பழம்பெரும் பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் காலமானார்

பட மூலாதாரம், social media
தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல திரைப்பட பின்னணிப் பாடகி வாணி ஜெயராம்(வயது 78) காலமானார்.
மேகமே... மேகமே, மல்லிகை என் மன்னன் மயங்கும்... உள்ளிட்ட காலத்தை வென்று நெஞ்சில் நிலைத்திருக்கும் பல பாடல்களைப் பாடிய வாணி, 19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
கடந்த வாரம் அவருக்கு பத்மபூஷன் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விருதை பெறுவதற்கு முன்னர் அவர் காலமானது அவரது ரசிகர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பாடகி வாணி ஜெயராம் தவறி விழுந்ததில் உயிரிழந்தாக அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.
அவரது உடலில், நெற்றியில் காயம் இருந்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அவரது உடல் தற்போது அரசு ஓமந்தூரார் தோட்ட மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு தடயவியல் வல்லுநர்கள் வந்து ஆய்வு செய்தனர்.
தமிழ், இந்தி, ஒடிசா, தெலுங்கு, கன்னடம் உட்பட 19 மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ள வாணி ஜெயராம் கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் ஓய்வில் இருந்ததாக கூறப்படுகிறது.
பிபிசி தமிழிடம் பேசிய கர்நாடக சங்கீத பாடகி பூஷணி கல்யாணராமன், மிக நீண்ட காலத்திற்கு பிறகு, வாணி ஜெயராமுக்கு அங்கீகாரம் கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது என்றும் தற்போது அவரது மறைவு மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறினார்.
''தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், பல மொழிகளில் அவர் பாடல்களைப் பாடியது பெரிய சாதனை. பத்மபூஷன் விருது அவருக்கு அறிவிக்கப்பட்டபோது பல கலைஞர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர் நம்மிடம் இப்போது இல்லை என்பதை ஏற்க மனம் மறுக்கிறது,'' என்றார் அவர்.
1971ல் பாடத் தொடங்கிய வாணி ஜெயராம், இதுவரை 10,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அவர் தீர்க்கசுமங்கலி படத்திற்காக பாடிய 'மல்லிகை என் மன்னன் மயங்கும்' பாடல் மிகவும் பிரபலமான பாடல்களில் ஒன்று.
தனிமையில் வாழ்ந்தார்

நுங்கம்பாக்கத்தில் உள்ள அடுக்கக குடியிருப்பில் வாழ்ந்து வந்த வாணி ஜெயராம், அந்த வீட்டில் தனிமையிலேயே வாழ்ந்து வந்ததாகவும், அவர் மிக அரிதாகவே, வெளியில் வருவார் என்றும், அவரது கணவர் சுமார் ஓராண்டு முன்பு இறந்துவிட்டார் என்றும் கூறுகிறார் அந்த அடுக்கக ஊழியர் சுந்தரி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












