மத்திய பட்ஜெட்டுக்கு பிறகு தங்கம்,வெள்ளி நகைகளின் விலை எவ்வளவு குறைந்தது? இப்போது நகைகளை வாங்கலாமா?

தங்கம், வெள்ளி விலை சரிவு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சிராஜ்
    • பதவி, பிபிசி தமிழ்

நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி சுங்கவரியை 15 சதவீதம் என்பதிலிருந்து 6 சதவீதமாகவும், பிளாட்டினத்துக்கான வரியை 6.4 சதவீதமாகவும் குறைத்து அவர் அறிவித்தார்.

இந்தியாவில் கடந்த சில வருடங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதன் பின்னணியில் ரஷ்யா-யுக்ரேன் போர், உலகளாவிய பண வீக்கம், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித உயர்வு என பல காரணிகள் இருந்தாலும், இந்தியாவில் தங்கம் விலை கூடியதற்கு மத்திய அரசின் 15% இறக்குமதி வரியும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.

மத்திய பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில், சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூபாய் 2,080 குறைந்து 52,400 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 260 குறைந்து 6,550 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூபாய் 3,100 குறைந்து 92,500 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

மத்திய பட்ஜெட், தங்கம் வெள்ளி
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

'நான்கு ஆண்டு கோரிக்கை நிறைவேற்றம்'

இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 800 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. சுவிட்சர்லாந்து, தென்னாப்பிரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்கிறது.

தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை பொதுமக்களும் நகைக்கடை உரிமையாளர்களும் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து பேசிய தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி, "கடந்த நான்கு வருடங்களாகவே இந்த இறக்குமதி சுங்கவரியைக் குறைக்க நாங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தோம். இந்த வரி குறைப்பு அறிவிப்பால் நடுத்தர மக்கள் பயனடைவார்கள்" என்று கூறினார்.

மத்திய பட்ஜெட் 2024

பட மூலாதாரம், Sansad Tv

கடந்த வாரங்களில் சவரனுக்கு 55 ஆயிரத்தைக் கடந்து விற்பனையாகிக் கொண்டிருந்த தங்கம் இப்போது 52,400 விற்பனையாவதை சுட்டிக்காட்டிய அவர், "இனிவரும் காலங்களில் சர்வதேச சந்தைகளில் தங்கம் என்ன விலைக்கு விற்கப்படுகிறதோ, கிட்டத்தட்ட அதே விலைக்கு இந்தியாவிலும் தங்கம் கிடைக்கும்." என்றார்.

இந்த வரி குறைப்பால் சட்டவிரோதமாக வெளிநாடுகளில் இருந்து தங்கத்தைக் கடத்துவது குறையும் என்றும் அவர் கூறினார்.

"கடந்த சில வருடங்களாகவே வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் தங்கத்தைக் கடத்தி கொண்டுவருவது அதிகமாக நடைபெற்று வந்தது. அதிக சுங்கவரி தான் இதற்கு முக்கிய காரணமாக இருந்தது. இதனால் நியாயமாக தொழில் செய்து வந்த பல தங்க நகை வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். அரசின் இந்த அறிவிப்பால், இனி அத்தகைய சட்டவிரோத தங்க பரிமாற்றங்கள் குறையும்" என்று கூறினார் ஜெயந்திலால் சலானி.

ஜெயந்திலால் சலானி

பட மூலாதாரம், challanijayantilal/Instagram

படக்குறிப்பு, ஜெயந்திலால் சலானி, தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர்

பொதுமக்கள் கூறுவது என்ன?

மற்ற நாடுகளில் ஒரு முதலீடாகப் கருதப்படும் தங்கம், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் ஓர் சொத்தாகவும், அந்தஸ்தின் குறியீடாகவும் பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என சட்டம் கூறினாலும், திருமணங்களில் தங்கம் முக்கிய பங்கு வகிக்கவே செய்கிறது. மணப்பெண்ணுக்கு அவரவர் வசதிக்கு ஏற்ப தங்க ஆபரணங்களைச் சூடி அனுப்புவது தொடர் வழக்கமாகவே இருந்து வருகிறது.

இந்தியாவில் திருமணத்திற்கு மட்டுமின்றி சீர்வரிசையாகவும், மொய்யாகவும் தங்கம் பரிசளிக்கப்படுகிறது. அப்படியிருக்க இந்த வரி குறைப்பு குறித்து பொதுமக்கள் கூறுவது என்ன?

"எனது மகளுக்கு செப்டம்பர் மாதம் திருமணம் நடக்கவுள்ளது. கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை விறுவிறுவென ஏறிக் கொண்டிருக்கிறது. சவரன் 55,000 ரூபாயைக் கடந்த போது, மிகுந்த கவலையில் இருந்தோம். இப்போது மத்திய அரசும் வரி குறைப்பை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. நிச்சயம் இது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என்கிறார் சென்னையைச் சேர்ந்த மகேஸ்வரி.

தங்கம், வெள்ளியின் இறக்குமதி வரி குறைப்பு

பட மூலாதாரம், Getty Images

"இந்தியாவில் பணவீக்கமும் விலைவாசியும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் மக்களின் வருமானம் அதிகரிக்கவில்லை. அப்படியிருக்க இது ஒருவகையில் நல்ல செய்தி தான். திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு மொத்தமாக தங்கம் வாங்குபவர்களுக்கு இது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்." என்கிறார் திருவள்ளூரைச் சேர்ந்த வித்யா ராமன்.

நாகர்கோவிலைச் சேர்ந்த அனிஷா ரஹ்மான் பிபிசியிடம் பேசுகையில், "எனது கணவர் வெளிநாட்டுக்குச் செல்ல என்னிடம் இருந்த நகைகளை அடகு வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் அனுப்பும் பணத்தை சேமித்து வைத்து அதை மீட்டு விட்டேன். அடுத்து என் மகளுக்கு புதிதாக நகைகள் வாங்க வேண்டும் என பணம் சேமித்து வருகிறேன். இப்போது இந்த வரி குறைப்பால் சர்வதேச விலையிலேயே இந்தியாவிலும் நகை வாங்கலாம் என்று சொல்கிறார்கள், எனவே இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது" என்று கூறினார்.

"வரிக் குறைப்பால் அரசுக்கு லாபம்தான்"

வ. நாகப்பன்
படக்குறிப்பு, வ. நாகப்பன், பொருளாதார நிபுணர்

தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி சுங்க வரியை குறைத்திருப்பதால் மத்திய அரசுக்கு என்ன பயன்கள் கிடைக்கும் என்பது குறித்து பேசினார் பொருளாதார நிபுணர் வ. நாகப்பன்.

"இந்தியாவில் தங்கத்திற்கான தேவை என்பது எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். நீண்ட காலமாகவே தங்கத்தை ஒரு பாதுகாப்பான சேமிப்பு முறையாக மக்கள் பார்க்கிறார்கள். சிறுகச் சிறுக வாங்கலாம், அதே சமயத்தில் பங்குச் சந்தைகள் போல அதிக அபாயமும் இல்லை என்பதால்."

"அப்படியிருக்க கடந்த சில வருடங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறியதால் மக்களிடையே ஒரு அச்சம் நிலவியது. மறுபுறம், அதிக சுங்க வரி காரணமாக தங்கக் கடத்தலும் அதிகரித்தது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் இந்த வரி குறைப்பு கொண்டு வரப்பட்டுள்ளது" என்று கூறினார்.

தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிக்கு 10 சதவீதமாக இருந்த அடிப்படை சுங்க வரியை 5 சதவீதமாகவும், ஏஐடிசி (AIDC) எனப்படும் வரி 5 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாகவும் குறைக்கப்பட்டு, மொத்தமாக 6 சதவீதம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக விளக்கிய வ. நாகப்பன், அதே சமயத்தில் இதனால் அரசுக்கு நஷ்டமும் இருக்காது என்கிறார்.

"15% என்பதிலிருந்து 6% என்பது கேட்க பெரிய வித்தியாசம் போல தெரியலாம், உண்மை என்னவென்றால் அதிகரித்து வரும் தங்கக் கடத்தல்களால் அரசுக்கு பெரும் வரியிழப்பு ஏற்படுகிறது. அதைச் சரிசெய்ய தான் இந்த அறிவிப்பு. இதனால் தங்கத்தைக் கடத்துவது குறையும், தங்கம் விலையும் குறையும், மக்களும் ஆர்வமாக வாங்குவார்கள், அரசுக்கும் போதுமான வரி கிடைக்கும்." என்று கூறுகிறார் பொருளாதார விமர்சகர் வ. நாகப்பன்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)