You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நபிகளை இழிவுபடுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட இந்து பேராசிரியர் விடுதலை - பாகிஸ்தானில் என்ன நடந்தது?
- எழுதியவர், ரியாஸ் சோஹைல்
- பதவி, பிபிசி உருது சேவை
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த சுக்கூர் உயர் நீதிமன்றம், மத நிந்தனை குற்றச்சாட்டில் இருந்து இந்து பேராசிரியர் ஒருவரை விடுவித்துள்ளது.
இந்த வழக்கு காவல்துறை விசாரணையின் போது உள்ள குறைபாடுகள் மற்றும் பலவீனங்களை நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்துப் பேராசிரியர் ஒருபோதும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடவில்லை என்றும், மத வெறுப்பைத் தூண்டியதற்கோ அல்லது ஆட்சேபிக்கும் வார்த்தைகளைப் பேசியதற்கோ அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்றும் நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட இந்துப் பேராசிரியர் மீது 2019 ஆம் ஆண்டு மத நிந்தனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அதன் பிறகு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உள்ளூர் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு இந்து பேராசிரியரின் குடும்பம் வறுமையில் வாடியது மட்டுமின்றி, உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் தலைமறைவாகவே வாழ்ந்து வந்தது.
பேராசிரியரின் மகள் பிபிசியிடம் பேசினார். அப்போது, அவர், நீதிமன்றத்தின் தீர்ப்பில் இருந்து தனக்கு சிறிது நிவாரணம் கிடைத்துள்ளதாகக் கூறினார். ஆனால், அவர் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. இதனால், அவரின் நிலை இன்னும் தெளிவாக இல்லை.
அவர் பேசுகையில்,“என் தந்தை 30 ஆண்டுகள் அரசுப் பணியில் இருந்தவர். எங்கள் குடும்பம் மீது எந்த வழக்கும் இல்லை. நாங்கள் மூன்று சகோதரிகள், ஒரு சகோதரர் மற்றும் தாய். நாங்கள் 2019 முதல் பிரச்னைகளை சந்தித்து வருகிறோம்,"என்றார் பேராசிரியரின் மகள்.
“60 வயதுடைய எனது தந்தை ஐந்தாண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். தந்தையின் சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளதால் வேறு வருமானமும் இல்லை,” என்றும் அவர் தெரிவித்தார்.
பேராசிரியர் என்ன சொன்னார்?
சிந்து உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில், காவல்துறை அவசரமாக விசாரணை நடத்தியதாகவும், 15 சாட்சிகளின் விசாரணை, அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்தல் மற்றும் சைட் விசிட் உள்ளிட்ட முழு விசாரணையும் ஒரே நாளில் முடிவடைந்ததில் இருந்து இதை அறிய முடிவதாக எழுதியுள்ளது.
தீர்ப்பின்படி, போலீசார் 15 சாட்சிகளை விசாரித்துள்ளனர். அவர்களில் ஐந்து பேர் மட்டுமே மேல்முறையீட்டாளர் மீதான குற்றச்சாட்டுகளை ஆதரித்தனர். அவருடைய கூற்றுகள் பெரும்பாலும் ஒன்றுக்கொன்று ஒத்ததாகவே உள்ளன. இது அவரது அறிக்கைகள் முன்னரே தீர்மானிக்கப்பட்ட மனதுடன் கொடுக்கப்பட்டதாகத் தோன்றுகிறதே தவிர இயற்கையான பாணியில் அல்ல என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டின் தீவிரத்தன்மை மற்றும் உணர்திறன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அதை விசாரிப்பதில் அதிக நேரம் எடுத்து தீவிர முயற்சிகளை மேற்கொள்வது காவல்துறையின் கடமை, ஆனால் இது ஒரு காவல்துறை அதிகாரி பொறுப்பைத் தட்டிக் கழிப்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று உயர் நீதிமன்றம் கூறியது.
எப்ஐஆர் பதிவு செய்வது குறித்தும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
எப்ஐஆரில் தரக்குறைவான வார்த்தைகள் என்னவென்று குறிப்பிடப்படவில்லை, எனவே காவல்துறையின் நடவடிக்கையை பெரும் அலட்சியமாகப் பார்க்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவின்படி, இதுபோன்ற வழக்குகளில், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கு முன், உண்மைகளை மனதில் வைத்துக்கொள்ளுங்கள், ஏனென்றால் சமூகத்தில் அமைதியின்மை அல்லது சீர்கேட்டை உருவாக்கும் எந்தவொரு நபரின் முயற்சியையும் முறியடிப்பது காவல்துறையின் கடமையாகும்.
நபிகளை இழிவுபடுத்தியதாக பேராசிரியர் மீது குற்றச்சாட்டு
2019ம் ஆண்டு வடக்கு சிந்துவின் கோட்கி மாவட்டத்தில் நூதன் லால் கைது செய்யப்பட்டார். கோட்கி பள்ளியில் ஆசிரியராக இருந்த நூதன் லால், ஒரு வகுப்பில் உருது கற்பிக்கும் போது அவர் பேசிய சில கருத்துகள்தான் இந்த பிரச்னையின் ஆரம்பப்புள்ளி என கோட்கி போலீசார் கூறுகின்றனர். வகுப்பு முடிந்ததும், அவருடைய மாணவர்களில் ஒருவர் தனது இஸ்லாமிய ஆசிரியரிடம் சென்று நூதன் லால் இஸ்லாத்தின் நபிக்கு எதிராக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டினார்.
ஆசிரியர்கள் இந்த விஷயத்தை பெரிதுபடுத்த விரும்பவில்லை. நூதன் லாலும் யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்துவது தனது நோக்கம் அல்ல என்று மன்னிப்பு கேட்டார்.
ஆனால் அந்த மாணவன் இந்த சம்பவத்தை தனது தந்தையிடம் குறிப்பிட்டு அதை ஃபேஸ்புக்கிலும் பதிவிட்டதால் மக்கள் மத்தியில் இது கோபத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, உள்ளூர் சந்தையிலும் ஒரு வேலைநிறுத்தம் நடத்தப்பட்டது. அப்போது ஒரு குழு நூதன் லாலின் பள்ளி கட்டிடத்தைத் தாக்கி அதை சேதப்படுத்தியது.
இது தவிர, மற்றொரு குழுவும் நூதனின் இல்லத்தை தாக்கியது. மேலும், அந்தப்பகுதியில் இருக்கும் சைன் சத்திரம் கோயிலும் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது. இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதையடுத்து மாவட்ட நிர்வாகம் துணை ராணுவத்தினரை வரவழைத்தது.
நீதிமன்றம் என்ன தண்டனை கொடுத்தது?
கோட்கியின் உள்ளூர் நீதிமன்றம் இந்து பேராசிரியருக்கு ஆயுள் தண்டனையும் அபராதமும் விதித்தது.
சமீப காலங்களில், சிந்துவில் நடந்த முதல் சம்பவம் இதுவாகும். இதில், இந்து குடிமகன் ஒருவருக்கு மத நிந்தனை குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்டது.
நீதிமன்றத்தின் எழுத்துப்பூர்வ தீர்ப்பில், அரசுத் தரப்பின் படி, செப்டம்பர் 14, 2019 அன்று, புகார்தாரர், கோட்கி காவல் நிலையத்தில் தனது மகன் அரசுப் பள்ளியில் படிப்பதாகவும், அதன் உரிமையாளரான அவரது பேராசிரியர் மீது வழக்குப் பதிவு செய்ததாகக் கூறப்பட்டது.
இரண்டு சாட்சிகள் முன்னிலையில் தனது மகன் இவ்வாறு கூறியதாக புகார்தாரர் தெரிவித்துள்ளார்.
கோட்கியின் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி தனது தீர்ப்பில், அரசுத் தரப்பால் முன்வைக்கப்பட்ட சாட்சிகள் 'சுயாதீனமானவர்கள் மற்றும் நம்பகமானவர்கள்' என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது அவர்கள் யாருக்கும் தனிப்பட்ட வெறுப்பு அல்லது விரோதம் இல்லாததால், அவர்களின் வாக்குமூலங்கள் 'துன்பத்தின் அடிப்படையில் இல்லை' என்றும் எழுதியிருந்தார். அத்தகைய சூழ்நிலையில், அவரது சாட்சியத்தை நம்பாததற்கு எந்த நியாயமும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)