குஜராத்: 88 வீடு, 700 பேர்- ஒரு கிராமமே மோசடியாக விற்கப்பட்டது எப்படி?

- எழுதியவர், ராக்ஸி கடேக்கர் சாரா
- பதவி, பிபிசி செய்தியாளர், காந்திநகரில் இருந்து
“எங்கள் கிராமத்தில் உள்ள வீடுகள், கோயில்கள், அரசு கட்டடங்கள், தண்ணீர் தொட்டிகள் என அனைத்தும் ஒரே இரவில் விற்கப்பட்டுவிட்டன.", காந்திநகர் மாவட்டத்தில் உள்ள ஜூனா பஹாடி கிராமத்தில் வசிக்கும் ராஜு ஜாலாவின் வார்த்தைகள் இவை.
கிராமம் முழுவதும் தனியாருக்கு விற்கப்பட்ட விஷயம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அவருக்கு தெரிய வந்தது.
குஜராத்தில் மோசடியான, போலி ஆவணங்களைப் பயன்படுத்துதல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான வழக்குகளில் இது ஒரு தனித்துவமான சம்பவமாக பார்க்கப்படுகிறது. இதில் 700க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் 88 வீடுகள் கொண்ட ஒரு முழு கிராமமும் தனியாருக்கு விற்கப்பட்டுள்ளது. இது பற்றி காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த கிராமத்தை கூர்ந்து கவனித்தால் இங்குள்ள கிராம மக்களுக்கு நல்ல அடிப்படை வசதிகள் கிடைத்துள்ளன என்பது தெரியும். பெரும்பாலும் சிமெண்டால் கட்டப்பட்ட வீடுகள், சிமெண்ட் சாலைகள், தண்ணீர் தொட்டிகள், பல சாலையோர கோவில்கள் மற்றும் கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் வெளியே எருமை கொட்டகைகள் உள்ளன.
ஆனால் இந்த கிராம நிலம் 2 கோடி ரூபாய்க்கு ஒரு தனியாருக்கு விற்கப்பட்ட போது இந்த கிராமம் திடீரென தலைப்பு செய்திகளில் இடம் பெற்றது. முழு கிராமமும் விற்கப்பட்டது எப்படி?

நடந்தது என்ன?

2024 ஜூன் 13ஆம் தேதி காந்திநகர் மாவட்டத்தின் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் ஒரு நில ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு 2024 ஜூலை 13ஆம் தேதி கிராமத்தை விற்றதாக ஏழு பேர் மீது துணைப் பதிவாளர் போலீஸில் புகார் செய்தார்.
துணை பதிவாளர் ஒரு நில ஒப்பந்தத்தை பதிவு செய்துள்ளார் என்றும் அதில் ஆறு பேர் தங்கள் முழு கிராமத்தையும் ராஜ்கோட்டைச் சேர்ந்த ஒருவருக்கு விற்றுள்ளனர் என்பதும் சில நாட்களுக்கு முன்பு தெரியவந்தாக ராஜு ஜாலா கூறினார்.
இந்த விவகாரம் குறித்து அறிய புகார் அளித்த துணைப் பதிவாளர் விஷால் செளத்ரியிடம் பேச பிபிசி முயன்றது. ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
"இந்த கிராமம் முன்பு மெஸ்வோ ஆற்றின் கரையில் அமைந்திருந்தது. ஆற்றின் போக்கில் ஏற்பட்ட மாற்றத்தால் கிராமம் தற்போதுள்ள இடத்தில் உருவானது. நில ஆவணங்களின்படி இந்த இடம் பிகாஜி சோமாஜி தாக்கூர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது,” என்று துணை ஆட்சியர் பிரிஜேஷ் மோரியா பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்த நிலத்தின் 7/12 உத்தாரா (நிலத்தின் உரிமையைக் கோருவதற்கான சட்ட ஆவணம்) படி, நிலத்தின் உரிமை பிகாஜி தாக்கூரிடமிருந்து அவரது சந்ததியினருக்கு சென்றுள்ளது.
தற்போதைய எஃப்ஐஆரில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேர் பிகாஜி தாக்கூரின் வாரிசுகள். ஏழாவது குற்றவாளி நிலத்தை வாங்கியவர். இந்த நிலத்தின் வாரிசுகள் இந்த கிராமத்தின் நிலத்தின் உரிமையைக் காட்டி கடன் வாங்கியிருப்பது எங்களுக்குத் தெரிய வந்துள்ளது என்றார் மோரியா.
ஆனால் தற்போது இந்த நில ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே ஒப்பந்தத்தை ரத்து செய்ய நீதிமன்றத்திற்கு மட்டுமே உரிமை உண்டு. வருவாய் அலுவலர் அலுவலகத்துக்கு இந்த உரிமை இல்லை.
"2024 ஜூலை 24 ஆம் தேதி வழக்கின் அடுத்த விசாரணையில் ஒப்பந்தத்தை நாங்கள் ரத்து செய்ய கோருவோம்" என்று மோரியா கூறினார்.
நிலத்தின் உரிமையாளர் யார்?

காந்திநகர் மாவட்டம் தேகாமில் உள்ள சர்வே எண் 142இல் உள்ள நிலம், பிகாஜி தாக்கூர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலத்தை அவர் 1987இல் ராமாஜி பூஞ்சாஜி, மெராஜி மங்காஜி, விராஜி துலாஜி, ஜெசாங்ஜி பூஞ்சாஜி ஆகியோருக்கு 12,001 ரூபாய்க்கு விற்றார்.
நிலத்தின் ஒரு பகுதி ரைசிங்ஜி ஜவான்ஜி மற்றும் பிறருக்கு 11,000 முதல் 12,000 ரூபாய் வரையிலான விலையில் விற்கப்பட்டது.
“எங்கள் முன்னோர்கள் நிலம் வாங்கி அதில் வீடுகள் கட்டினர். காலப்போக்கில் புதிய தலைமுறையினர் அதே நிலத்தில் வீடுகளை கட்டத் தொடங்கினர். இன்று அந்த நிலத்தில் 88 குடும்பங்கள் வாழ்கின்றன,” என்று ராஜு ஜாலா கூறினார்.
பிகாஜி தாகூருக்கு நான்கு குழந்தைகள், காந்தாபெஹன், கோகிலாபென், வினோத்குமார் மற்றும் ஜசுஜி தாகூர். ஜாசுஜியைத் தவிர மற்ற அனைவரும் எஃப்ஐஆரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட மற்ற மூன்று பேர் பாலிபான் ஜாசுஜி, ஜெயேந்திர ஜாசுஜி மற்றும் நேஹாபன் ஜாசுஜி. அவர்கள் அனைவரும் ஜாசுஜியின் பிள்ளைகள் மற்றும் பிகாஜியின் மூன்றாம் தலைமுறை வழித்தோன்றல்கள்.
"எங்களிடம் விற்பனை பத்திரம் உட்பட எல்லா ஆவணங்களும் உள்ளன. இது ஒரு அதிகாரப்பூர்வ கிராமம். இங்கு அரசு, பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகளை கட்டியுள்ளது" என்று நிலம் வாங்கிய இரண்டாம் தலைமுறையினரான ரங்கத்சிங் ஜாலா கூறினார்.
கிராமத்தினர் சொல்வது என்ன?

வருவாய் பதிவேடுகளில் பிகாஜியின் சந்ததியினர் பெயரில் நிலம் இருந்ததால், அந்த நிலத்தை ராஜ்கோட்டில் உள்ள ஜஸ்தானில் வசிக்கும் அல்பேஷ் ஹீர்பாரா என்பவருக்கு விற்றிருப்பதாக பிபிசியிடம் பேசிய துணை ஆட்சியர் தெரிவித்தார்.
"அவர்கள் நிலத்தின் தவறான புகைப்படங்களை காட்டினர். காலி மனையின் புகைப்படங்களை உண்மையான நிலம் என்று காட்டி பதிவாளரை ஏமாற்றினார்கள்." என்கிறார் அவர்.
பிபிசி ஹீர்பாராவிடம் பேச முயன்றது. ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால் மறுபுறம், மோசடியைக் கண்டறியத் தவறிவிட்டதாகவும், போலி புகைப்படங்களின் அடிப்படையில் நில ஒப்பந்தங்களை பதிவு செய்ததாகவும் கிராம மக்கள் சப்-ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தின் மீது குற்றம் சாட்டினர்.
வருவாய்ச் சட்டத்தின்படி நிலப் பரிவர்த்தனையை பதிவு செய்யும் போது சொத்தின் உண்மையான புகைப்படத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
"எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் ஏதோ ஒரு வேலைக்காக துணை பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்றார். எங்கள் கிராமம் விற்கப்பட்டதை அவர் அப்போது அறிந்தார். நாங்கள் விசாரித்தோம். அப்போது தவறான புகைப்படத்தின் அடிப்படையில் விற்பனைப் பத்திரம் கையெழுத்தானதை கண்டறிந்தோம்," என்று ராஜு ஜாலா பிபிசியிடம் தெரிவித்தார்.
"ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட புகைப்படங்களின்படி அது காலியான விவசாய நிலம். ஆனால் உண்மையில் சர்வே எண் 142 என்பது ஒரு கிராமம் என்றும் அவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் நாங்கள் அதிகாரிகளிடம் கூறினோம். அவர்கள் இந்த விஷயத்தை ஒப்புக்கொண்டனர். பின்னர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது,” என்றார் அவர்.
கிராம மக்களுக்கு என்ன நடக்கும்?

"ஜூனா பஹாடியா கிராமத்தில் நடந்த இந்த விசித்திரமான சம்பவத்தால் கிராம மக்கள் கவலையடைந்துள்ளனர். நில பேரத்தை ரத்து செய்ய எனக்கு அதிகாரம் இல்லை. இது வருவாய் நீதிமன்றத்தால் மட்டுமே செய்ய முடியும்" என்று மோரியா குறிப்பிட்டார்.
"குடியிருப்பாளர்களிடமிருந்து எங்களுக்கு ஒரு மனு கிடைத்துள்ளது. இது விசாரிக்கப்பட்டு வருகிறது. அடுத்த விசாரணை தேதி 2024 ஜூலை 24 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அந்த நாளில் ஒப்பந்தம் தொடர்பான அனைத்து பரிவர்த்தனைகளையும் நிறுத்தி, ஒப்பந்தத்தின் பதிவை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம்,” என்று அவர் கூறினார்.
கிராமத்தின் மற்றொரு குடியிருப்பாளரான பரத் ஜாலா, "நாங்கள் ஒரு வழக்கறிஞரைத் தொடர்பு கொண்டுள்ளோம். விரைவில் சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றத்தில் விண்ணப்பிப்போம்" என்றார்.
"நிலத்தை முறையாக எங்கள் பெயருக்கு மாற்ற நாங்கள் பிகாஜியின் சந்ததியினரை அணுகினோம். ஆனால் அவர்கள் எங்கள் கோரிக்கைக்கு பதிலளிக்கவில்லை. மூன்றாம் தரப்பினருக்கு நிலத்தை விற்க முயன்றனர்," என்று மற்றொரு குடியிருப்பாளர் கூறினார்.
"நாங்கள் ஏற்கனவே பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளோம், விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்வோம்," என்று ராஜு ஜாலா கூறினார்.
குஜராத் அரசியலில் பரபரப்பு

பட மூலாதாரம், FB/BALRAJSINH CHAUHAN
இந்த சம்பவத்தை அடுத்து குஜராத் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மோசடி சம்பவத்தை தொடர்ந்து போலீசார் புகார் பதிவு செய்து நான்கு பேரை கைது செய்தனர்.
அவர்கள் மீது ஐபிசி பிரிவு 465, 467, 468, 471 மற்றும் 12(பி) மற்றும் பதிவுச் சட்டத்தின் 82 மற்றும் 83 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பாஜக தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக ஜெகதீஷ் தாக்கூர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
"இந்த சம்பவம் பாஜக தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே உள்ள தொடர்பு மற்றும் ஊழலை காட்டுகிறது. ஜூனா பஹாடியா கிராம மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்கள் இப்போது நிச்சயமற்ற தன்மையையும் இடப்பெயர்வையும் எதிர்கொள்கிறார்கள். குஜராத்தில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. யாருமே பாதுகாப்பாக இல்லை,” என்று ஜகதீஷ் தாக்கூர் தெரிவித்தார்.
மறுபுறம், தேகாம் பாஜக எம்எல்ஏ பல்ராஜ் சிங் செளஹான் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இந்தப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணவும், பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு நீதி வழங்கவும் அரசு உறுதி பூண்டுள்ளது என்றார் அவர்.
"சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக நடவடிக்கை எடுத்தோம். போலீசார் துரித நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்தனர். நிலம் விரைவில் அவர்களது பெயரில் மாற்றப்படும் என்று ஜூனா பஹாடியா கிராம மக்களிடம் உறுதியளித்துள்ளேன். மாவட்ட ஆட்சியரையும் நான் தொடர்பு கொண்டு பேசி வருகிறேன். விரைவில் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்,'' என்றார் அவர்.
ஜூனா பஹாடியாவில் நடந்த இந்த அதிர்ச்சி தரும் சம்பவத்தால் கிராம மக்கள் கவலையடைந்துள்ளனர்.
இந்த சர்ச்சை விரைவில் தீர்க்கப்பட்டு, தங்கள் வீடுகளும் சமூக பாரம்பரியமும் காப்பாற்றப்படும் என்று கிராம மக்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












