பொன்னியின் செல்வன் - 2 கவர்ந்ததா? சொதப்பியதா? - ரசிகர்கள் விமர்சனம்

பொன்னியின் செல்வன் 2

பொன்னியின் செல்வன் கிட்டத்தட்ட 2,000 பக்கங்களை கொண்ட பிரமாண்டமான நாவல், இதை திரைப்படமாக எடுப்பது என்பதே சவால் நிறைந்த முயற்சி. எம்ஜிஆரில் தொடங்கி கமல் வரை பலரும் இதற்கு முயன்று முடியாமல் போன நிலையில், இயக்குநர் மணிரத்தினம் வெற்றிகரமாக சாத்தியப்படுத்தி இருக்கிறார்.

எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு இயக்குநர் மணிரத்தினம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது.

முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக திரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளனர். நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஷோபிதா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நாவல் அளவுக்கு திரைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளதா? பொன்னியின் செல்வன் முதல் பாகம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை இரண்டாம் பாகம் பூர்த்தி செய்துள்ளதா? இது தொடர்பாக ரசிகர்கள் கூறுவது என்ன?

“ஆதித்த கரிகாலன் வரும் காட்சிகள் ரசிகர்களை உணர்ச்சிபூர்வமாக உணரச் செய்கிறது. நந்தினி கதாபாத்திரத்துக்கு உயிரூட்ட ஐஸ்வர்யா ராய் கொடுத்த உழைப்பு படத்தில் தெரிகிறது. கார்த்தி, த்ரிஷா ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர்” என்று கோவையைச் சேர்ந்த பாக்கியம் கூறுகிறார்.

பொன்னியின் செல்வன் 2

“நான் எதிர்பார்த்த அளவு திரைப்படம் இல்லை. அதே நேரத்தில் மணிரத்னம் 'டச்' படத்தில் இருக்கிறது. மணிரத்னத்துக்கு ஹேட்ஸ் ஆஃப். ஆதித்த கரிகாலன் - நந்தினி தொடர்பான காட்சிகள் சிறப்பாக இருந்தன. அவர்கள் இருவரும் வரும் காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது,” என்று கூறுகிறார் கௌதம்.

“ குந்தவை - வந்தியத்தேவன் தொடர்பான காட்சிகள் அழகாக இருந்தன. படத்தில் கதாபாத்திரங்களின் தேர்வு கச்சிதமாக இருந்தது. அனைவரும் கதாபாத்திரங்களுடன் பொருந்தி இருக்கிறார்கள். இருந்தாலும் முதல் பாகத்துடன் ஒப்பிடும்போது, முந்தைய பகுதிதான் சிறப்பாக இருந்தது போல் தோன்றுகிறது ” என்கிறார் கவி.

“நண்பர்களுடன் சேர்ந்து முதல்நாள் முதல் காட்சியைப் பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டு வந்தோம். அதற்கு ஏற்ற படம்தான் இது. ரொம்பவே நன்றாக இருந்தது. ஆதித்த கரிகாலன் - நந்தினி இடையேயான காட்சிகள் புல்லரிக்கச் செய்தன. ” என்கிறார் சத்யா.

பொன்னியின் செல்வன் 2

நாவலில் இல்லாத காட்சிகளும் படத்தில் உண்டு

நாவலில் சொல்லப்படாத விஷயங்களும் படத்தில் காட்டப்பட்டுள்ளதாக சில ரசிகர்கள் கூறுகின்றனர்.

சைனி நம்மிடம் பேசும்போது, “ஆதித்த கரிகாலன் எப்படி உயிரிழந்தான் என்பது குறித்து நாவலில் சொல்லப்பட்டிருக்காது. ஆனால், படத்தில் அந்த காட்சியை அற்புதமாக படமாக்கியுள்ளனர். பார்க்கும்போது நிச்சயம் புல்லரிக்கும். முதல் பாகத்தைப் போன்று இல்லாமல் படம் விறுவிறுப்பாக இருந்தது. கார்த்திக்கின் நகைச்சுவை கலந்த நடிப்பு குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும் ” என்று குறிப்பிட்டார்.

`நாவலில் படித்தது போன்று இல்லை. சில காட்சிகள் வித்தியாசமாக உள்ளன," என்று ஒருவர் கூறினார்.

பொன்னியின் செல்வன் 2

திரைக்கதை சூப்பராக இருந்தது. நாவலை படித்தவர்களுக்கு தெரியும் அது எவ்வளவு நீளமாக இருக்கும் என்று. படத்தில் அப்படியில்லாமல் சரியாக இருந்தது. படத்தில் கிளைமேக்ஸ் நாவலில் இருந்ததை போன்று இல்லாமல் வேறு விதமாக இருக்கும். நடிகர்களின் முக பாவனைகளே அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை அழகாக காட்டுக்கிறது. ஒட்டுமொத்தமாக படம் சிறப்பாக இருக்கிறது` என்று வாசு கூறுகிறார்.

“ இதுபோன்ற திரைப்படங்கள் அதிகம் வரும்போதுதான் தமிழ் குறித்து வெளியே அதிகம் தெரியவரும். அதற்காகவே இதுபோன்ற திரைப்படங்கள் அதிகளவில் வரவேண்டும் ” என்று ஒரு ரசிகர் தெரிவித்தார்.

முதல் பாகத்தை பார்த்தபோது, எனக்கு பெரிதாக புரியவில்லை. இரண்டாம் பாகம் தெளிவாக இருக்கிறது. காட்சிகள் மெதுவாக செல்வதுபோல் இருந்தாலும் படம் நன்றாக புரிகிறது` என்று மற்றொருவர் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்

டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்