நாடாளுமன்ற தேர்தல்: நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை - 15 கேள்விகளும் பதில்களும்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி செய்தியாளர்
2024ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலின் முதல் சுற்று வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தல் குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்துத் தகவல்களும் 15 கேள்வி - பதில்களாக தொகுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் 18வது நாடாளுமன்றத்தைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல்கள் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் நடைபெறவிருக்கின்றன. உலகின் மிகப் பெரிய தேர்தல்களில் ஒன்றான இந்தத் தேர்தல் குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் அனைத்தும் இங்கே கேள்வி - பதில் வடிவில் அளிக்கப்பட்டிருக்கின்றன.
நாடாளுமன்ற தேர்தல் எப்போது துவங்கி, எப்போது முடிவடைகிறது?
இந்தியாவின் 18வது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கி, ஜூன் 1ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. தற்போது நடப்பில் உள்ள இந்திய நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் இந்த ஆண்டு ஜூன் 16ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. அதற்குள் புதிய நாடாளுமன்றத்தைத் தேர்வுசெய்ய வேண்டும். புதிய நாடாளுமன்றத்தைத் தேர்வுசெய்வதற்கான அறிவிப்பு, இந்த ஆண்டு மார்ச் 16ஆம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது.
அதன்படி, இந்தத் தேர்தல்கள் ஏழு கட்டங்களாக நடக்கின்றன. ஏப்ரல் 19ஆம் தேதி 102 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 26ஆம் தேதி 89 தொகுதிகளுக்கும் மே 7ஆம் தேதி 94 தொகுதிகளுக்கும் மே 13ஆம் தேதி 96 தொகுதிகளுக்கும் மே 20ஆம் தேதி 49 தொகுதிகளுக்கும் மே 25ஆம் தேதி 57 தொகுதிகளுக்கும் ஜூன் 1ஆம் தேதி 57 தொகுதிகளுக்கும் தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன.

பட மூலாதாரம், Getty Images
வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் எத்தனை பேர்?
இந்தியாவில் பிப்ரவரி 8ஆம் தேதி நிலவரப்படி 96 கோடியே 88 லட்சத்து 21 ஆயிரத்து 926 பேர் வாக்காளர்களாக உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 49,72,31,994. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 47,15,41,888. மூன்றாம் பாலினத்தவர் 48,044.
இதில் வேறு சில சுவாரஸ்யமான புள்ளிவிவரங்களும் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள வாக்காளர்களில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 2,38,791. பதினெட்டு முதல் பத்தொன்பது வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 1,84,81,610. அதேபோல, இந்திய மக்கள் தொகையில் 66.76 சதவீதம் பேர் வாக்காளர்களாக பதிவுசெய்துள்ளனர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6.19 கோடி. இவர்களில் ஆண்களின் எண்ணிக்கை 3.04 கோடி. பெண்களின் எண்ணிக்கை 3.15 கோடி. தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். மூன்றாம் பாலினத்தவரின் எண்ணிக்கை 8294. நூறு வயதை எட்டியவர்களின் எண்ணிக்கை 8,765. முதல் முறையாக வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை 9.18 லட்சம் பேர்.

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாடு - புதுச்சேரியில் வாக்குப்பதிவு எப்போது?
ஏழு கட்டங்களாக நடக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதல் கட்டத்திலேயே தேர்தலைச் சந்திக்கிறது தமிழ்நாடு - புதுச்சேரி. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப் பதிவு நடக்கவிருக்கிறது.
தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். புதுச்சேரி தொகுதியில் 26 பேர் களத்தில் இருக்கின்றனர். தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாநிலத்திலேயே குறைவாக நாகப்பட்டினம் தொகுதியில் 9 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி என்ற பெயரில் தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவை இணைந்து போட்டியிடுகின்றன.
தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற பெயரில் பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதி கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், ஓ. பன்னீர்செல்வம் அணி ஆகியவை இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.
அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க., புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ., தே.மு.தி.க. ஆகியவை இணைந்து தேர்தலைச் சந்திக்கின்றன. இவை தவிர, நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும்.

பட மூலாதாரம், Getty Images
உங்கள் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி தெரிந்துகொள்வது எப்படி?
தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இதற்கென உள்ள பக்கத்திற்கு (https://affidavit.eci.gov.in/CandidateCustomFilter) சென்று, எந்த மாநிலத்தில் எந்தத் தொகுதி எனத் தேர்வுசெய்தால், அந்தத் தொகுதியில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட வேட்பாளர்கள், அவர்களது சொத்து விவரங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம். தேர்தல் நடக்கும் தினத்தன்று வாக்குச் சாவடியிலும் வேட்பாளர்களின் பட்டியலும் அவர்களது சின்னங்களும் ஒட்டப்பட்டிருக்கும்.
எந்த வாக்குச்சாவடியில் வாக்களிப்பது என்பதை அறிவது எப்படி?
ஒருவர் தேர்தலில் வாக்களிக்க வேண்டுமானால், வாக்காளராகப் பதிவுசெய்திருக்க வேண்டும். தன்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை அறிய இதற்கென உள்ள தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் ( https://electoralsearch.eci.gov.in/ )சென்று தேடிப் பார்க்கலாம். பெயர் இடம்பெற்றிருக்கும் பட்சத்தில், அவர்கள் எந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க வேண்டும் என்ற விவரமும் அதிலேயே இடம்பெற்றிருக்கும். அல்லது voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் இதனைத் தெரிந்துகொள்ளலாம். இதற்கு உங்களுடைய வாக்காளர் எண் தெரிந்திருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் 1950 என்ற எண்ணை அழைத்துத் தெரிந்துகொள்ளலாம். அல்லது 1950 எண்ணுக்கு ECI என்று டைப் செய்து, ஓர் இடைவெளி விட்டு, உங்களின் EPIC எண்ணைப் (வாக்காளர் எண்)பதிவிட்டு குறுஞ்செய்தி அனுப்பினால் உரிய தகவல்கள் வந்துசேரும்.
பொதுவாக வாக்குச் சாவடிகள் அவர்களது வீட்டிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குள் இருக்கும் வகையில் அமைக்கப்படும்.

பட மூலாதாரம், Getty Images
வாக்குச் சாவடியில் என்ன நடக்கும்?
வாக்களிக்க விரும்புபவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும். உங்கள் வாக்குச் சாவடியில் வரிசை இருந்தால், அதில் நின்று வாக்குச்சாவடிக்குள் செல்ல வேண்டும். அங்குள்ள அதிகாரி ஒருவர், வாக்காளர் பட்டியலில் உள்ள உங்கள் பெயரையும் உங்கள் அடையாள அட்டையையும் சரிபார்த்து, சத்தமாக அதனை அறிவிப்பார்.
அதற்குப் பிறகு மற்றொரு தேர்தல் அலுவலர் உங்களது இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மையை வைத்து, ஒரு ஸ்லிப்பை அளிப்பார். படிவம் 17 ஏவில் கையெழுத்திட வேண்டும். இதற்கு அடுத்த அதிகாரியிடம் நம்மிடம் உள்ள ஸ்லிப்பை அளித்தால், அவர் நம்மை வாக்களிக்கும் இயந்திரத்தில் வாக்களிக்க அனுமதிப்பார்.
வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். பீப் என்ற ஒலி ஏற்பட்டால், உங்கள் வாக்கு பதிவாகிவிட்டதாக அர்த்தம். அருகில் உள்ள VVPAT (வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை) எந்திரத்தில் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்களோ அவர்களது பெயர், சின்னம் ஆகியவை ஒரு காகிதத்தில் அச்சிடப்பட்டு 7 விநாடிகளுக்குத் தெரியும். இத்துடன் வாக்களிப்பது நிறைவடையும். பீப் சத்தம் வராவிட்டாலோ, விவிபாட் இயந்திரத்தில் எதுவும் தெரியாவிட்டாலோ, தேர்தல் அலுவலரை அணுக வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
வாக்காளர்கள் எந்தெந்த அடையாள அட்டையைப் பயன்படுத்தலாம்?
வாக்களிக்கச் செல்லும்போது, உங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.
வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை, பான் அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, வங்கி அல்லது தபால் நிலையத்தில் அளிக்கப்படும் புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம், தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கியுள்ள உடல்நலக் காப்பீட்டு அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை, மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கான அட்டை, மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டைகளை ஏற்கத்தக்க அடையாள அட்டைகளாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
யார் யாரெல்லாம் தபால் மூலம் வாக்களிக்க முடியும்?
எல்லா வாக்காளர்களும் தபால் மூலம் வாக்களிக்க முடியாது. ராணுவம் உள்ளிட்ட சில சேவைகளில் பணியாற்றுபவர்கள், தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்கள் தபால் மூலம் வாக்களிக்க முடியும். இவர்கள் தவிர, வேறு சிலரும் தபால் மூலம் வாக்களிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், வாக்காளர் பட்டியலிலேயே மாற்றுத் திறனாளிகளாக குறிக்கப்பட்டு, அதற்கான சான்றிதழைக் கொண்டவர்கள் ஆகியோர் இதற்கென விண்ணப்பித்து, தபால் வாக்கைச் செலுத்த முடியும். தமிழ்நாட்டில் இதற்கான காலக்கெடு முடிவடைந்துவிட்டது.

பட மூலாதாரம், Getty Images
தேர்தல் நாளன்று அலுவலக வேலை இருந்தால் என்ன செய்வது?
தேர்தல் தினத்தன்று அனைவருக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டுமென இந்தியத் தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது. ஒரு நிறுவனம் வாக்குப் பதிவு நடக்கும் பகுதிக்குள் இருந்தால், அன்று விடுமுறை அளிக்க வேண்டும். அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அன்றைய தினத்திற்கான ஊதியம் அளிக்கப்பட வேண்டும். அப்படி விடுமுறை அளிக்கப்படாத பட்சத்தில் பாதிக்கப்படும் ஊழியர்கள் தேர்தல் ஆணையத்தை அணுகி இது தொடர்பாக புகார் அளிக்க முடியும்.
இந்தப் புகாரை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் தேர்தல் ஆணையமே விசாரிக்க முடியும். புகார் உறுதிசெய்யப்பட்டால் அதிகபட்சமாக 500 ரூபாய் அபராதம் விதிக்க முடியும். மேலும், அரசு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் வழக்குப் பதிவுசெய்யவும் முடியும்.
சில தொழிற்சாலைகளுக்கும் நிறுவனங்களுக்கும் இதிலிருந்து விதிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.
சிறைக் கைதிகள் தேர்தலில் வாக்களிக்க முடியுமா?
தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்ட ஒருவர், தேர்தலில் வாக்களிக்க முடியாது.

பட மூலாதாரம், Getty Images
உங்கள் வாக்கை வேறு யாராவது செலுத்தி விட்டால் என்ன செய்வது?
நிச்சயமாக நீங்கள் வாக்களிக்க முடியும். வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியிடம் புகார் அளித்து, அதற்கென உள்ள கோரிப் பெறப்பட்ட வாக்குச் சீட்டுகளில் (Tendered Ballot Paper) வாக்களிக்கலாம். இது தனியாக ஒரு உறையில் வைக்கப்படும்.
வாக்களிக்க யாராவது பணம் தந்தால் வாங்கிக்கொள்ளலாமா?
கூடாது. வாக்களிக்கப் பணம் பெறுவது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 123 (1)ன் கீழ் லஞ்சம் பெறுவதற்கு இணையான குற்றமாகக் கருதப்படும். இப்படி பணம் பெறுபவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 171 bன் கீழ் வழக்குப் பதிவுசெய்து, ஒரு வருடம் வரை சிறை தண்டனையோ, அபராதமோ விதிக்கப்படலாம்.
தெய்வகுற்றம், ஊரை விட்டு ஒதுக்குவோம் என்று வாக்காளரை நிர்பந்திக்க முடியுமா?
முடியாது. இதுபோல எந்த வாக்காளரிடமாவது யாராவது சொன்னால் அல்லது மிரட்டினால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 123 (2)ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கு ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

பட மூலாதாரம், Getty Images
உங்களுக்குப் பதிலாக வேறொருவரை வாக்களிக்க சொல்ல முடியுமா?
இந்த அனுமதி எல்லோருக்கும் வழங்கப்படுவதில்லை. ராணுவம் மற்றும் ஆயுதப் படையைச் சேர்ந்தவர்களுக்கு இந்த உரிமை வழங்கப்படுகிறது. அதற்கான அத்தாட்சிக் கடிதத்தைப் பெற்று, பதிவுசெய்து, தேர்தல் தினத்தன்று அந்த மாற்று நபர் வாக்களிக்கலாம். அவருக்கு ஆள்காட்டி விரலுக்குப் பதிலாக நடுவிரலில் மை வைக்கப்படும்.
வேட்பாளர் அனுப்பும் வாகனத்தில் வாக்குச்சாவடிக்கு செல்லலாமா?
கூடாது. வாக்காளரை வாக்குச் சாவடிக்கு அழைத்துச் செல்லவும் அங்கிருந்து அழைத்து வரவும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த வகையான வாகனத்திற்கும் வேட்பாளர்கள் ஏற்பாடு செய்வது தண்டனைக்கு உரிய குற்றமாகும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












