நீலகிரி: மசினகுடியில் வறட்சியால் இறக்கும் மாடுகள் - என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு

மசினகுடி, வறட்சி, மாடு, எருமை, கால்நடை
    • எழுதியவர், சுதாகர் பாலசுந்தரம்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

நீலகிரி மாவட்டம் மசினகுடியில் வறட்சியினால் ஏற்பட்டுள்ள பசுந்தீவனப் பற்றாக்குறையால் '300-க்கும் மேற்பட்ட' பசுமாடுகள், எருமைகள் ஆகிய கால்நடைகள் உயிரிழந்துள்ளன, என்கின்றனர் அப்பகுதியின் கால்நடை வளர்ப்பாளர்கள். ஆனால் இந்த எண்ணிக்கையில் அரசு நிர்வாகம் முரண்படுகிறது.

மசினகுடியைச் சேர்ந்த ஜேக்கப் டார்வின் சமூக நலத்துறையில் பட்ட மேற்படிப்பு முடித்தவர். ஆனால் கால்நடை வளர்ப்பின் மீது இருக்கும் ஆர்வம் காரணமாக எருமைகளை வளர்த்து வருகிறார்.

நன்றாகச் சென்றுகொண்டிருந்த அவரது கறவைத் தொழிலுக்கு 2022-ஆம் ஆண்டு பெரும் அடி விழுந்தது. அவ்வாண்டு அவரது நான்கு எருமை மாடுகள் இறந்தன.

அதன்பின், தொடர்ந்து மூன்று மாடுகள், ஏழு கன்றுக்குட்டிகள் இறந்துள்ளன. சமீபத்தில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள அவரது ஒரு எருமையும் இறந்தது.

இத்தனை இழப்புகளுக்கு என்ன காரணம்?

“பருவமழை பொய்த்தது, கடும் கோடை, அதனால் ஏற்பட்ட வறட்சி, அதனால் உண்டான மேய்ச்சல் தீவனப் பற்றாக்குறை,” என்கிறார் டார்வின்.

"இந்தக் கோடையில் வறட்சி அதிகமாக இருப்பதால், அதை எப்படி அணுக வேண்டுமெனத் தெரியவில்லை," என்கிறார் அவர்.

கடந்த ஆண்டில் ஒரு நாளைக்கு 90 லிட்டர் பால் கறந்து கொடுத்ததாகச் சொல்லும் டார்வின், இப்போது சொந்த பயன்பாட்டுக்காக பாக்கெட் பால் வாங்கும் நிலைக்குச் சென்றிருக்கிறார்.

மசினகுடி, வறட்சி, மாடு, எருமை, கால்நடை
படக்குறிப்பு, சமூக நலத்துறையில் பட்ட மேற்படிப்பு படித்துவிட்டு மசினகுடியில் எருமைகளை வளர்த்து வரும் ஜேக்கப் டார்வின்

“இந்த அரசு எங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென நினைத்தால், அதை எருமைகளுக்குச் செய்தால் போதும். நாங்கள் நன்றாக இருப்போம். எருமைகள் இறப்பதால் யாரும் புதிதாக எருமைகளை வளர்க்க முன்வருவதில்லை," என்று அவர் கூறுகிறார்.

இது டார்வினின் தனிப்பட்டக் குரல் அல்ல. நீலகிரி மாவட்டத்தின் மசினகுடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் பல கால்நடை வளர்ப்பாளர்களின் குரல்.

தமிழகத்தின் பசுமையான, நீராதாரங்கள் நிறைந்த பகுதியான மேற்குத்தொடர்ச்சி மலையிலிருக்கும் மசினகுடியில் தற்போது நிலவிவரும் வறட்சி மற்றும் வெப்பத்தால், "நூற்றுக்கணக்கான பசுமாடுகள், எருமைகள் போன்ற கால்நடை விலங்குகள் இறந்துள்ளன" என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

மசினகுடியில் கால்நடைகள் தொடர்ந்து உயிரிழப்பது ஏன்? மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் கூறுவது என்ன?

தெரிந்துகொள்ள பிபிசி தமிழ் நேரடியாகச் களத்திற்கு சென்றது.

மக்கள் என்ன சொல்கின்றனர்?

மசினகுடி மக்களை நேரில் சந்தித்துப் பேசியபோது, அவர்களது பகுதியில் முன்னெப்போதுமில்லாத வகையில் வறட்சி நிலவுவதாகச் சொல்கின்றனர். இதனால் போதுமான அளவு தீவனமின்றி மாடுகள் இறப்பதாகக் கூறுகிறார்கள்.

மேலும், தங்கள் மேய்ச்சல் நிலம் முதுமலை புலிகள் சரணாலயத்துக்குள் இருப்பதால், கால்நடைகளை அங்கு மேய்ச்சலுக்குக் கொண்டுசெல்ல வனத்துறை அனுமதி அளிப்பதில்லை என்கின்றனர். கால்நடைத் பராமரிப்புத்துறை இறந்த கால்நடைகளின் உண்மையான எண்ணிக்கையை மறைக்கிறது எனவும் குற்றம்சாட்டுகின்றனர்.

பல்வேறு சிக்கல்களால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாகக் கூறுகிறார்கள், மசினகுடியின் பழங்குடி மக்கள் மற்றும் கால்நடை விவசாயிகள்.

மசினகுடி, வறட்சி, மாடு, எருமை, கால்நடை

மசினகுடியில் என்ன நடக்கிறது?

பிபிசி தமிழ் மசினகுடிக்குச் சென்றபோது, அப்பகுதி மக்கள் பலரும் தாம் வளர்த்த மாடுகள் வறட்சியால் இறந்துள்ளதாகக் கூறினர்.

மசினகுடியைச் சுற்றியுள்ள கிராமங்களான மாவனல்லா, மாயார், பொக்காபுரம், குரும்பர் பள்ளம், குரும்பர் பாடி, சிரியூர், வாழைத்தோட்டம், செம்மநத்தம், ஆனைக்கட்டி ஆகிய இடங்களில் விவசாயிகளிடம் பேசிய போது, அங்கே இந்த ஆண்டில் மட்டும் ஏராளமான மாடுகள் வறட்சியால் இறந்திருப்பதாக கூறுகின்றனர்.

மசினகுடியில் உள்ள பால் கூட்டுறவுச் சங்க தரவுகள்படி இப்பகுதியில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகள், 400 எருமைகள் வளர்க்கப்படுகின்றன. இவற்றுக்குத் தற்போது தீவனத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நாம் நேரில் சென்று பார்த்தபோது, போதிய உணவின்றி, பசுமாடுகள் மற்றும் எருமைகள் வற்றிய தோற்றத்தில் காட்சியளித்தன. சில மாடுகள் எழுந்து நிற்கக் கூட தெம்பின்றிப் படுத்தே படுத்து கிடந்ததை பிபிசி குழுவால் பார்க்க முடிந்தது.

மசினகுடி, வறட்சி, மாடு, எருமை, கால்நடை

பட மூலாதாரம், Getty Images

கால்நடைகளின் நிலை என்ன?

பிபிசி தமிழ் நேரில் சென்று பார்த்தபோது இறந்த மாடுகளை, அதன் உரிமையாளர்கள் தங்கள் வீட்டிற்கு அருகிலும், காடுகளிலும் புதைத்துள்ள அடையாளங்களைக் காட்டினர். சில மாடுகள் வறண்டு கிடக்கும் மேய்ச்சல் நிலங்களிலேயே இறந்துள்ளன.

மாடுகள், எலும்பும் தோலுமாக எழுந்து நிற்கவே முடியாத நிலையில் இருப்பதால் கன்றுகுட்டிகளுக்கு பால் கொடுக்க முடியாமல், குட்டிகளும் கவலைக்கிடமான நிலையில் உள்ளன, என்கின்றனர் அதன் உரிமையாளர்கள்.

மாயாரைச் சேர்ந்த சரோஜா என்ற கால்நடை வளர்ப்பாளர் நம்மிடம் பேசும்போது, "மாடு தீனி இல்லாமல் படுத்திருக்கிறது. எட்டு மாடுகளுக்கு தீவனம் இல்லாமல், மிகவும் உடல் மெலிந்து காணப்படுகின்றன. மூன்று மாடுகள் இறந்துவிட்டன. எனக்கு யாரும் இல்லை. அடுத்து என்ன செய்வது எனத் தெரியவில்லை," என்றார்.

கால்நடை பராமரிப்புத் துறை சார்பாக 140 கால்நடை உரிமையாளர்களுக்கு பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனம் வழங்கியதாக அப்பகுதி மக்கள் பிபிசியிடம் கூறினர்.

மசினகுடி, வறட்சி, மாடு, எருமை, கால்நடை

பட மூலாதாரம், Getty Images

கால்நடை வளர்ப்பவர்களின் கோரிக்கை

மசினகுடி மக்கள், தங்கள் பகுதியில் கடந்த ஆண்டு மிகக்குறைவான அளவே மழை பெய்துள்ளதாகக் கூறுகின்றனர்.

மசினகுடி பகுதியில் வனத்துறையினர் தங்கள் எல்லைக்குள் ஒரு மழைமானியை வைத்து மழை அளவைக் கண்காணித்து வருகின்றனர். அவர்களிடம் இதுபற்றிக் கேட்டபோது தங்கள் தரவுகளின்படி கடந்த 2021-2022 ஆண்டுகளைக் காட்டிலும் 2023-ஆம் ஆண்டில் மழையளவு குறைந்துள்ளது என்றனர்.

அங்கே தற்போது நிலவும் வறட்சி, சுமார் 15,000 மக்களின் வாழ்க்கையை பாதித்துள்ளது.

"கடந்த 2000-ஆம் ஆண்டில் இப்பகுதியில் சுமார் 20,000 நாட்டு மாடுகள் இருந்தன எனவும், தற்போது 3,000 மாடுகள் மட்டுமே இருக்கின்றன என்றும்", தங்கள் தரவுகளின் அடிப்படையில் கூறுகிறார், மசினகுடியை சேர்ந்த விவசாயம், கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் கூட்டமைப்பு தலைவர் வர்க்கீஸ்.

"அதேபோல 6,000 என்று இருந்த எருமைகளின் எண்ணிக்கை தற்போது 400ஆக மட்டுமே உள்ளது," என்கிறார்.

மசினகுடி, வறட்சி, மாடு, எருமை, கால்நடை

பால் பற்றாக்குறை

இதன் விளைவாக, தங்கள் கூட்டுறவுச் சங்கத்துக்கு வரும் பாலின் அளவு பெருமளவில் குறைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது என்கிறார் வர்க்கீஸ். "முன்பு, சங்கத்தின் மூலம் கால்நடை வளர்ப்பவர்களிடமிருந்து நாளொன்றுக்கு 2,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக வெறும் 200 லிட்டர் மட்டுமே பெறப்படுகிறது," என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழக அளவில் பால் உற்பத்தியில் இரண்டாமிடம் பெற்று, விருது பெற்றிருந்த நிலை மாறி, கடந்த நான்கு வருடங்களாக நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே முதல் இடத்தில் மசினகுடி இருந்து வருகிறது என்கின்றனர் பால் கூட்டுறவுச் சங்கத்தினர்.

மசினகுடி, வறட்சி, மாடு, எருமை, கால்நடை
படக்குறிப்பு, மசினகுடியைச் சேர்ந்த விவசாயி வர்க்கீஸ்

'மாடுகளுக்கு அரசு தீவனம் வழங்க வேண்டும்'

வர்க்கீஸ் மேலும் கூறும்போது, "கடந்த பிப்ரவரி மாதமே வறட்சி அதிகமாக இருக்கும் என விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரிடம் சொன்னோம். இந்த வருடம் 600மி.மீ மட்டுமே மழை பெய்ததால், வறட்சி அதிகரிக்கும் என தெரிவித்தோம்," என்கிறார்.

"2017, 2018-ஆம் ஆண்டுகளில் புல் வாங்கி கொடுத்தது போல இந்தாண்டும் கால்நடை தீவனம் வாங்கி கொடுக்க ஆட்சியரிடம் கேட்டோம். ஆவின் இயக்குநரிடம் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் சொன்னார். ஆனால், ஆவின் நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை," என்கிறார்.

மசினகுடி, வறட்சி, மாடு, எருமை, கால்நடை

பட மூலாதாரம், Getty Images

'பாரம்பரிய மேய்ச்சல் நிலத்திற்குச் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது'

நிறைய வீடுகளில் மாடுகள் இறந்து விட்டதாகவும், அவ்வாறு வீட்டில் இறந்த மாடுகளை குவாரியில் போட்டுள்ளனர், என்று கூறுகிறார் வர்க்கீஸ்.

"மசினகுடி மக்கள் வளர்க்கும் மாடுகளுக்குக் காடு தான் மேய்ச்சல்நிலம். பாரம்பரியமாக காட்டில்தான் மாடுகளை மேய்த்து வந்தோம். ஆனால் இப்போது வனத்திற்குள் மாடுகள் சென்றுவிட்டால், வனத்துறையினர் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கிறார்கள். எங்கள் பகுதியில் ஒரு விவசாயி மட்டும் நான்கு முறை அபராதம் கட்டி இருக்கிறார்," என்றார்.

விவசாயிகளின் உரிமைகளை வனத்துறை பறிப்பதாக வைக்கப்படும் குற்றச்சாட்டை மறுத்த முதுமலை புலிகள் காப்பக வெளி மண்டல துணை இயக்குநர் அருண்குமார், மேய்ச்சல் நிலம் என எதுவும் காப்புக்காடு மற்றும் புலிகள் காப்பகத்தில் கிடையாது, என்றார்.

"அப்படி கால்நடைகளை, மேய்ச்சலுக்கு விட்டால், அது குற்றச் செயல். காப்புக் காட்டிற்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடக்கூடாது என உயர்நீதிமன்ற உத்தரவே இருக்கிறது. மாடுகள் வனத்திற்குள் அத்துமீறி நுழைந்து, பசுந்தீவனங்களை உண்டால், வனத்தில் ஏற்படும் இழப்பிற்கு தகுந்தவாறு, உரிமையாளர்களிடம் அபராதம் விதிக்கப்படுகிறது. தீவனம் மற்றும் தண்ணீரை கால்நடை உரிமையாளர்கள் வீடுகளிலேயே வழங்கினால் இது தடுக்கப்படும்," எனத் தெரிவித்தார்.

மசினகுடி, வறட்சி, மாடு, எருமை, கால்நடை
படக்குறிப்பு, குரும்பர் பள்ளத்தின் ஊர் தலைவர் குன்மாரி

வாழ்வாதாரத்தை இழந்த மக்கள்

பொக்காபுரம் அருகேயுள்ள குரும்பர் பள்ளத்தின் ஊர்த்தலைவர் குன்மாரி நம்மிடம் பேசும்போது, "எங்கள் பகுதியில் கோவில்பட்டி, தக்கலு, தொட்டுலங்கி, குரும்பர் பள்ளம், குரும்பர் பாடி என ஐந்து கிராமங்கள் இருக்கின்றன. குரும்பர் பள்ளத்தில் மட்டும் 20 மாடுகள் தீவனம் இல்லாமல் இறந்து விட்டன," என்றார்.

"கர்ப்பமாக இருந்த மாடு ஒன்று இறந்துவிட்டது. ஒரு வாரத்தில் குட்டி ஈன்றிருக்கும். அதை வீட்டு முன்னால் தான் புதைத்தோம். அதை வெளியே தூக்கிச்சென்று புதைக்கப் பணம் இல்லை. எங்களுக்கு உணவளித்த மாடு இறந்துவிட்டது. எங்கள் வாழ்வாதாரமே சிக்கலில் உள்ளது," எனக் கூறினார்.

எருமைகள் வளர்க்கும் ஜேக்கப் டார்வின் மற்றொரு தகவலைச் சொல்கிறார். மசினகுடியில் புல் கிடைக்காததால், கார்நாடகாவில் நிலம் வாங்கி புல் விளைவித்து அதை தமிழகத்திற்குக் கொண்டு வருவதாகச் சொல்கிறார். “கார்நாடகாவில் விளைவித்த புல்லை தமிழகத்திற்கு கொண்டு போகக்கூடாது என்று அங்கு சொல்கிறார்கள். கோடை காலத்தில் அங்கிருக்கிற கால்நடைகளை காப்பதற்காக, கர்நாடக அரசு பெரும் முயற்சி எடுக்கிறது. அதனால் பாதிக்கப்படுவது நாங்கள் தான்," என்கிறார்.

மசினகுடி, வறட்சி, மாடு, எருமை, கால்நடை
படக்குறிப்பு, நீலகிரி கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர், முனைவர் சத்திய நாராயணன்

கால்நடை பராமரிப்புத் துறையினர் சொல்வது என்ன?

நீலகிரி மாவட்டத்தின் கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர், சத்திய நாராயணனிடம் இதுகுறித்துக் கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர், "2,500 மாடுகளுக்கான உலர் தீவனம் மற்றும் பசுந்தீவனம், தாதுக்கலவையை வறட்சியால் பாதிக்கப்பட்ட 140 கால்நடை உரிமையாளர்களிடம் கடந்த திங்கள்கிழமை மசினகுடியில் வழங்கினோம். மாயார் பகுதியில் அடுத்த கட்டமாக வழங்க இருக்கிறோம்," எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "மழை இல்லை. புல் காய்ந்துவிட்டது, தரையில் காய்ந்த புல் கூட இல்லை. கடுமையான வறட்சியால் கால்நடைகளுக்கு உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பு நல்ல மழை பெய்துள்ளது. புல் வளர்ந்தால் யாரையும் மக்கள் நாடமாட்டார்கள்," என்றார்.

ஆனால், அப்பகுதி விவசாயிகள் சொல்வதுபொல நூற்றுக்கணக்கான மாடுகள் சாகவில்லை என மறுக்கிறார் சத்திய நாராயணன், "டோனர் கவுண்ட் சிண்ட்ரோம் என்ற நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு மருத்துவர்கள் வைத்தியம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்," என்றார்.

"மாடுகளின் ரத்தத்தில் தாதுச்சத்துகள் குறைவாக இருக்கின்றன. உணவில் கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் குறைவாக இருப்பது தான் காரணம். உணவை நல்லபடியாகக் கொடுத்தால், ரத்தம் சீரடைந்து பழைய நிலைக்கு கால்நடைகள் திரும்பிவிடும். சமீபத்தில் எந்த கால்நடைகளும் இறக்கவில்லை. உயிர் பாதுகாப்பு முறையில் இறந்த கால்நடைகளை எரித்துவிட்டோம். தற்போதைய நிலை பற்றி அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளோம், அவர்கள் நிவாரணம் கொடுத்தால் மக்களுக்கு வழங்க தயாராக இருக்கிறோம்," என்று தெரிவித்தார்.

ஆனால், கால்நடை உரிமையாளர்கள் அதிக எண்ணிக்கையில் மாடுகள் இறப்பதாகக் கூறுவது பற்றி அவரிடம் விளக்கம் கேட்டோம்.

அதற்கு பதிலளித்த அவர், கடந்த 4-ஆம் தேதியன்று, மசினகுடியிலுள்ள கல்குவாரியில் தாங்கள் பார்த்த 11 மாடுகளின் எலும்புகளை வைத்தே, 11 மாடுகள் இறந்துள்ளதாக உறுதிபடுத்தியுள்ளதாகக் கூறினார்.

மற்ற ஊர்களில் இறந்தது குறித்து கால்நடைத்துறையிடம் கால்நடை உரிமையாளர்கள் தகவல் கொடுக்கவில்லை, என்றார்.

மேலும் பேசிய அவர், "மாடுகள் இறந்தால், அதன் உரிமையாளர் கால்நடை மருத்துவரிடம் மாட்டை காட்டவேண்டும். பிரேத பரிசோதனை செய்து இருக்க வேண்டும். அதைவிடுத்து மாடு இறந்து விட்டது என்றால் எப்படி நம்புவது?" எனக் கேள்வி எழுப்பினார்.

"மாடுகள் இறப்புக்கு காரணம் மேய்ச்சல் நிலங்களை மட்டுமே மக்கள் நம்பி இருக்கின்றனர். மேய்ச்சல் நிலங்களில் வறட்சி ஏற்படும் போது, தீவனப் பற்றாக்குறை ஏற்படுகிறது. தீவனமும், சரிவிகித உணவு கிடைக்காததாலே மாடுகள் உயிரிழக்கின்றன," என்றார்.

மசினகுடி, வறட்சி, மாடு, எருமை, கால்நடை
படக்குறிப்பு, தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்.

அமைச்சர் சொல்வது என்ன?

மாடுகள் இறப்பு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தாமதமாகத் தகவல் கிடைத்தாலும் ஒரே நாளில் தீவனங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

"நீலகிரி மாவட்டத்தில் பல கால்நடைகள் இறந்துவிட்டதாத் தகவல் கிடைத்துள்ளது. மாடுகள் இறப்பு குறித்து எந்த ஒரு புகாரும் மாவட்ட நிர்வாகத்திடமோ ஆவினிடமோ, விவசாயிகளால் தெரிவிக்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகம், ஆவின், கால்நடைத்துறையினர் இச்சம்பவம் குறித்து நடத்திய விசாரணையில், வெயிலின் தாக்கத்தால், நீரிழப்பு ஏற்பட்டு, தாதுச்சத்துக்கள் குறைந்து மாடுகள் இறந்திருக்கலாம் என்ற ஐயப்பாடு இருக்கின்றது. எனவே மாநில அளவில் ஆய்வு கூட்டத்தை கூட்ட உத்தரவிட்டுள்ளேன்," எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "அனைத்து மாவட்டங்களிலும், இதைப்பற்றிக் கூறி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தச் சொல்லியிருக்கிறோம். நீலகிரி மாவட்டத்தில் சிறப்புத் திட்டமான எஸ்.ஆர்.டி.பி திட்டத்தின் மூலம் கால்நடைகளுக்குப் பசுந்தீவனம், தாதுச்சத்துகள் வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. விவசாயிகளுக்கு இப்படிப்பட்ட பிரச்னை வந்தால், உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் அளிக்க வேண்டும். வெப்பப் பக்கவாதம் என்பது தற்சமயம் பெரிய பிரச்னையாக இருக்கிறது," என்று கூறினார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)