நிமோனியா என்றால் என்ன? முதல் அறிகுறி எது? சிகிச்சைகள் என்ன?

நிமோனியா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மயங்க் பகவத்
    • பதவி, பிபிசி மராத்திக்காக

நவம்பர் 12ஆம் தேதியான இன்று உலக நிமோனியா தினம் கடைபிடிக்கப்படும் நிலையில், நிமோனியா என்றால் என்ன, அதன் அறிகுறிகள் மற்றும் அதற்கான சிகிச்சைகள் என்ன என்பதை விளக்கமாகப் பார்க்கலாம்.

பூஞ்சை அல்லது பாக்டீரியா, வைரஸ் ஆகியவற்றின் காரணமாக நுரையீரலில் ஏற்படும் தொற்று நிமோனியா என்று அழைக்கப்படுகிறது. பேச்சுவழக்கில் இது ப்ளூரிசி என்றும் அழைக்கப்படுகிறது. நிமோனியா சுவாச நோயாகவும் அறியப்படுகிறது.

குழந்தைகளாக இருந்தாலும், 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களாக இருந்தாலும் யார் வேண்டுமானாலும் நிமோனியாவால் பாதிக்கப்படக் கூடும்.

உலகசுகாதார நிறுவனத்தின் தகவலின் படி 2019ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட 7,40,000 குழந்தைகள் நிமோனியாவால் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

கொரோனா காலகட்டத்தில் கோவிட்19 வைரஸ் தொற்றின் காரணமாக, பல லட்சம் நோயாளிகள் கோவிட்-நிமோனியா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக சில நோயாளிகள் உயிரிழக்கவும் நேரிட்டது.

நிமோனியா என்றால் என்ன?

எளிதாக அதே நேரத்தில் தெளிவாக சொல்ல வேண்டுமெனில், நிமோனியா என்பது சுவாச நோய். வைரஸ்கள் , பாக்டீரியாக்கள் அல்லது பூஞ்சைகளால் நுரையீரலில் தொற்றுகள் நேரிடுகின்றன. நிமோனியா என்பது லேசான பாதிப்பாகவோ அல்லது சில நிகழ்வுகளில் உயிரிழப்பை ஏற்படுத்தும் பெரிய பாதிப்பாகவோ இருக்கும்.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, நிமோனியா என்பது நுரையீரல் செல்களில் நேரிடும் அழற்சியாகும். நுரையீரலில் மிகவும் சிறிய காற்றுப்பைகள் உள்ளன. அல்வியோலி(alveoli) என்று அவை அழைக்கப்படுகின்றன. இவை பாக்டீரியா தொற்றுக்கு உள்ளாகும்போது நிமோனியாவை உண்டாக்குகிறது.

உடலில் அல்வியோலிவின் செயல்பாடு மிகவும் முக்கியமானதாகும். சுவாச செயல்பாடுகளில் ஆக்சிஜன், கார்பன்டை ஆக்சைடு ஆகியவற்றின் பரிமாற்றங்கள் நுரையீரலின் சிறிய காற்றுப்பைகள் , ரத்தம் வாயிலாகவே நடைபெறுகிறது. அல்வியோலி வாயிலாக ஆக்சிஜன், உடலின் அனைத்து செல்களுக்கும் அனுப்பப்படுகிறது.

நிபுணர்களின் கூற்றுப்படி, பாக்டீரியா தொற்றுகள் காரணமாக, அல்வியோலிவில் தண்ணீர் அல்லது சீழ் கோர்க்கிறது. இது அதன் செயல்பாட்டை குறைப்பதால் நிமோனியா ஏற்படுகிறது. இது சுவாசத்தில் சிக்கலை ஏற்படுத்துகிறது. இந்த காற்றுப்பைகளில் நீர் கோர்ப்பதால் ஆக்சிஜனின் தரம் குறைந்து ரத்தத்தில் ஆக்சிஜன் கலக்கும் செயல்முறையைத் தடுக்கிறது.

நிமோனியாவின் அறிகுறிகள் என்ன?

நிமோனியாவின் அறிகுறிகள்

பட மூலாதாரம், Getty Images

எந்த ஒரு வயதிலும் நிமோனியா பாதிக்கலாம். கீழ்குறிப்பிட்டுள்ளபடி நிமோனியா அறிகுகுறிகள் காணப்படும்.

  • சுவாசிப்பதில் தடை, சுவாசிப்பதில் சிரமம் மற்றும் மேலோட்டமான சுவாசம்
  • இதயதுடிப்பு அதிகரித்தல்
  • காய்ச்சல்
  • குளிச்சி மற்றும் அதிக வியர்வை
  • இருமல்
  • நெஞ்சுவலி
  • குமட்டல், வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு

நிமோனியா அறிகுறிகள் உடனடியாக கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவது முக்கியம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

நுரையீரல் நிபுணர் டாக்டர் சலில் பிந்த்ரே,"நிமோனியாவின் ஒவ்வொரு வகையும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது அல்ல. எனினும், முன்கூட்டியே கண்டறிதல், முறையான சிகிச்சை என்பது மிகவும் முக்கியம்," என்றார்.

பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருக்கும் பாக்டீரியா அல்லது வைரஸ்கள் காரணமாக நிமோனியா தொற்றுகள் ஏற்படுகிறது. ஆனால், அவற்றின் அறிகுறிகள் வித்தியாசமானவையாக இருக்கின்றன. வைரஸ் தொற்றில் மேலும் சில அறிகுறிகள் கண்டுபிடிக்கப்படலாம் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

இது குறித்து பேசிய டாக்டர் பிந்த்ரே," சுவாசிப்பதில் சிரமம், சளி, காய்ச்சல், வெள்ளை, பச்சை அல்லது சிவப்பு நிறத்திலான கோழை வெளியேறுதல் உள்ளிட்டவை நிமோனியா நோய் தொற்றுக்கு உள்ளானவர்களின் பொதுவான அறிகுகுறிகளாக கண்டறியப்பட்டுள்ளன," என்கிறார்.

நிமோனியா பாதிப்பு ஏற்பட என்ன காரணம்?

நிமோனியா பாதிப்பு

பட மூலாதாரம், Getty Images

பாக்டீரியா, வைரஸ்கள் ஆகியவற்றின் காரணமாகவே முக்கியமாக நிமோனியா ஏற்படுகிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறுகிறது.

பாக்டீரியாவால் ஏற்படும் நிமோனியா

பாக்டீரியாவால் ஏற்படும் நிமோனியாவுக்கு பாக்டீரிக்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன. இது மக்களிடம் தொற்றுவதுடன் பரவவும் செய்கிறது. 50 சதவிகித நிமோனியா பாதிப்புகளில் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியா என்பது பொதுவாக காணப்படுகிறது. உலக சுகாதார மையத்தின் கூற்றுப்படி, இது சிறுவர்களிடம் பொதுவாக அதிகம் காணப்படும் பாக்டீரியா தொற்று என்பது தெரியவருகிறது.

ஹீமோபிலஸ் நிமோனியா, கிளமிடோபிலா நிமோனியா மற்றும் மைக்கோபிளாஸ்மா நிமோனியா ஆகியவையும் நிமோனியாவின் இதர சில வகைகளாகும்.

வைரஸ் காரணமாக ஏற்படும் நிமோனியா

பாரா இன்ஃப்ளூயன்ஸா, இன்ஃப்ளூயன்ஸா வைரஸ், கொரோனா வைரஸ் மற்றும் ரைனோவைரஸ் ஆகியவற்றின் காரணமாகவும் நிமோனியா ஏற்படுகிறது.

கோவிட்-19 வைரஸ் நுரையீரலை தாக்குகிறது, கொரோனா தொற்றுக்கு உள்ளான பல நோயாளிகள் நிமோனியாவால் பாதிக்கப்பட்டனர் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பல்வேறு வகையான பூஞ்சைகள் நிமோனியா ஏற்பட காரணமாக இருக்கின்றன.

"இந்த நோய் பெரும்பாலும் பொதுவாக இளம் சிறார்களிடமும், 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களிடமும் தீவிரமாக காணப்படும்," என வொக்கார்ட் மருத்துவமனை உள் மருத்துவ நிபுணர் டாக்டர். ஹனி சவாலா கூறுகிறார்.

இளம் சிறார்களுக்கும், மூத்த குடிமக்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியின் வலு குறைவாக இருப்பதால் இது ஏற்படுகிறது. எனவே அவர்கள் எளிதாக நிமோனியா தொற்றுக்கு ஆளாகின்றனர். ஆகவே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரில் இந்த வயதில் இருப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

எவ்வாறு நிமோனியா பரவுகிறது?

நிமோனியா பரவல்

பட மூலாதாரம், Getty Images

பல்வேறு காரணங்களால் நிமோனியா தொற்று பரவக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

குழந்தைகளின் தொண்டை, மூக்கு பகுதிகளில் வைரஸ், பாக்டீரியா இருப்பதால் இந்த நோய் ஏற்படுகிறது. இந்தக் கிருமிகள் நுரையீரலில் நுழைந்து நுரையீரலைத் தொற்றுகின்றன.

ஒருவர் இருமும்போது வெளிப்படும் கிருமிகள், காற்றில் சிறிய துளிகளாக மக்கள் மத்தியில் பரவுகின்றன.

இது தவிர, குழந்தை பிறப்பின் போதோ அல்லது பிறந்த பின்னரோ ரத்தத்தின் மூலம் நிமோனியா பரவ வாய்ப்புகள் உள்ளன.

இந்தியாவில் நிமோனியா தொற்று ஏற்படுவதற்கு டிபி(காசநோய்) பரவுவது முக்கியகாரணமாக இருக்கிறது என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

நிமோனியா நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை

நிமோனியா சிகிச்சை

பட மூலாதாரம், Getty Images

தொற்றின் செயல்பாடுகளைப் பொறுத்து சில நோயாளிகளுக்கு லேசானதாகவும் அல்லது சிலருக்கு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கும். எனவே, உடனடியாக நோயை கண்டறிதல் அவசியமாகும்

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் நெஞ்சடைப்பு அல்லது சுவாசிக்க சிரமப்படுதல் போன்ற அறிகுறிகளுடன் இருந்தால் நிமோனியா கண்டறியப்படலாம்.

வைரஸ் அல்லது கிருமி நிமோனியா பாதிப்பை ஏற்படுத்துவதற்கும் உடலின் வழியே பரவுவதற்கும் சில நாட்கள் முதல் சில வாரங்கள் வரை எடுத்துக்கொள்ளும்.

பாக்டீரியாவால் நிமோனியா தொற்று நேரிட்டிருந்தால், ஆண்டிபயாடிக்களை உபயோகித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. நிமோனியா தொற்றுகளுக்கு வழக்கமாக மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகின்றன. எனினும், தீவிர நிலையில் உள்ள நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய தேவை உள்ளது.

நிமோனியாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், அதிகபட்ச ஓய்வு மற்றும் தங்கள் உடலில் அதிக பட்ச தண்ணீர் அளவை நிர்வகிப்பது அவர்களுக்கு பலன்களை அளிக்கும்.

நிமோனியாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகள் அவர்களுக்கு உள்ள அறிகுறிகளின் அடிப்படையில் மருந்துகள் எடுத்துக்கொள்ளும்படி பரிந்துரைக்கப்படுவர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படத் தேவையில்லை. எனினும் நோயாளிகள் சுயமாக மருந்து எடுத்துக் கொள்ளக்கூடாது என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

குழந்தைகளிடம் தோன்றும் நிமோனியாவின் 5 அறிகுறிகளை அறிந்து கொள்வது எப்படி?

குழந்தைகளை தாக்கும் நிமோனியா

பட மூலாதாரம், Getty Images

உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, 2019ஆம் ஆண்டு ஐந்து வயதுக்கு உட்பட்ட 7,40,000 குழந்தைகள் நிமோனியாவால் உயிரிழந்துள்ளன. சதவிகித அளவில் இது 14 சதவிகிதம் ஆகும்.

புதிதாக பிறக்கும் குழந்தைகளிடம் காணப்படும் 5 நிமோனியா அறிகுறிகள் குறித்தும், பெற்றோர் அதனை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்தும் மும்பையில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவர், ஜெசல் சேத் கூறுகிறார்.

காய்ச்சல்

பல்வேறு காரணங்களால் குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படும். கிருமிகள் அழிக்கப்பட்டவுடன் இந்த காய்ச்சல் குணமாகிவிடும். இது குழந்தைகளிடம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எனினும் காய்ச்சல் மிகவும் அதிகமாக அல்லது மருந்துகள் கொடுத்தும் குணமாகவில்லை என்றாலோ, குழந்தைகள் செயலின்றி காணப்பட்டாலோ அந்த குழந்தையை உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

சுவாசிப்பதில் சிரமம் குழந்தைகளின் சுவாச ஓட்டம் நாளொன்றுக்கு பல முறை வேறுபட்டு காணப்படும். நிமோனியா ஒரு நுரையீரல் நோயாகும். ஒரு வேளை அங்கு தொற்று ஏற்பட்டிருந்தால் குழந்தை சுவாசிப்பதற்கு சிரம்பபடத் தொடங்கும். சில குழந்தைகள் சுவாசிக்கும்போது விசில் போன்ற சத்தத்தையும் கேட்க முடியும்.

மேலோட்டமான சுவாசம்

நிமோனியா பாதிப்பின்போது நுரையீரலில் நீர் கோர்க்கிறது. இது சுவாசிப்பதில் சிக்கலை ஏற்படுத்துகிறது. குழந்தைகளைப் பொறுத்தவரை மேலோட்டமான சுவாசம் என்பது விரும்பத் தகுந்தது அல்ல. இது போன்ற நிகழ்வுகளில் குழந்தை வழக்கத்துக்கு மாறாக மிகவும் அமைதியாக இருந்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுவது நல்லது.

அடிவயிறு செயல்பாடு

குழந்தைகளின் அடிவயிறு இயக்கத்தை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். குழந்தை சுவாசிப்பதற்கு சிரமப்பட்டாலோ அல்லது சுவாசிக்க சிக்கலாக இருந்தாலோ அதனை பெற்றோர் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு குழந்தை சளியால் பாதிக்கப்பட்டால், தொடர்ந்து நிமோனியா வரும் என்று அர்த்தமல்ல. ஆனால், இந்த ஐந்து முக்கிய அம்சங்களில் நாம் விழிப்போடு இருந்தால், நிமோனியாவின் அறிகுறிகளை நம்மால் கண்காணிக்க முடியும்.

தடுப்பூசியின் உதவியுடன் நம்மால் நிமோனியாவை கட்டுப்படுத்த முடியும் என வல்லுநர்கள் சொல்கின்றனர். யூடியூப் வீடியோ ஒன்றின் மூலம் நிமோனியா பற்றிய தகவல்களை அளிப்பதன் வாயிலாக நாராயண சுகாதார மருத்துவமனை பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறது. "நிமோகோக்கல் எனும் கிருமிகளால் நேரிடும் நிமோனியாவுக்கு எதிராக உடல்நலத்தை பாதுகாக்க ஒரு நிமோகாக்கல் தடுப்பூசி இருக்கிறது, சளிகாய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசியும் உள்ளது, மேலும் குழந்தைகளைப் பாதுகாக்க உதவும் 'ஹீமோபிலஸ் இன்பேன்டி'க்கு எதிரான தடுப்பூசியும் உள்ளது,"என குழந்தைகள் நல மருத்துவர் விஜய் சர்மா கூறுகிறார்.

காணொளிக் குறிப்பு, மழை நீரைப் பருகுவது உடலுக்கு நல்லதா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: