சத்தீஸ்கர்: 29 மாவோயிஸ்ட்கள் என்கவுன்டரில் கொல்லப்பட்டது எப்படி? - காவல்துறை கூறுவது என்ன?

சத்தீஸ்கர் மாவோயிஸ்ட்கள் என்கவுன்டர்

பட மூலாதாரம், CHHATTISGARH POLICE

    • எழுதியவர், அலோக் பிரகாஷ் புதுல்
    • பதவி, பிபிசி ஹிந்திக்காக, ராய்பூரிலிருந்து

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் இயங்கிவரும் கான்கேர் மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் 29 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக காவல்துறை கூறியுள்ளது.

இந்த என்கவுன்டரில் பாதுகாப்புப் படை வீரர்கள் 3 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் காவல்துறை கூறியுள்ளது.

காவல்துறையினரின் கூற்றுப்படி, செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 16) பிற்பகல், கான்கேரின் சோட்டாபெட்டியா பகுதியில் மாவோயிஸ்டுகள் என்று சந்தேகிக்கப்படுபவர்களுடன் என்கவுன்டர் நடந்தது என்று காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்கவுன்டர் நடந்த இடத்தில் இருந்து 29 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டதாக போலீஸார் கூறுகின்றனர்.

ஏப்ரல் 19-ஆம் தேதி பஸ்தாரில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இந்நிலையில் இந்த என்கவுன்டர் சம்பவம் நடந்துள்ளது.

சத்தீஸ்கர் மாவோயிஸ்ட்கள் என்கவுன்டர், அமித் ஷா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உள்துறை அமைச்சர் அமித் ஷா

என்கவுன்டர் குறித்து அமித்ஷா அறிக்கை

இது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கையில் இன்று ஏராளமான நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையை துணிச்சலுடன் வெற்றிகரமாகச் செய்த அனைத்து பாதுகாப்புப் படையினரையும் நான் வாழ்த்துகிறேன். காயமடைந்த துணிச்சலான காவலர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்,” என்றார்.

“வளர்ச்சி, அமைதி மற்றும் இளைஞர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு நக்சலிஸம் மிகப்பெரிய எதிரி. பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையில், நக்சலிசத்தின் கோரப்பிடியில் இருந்து நாட்டை விடுவிப்பதில் உறுதியாக உள்ளோம்,” என்றும் அமித் ஷா கூறியுள்ளார்.

"அரசாங்கத்தின் நேரடித் தாக்குதல் கொள்கையாலும், பாதுகாப்புப் படையினரின் முயற்சியாலும், இன்று நக்சலிசம் ஒரு சிறிய பகுதிக்கு சுருங்கி விட்டது. விரைவில் சத்தீஸ்கர் மற்றும் முழு நாடும் நக்சல்களிடமிருந்து முழுமையாக விடுதலை அடையும்," என்றார்.

சத்தீஸ்கர் மாவோயிஸ்ட்கள் என்கவுன்டர்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, பஸ்தார் போலீஸ் ஐ.ஜி. சுந்தர்ராஜ் பி

காவல் துறையினர் சொல்வது என்ன?

என்கவுன்டரில் கொல்லப்பட்டவர்களில், சங்கர் ராவ் மற்றும் லலிதா மாத்வி ஆகியோர் ‘DVC தரவரிசை நக்சலைட்டுகள்’ எனப்படும் உயர்நிலை தலைவர்கள் என்றும், அவர்களுக்கு தலைக்கு தலா ரூ.25 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது என்றும் போலீஸார் கூறுகின்றனர்.

சம்பவ இடத்தில் இருந்து நான்கு தானியங்கி ஆயுதங்களை கைப்பற்றியதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

முன்னதாக, கான்கேரின் சோட்டாபெட்டியாவில் என்கவுன்டர் செய்யப்பட்ட இடத்தில் இருந்து 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக பஸ்தார் போலீஸ் ஐ.ஜி. சுந்தர்ராஜ் பி தெரிவித்தார். ஏகே 47 உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து விரிவாகப் பேசிய ஐ.ஜி. சுந்தர்ராஜ் பி, "மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதுவரை 29 மாவோயிஸ்டுகளின் உடல்களை மீட்டுள்ளோம். அன்சாஸ், கார்பைன்கள், ஏகே 47 போன்ற ஆயுதங்களும் அதிக எண்ணிக்கையில் கைப்பற்றப்பட்டுள்ளன,” என்றார்.

என்கவுன்டரில் காயமடைந்த மூன்று காவல்துறையினர் தற்போது நலமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

எல்லைப் பாதுகாப்புப் படை டி.ஐ.ஜி. அலோக் சிங், அவர்கள் தங்கள் தாக்குதல் முறையை மாற்றியிருப்பதாகவும், அதனால்தான் இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்திருப்பதாகவும் கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது எல்லைப் பாதுகாப்புப் படையின் (பி.எஸ்.எஃப்) மிகப்பெரிய உளவுத் தள நடவடிக்கை என்று கூறினார். மாவட்ட ரிசர்வ் காவலர் மற்றும் பி.எஸ்.எஃப் குழுவினர் கடந்த இரண்டு நாட்களாக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார்.

மாவோயிஸ்டுகள் எதிர்பார்க்காத திசையில் இருந்து இந்த நடவடிக்கை நடத்தப்பட்டதாகவும், அதற்காகத் தங்கள் உத்தியை மாற்றியதாகவும் அலோக் சிங் கூறினார்.

இந்தத் தாக்குதலில் 29 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டது மட்டுமின்றி, ஏராளமான மாவோயிஸ்டுகள் காயமடைந்துள்ளதாக டி.ஐ.ஜி. அலோக் சிங் தெரிவித்தார். மேலும் காயமடைந்த மாவோயிஸ்டுகளை தேடும் நடவடிக்கை விரைவில் நடத்தப்படும் எனவும் கூறினார்.

சத்தீஸ்கர் மாவோயிஸ்ட்கள் என்கவுன்டர்

பட மூலாதாரம், அலோக் பிரகாஷ் புதுல்

படக்குறிப்பு, சத்தீஸ்கர் மாநில முதல்வர் விஷ்ணு தேவ் சாய்

சத்தீஸ்கர் முதல்வர் என்ன சொன்னார்?

சத்தீஸ்கர் மாநில முதல்வர் விஷ்ணு தேவ் சாய், கான்கேர் மாவட்டத்தில் நடந்த என்கவுன்டர் ‘ஒரு வரலாற்று வெற்றி’ என்று கூறியுள்ளார்.

மாவோயிஸ்டுகளுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை என்றும் வன்முறைச் செயல்பாடுகள் மூலம் ஒவ்வொரு ஜனநாயக செயல்முறையிலும் ஆதிக்கம் செலுத்துவதாகவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இப்போது நடந்திருக்கும் சம்பவத்திலும் மாவோயிஸ்டுகள் தேர்தலில் ஆதிக்கம் செலுத்த முயன்றதாக தெரிகிறது, என்றார்.

விஷ்ணு தேவ் சாய் மேலும் கூறுகையில், “என்கவுன்டர் நடந்த பகுதி பஸ்தார் மற்றும் காங்கர் மக்களவைத் தொகுதிகளுக்கு அருகில் உள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் பஸ்தாரில் தேர்தல் நடக்கிறது. பஸ்தாரில் தேர்தலை புறக்கணிக்கவும், தேர்தல் நடைமுறையை வேறு வழிகளில் தடுக்கவும் மாவோயிஸ்டுகள் சதி செய்து வருகின்றனர். இம்முறையும் பெரிய குற்றத்தைச் செய்ய முயன்றனர், அதை எல்லை பாதுகாப்பு படையினரும், போலீசாரும் முறியடித்தனர்,” என்றார்.

ஜனநாயக விரோத வன்முறையைக் கடுமையாகக் கையாளும் கொள்கையுடன், ‘நியாத் நெல்லனார்’ போன்ற திட்டங்களின் மூலம் மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வளர்ச்சியை உறுதி செய்து, இந்தப் பிரச்னையை ஒழிக்க எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது என்றார் விஷ்ணு தேவ் சாய்.

“இந்த வன்முறை விளையாட்டை நிறுத்த வேண்டும் என்று அரசு விரும்பினாலும், பஸ்தாரில் அமைதியை மீட்டெடுப்பதில் நிச்சயம் இது மிகப்பெரிய வெற்றியாகும்,” என்றார் அவர். “மாவோயிஸ்டுகளை வன்முறைப் பாதையை விட்டு வெளியேறுமாறு மீண்டும் கூற விரும்புகிறோம். வளர்ச்சியின் மைய நீரோட்டத்தில் அவர்கள் இணைய வேண்டும். அவர்களின் பயங்கரவாதம் மற்றும் வன்முறை எந்தத் தீர்வையும் வழங்காது,” என்றார் அவர்.

சத்தீஸ்கர் மாவோயிஸ்ட்கள் என்கவுன்டர்

பட மூலாதாரம், அலோக் பிரகாஷ் புதுல்

படக்குறிப்பு, சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக நடந்துவருகின்றன

இந்த ஆண்டு மட்டும் கொல்லப்பட்ட 50 மாவோயிஸ்டுகள்

இந்த என்கவுன்டர் நடவடிக்கை, இந்தப் பகுதியில் பாதுகாப்புப்படையினர் நடத்திய நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் மிகப் பெரியதாகக் கருதலாம்.

மூத்த நக்சலைட் தலைவர்களான சங்கர், லலிதா மற்றும் ராஜு ஆகியோர் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.

கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி, சத்தீஸ்கரின் பிஜாப்பூரில் 13 மாவோயிஸ்டுகளை என்கவுன்டரில் கொன்றதாக காவல்துறை கூறியிருந்தது. அதற்குப் பிறகு, ஏப்ரல் 6-ஆம் தேதி, பிஜாப்பூர் பூஜாரி கான்கேரில் மூன்று மாவோயிஸ்டுகள் காவல்துறையினரால் கொல்லப்பட்டனர். பஸ்தாரில் மட்டும், இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை 50-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், மாநிலங்களவையின் சபாநாயகருமான ராமன் சிங், இது மாவோயிசத்திற்கு எதிரான வரலாற்று வெற்றி என்று கூறியுள்ளார். “சத்தீஸ்கர், மற்றும் நாட்டின் வரலாற்றில் இது மிகப்பெரிய சம்பவமாக நான் கருதுகிறேன். இது நக்சலைட் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு பெரிய படியாகும்,” என்று அவர் கூறினார்.

இவ்வளவு பெரிய அளவில் மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதை மாநில அரசு மிகப்பெரிய வெற்றியாகக் கருதுகிறது.

ஆட்சிக்கு வந்ததில் இருந்து மாவோயிஸ்டுகளுடன் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்த முன்வந்துள்ள மாநில உள்துறை அமைச்சர் விஜய் சர்மா, ‘இது நக்சலிசத்தின் மீது பஸ்தார் காவல்துறையின் சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ என்று கூறியுள்ளார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)