'நரகத்தின் கதவுகள் திறந்தன' - ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதால் காஸா அமைதிப் பேச்சு என்னவாகும்?

பாலஸ்தீன் - இஸ்ரேல் போர்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இஸ்மாயில் ஹனியேவின் கொலை, காஸாவில் போர் நிறுத்த நடவடிக்கைகளில் தொய்வு ஏற்படலாம் என அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
    • எழுதியவர், பால் ஆடம்ஸ்
    • பதவி, பிபிசி நியூஸ், ஜெருசலேம்

இஸ்மாயில் ஹனியே எவ்வாறு கொல்லப்பட்டார் என்பதை தற்போது ஓரளவுக்கு அனுமானிக்க முடிகிறது. ஹனியே மற்றும் அவருடைய பாதுகாவலர்கள் இரானின் தெஹ்ரானில் உள்ள அவரது வீட்டில் ராக்கெட் தாக்குதல் மூலமாக கொல்லப்பட்டுள்ளனர் என ஆரம்பக்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

அக்டோபர் 7-ஆம் தேதி அன்று நடைபெற்ற தாக்குதலிதலில் 1200 இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்ட பிறகு, ஹமாஸ் தலைவர்கள் அனைவரையும் ஒழிப்பதாக கூறிய இஸ்ரேலின் மீது அனைவரின் பார்வையும் தற்போது திரும்பியுள்ளது.

ஆனால் வெளிநாட்டில் நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து எப்போதும் போல் மௌனமாக இருந்து வருகிறது இஸ்ரேல். ஏப்ரல் 19-ஆம் தேதி அன்று இரானின், நடான்ஸ் பகுதியில் அமைந்திருக்கும், அணு உலை அருகே செயல்பட்டு வந்த இரான் விமானப்படையை இஸ்ரேல் தாக்கியது போல் இந்த தாக்குதலும் அரங்கேறியுள்ளது.

இஸ்ரேல் தங்களின் ஜெட் விமானங்களில் இருந்து ராக்கெட்டுகளை ஏவி இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

ஹனியே கொல்லப்பட்டது தொடர்பான தகவல்கள் வெளியாகி வருகின்ற அதே சூழலில், இந்த கொலையால் ஏற்பட இருக்கும் அரசியல் நிகழ்வுகளும் தற்போது கவனம் பெற்றுள்ளன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பட மூலாதாரம், பிபிசி

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இஸ்மாயில் ஹனியே கொலை - அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் என்ன?

காஸாவில் போர் நிறுத்த நடவடிக்கைகளில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் வெளிப்படையான ஒன்று.

காஸாவில் தினமும் நடைபெறும் நிகழ்வுகளுக்கு இஸ்மாயில் ஹனியே பொறுப்பில்லை என்றாலும் கூட, நாடு கடத்தப்பட்ட இஸ்மாயில் ஹனியே, அமெரிக்கா மற்றும் எகிப்து உள்ளிட்ட நாடுகள் உதவியுடன், கத்தாரில் தொடங்கிய போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தார்.

அமெரிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தனர். இருப்பினும் ரோமில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த வித முடிவும் எட்டப்படவில்லை.

தற்போது ஹனியே கொல்லப்பட்ட நிலையில், இந்த பேச்சுவார்த்தையில் ஏதேனும் முடிவு எட்டப்படுமா என்பது சந்தேகமாக உள்ளது.

இஸ்மாயில் ஹனியே

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவராக பதவி வகித்த இஸ்மாயில் ஹனியே காஸாவில் நடைபெற்று வரும் போரை நிறுத்தும் பேச்சுவார்த்தையில் முக்கிய பங்காற்றியவர்.

இப்போது ஏன் இந்த தாக்குதல்?

அனைவரும் ஊகிப்பது போல், இத்தாக்குதலை இஸ்ரேல் தான் நடத்தியது என்றால், இப்போது ஏன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்ற கேள்வி தான் எழுகிறது.

ஹமாஸுடன் தொடர்புடைய அனைவரையும் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தவிர, இஸ்ரேல் இந்த தாக்குதல் மூலம் எதை சாதிக்க நினைக்கிறது என்ற கேள்வியும் எழுகிறது.

மற்ற நாட்டு தலைவர்களின் கருத்துகளையும் பிரதிபலிப்பது போல் துருக்கியின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருந்தது.

"பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசு, அமைதியை விரும்பவில்லை என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கும் வகையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது," என்று அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலத்தீன அரசு நிர்வாகத்தின் தலைநகரான ரமல்லாவில் ஹனியேவின் இறப்புக்கு துக்கம் அனுசரிக்கப்பட்டது.

ஆளும் கட்சியான ஃபதாவின் மத்திய கமிட்டி துணை பொது செயலாளர், சப்ரி சாய்தம், "நரகத்தின் கதவுகளை திறந்துவிட்டது போல் உள்ளது," என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

திகைப்பும் கோபமுமாக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

"இந்த தாக்குதல், இஸ்மாயில் ஹனியேவின் வாழ்க்கையை மட்டும் குறிவைத்ததாக நான் உணரவில்லை. இந்த பிராந்தியத்தில் வாழும் அனைவரின் வாழ்க்கையையும் இது குறிவைத்துள்ளது. இஸ்ரேல் போர் முடிவுக்கு வருவதற்கான அனைத்து நம்பிக்கைகளையும் இந்த தாக்குதல் கொன்றுவிட்டது," என்றும் அவர் தெரிவித்தார்.

தெஹ்ரானில் கொல்லப்பட்ட இஸ்மாயில் ஹனியே

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தெஹ்ரானில் கொல்லப்பட்ட இஸ்மாயில் ஹனியே

ஆயுதக் குழுக்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறதா இஸ்ரேல்?

ஃபதா மற்றும் ஹமாஸ் இயக்கங்கள் போட்டி இயக்கங்களாகவே செயல்பட்டன. சில நேரங்களில் சண்டை போட்டுக் கொள்வார்கள். ஆனால் ஹமாஸ் தலைவரின் கொலையால் ஃபதாவுக்கு ஆதாயம் கிடைக்கலாம் என்ற கருத்தை நிராகரித்துள்ளார் சாய்தம்.

"பாலத்தீன அரசியலில் ஒருவரை கொன்று தான் தலைமை பொறுப்பை அடைய முடியும் என்ற உணர்வு ஒருபோதும் இருந்ததில்லை," என்று அவர் கூறினார்.

அப்படி இருந்தால் அது இறுக்கத்தையும், வருத்தத்தையும் தான் மேலும் ஏற்படுத்தும் என்றார்.

ரமல்லா மற்றும் மேற்கு கரையில் கடையடைப்பு நடத்தப்பட்டது.

ஹனியே கொல்லப்பட்ட பிறகு, கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. போராட்டக் குழுவினர் நடைபயணம் மேற்கொண்டனர். இது ரமல்லாவில் உள்ள பாலத்தீனிய நிர்வாகத்திற்கு இது சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகள், மூத்த பாலத்தீன அதிபரான மஹ்முத் அப்பாஸைக் காட்டிலும் இஸ்மாயில் ஹனியேவுக்கு ஆதரவு அதிகமாக உள்ளது என்பதை சுட்டிக் காட்டியது.

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு கோலன் குன்றுகள் பகுதியில் சனிக்கிழமை அன்று நடைபெற்ற தாக்குதலில் குழந்தைகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டதற்கான பதில் தாக்குதலாக இது இருக்கலாம் என்பதை இந்த கொலை நடைபெற்ற தருணம் உணர்த்துகிறது. இஸ்ரேலின் பதில் தாக்குதல் ஹெஸ்பொலாவின் தளபதியை பெய்ரூட்டில் கொன்றதையும் உள்ளடக்கியது.

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு கோலன் குன்றுகளில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிறகு தன்னுடைய பதில் தாக்குதல் மிகவும் மோசமாக இருக்கும் என்று இஸ்ரேல் எச்சரித்தது.

லெபனானில் ஹெஸ்பொலா, காஸா மற்றும் மேற்குக் கரையில் ஹமாஸ் மற்றும் ஏமனில் உள்ள ஹூதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய மத்திய கிழக்கில் "எதிர்ப்பின் அச்சாக" (Axis of Resistance) இரான் செயல்படுகிறது என்று இஸ்ரேலிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆயுதமேந்திய குழுக்களுக்கும், அதனை ஆதரிக்கும் இரானுக்கும், நீங்கள் எங்கே இருந்தாலும் சரி, இஸ்ரேல் உங்கள் பின்னால் வரும் என்ற உறுதியான செய்தியை ஹெஸ்பொலா தளபதியின் கொலை முயற்சி மற்றும் ஹனியேவின் கொலை மூலம் தெரிவித்துள்ளது இஸ்ரேல்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)