'காலாவதியான தலைவர்கள்' - தன் மீது டெல்லி சென்று புகார் அளித்தவர்கள் குறித்து செல்வப்பெருந்தகை கூறியது என்ன?

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் குழப்பம்

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு, கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் செல்வப்பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகப் பொறுப்பேற்றார்.
    • எழுதியவர், சாரதா வி
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு எதிராக, 15க்கும் மேற்பட்ட மாவட்டத் தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டு புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், "கட்சி விதிகளின்படி பதவிக்காலம் முடிந்த காலாவதியான தலைவர்கள் புகார் கூறுகிறார்கள். கட்சியை வெளிப்படைத்தன்மையுடன் நடத்தி வருகிறோம்" என்று செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

புகாரில் உள்ள விபரங்கள்

ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினரான செல்வப் பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டார். கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரிக்கு அடுத்ததாக அவர் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

ஆரம்பத்தில் ரிசர்வ் வங்கியில் பணியாற்றிய அவர், புதிய பாரதம், புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளில் இதற்கு முன்பு இருந்துள்ளார். 2010ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அவருக்கு, மாநில பட்டியலினப் பிரிவு தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.

செல்வப் பெருந்தகையின் செயல்பாடுகளுக்கு எதிராகத் தற்போது 15க்கும் மேற்பட்ட மாவட்டத் தலைவர்கள் டெல்லிக்கு நேரில் சென்று, தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஸ் ஜோடாங்கை சந்தித்து ஒரு மணிநேரம் விவாதித்துள்ளனர்.

அப்போது அவர்கள் செல்வப் பெருந்தகை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அவரை உடனடியாக மாற்ற வேண்டும் என்று கோரி 4 பக்க மனு ஒன்றையும் சமர்ப்பித்துள்ளனர்.

அதில், "கட்சி தொடர்பான விஷயங்களில் செல்வப் பெருந்தகை தன்னிச்சையாக முடிவுகளை எடுத்துச் செயல்படுகிறார், மூத்த தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசிக்காமல் செயல்படுகிறார், மாவட்டத் தலைவர்களின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்கிறார்" என்ற முக்கியக் குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன.

நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், மதுரை, கடலூர், விருத்தாச்சலம் உள்ளிட்ட 15 மாவட்ட நிர்வாகிகள் இந்தப் புகார் மனுவை அளித்துள்ளனர்.

அவர்கள் இன்னும் இரண்டு நாட்கள் டெல்லியில் தங்கி, கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரைச் சந்திக்க நேரம் கோரியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட மாவட்டத் தலைவர்கள் சிலரைத் தொடர்புகொண்டு பேசியபோது, புகார் அளித்ததை உறுதி செய்த அவர்கள், அகில இந்திய தலைமையிடம் இருந்து நல்ல பதில் வரும் என எதிர்ப்பார்ப்பதாகவும், வேறு கருத்துகளைத் தற்போது கூற விரும்பவில்லை என்றும் தெரிவித்தனர்.

'காமராஜர் ஆட்சி' சர்ச்சை

திராவிட மாடல் ஆட்சியை காமராஜர் ஆட்சியாகப் பார்க்கிறோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை சமீபத்தில் ஊடகத்திடம் பேசியது சர்ச்சையாகியுள்ளது. "எங்கெல்லாம் நல்லாட்சி நடைபெறுகிறதோ, அது காமராஜர் ஆட்சியாகும், தமிழகத்தில் தற்போது நல்லாட்சி நடைபெறுகிறது, எனவே இது காமராஜர் ஆட்சி" என்று கடந்த வாரம் வெவ்வேறு தருணங்களில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் தெரிவித்திருந்தார்.

இதனால் அவர் திமுகவுக்கு மிகவும் இணக்கமாக இருக்கிறார், காங்கிரஸ் கட்சியை தனியே வளர்ப்பதற்கு முயற்சிகள் எடுப்பதில்லை என்ற விமர்சனங்கள் கட்சிக்குள் எழத் தொடங்கின.

விருதுநகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஆந்திரா மற்றும் அந்தமான நிகோபாருக்கான மேலிடப் பொறுப்பாளராகவும் இருக்கும் மாணிக்கம் தாகூர் இரண்டு நாட்களுக்கு முன் தனது எக்ஸ் பக்கத்தில் "பெருந்தலைவர் ஆட்சியைப் பார்க்காத, படிக்காத ஒருவர் அதை மற்றவைகளுடன் ஒப்பிட்டுவது தவறு. அன்புத் தலைவர் ராஜீவ் காந்தியின் கனவு காமராஜர் ஆட்சி. அது உண்மையான காங்கிரஸ்கார்களின் கனவு. ஒரு நாள் அது நடக்கும்" என்று பதிவிட்டிருந்தார்.

கோஷ்டி பூசல்கள் அவ்வப்போது தலை தூக்கும் காங்கிரஸ் கட்சியில் இந்தக் கருத்துகள் தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் குழப்பம்

பட மூலாதாரம், HANDOUT

படக்குறிப்பு, மாணிக்கம் தாகூர், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர்.

சென்னையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம், நடந்த காங்கிரஸ் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, "திமுகவை காங்கிரஸ் ஆதரிக்கிறது. ஆனால் தோழமை என்பது வேறு, சார்ந்திருத்தல் என்பது வேறு. எத்தனை நாட்களுக்கு நாம் சார்ந்திருக்கப் போகிறோம்?" என்று கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அப்போது பிபிசி தமிழ் விளக்கம் கேட்டபோது, "நான் கட்சியை வலிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில்தான் பேசினேன். திமுகவை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கத்திலோ அல்லது கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நோக்கத்திலோ பேசவில்லை" என்று கூறினார்.

புகார்கள் பற்றி செல்வப்பெருந்தகை கூறுவது என்ன?

காங்கிரஸ் கட்சியை உதய்பூர் தீர்மானத்தின்படி நடத்த வேண்டும் என்று கட்சியின் தலைமை கூறியுள்ளது. அதன்படி செயல்படுவது பலருக்குப் பிடிக்கவில்லை, அவர்கள்தான் புகார் மனுவோடு செல்கிறார்கள் என்று பிபிசி தமிழிடம் கூறிய செல்வ பெருந்தகை, புகார்களை மறுத்தார்.

அவர் கூறும்போது "காங்கிரஸ் கட்சியை உதய்பூர் தீர்மானத்தின்படி நடத்த வேண்டும் என்று கட்சியின் தலைமை வலியுறுத்தியுள்ளது. அதன்படி கட்சிப் பொறுப்புகளில் உள்ளவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் அதே பொறுப்பில் தொடர முடியாது. என் மீது புகார் கூறுபவர்கள் பெரும்பாலானோர் கட்சி விதிகளின்படி தங்கள் பதவிக் காலம் முடிந்து காலாவதியானவர்கள்," என்று விளக்கமளித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் குழப்பம்

பட மூலாதாரம், K.S.ALAGIR/FACEBOOK

மேற்கொண்டு பேசிய அவர், "கட்சியை ஜனநாயகப்பூர்வமாக வழிநடத்தவும், புதிய இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கவுமே புதிய நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இது சிலருக்குச் சாதகமாக இல்லை என்பது உண்மைதான். அதனால்தான் அவர்களுக்குள் அதிருப்தி எழுகிறது," என்று கூறினார்.

தற்போது செல்வப்பெருந்தகை கட்சிப் பொறுப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோரின் தகவல்களை கூகுள் படிவம் மூலமாகப் பெறும் நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த முறை வாயிலாக, மாவட்டத் தலைவர்களின் அதிகாரத்தைக் குறைப்பதாகவும், மாநிலத் தலைமையே நேரடியாக அனைத்து முடிவுகளையும் எடுக்க முயல்வதாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்துக் கேட்டபோது, "கட்சியின் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையையும், ஜனநாயகத் தன்மையையும் கொண்டு வரவே இதுபோன்ற நடைமுறைகளைப் பின்பற்றுகிறோம். இதில் புகார் கூறுவதற்கு எதுவுமில்லை" என்று செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

மேலும், இந்த விஷயத்தில் கட்சியின் அகில இந்திய தலைமையில் இருந்து தன்னிடம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் விளக்கினார்.

உதய்பூர் தீர்மானம் என்பது என்ன?

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் குழப்பம்

பட மூலாதாரம், FACEBOOK

உதய்பூர் தீர்மானம் என்பது 2022இல் ராஜஸ்தானின் உதய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம். இந்தத் தீர்மானத்தில் கட்சியின் உள்-அமைப்பு மற்றும் செயல்பாட்டு முறைகளில் பல மாற்றங்கள் முன்மொழியப்பட்டன.

அவற்றில், கட்சியில் எந்தவொரு பதவிக்கும் ஐந்து ஆண்டுகள் காலவரையறை விதிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரை முக்கியமானது. இந்த மாற்றங்கள் கட்சியை மேலும் மக்கள்-சார்ந்ததாகவும், பயனுள்ளதாகவும் மாற்றும் நோக்கத்துடன் முன்மொழியப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

உதாரணமாக, கே.சி.வெணுகோபால், அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர் (அமைப்பு) பதவியை ஏறக்குறைய ஆறு ஆண்டுகளாக வகித்து வருகிறார். இந்தத் தீர்மானம் அமலாக்கப்பட்டால், அவர் பதவி விலக வேண்டியிருக்கும். அதே போல பிரியங்கா காந்தி வாத்ரா ஐந்து ஆண்டுகளாக அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக உள்ளார். இந்தத் தீர்மானம் அமலாக்கப்பட்டால், இத்தகைய நீண்டகால பதவி வகிப்பு குறையும்.

இருப்பினும் இந்த முடிவுகளை அமல்படுத்துவதில் கட்சிக்குள் தயக்கம் நிலவி வருகிறது. "இந்த மாற்றங்கள் விரைவில் அமலாக்கப்படும். கட்சி பெரியது என்பதால், பெரிய மாற்றங்களைச் செயல்படுத்தச் சிறிது காலம் பிடிக்கும்" என்று காங்கிரஸ் கட்சியின் அகிலேஷ் பிரதாப் சிங் கூறியிருந்தார்.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன் மாற்றம் ஏற்படுமா?

காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி பூசல்கள் வாடிக்கையான ஒன்று எனக் கூறும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்கள் வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாற்றப்பட்டுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்கிறார்.

"புதிதாக யார் ஒருவர் பொறுப்பேற்றாலும், அவருக்கு எதிராக வெவ்வேறு தலைவர்களின் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்குவது வழக்கமான ஒன்று. கட்சிக்குள் தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்படாமல் மேலிட நியமனமாக தலைவர்கள் பொறுப்புக்கு வருவது இதற்கு ஒரு காரணம்.

இருப்பினும் செல்வப்பெருந்தகை மீது தீவிரமான புகார்கள் ஏதும் கட்சிக்குள் இருப்பதாகத் தெரியவில்லை. இவர் பொறுப்பேற்ற பிறகு, கிராம அளவில் கட்சியைக் கொண்டு செல்ல, பல கூட்டங்களை நடத்தி வருகிறார். காங்கிரஸ் கட்சியின் மேலிட ஆதரவும் அவருக்கு இருப்பதாகவே தெரிகிறது," என்கிறார் ப்ரியன்.

மேலும், சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள நேரத்தில், மாநிலத்தில் திமுகவுடன் இணக்கமாக உள்ள தலைவரை மாற்றுவதற்கு கட்சி மேலிடம் விரும்பாது என்று தான் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)