லா நினா என்றால் என்ன? இது இந்தியாவில் வழக்கத்தைவிட அதிக மழையை தரப் போகிறதா?

மழை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லா நினா நிகழ்வால் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட கூடுதலாக பெய்யும்.
    • எழுதியவர், சாரதா வி
    • பதவி, பிபிசி தமிழ்

லா நினா என்ற வானிலை நிகழ்வால் இந்த ஆண்டு இந்தியாவில் தென் மேற்கு பருவமழை காலத்தில் வழக்கத்தை விட கூடுதலாக மழை பெய்யலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் தென் மேற்கு பருவமழை காலத்தில் இந்தியாவில் சராசரியாக 87 செ.மீ மழை பெய்யும்.

இந்த ஆண்டு இந்தியாவில் இதை விட 6% கூடுதலாக பெய்யக் கூடும் என்று இந்தியா வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதற்கு பசிபிக் பெருங்கடலில் நிகழும் லா நினா என்ற வானிலை நிகழ்வு முக்கிய காரணமாக கூறப்பட்டுள்ளது.

லா நினா என்றால் என்ன?

பசிபிக் பெருங்கடலை ஒரு பெரிய தண்ணீர் தொட்டி போல கற்பனை செய்து பாருங்கள். வழக்கமாக, பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்த தண்ணீர் தொட்டியில் உள்ள நீர் சில பகுதிகளில் சூடாகவும், சில பகுதிகளில் குளிர்ச்சியாகவும் இருக்கும்.

இது உலகெங்கிலும் உள்ள வானிலையில் ஒரு சமநிலையை உருவாக்குகிறது. இந்த சமநிலையில் ஏற்படும் மாற்றங்களே எல் நினோ மற்றும் லா நினா வானிலை நிகழ்வுகள் ஆகும்.

எல் நினோ பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள கடலின் வெப்பநிலையை வழக்கத்தை விட சூடாக்குகிறது, குறைந்தது 0.5 டிகிரி அதிகரித்தால் எல் நினோ உருவாகியதாக அறிவிக்கப்படும்.

லா நினா அதற்கு எதிரான விளைவை ஏற்படுத்துவதாகும். லா நினா இந்த கடல் பகுதியின் வெப்ப நிலையை குளிரூட்டுகிறது, வழக்கத்தை விட குறைந்தபட்சம் 0.5 டிகிரி குறைந்தால், லா நினா உருவாகியிருப்பதாக கூறப்படும். பசிபிக் பெருங்கடலில் பெரு என்ற நாட்டின் கரையோரத்தில் இந்த மாற்றங்கள் நடைபெறும்.

லா நினாவின் தாக்கம்
படக்குறிப்பு, பசிபிக் பெருங்கடல் மீது திரண்டிருக்கும் மேகக் கூட்டங்களை செயற்கைகோள் படம் பிடித்த காட்சி

லா நினாவால் இந்தியாவில் என்ன தாக்கம்?

கடந்த ஆண்டு, எல் நினோ காரணமாக இந்தியாவின் பருவமழை 6% குறைந்தது. இந்த ஆண்டு, எல் நினோ இன்னும் முழுமையாக முடியவில்லை. ஆனால் ஜூன் மாதத்துக்குள் எல் நினோ முடிந்து, லா நினா தொடங்கும் என்று உலக அளவில் வானிலை நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பருவமழைக்கான முன்னறிவிப்பை வெளியிட்ட இந்திய வானிலை ஆய்வு மையம், “தற்போது மிதமான எல் நினோ நிலவுகிறது, வானிலை கணிப்புகளின் படி, தென் மேற்கு பருவமழை தொடக்கத்தில், இது மேலும் வலுவிழக்கவுள்ளது. அதன் பின் பருவமழையின் இரண்டாம் பாதியில் (ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர்) உபரி மழை பெய்வதற்கு உதவும்” என்று தெரிவித்துள்ளது.

பருவமழையை முன்னறிவிக்க இந்திய வானிலை ஆய்வு மையம் பல அணுகுமுறைகளைப் பயன்படுத்துகிறது. ஒன்று, புள்ளியியல் தொடர்புகளைப் பயன்படுத்தி, 150 ஆண்டுகளுக்கும் மேலான அதன் பரந்த வரலாற்று தரவுகள், கடல் வெப்பநிலை மற்றும் ஐரோப்பாவில் பனி மூடுதல் போன்ற சில உலகளாவிய வானிலை அளவுகூறுகளை தொடர்புப்படுத்தி பருவமழையை கணிக்கிறது.

மற்றொரு வழி, ஒரு குறிப்பிட்ட நாளில் உலகம் முழுவதும் உள்ள வானிலையை கணக்கில் எடுத்துக் கொண்டு, சக்திவாய்ந்த கணினிகள் எதிர்காலத்துக்கான வானிலையை கணிக்கும். இந்த இரண்டு மாதிரிகளும் இந்த ஆண்டு பருவமழைக்கான ஒரே மாதிரியான கணிப்பை கொடுத்துள்ளதாக புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் எம்.ரவிச்சந்திரன் கூறினார்.

லா நினாவின் தாக்கம்
படக்குறிப்பு, டாக்டர். சிவானந்த பை, கூடுதல் பொது இயக்குநர், இந்திய வானிலை ஆய்வு மையம்

லா நினா நிகழ்வின் தாக்கம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கூடுதல் பொது இயக்குநர் சிவானந்த பை பிபிசி தமிழிடம் விரிவாக பேசினார்.

“எப்படி நம் உடலின் வெப்ப நிலை சில நேரங்களில் அதிகமாகவும், சில நேரங்களில் குறைவாக இருக்கிறதோ அதே போன்று கடலின் வெப்ப நிலையும் மாறும். கொஞ்ச காலம் மாறிவிட்டு, மீண்டும் சமநிலைக்கு திரும்பும். இது இயற்கையான நிகழ்வாகும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், எல் நினோ, லா நினா நிகழ்வுகள் காரணமாக வளி மண்டலத்தில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் பருவமழை வழக்கத்தை விட தீவிரமாக இருக்க இது உதவுகிறது. பசிபிக் பெருங்கடலில் எந்த இடத்தில் வெப்ப மாற்றங்கள் ஏற்படுகின்றன, எத்தனை டிகிரி மாறுபடுகின்றன என்பதை பொருத்து ஒவ்வொரு ஆண்டும் நிகழும் லா நினா, எல் நினோ மாறுபட்டவையாக இருக்கும்.

இந்த நிகழ்வுகளின் தாக்கங்கள் குறித்து 1980கள் முதல் உலகுக்கு தெரிய வந்தது. இதன் பாதிப்புகள் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறாக இருக்கும். இந்தியாவில் இவை வெப்ப நிலை மற்றும் மழைப்பொழிவை பாதிக்கின்றன. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கமான அளவை விட 4% குறைவாக பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. ஆனால், எல் நினோ பாதிப்பு காரணமாக 6% குறைவாக மழை பதிவாகியிருந்தது” என்றார்.

புவிவெப்பமடைதலுக்கும் லா நினாவுக்கும் தொடர்புண்டா?

புவி வெப்பமடைவதால், எப்படி வானிலை நிகழ்வுகள் எல்லாவற்றிலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறதோ அதே போன்று எல் நினோ, லா நினா நிகழ்வுகளிலும் ஏற்படுகிறது என்று விளக்கமளித்தார் சிவானந்த பை.

“இந்த நிகழ்வுகள் எத்தனை முறை நிகழ்கின்றன, எவ்வளவு தீவிரமாக நிகழ்கின்றன என எல்லாமே புவி வெப்பமடைதல் காரணமாக மாறலாம்” என்றார்.

பசிபிக் பெருங்கடலில் இப்போது என்ன நடக்கிறது?

காலநிலை மாற்றத்துடன் உலகளாவிய வெப்பநிலையை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல உதவிய சக்திவாய்ந்த எல் நினோ வானிலை நிகழ்வு முடிவுக்கு வந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கடந்த வாரத்தில் பசிபிக் பெருங்கடல் "கணிசமாக குளிர்ந்துள்ளது" என்று ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் தொடங்கிய இந்த இயற்கை வானிலை நிகழ்வு பசிபிக் மேற்பரப்பில் வெப்பமான நீரைக் கொண்டுவந்து, வளிமண்டலத்தில் கூடுதல் வெப்பத்தை சேர்த்தது. ஜூன் மாதம் தொடங்கி, டிசம்பரில் உச்சத்தை எட்டியது எல் நினோ. இதன் விளைவாக பசிபிக்கில் வெப்பமான நீர் உலக சராசரி வெப்பநிலையை புதிய உயரங்களுக்கு இட்டு சென்றது. ஆனால் இப்போது, எதிர்பார்த்ததை விட விரைவாக, எல் நினோ முடிகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஜூன் முதல் ஆகஸ்ட் வரை லா நினா உருவாக 60% வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால், ஜூலை மாதத்துக்கு பிறகே லா நினா உருவாகலாம் என்று ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

புயல்கள் மற்றும் சூறாவளிகள் உருவாவவதில், லா நினாவின் தாக்கம் இருக்கும். லா நினா வந்தால், அது அட்லாண்டிக்கில் மிகவும் சுறுசுறுப்பான சூறாவளி பருவத்தை அறிவிக்கும் என்று சில நிபுணர்கள் கணித்துள்ளனர். லா நினாவின் குளிரூட்டும் விளைவு புவி வெப்பமடையும் வீதத்தையும் சற்று குறைக்கலாம்.

லா நினாவின் தாக்கம்

பட மூலாதாரம், Getty Images

தென்னிந்தியாவில் என்ன பாதிப்பு?

பசிபிக் பெருங்கடலில் நிகழ்வது போன்றே இந்திய பெருங்கடலிலும் வெப்ப நிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதனை இந்திய பெருங்கடல் இருமுனையம் (Indian Ocean Dipole) என்றழைக்கின்றனர். இது மேற்கு இந்திய பெருங்கடலில் வெப்பத்தை அதிகரிக்கும், கிழக்கு இந்திய பெருங்கடலிலும் வெப்பத்தை குறைக்கும்.

தற்போது நடுநிலையாக இருந்தாலும் ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்த நிகழ்வால் வெப்ப நிலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றின் பாதிப்பு தெற்கு ஆசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பகுதிகளில் அறியப்படும்.

லா நினாவின் தாக்கம்

பட மூலாதாரம், Getty Images

ஏன் பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் நிகழ்வு உலகம் முழுவதும் பாதிக்கிறது?

எல் நினோ மற்றும் லா நினா பசிபிக் பெருங்கடலில் ஏறபடும் நிகழ்வுகளாக இருந்தாலும் அவை உலகம் முழுவதும் உள்ள வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.

எல் நினோவின் போது, தண்ணீர் வழக்கத்தை விட சூடாகிறது. பொதுவாக கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசும் காற்று பலவீனமடைவதால் அல்லது திசை மாற்றி வீசுவதால் இது நிகழ்கிறது. இதன் ஒரு விளைவாக, வழக்கமாக மேற்கு பசிபிக்கில் குவியும் வெதுவெதுப்பான நீர் அமெரிக்காவை நோக்கி கிழக்கு திசையில் நகரத் தொடங்கி, கடலை வெப்பமாக்குகிறது.

மறுபுறம், லா நினாவின் போது, நீர் குளிர்ச்சியடைகிறது. கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசும் காற்று வழக்கத்தை விட வலுவாக இருப்பதால் இது நிகழ்கிறது. அவை சூடான நீரை மேற்கு பசிபிக்கை நோக்கி மீண்டும் தள்ளுகின்றன, இது கிழக்கு பசிபிக்கின் மேற்பரப்புக்கு அருகில் குளிர்ந்த நீரை விட்டுச்செல்கிறது.

இப்போது, கடலில் ஏற்படும் இந்த மாற்றங்கள் ஏன் முழு உலகிற்கும் முக்கியமானவை? கடலும் வளிமண்டலமும் சிறந்த நண்பர்களைப் போன்றவை - அவை எப்போதும் தொடர்பிலேயே இருப்பவை. எனவே, கடலின் வெப்பநிலை மாறும்போது, அது மேலே உள்ள வளிமண்டலத்தை பாதிக்கிறது. இது, உலகைச் சுற்றி காற்று நகரும் முறையை மாற்றுகிறது. எனவே வெவ்வேறு பிராந்தியங்களில் வானிலை முறைகளை பாதிக்கின்றன.

லா நினாவின் தாக்கம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பசிபிக் பெருங்கடலின் பெரு கடற்கரை

சென்னை வானிலை ஆய்வு மண்டலத்தின் முன்னாள் இயக்குநர் ஒய்.இ.ஏ. ராஜ் பிபிசி தமிழிடம் பேசும் போது, “பரந்திருக்கும் பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் மாற்றங்கள் உலக அளவில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். இதற்கு பல ஆய்வுகள் உள்ளன. தீவிர வறட்சிகள் எல் நினோ காரணமாக ஏற்பட்டுள்ளன. ஆனால் இவை மட்டுமே பருவ மழையை தீர்மானிக்காது. எல் நினோ தீவிரமாக இருக்கும் போது நல்ல பொழிவு இருந்ததும் உண்டு, லா நினா இருந்த போது மழை பெய்யாமல் இருந்ததும் உண்டு” என்று கூறுகிறார்.

தற்போதைய கணிப்புகள் வடமேற்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவைத் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் "இயல்பை விட" மழை பெய்யக்கூடும் என்பதைக் குறிக்கிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)