மதுரை சித்திரை திருவிழா: இருவேறு மாதங்களில் நடந்த மீனாட்சி திருக்கல்யாணமும் கள்ளழகர் ஊர்வலமும் இணைந்தது எப்படி?

பட மூலாதாரம், Manikandan
- எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
- பதவி, பிபிசி தமிழ்
மதுரை கோவில்களின் நகரம் என்பதால் ஆண்டுதோறும் திருவிழாக்களின் ஊடாகவே பயணிக்கும். ஆனால், இதன் உச்சமாக 'சித்திரைத் திருவிழா' இருக்கும். 300 ஆண்டுகளுக்கு மேலாக சைவமும் வைணவமும் இணைந்து நடத்தும் திருவிழாவாக இருப்பதால் இது திருவிழாக்களின் திருவிழாவாக மாறி மக்களின் கொண்டாட்டத்திற்கான மையப் புள்ளியாகவும் உள்ளது.
சித்திரை திருவிழா கொண்டாட்டத்தின் உச்சமாக விளங்குவது எப்படி?
தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் சித்திரை மாதம் சித்திரைத் திருவிழாக்கள் நடைபெறும். ஆனால், மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழா சைவம், வைணவ மதத்தை இணைத்து உருவாக்கப்பட்ட திருவிழா. ஆகையால், அதற்கு கூடுதல் சிறப்பு உண்டு.
திரும்பும் திசையெங்கும் மக்கள் வெள்ளம், சித்திரை வெயில் தாகத்தைத் தணிக்க நீர், மோர், குளிர் பானம், பசி போக்க வழிநெடுக அன்னதானம் என மீனாட்சி அம்மன் கொடியேற்றத்துடம் துவங்கும் திருவிழா அழகர் மீண்டும் கோவிலுக்குத் திரும்பும் வரையில் 16 நாட்கள் நடைபெறும்.
சித்திரைத் திருவிழா வரலாறு

பட மூலாதாரம், Manikandan
மதுரையில் நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாண திருவிழா மாசி மாதம் நடைபெற்று வந்தது. அறுவடை முடியாத நிலையில் வேளாண் பெருமக்களால் இந்தத் திருவிழாவைக் காண முடியாமல் இருந்ததால் இது சித்திரை மாதத்திற்கு மாற்றப்பட்டது. சித்திரைத் திருவிழா தேரோட்டம் மாசி வீதிகளில் நடப்பது இதற்கான சான்றாக இருக்கிறது.
அதேபோல், சோழவந்தான் அருகே உள்ள தேனூர் என்னும் இடத்தில் அழகர் ஊர்வலம் நடைபெற்றது. இந்த நிகழ்வு மீனாட்சி திருக்கல்யாணத்திற்குப் பிறகு இரண்டு நாள் கழித்து அழகர் மதுரைக்கு வரும்படி திருமலை நாயக்கரின் ஆட்சிக் காலமான கி.பி. 1623 முதல் 1659க்குள் இணைக்கப்பட்டது. ஆண்டின் இருவேறு மாதங்களில் நடந்த மீனாட்சி திருக்கல்யாணமும், கள்ளழர் ஊர்வலமும் மதுரை சித்திரை திருவிழா என்ற பெயரில் ஒரே விழாவில் இவ்வாறுதான் இணைக்கப்பட்டன.
'வைகை ஆற்றில் எழுந்தருளும் அழகர் வண்டியூர் அருகே மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுக்கச் செல்லும்' மண்டபத்தின் பெயர் தேனூர் மண்டபம்.
தேனூரைச் சேர்ந்தவர்களே இங்கு கோவில் மரியாதை பெறுகிறார்கள் என, தொ.பரமசிவம் தனது அழகர் கோவில் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள்

பட மூலாதாரம், Arun
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கும். அதைத் தொடர்ந்து 'மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் பிரியாவிடை அம்மனும் நான்கு மாசி வீதிகளில் பல்வேறு வாகனங்களில் தினசரி எழுந்தருளி வீதி உலாவாக பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.'
இந்தத் திருவிழாவின் எட்டாம் நாள் மதுரையின் அரசியாக மீனாட்சி அம்மன் முடிசூடி பட்டாபிஷேகம் நடைபெற்று ஒன்பதாம் நாள் சுந்தரேஸ்வரருடன் திக் விஜயம் செய்து வெற்றி பெறுவார். பத்தாம் நாள் திருக்கல்யாணம் நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.
அதைத் தொடர்ந்து பதினொன்றாம் திருத்தேரோட்டம் மாசி வீதிகளில் வெகு விமர்சையாக நடைபெறும். அப்போது சுந்தரேஸ்வரர் பிரியாவிடை பெரிய தேரிலும் மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் பவனி வந்து காட்சியளிப்பார்கள்.
இதில் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் மாலை நேரங்களில் நடைபெறும் வீதி உலாவைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருப்பர். அப்போது வேத மந்திரங்கள், வாத்தியங்கள் நாதஸ்வர இசை, நாட்டுப்புறக் கலைகளான பொய்க்கால் குதிரை, கும்மியாட்டம், கோலாட்டத்துடன் கலைஞர் மக்களின் கவனம் ஈர்ப்பர்.
இதில் முக்கியமாக பக்தர்கள் தங்களின் குழந்தைகளுக்கு மீனாட்சி, முருகன், பிள்ளையர், கருப்பசாமி போன்ற கடவுளின் உருவங்களில் வேடம் அணிவித்து வீதி உலாவாக வருவது மக்களை இந்தத் திருவிழாவுடன் இணைதிருக்க வைக்கிறது.
இதற்கிடையே அழகர் கோவிலில் இருந்து அழகர் கள்ளழகர் வேடம் தரித்து அழகர் மலையிலிருந்து 20 கிலோமீட்டர் பயணித்து மதுரையை வந்தடைவார். அவரைப் பின்தொடர்ந்து கிராமங்களில் வசிக்கும் மக்கள் தரிசம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். பௌர்ணமி தினத்தில் பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றின் வடகரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் காட்சியளிப்பார்.
அழகர் ஆற்றில் இறங்குவது எப்போது?

பட மூலாதாரம், Arun
இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முக்கிய நிகழ்வான பட்டாபிஷேகம் ஏப்ரல் 19ஆம் தேதி திருக்கல்யாணம் ஏப்ரல் 21ஆம் தேதியும் நடைபெறுகிறது.
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படும் 'அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும்' நிகழ்வு ஏப்ரல் 23ஆம் தேதி அதிகாலை 5:51 மணிக்கு துவங்கி 6:10 மணிக்குள்ளாக நடைபெற இருக்கிறது.
மதுரையில் வருடாவருடம் இந்தச் சித்திரை திருவிழா நடைபெற்று வந்தாலும் இது எப்படி மக்களின் கொண்டாட்டத்திற்கான அடிநாதமாக மக்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது? ஏன் சித்திரை திருவிழாவை காண தமிழ்நாடு மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்?
'மதங்களை கடந்த திருவிழா'

பட மூலாதாரம், Arun
இதுகுறித்து பிபிசி தமிழிடம் ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த லெனின் குமார் கூறும்போது, "மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழா என்பது சாதிகள், மதங்களைக் கடந்து ஒருமித்த நோக்கத்தோடு கொண்டாட்ட மனப்பான்மையுடன் நடைபெறும் திருவிழாவாக இருக்கிறது.
இந்த திருவிழாவின்போது ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்களை வைகை ஆற்றின் கரையிலும் வைகை ஆற்றின் உள்ளேயும் பார்க்க முடியும். அவ்வளவு மக்கள் திரளிலும் பெரிய சண்டை சச்சரவுகள் இன்றி நல்ல முறையில் நடைபெறும்.
திருவிழா நாட்களில் மக்கள் அனைவரும் தங்களால் இயன்ற குடிநீர் , மோர், ரஸ்னா, உணவுகளை இலவசமாக பக்தர்களுக்கு வழங்கி பசியையும் தாகத்தையும் போக்குவர். இதை ஒற்றுமைக்கான ஒரு திருவிழாவாகவே நான் பார்க்கிறேன்," என்றார்.
'300 ஆண்டுகளாக நடைபெறும் ஹாப்பி ஸ்ட்ரீட்'

பட மூலாதாரம், Yogi
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய யோகி கூறும்போது, “சிறுவனாக இருந்தபோதிருந்து பாட்டியுடன் சென்று ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்வைக் கண்டு வருகிறேன். இதற்காக அதிகாலையே வைகை ஆற்றின் கரைக்குச் சென்று நின்று காத்திருந்து சாமியை தரிசனம் செய்து திரும்புவோம்.
மீனாட்சி சுந்தரேஸ்வரரின் திருத்தேரை நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சேர்ந்து இழுப்பார்கள். நான் இழுக்கும்போது எதோ என்னால்தான் தேர் நகர்வதாகவும் எல்லாமே முயன்றால் செய்து முடிக்கலாம் என்ற உணர்வையும் இத்திருவிழா கொடுக்கும்.
தற்போது வேலைக்கு மதுரையை தாண்டிச் செல்லும் போதுதான் எவ்வளவு பெரிய திருவிழாவை மதுரை மக்கள் நடத்தி வருகின்றனர் எனத் தெரிகிறது. இந்தத் திருவிழாவை ஒற்றுமையின் அடையாளமாகப் பார்க்கிறேன்.
இப்போது அரசு மக்கள் மனதில் இருக்கும் அழுத்தத்தைக் குறைப்பதற்காக ‘ஹாப்பி ஸ்ட்ரீட்' என்ற திட்டத்தை நடத்தி வருகிறது. ஆனால் மதுரை மக்கள் 300 ஆண்டுகளுக்கு மேலாக சித்திரைத் திருவிழா வடிவில் அதை நடத்தி வருகின்றனர். திருவிழா நேரம் வெளியூரில் இருந்தால் திருவிழாவை புகைப்படங்கள், வீடியோக்களில் பார்த்தாவது அந்தக் கொண்டாட்ட உணர்வை மனதிற்குள் ஏற்றிக் கொள்வேன்,” என்றார்.
கோவில் நகரத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் திருவிழா

பட மூலாதாரம், Alagu Lakshmi
இந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவில் பங்கேற்று வரும் அழகுலெட்சுமி பிபிசி தமிழிடம் பேசியபோது, சித்திரைத் திருவிழா மதுரை பாரம்பரிய நகரம் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் திருவிழாக்களில் ஒன்றாக இருப்பதாகக் கூறினார்.
"பொதுவாக சித்திரை மாதம் திருமணங்கள் நடைபெறாது. ஆனால் சித்திரையில் மீனாட்சிக்கு திருமணம் நடைபெற்று மதுரையின் அரசியாகப் பொறுப்பேற்கும் நிகழ்வு நடைபெறும். இதில் சைவமும் வைணவமும் இணைவது சிறப்பு வாய்ந்த ஒன்று.
திருமலை நாயக்கர் சித்திரையில் திருவிழா நடைபெறும் விதமாக இணைத்தார். அன்று தொடங்கி இன்று வரை அந்தப் பாரம்பரியம் பின்பற்றப்பட்டு வருகிறது.
திருவிழா கொடியேற்றம் நாளில் மழை பெய்வதும் அழகர் ஆற்றில் இறங்கும்போது மழை பெய்வதும் ஐதீகம். அது இன்று வரை நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழா நகரம் மற்றும் கிராமங்களின் மக்களை இணைக்கும் படியான திருவிழாவாகவே நான் பார்க்கிறேன்,” என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












