்பில் உயிர்களை காப்பதற்கான உறுதியை கொண்டுள்ளதாகவும் இந்திய கடற்படை தனது பதிவில் தெரிவித்துள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)