மத்தியக் கிழக்கில் போர் மூளும் அபாயமா? - இஸ்மாயில் ஹனியே கொலை என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டது குறித்து இஸ்ரேல் மற்றும் அரபு ஊடகங்களில் சொல்லப்படுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே

இரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதை அடுத்து நிலைமை மீண்டும் மோசமடைவதற்கான சாத்தியக்கூறு அதிகரித்துள்ளது. ஹனியேவின் மரணத்திற்குப் பழிவாங்கப் போவதாக இரான் கூறியுள்ளது.

பதற்றத்தைக் குறைக்க அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், பதிலடி கொடுக்க வேண்டாம் என இரான் மீது அழுத்தத்தை அதிகரித்துள்ளது.

ஹனியேவின் மரணத்தை அடுத்து மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுகிறது. எனவே இது தொடர்பாக இஸ்ரேல், பாலத்தீனம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் ஊடகங்களில் பல வகையான எதிர்வினைகள் காணப்படுகின்றன.

இரான் இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதலை நடத்தக்கூடும் என்ற அச்சத்தை டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் வெளிப்படுத்தியுள்ளது.

இரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதலை நடத்த உத்தரவிட்டதாக வெளியான செய்தியை மேற்கோள் காட்டி செய்தித்தாளின் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மூன்று இரானிய உயர் அதிகாரிகளை மேற்கோள் காட்டிய நியூயார்க் டைம்ஸ் அறிக்கையை செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது. தெஹ்ரானில் ஹனியே கொல்லப்பட்ட உடனேயே அவசரக் கூட்டத்திற்கு கமேனி உத்தரவிட்டதாக இந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் தொடுக்கும் பட்சத்தில், தாக்குதல் மற்றும் தற்காப்பு ஆகிய இரண்டிற்கும் தயாராக இருக்குமாறு கமேனி இஸ்லாமிய புரட்சிக் காவலர் படை மற்றும் இரானிய ராணுவத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

தாக்குதல் நடந்தால் இஸ்ரேலை அமெரிக்கா பாதுகாக்கும் என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் கூறியதையும் டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.

மற்றொரு இஸ்ரேலிய நாளிதழான ஹாரேத்ஸ், ஹனியே கொல்லப்பட்ட செய்திக்கு, 'ஹனியேவின் கொலை ஹமாஸுக்கு அடி' என்ற தலைப்பை அளித்துள்ளது.

"ஹனியேவின் படுகொலை ஹமாஸ் தலைமைக்கு ஓர் அச்சுறுத்தல். இரான் மற்றும் ஹெஸ்புலாவை ஆத்திரமூட்டச் செய்வதாக அது உள்ளது. இருந்தபோதிலும், ஹமாஸில் எந்தக் கிளர்ச்சியும் இருக்காது. மேலும் ஹமாஸின் அரசியல் பணியகத்தில் உள்ள உறுப்பினர்கள் யாராவது ஒருவர் அந்த இடத்தை நிரப்புவார்,” என்றும் அது கூறியுள்ளது.

'இது ஹமாஸின் எல்லா தலைவர்களும் இஸ்ரேலின் இலக்கு என்ற செய்தியை அனுப்புகிறது,' என்று ஜாக் கெரி ஹாரேத்ஸில் தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.

அரபு ஊடகங்கள் என்ன சொல்கின்றன

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டது குறித்து இஸ்ரேல் மற்றும் அரபு ஊடகங்களில் சொல்லப்படுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரையில் பாலத்தீனர்கள் ஊர்வலம் நடத்தினர்.

ஹனியே மற்றும் லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஹெஸ்புலா தளபதி ஃபுவாத் ஷோகோர் பற்றிய செய்திகளுக்கும் க்யுட்ஸ் நியூஸ் நெட்வொர்க் முக்கிய இடம் அளித்துள்ளது.

ஹனியே இருந்த கட்டடத்தின் மீதான தாக்குதல் குறித்த பிரத்யேக தகவல்கள் தங்களிடம் இருப்பதாக க்யுட்ஸ் நெட்வொர்க் கூறியுள்ளது.

தெஹ்ரானில் ஹனியே தங்கியிருந்த விருந்தினர் மாளிகை கட்டடம் திறந்தவெளியில் அமைந்திருந்ததாகவும், மலைகள் மற்றும் மரங்களால் சூழப்பட்டிருந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளதாக அந்த வலையமைப்பு தெரிவித்துள்ளது. அருகிலுள்ள மலையில் இருந்து பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்தப் பகுதி சிறப்புப் பாதுகாப்பு வளையத்தின் கீழ் வருகிறது. இதன் பாதுகாப்புப் பொறுப்பு ரெவல்யூஷனரி காவலர்களின் கையில் உள்ளது. ஹனியே மற்றும் அவரது மெய்க்காப்பாளர் தெஹ்ரானில் உள்ள அவர்களது இல்லத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

இரானில் ஹனியேவின் கொலை, அமெரிக்கா போரில் இறங்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளதாக அல் ஜசீரா எழுதியுள்ளது. இஸ்மாயில் ஹனியேவின் இறுதி ஊர்வலம் இரானின் உச்ச தலைவர் கமேனி தலைமையில் நடைபெற்றதாக அல்ஜசீரா தெரிவித்தது.

ஆனால் என்ன பதிலடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் இரானில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. "ஹனியேவின் கொலைக்கு பதிலளிக்கும் வகையில் இரான் உறுதியான நடவடிக்கைக்கு உத்தரவிட்டது" என்று பாலத்தீன செய்தி இணையதளமான பாலத்தீன குரோனிக்கிள் எழுதியது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்த அரசியல் படுகொலையைக் கண்டித்து எகிப்து, ஜோர்டான் ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் அறிக்கை அளித்துள்ளதாக அந்த இணையதளம் தெரிவித்துள்ளது.

இதன் போர்வையில் மேலும் வன்முறையை நியாயப்படுத்தும் இரானின் முயற்சிகளை பிரிட்டிஷ் பிரதிநிதி நிராகரித்துள்ளார். பாதுகாப்பு சபையின் உடன்படிக்கைகளுக்கு இணங்குமாறு இஸ்ரேலை சீனா கேட்டுக் கொண்டுள்ளது.

ஹமாஸின் அரசியல் தலைமையின் படுகொலைக்குப் பிறகு, காஸாவில் போர்நிறுத்த ஒப்பந்தம் தடம் புரண்டு, பரந்த போருக்கான ஆபத்து இருப்பதாக அமெரிக்கா கவலை கொண்டுள்ளது என்று லெபனான் தீவிரவாத அமைப்பான ஹெஸ்புல்லாவுடன் தொடர்புடைய செய்தி இணையதளமான அல்-மயாதீன், அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த அரசியல் படுகொலை எதிர்காலப் பேச்சுவார்த்தைகள் குறித்துத் தீவிர கவலைகளை எழுப்பியுள்ளதாதாக அல்மயாதீன் தெரிவித்தது. இதில் கத்தார் பிரதமர் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல்-தானி, போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்கிறார்.

செவ்வாயன்று தெற்கு பெய்ரூட்டில் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட ஹெஸ்புலாவின் உயர்மட்ட தளபதி ஃபுவாட் ஷோகோரை பற்றியும், அவர் அமைப்பின் உயர்மட்டத் தலைவர் சையத் ஹசன் நஸ்ரல்லாவுக்கு நெருக்கமானவர் என்றும் இணையதளம் எழுதியது.

பாலத்தீனப் பகுதியுடன் தொடர்புடைய மற்றொரு இணையதளமான ’மொண்டோவிஸ்’, "ஹமாஸ் மற்றும் ஹெஸ்புலா தலைவர்களைக் கொன்றதன் பின்னணியில் இஸ்ரேலின் உண்மையான நோக்கம் அதன் ராணுவ மற்றும் உளவுத்துறையின் மேன்மையை இஸ்ரேலிய மக்களுக்குக் காட்டுவதாகும்" என்று எழுதியுள்ளது.

'இந்தப் படுகொலை முயற்சிகளால் அப்பகுதியில் இஸ்லாமிய எதிர்ப்பு ஒடுக்கப்படப் போவதில்லை.' என்றும் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

மேற்கத்திய ஊடகங்களில் என்ன சொல்லப்படுகிறது?

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டது குறித்து இஸ்ரேல் மற்றும் அரபு ஊடகங்களில் சொல்லப்படுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

மேற்கத்திய நாடுகளும் ஹனியேவின் மரணத்திற்குப் பிந்தைய நிலைமை குறித்துக் கவலையடைந்துள்ளன. அதன் பிரதிபலிப்பு அங்குள்ள ஊடகங்களிலும் தெளிவாகத் தெரிகிறது.

"ஹமாஸ் தலைமையின் படுகொலைக்குப் பிறகு, இரான் பழிவாங்குவது குறித்துப் பேசியது. அதே நேரத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த பேச்சுகளுக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக,” வாஷிங்டன் போஸ்ட் எழுதியது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் பதற்றத்தைக் குறைக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்று செய்தித்தாளின் இணையதளம் கூறுகிறது.

நியூ யார்க் டைம்ஸ் மத்திய கிழக்கின் பதற்றத்தை அதன் முக்கிய செய்தியாக வெளியிட்டுள்ளது. 'மத்திய கிழக்கில் ஒன்றன் பின் ஒன்றாக நடக்கும் கொலைகள் பைடனின் அமைதிக்கான நம்பிக்கையைச் சிதைக்கிறது' என்ற தலைப்பில் செய்தி அது வெளியிடப்பட்டுள்ளது.

'அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இப்போது அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து வெளியேறியுள்ளார். காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் செளதி அரேபியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் ஒரு வரலாற்று ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கும் தனது மீதமுள்ள பதவிக் காலத்தைச் செலவிடலாம் என்று அவர் நினைத்தார். ஆனால் அது தற்போது கடினமாகி வருவதாகத் தெரிகிறது,” என்று நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது.

”இரானில் இஸ்மாயில் ஹனியேவை கொன்றதன் மூலம் இஸ்ரேல், அந்தப் பிராந்தியத்தில் உறுதியற்ற தன்மையை எதிர்பாராத புதிய நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.”

”லெபனானில் உள்ள ஹெஸ்புலா மீதும், பதிலடி நடவடிக்கை எடுக்க தெஹ்ரான் மீதும் அழுத்தம் அதிகரித்துள்ளது. ஒரு விரிவான போரைத் துவக்குவது தன் இலக்கு அல்ல, ஆனால் தாங்கள் அதற்குத் தயாராக இருப்பதாக லெபனானில் வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய ராணுவம் கூறியது,” என்று கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

கத்தாரில் வசித்து வந்த ஹனியே

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டது குறித்து இஸ்ரேல் மற்றும் அரபு ஊடகங்களில் சொல்லப்படுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இஸ்மாயில் ஹனியே

ஹனியே கத்தாரில் வசித்து வந்தார். நீண்ட காலமாக அவர் காஸாவுக்கு செல்லவில்லை. இரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியானின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ஹனியே தெஹ்ரான் சென்றதாக ஹமாஸ் தெரிவித்தது. இதற்கான விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஹனியே கோழைத்தனமாகக் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் வருந்துவதை உறுதி செய்யப் போவதாக இரான் அதிபர் மசூத் பெஜேஷ்கியன் கூறியுள்ளார். இரான் தனது பிராந்திய ஒருமைப்பாட்டையும் கௌரவத்தையும் பாதுகாக்கும் என்றும் மசூத் கூறினார்.

அதே நேரத்தில் ஹனியேவின் மரணத்திற்குப் பழிவாங்குவது இரானின் கடமை என்று இரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியும் கூறினார். ஹனியேவின் கொலைக்குப் பிறகு மத்திய கிழக்கில் பெரும் போர் மூளும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.

இருப்பினும் 'மத்திய கிழக்கில் விரிவான போர் ஏற்படும் என நான் நினைக்கவில்லை' என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)