சீனா போல இந்தியாவும் அமெரிக்கா மீது பதிலடி வரிகளை விதிக்காதது ஏன்? 4 காரணங்கள்

இந்தியா - அமெரிக்கா, டிரம்பின் 50% வரி

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதன் முதலில் உலகெங்கிலும் உள்ள நாடுகள் மீது வரிகளை விதித்த போது, ​​சீனா வலுவாக குரல் கொடுத்தது.

ஏப்ரல் 2025 இல், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வரிகள் தொடர்பாக உச்சக்கட்ட பதற்றம் இருந்தது. அப்போது அமெரிக்கா சீனா மீது 145 சதவிகித வரியையும், சீனா அமெரிக்கா மீது 125 சதவிகித வரியையும் விதித்தன.

பின்னர், ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அமெரிக்கா வரியை 145 சதவிகிதத்திலிருந்து 30 சதவிகிதமாகக் குறைத்தது, சீனா அதை 125 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாகக் குறைத்தது.

இன்று இந்தியா 50 சதவிகித அமெரிக்க வரிகளை எதிர்கொள்கிறது, பலரின் மனதில் இந்தக் கேள்வி எழுகிறது, இந்தியா ஏன் சீனாவைப் போல பதிலடி கொடுக்கவில்லை? சீனாவைப் போல பதிலடி கொடுக்க இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைத்ததா?

அமெரிக்கா மீது இந்தியா ஏன் வரிகளை விதிக்கவில்லை?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா மீது 50 சதவிகித வரியை விதித்துள்ளார், இது ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்கா விதித்துள்ள மிக உயர்ந்த வரியாகும். இந்த வரி ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வந்தது.

முன்னதாக, டிரம்ப் இந்தியா மீது 25 சதவிகித வரியை விதித்திருந்தார். இதன் பின்னர், இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்கு அதிருப்தி தெரிவித்த டிரம்ப், கூடுதலாக 25 சதவிகித வரியை அறிவித்தார். இருப்பினும், சீனா, துருக்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீது வரி விதித்ததற்கு அதையே காரணமாக காட்டியது மழுப்பலான ஒன்று என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவும் ஐரோப்பாவும் ரஷ்யாவிடமிருந்து யுரேனியம் மற்றும் உரங்களை வாங்குகின்றன என்றும் இந்தியா கேள்வி எழுப்பியது. பிறகு ஏன் இந்தியாவுக்கு எதிராக இரட்டை நிலைப்பாடு பின்பற்றப்படுகிறது?

இந்தியா - அமெரிக்கா, டிரம்பின் 50% வரி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அரிய மண் தாதுக்கள் துறையில் சீனாவின் ஆதிக்கம் இந்தியாவுக்கு ஒரு மூலோபாய சவாலாகக் கருதப்படுகிறது.

1. பழிவாங்கலால் இந்தியா இழப்புகளைச் சந்திக்கிறது

ஜெயந்த் தாஸ்குப்தா உலக வர்த்தக அமைப்புக்கான (WTO) இந்தியாவின் தூதராக (2010-14) இருந்துள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற ஆங்கில செய்தித்தாளுக்கு எழுதிய ஒரு கட்டுரையில், அமெரிக்கா மீது இந்தியா வரிகளை விதிப்பது ஏன் எளிதானது அல்ல என்பதை விளக்க முயன்றுள்ளார்.

"அமெரிக்காவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் முக்கிய பொருட்கள் கனிம எரிபொருள்கள் மற்றும் எண்ணெய், வெட்டப்பட்ட மற்றும் வெட்டப்படாத வைரங்கள், இயந்திரங்கள், கரிம ரசாயனங்கள், பிளாஸ்டிக் மற்றும் பழங்கள், நட்ஸ். இந்த தயாரிப்புகளில் பெரும்பாலானவை மூலப்பொருட்கள் அல்லது இடைநிலை மட்டத்தில் உள்ளன. அமெரிக்கா மீது பதிலடியாக வரிகளை விதிப்பதன் மூலம் இந்தியாவின் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும். இது தவிர, வரிகளுக்கு பதிலடி கொடுப்பது சேவைத் துறைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும், இதை தவிர்க்க வேண்டியது அவசியம்."

"சீனாவைத் தவிர, பிற முக்கிய நாடுகள் அமெரிக்காவின் அழுத்தத்துக்கு அடிபணிந்து, 10 சதவிகிதம் (பிரிட்டனுக்கு) அல்லது அதற்கு மேற்பட்ட வரிகளை ஏற்க ஒப்புக்கொண்டுள்ளன. எனவே இந்தியாவுக்கு எதிர்காலத்தில் எந்த நிவாரணமும் கிடைக்க வாய்ப்பு மிகக் குறைவு" என்று ஜெயந்த் தாஸ்குப்தா நம்புகிறார்.

"ஆம், அதிகரித்து வரும் பணவீக்கம், வேலை இழப்பு மற்றும் டிரம்ப் ஆதரவாளர்களின் கோபம் ஆகியவை 2026 நவம்பரில் அமெரிக்காவில் நடைபெறும் இடைக்காலத் தேர்தலுக்கு முன்பு அமெரிக்காவின் கொள்கைகளை சற்று மென்மையாக்கக் கூடும்."

2. அரிய தாது வளம் இல்லை

சீனாவைப் போல அமெரிக்கா மீது வரிகளை விதிப்பது இந்தியாவுக்கு பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பயனளிக்காது என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இந்தியாவுக்கு சரியான பாதை ராஜதந்திரம், உள்நாட்டுப் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் மற்றும் பிற நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்தல், இதனால் டிரம்ப் விதித்த வரிகளின் தாக்கத்தைக் குறைக்க முடியும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

பூடானின் 'தி பூடானீஸ்' செய்தித்தாளின் ஆசிரியர் டென்சிங் லாம்சாங், இந்தியா சீனாவின் பாதையைத் தேர்ந்தெடுக்கவில்லை என்றும், இதற்கு உறுதியான காரணங்கள் உள்ளன என்றும் கூறுகிறார்.

"சீனாவைப் போலல்லாமல், அமெரிக்காவின் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்புத் துறைக்கு பெரிய அடியைக் கொடுக்கக் கூடிய அரிய தாதுக்கள் போன்ற எந்த முக்கியமான ஆயுதமும் இந்தியாவிடம் இல்லை. இந்தியாவின் ஏற்றுமதி பொருட்களும் அவற்றை வேறிடத்திற்கு மாற்ற முடியாத அளவுக்கு இல்லை. மற்ற நாடுகள் இந்தியாவின் இடத்தை எளிதாக நிரப்ப முடியும்" என்று டென்சிங் லாம்சாங் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியா - அமெரிக்கா, டிரம்பின் 50% வரி

பட மூலாதாரம், Getty Images

3. டிரம்ப் கோபம் பற்றிய அச்சம்

ஆனந்த் ரதி வெல்த் லிமிடெட்டின் தலைமை பொருளாதார நிபுணரும் நிர்வாக இயக்குநருமான சுஜன் ஹஸ்ரா, ஆங்கில செய்தித்தாள் மின்ட்- க்கு அளித்த பேட்டியில் , "மிகவும் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், இந்தியா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் இன்னும் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்கின்றன, ஆனால் இந்தியா மட்டுமே குறிவைக்கப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், பதிலடி வரி என்ற வடிவில் இந்தியா ஒரு அடையாள பதிலை மட்டும் வழங்குவது சரியாக இருக்காது" என்று கூறினார்.

அமெரிக்கா மீது இந்தியா வரிகளை விதித்தால், டிரம்ப் கோபமடைந்து இந்தியா மீது மேலும் வரிகளை விதிக்கக் கூடும் என்று டென்சிங் லாம்சாங் நம்புகிறார்.

"சிலர் இந்தியாவும் சீனாவைப் போலவே அமெரிக்கா மீது பதிலடி வரிகளை விதிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள், ஆனால் இந்தியா இந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கவில்லை, அதற்குப் பின்னால் ஒரு உறுதியான காரணம் இருக்கிறது. டிரம்ப் கோபமடைந்து இந்தியாவின் மீதான வரிகளை இன்னும் அதிகரிப்பார். ஆகவே, இந்தியாவுக்கு மேலும் நஷ்டத்தை ஏற்படுத்தும் முடிவாகவே அது இருக்கும். ஏனெனில் இந்தியா அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதை விட மிகக் குறைவாகவே இறக்குமதி செய்கிறது. " என்று அவர் எழுதியுள்ளார்.

இந்தியா - அமெரிக்கா, டிரம்பின் 50% வரி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஐடி துறையின் பார்வையில் அமெரிக்கா இந்தியாவின் முக்கிய சந்தைகளில் ஒன்றாகும் (சித்தரிப்புப் படம்)

4. ஐடி துறை மீதான தாக்கம்

இந்தியா ஐடி சேவைகளை ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்காவை பெரிதும் நம்பியுள்ளது என்று எக்கனாமிக்ஸ் ரிசர்ச் நிறுவனர் ஜி. சொக்கலிங்கம் கூறுகிறார்.

"இந்தியாவின் ஐடி ஏற்றுமதி சுமார் 140 பில்லியன் டாலர்கள் மதிப்புடையது என்பதால், இந்தியா பதிலடி வரிகளை விதிப்பது சரியானதாக இருக்காது என்று நான் நினைக்கிறேன். அமெரிக்கா பதிலடி கொடுத்தால், நாம் பெரும் சிக்கலில் மாட்டிக்கொள்வோம்" என்று அவர் கூறினார்.

2023-24 நிதியாண்டில் இந்தியாவின் மென்பொருள் மற்றும் ஐடி சேவைகளின் மொத்த ஏற்றுமதி சுமார் 200 பில்லியன் டாலராக இருந்தது. இவற்றில், 54.7 சதவிகிதம் அதாவது 109.4 பில்லியன் டாலர் சேவை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

2024-25 ஆம் ஆண்டில் இந்திய ஐடி துறை ஏற்றுமதி 224.4 பில்லியன் டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது , இதில் அமெரிக்கா முன்னணி சந்தையாக உள்ளது.

இந்தியாவுக்கு சாதகம் ரஷ்ய எண்ணெயா அல்லது அமெரிக்காவுடன் வர்த்தகமா?

ரஷ்ய எண்ணெயின் விலை மீதான தள்ளுபடி சமீபத்தில் குறைந்துள்ளது. மே மாதத்தில், சௌதி அரேபியாவிலிருந்து வந்த எண்ணெயை விட ரஷ்யாவிலிருந்து வந்த கச்சா எண்ணெய்க்கு பீப்பாய் ஒன்றுக்கு 4.50 டாலர் மட்டுமே இந்தியா குறைவாக செலுத்தியுள்ளது. 2023 ஆம் ஆண்டில், இந்த வித்தியாசம் பீப்பாய்க்கு 23 டாலருக்கும் அதிகமாக இருந்தது.

கடன் மதிப்பீட்டு நிறுவனமான ICRA இன் படி, ரஷ்ய கச்சா எண்ணெய் விலையில் தரப்பட்ட தள்ளுபடி வெகுவாக குறைக்கப்பட்டு விட்ட நிலையில், மார்ச் 2025-க்குள் இந்தியா எண்ணெய் கொள்முதலில் சுமார் 3.8 பில்லியன் டாலரை மட்டுமே மிச்சப்படுத்தியது. ஆனால் கடந்த ஆண்டு இந்தியா அமெரிக்காவுக்கு சுமார் 87 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்தது .

வாரன் பேட்டர்சன் சிங்கப்பூரில் உள்ள ஐஎன்ஜி குழுமத்தின் கமாடிட்டி ஸ்டிரேட்டஜி பிரிவின் தலைவராக உள்ளார்.

ப்ளூம்பெர்க்கிடம் பேசிய பேட்டர்சன், "அமெரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தகம் எவ்வளவு பெரியது என்பதையும், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதன் மூலம் அது செய்யும் சேமிப்பையும் நீங்கள் பார்த்தால், இந்தியா என்ன செய்யும் என்பது தெளிவாகிறது. எண்ணெய் தள்ளுபடியில் சில பில்லியன்களைச் சேமிக்க 87 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க ஏற்றுமதிகளைப் பணயம் வைப்பீர்களா?" என்றார்.

இந்தியா - அமெரிக்கா, டிரம்பின் 50% வரி
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தினால் என்ன நடக்கும்?

இந்தியாவும் ரஷ்யாவும் நீண்டகால உறவைக் கொண்டுள்ளன, இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகள் சோவியத் சகாப்தம் முதலே உள்ளன. காலப்போக்கில், இரு நாடுகளும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தியுள்ளன, மேலும் இருதரப்பு வர்த்தகம் சாதனை அளவை எட்டியுள்ளது.

சோவியத்துக்குப் பிந்தைய காலத்திலும் இந்தியா-ரஷ்யா வர்த்தக உறவுகள் தொடர்ந்து வளர்ந்தன. 1995 இல் இது 1.4 பில்லியன் டாலராக இருந்த நிலையில், 2024-25 நிதியாண்டில் 68.7 பில்லியன் டாலராக அதிகரித்தது.

முதலீட்டுத் துறையிலும் இரு நாடுகளும் ஒத்துழைப்பை வலுப்படுத்தியுள்ளன. இந்திய நிறுவனங்கள் ரஷ்யாவின் எண்ணெய்-எரிவாயு, மருந்து மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் முதலீடு செய்துள்ளன. அதே நேரத்தில் ரஷ்ய நிறுவனங்கள் இந்தியாவின் எரிசக்தி, உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தித் துறைகளில் முதலீடு செய்துள்ளன.

இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 2024-25 நிதியாண்டில் சாதனை அளவாக 68.7 பில்லியன் டாலர்களை எட்டியது, இது கோவிட் தொற்றுநோய்க்கு முந்தைய அளவான 10.1 பில்லியன் டாலர்களை விட கிட்டத்தட்ட 5.8 மடங்கு அதிகமாகும்.

இதில் இந்தியாவின் ஏற்றுமதி 4.88 பில்லியன் டாலர்கள் மதிப்புடையது, ரஷ்யாவிலிருந்து 63.84 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள இறக்குமதியும் அடங்கும்.

யுக்ரேனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு மறைமுகமாக உதவி புரிவதாகக் கூறி, இந்தியா மீது கூடுதலாக 25% வரியை டிரம்ப் விதித்துள்ளார்.

இந்தியா ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், இந்தியா மீது விதிக்கப்பட்ட வரிகளை டிரம்ப் நீக்குவாரா? என்ற கேள்விக்கு, இந்தியா அவ்வாறு செய்தால் டிரம்ப் தான் நிர்ணயித்த இலக்குகளை மாற்றியமைக்கக் கூடும் என்று ஜெயந்த் தாஸ்குப்தா நம்புகிறார்.

"ஐரோப்பா மற்றும் சீனா மீது டிரம்ப் எந்த வரியையும் விதிக்கவில்லை, இருப்பினும் அவை இரண்டும் ரஷ்யாவிடமிருந்து மிகப்பெரிய அளவில் எரிசக்தியை வாங்கும் நாடுகளாக உள்ளன. இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்தினாலும், ரஷ்ய பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதை நிறுத்துவதற்கும், பிரிக்ஸிலிருந்து வெளியேறுவதற்கும், பிற நாடுகளின் நாணயத்தில் வர்த்தகம் செய்யாமல் இருப்பதற்கும் நிர்பந்திக்கக் கூடும்" என்று அவர் எழுதியுள்ளார்.

இந்தியா - அமெரிக்கா, டிரம்பின் 50% வரி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உலகிலேயே மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளர் இந்தியா.

இந்தியாவுக்கு என்னென்ன வாய்ப்புகள் உள்ளன?

டிரம்பின் வரிகளுக்கு எதிராக இந்தியா தனது பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும், உலகின் பிற சந்தைகளில் தனக்கான மாற்று வழிகளைத் தேட வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

"டிரம்ப் மற்றும் அவரது குழுவினரின் அணுகுமுறை 'அபத்தமானது' என்றும், இந்தியாவுக்கு எதிரான இந்தக் கொள்கை நீண்ட காலத்துக்கு அமெரிக்காவுக்கு கடுமையான மூலோபாய இழப்பாக இருக்கும் என்றும் டென்சிங் லாம்சாங் கூறுகிறார். குறிப்பாக சீனா ஏற்கெனவே அதன் உலகளாவிய போட்டியாளராக இருக்கும் நிலையில் இந்த முடிவு அமெரிக்காவுக்கு ஒரு இழப்புதான். ஆனால் இதுதான் நிலைமை, இந்தியா அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்."

தற்போதைய சவால்களைச் சமாளிக்க, இந்தியா பின்வருவனவற்றைச் செய்ய வேண்டும் என்று லாம்சாங் நம்புகிறார்:

  • பொருளாதாரத்தை வலுவாக்க பெரிய பொருளாதார சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.
  • முன்னேற்றத்துக்கு பரஸ்பர நல்லிணக்கமும் நிலைத்தன்மையும் தேவை.
  • அண்டை நாடுகளுடனான ராஜ்ஜீய ரீதியிலான உறவுகள், 'எதிரி நாடுகளுடனும்' கூட மேம்படுத்தப்பட வேண்டும்.
  • சீனாவைப் போலவே, இந்தியாவும் நேரம் எடுத்துக் கொண்டு, அமைதியாக திட்டமிட்டு வேலை செய்து, வலுவாக உருவெடுக்க வேண்டும்.

இந்த முடிவுக்கு எதிராக இந்தியா உலக வர்த்தக அமைப்பிடம் (WTO) செல்ல முடியுமா?

"உலக வர்த்தக அமைப்பு தகராறுகளைத் தீர்க்க இரண்டு கட்ட அமைப்பைக் கொண்டுள்ளது. இரண்டாவது கட்டத்தில், ஏழு நிரந்தர உறுப்பினர்களைக் கொண்ட குழுவின் (மேல்முறையீட்டு அமைப்பு) மூன்று பிரதிநிதிகளால் மேல்முறையீடுகள் தீர்மானிக்கப்படுகின்றன. இந்த ஏழு உறுப்பினர்களும் அனைத்து நாடுகளின் ஒப்புதலுடன் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் புதிய உறுப்பினர்களை நியமிப்பதை நிறுத்திவிட்டார். 2019 முதல் இந்த அமைப்பில் எந்த உறுப்பினரும் இல்லை. எனவே, இந்த அமைப்பு செயல்படவில்லை. அத்தகைய சூழ்நிலையில், அமெரிக்காவுக்கு எதிராக வழக்குத் தொடுப்பது ஒரு சம்பிரதாயமாக மட்டுமே இருக்கும்" என்று ஜெயந்த் தாஸ் குப்தா விளக்குகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு