அருந்ததியர் இடஒதுக்கீடு தீர்ப்பில் கள்ளக்குறிச்சி பாலியல் கொடூரம்- கோத்தகிரி இளைஞர் செய்தது என்ன?

உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2003 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒன்றை இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது
    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

பட்டியலின பிரிவில் அருந்ததியருக்கு 3 சதவீத உள்ஒதுக்கீட்டை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், பட்டியலின பிரிவுகளுக்குள் நடக்கும் ஏற்றத்தாழ்வுகளுக்கான உதாரணமாக, 2003 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் (தற்போது கள்ளக்குறிச்சி) நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒன்றைக் கோடிட்டுக் காட்டியது. அது என்ன சம்பவம்?

பறையர் சமூக இளம்பெண் ஒருவரை அருந்ததியர் சமூக ஆண் ஒருவர் காதலித்து திருமணம் செய்ததற்காக, அருந்ததிய பெண்கள் மீது பாலியல் ரீதியாக நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் அது.

2003-ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தில், 4 பெண்கள் பாதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு பெண், அதே ஆண்டு மரணம் அடைந்தார். இப்படியொரு சம்பவம் நடந்து, ஒரு மாதம் கழித்தே, வெளியுலகின் பார்வைக்கு தெரியவந்தது.

வாட்ஸ் ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

என்ன நடந்தது?

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (அன்று விழுப்புரம்) உள்ள ஒரு கிராமத்தில் பறையர் சமூகத்தினர் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர்.

இதே பகுதியில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவுக்கு அருந்ததியின குடும்பங்கள் வசிக்கின்றன. இந்நிலையில், அருந்ததிய சமூக இளைஞர் ஒருவர், பறையர் சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்துள்ளார்.

இந்தக் காதலுக்கு எதிர்ப்பு வரும் என்பதை உணர்ந்து, இருவரும் ஊரைவிட்டு வெளியேறுகின்றனர்.

''இதனால், கோபம் அடைந்த அப்பெண்ணின் குடும்பத்தினர், அந்த ஆண் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது'' என உச்சநீதிமன்ற தீர்ப்பில் இடம்பெற்றுள்ள ஆய்வுகள் தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட்டியலின பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக, கடந்த ஆகஸ்ட் 1 அன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், பட்டியலின பிரிவுகளுக்குள் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை காட்டும் விதமாக, பல ஆய்வுகளை தீர்ப்பின் ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளது

உண்மை கண்டறியும் குழு

பறையர் சமூகத்தைச் 6 ஆண்களால் அருந்ததியர் பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தை அறிந்து, பேராசிரியர் பிரபா கல்விமணி, அ.மார்க்ஸ், புனிதபாண்டியன், வழக்கறிஞர் பொ.ரத்தினம், அதியமான் ஆகியோர் உண்மை கண்டறியும் ஆய்வை நடத்தியுள்ளனர்.

அப்போது அங்கிருந்த அருந்ததியர்கள், 'எங்கள் சாதி பெண்ணைத் தொட என்ன தைரியம்?' என்று கூறி தாக்குதல் நடத்தியதாகவும் 'தங்கள் குடும்பத்தில் யாராவது இறந்தால்கூட புதைப்பதற்கு பறையர் சாதியினர் அனுமதிக்க மாட்டார்கள்' என கூறியதாகவும் உண்மை கண்டறியும் குழுவினரிடம் குறிப்பிட்டுள்ளனர்.

பொன்னிவளவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
படக்குறிப்பு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேவையான உதவிகளை, ஊர் எதிர்ப்பையும் மீறி செய்திருக்கிறார் பொன்னிவளவன்

அதேநேரம், அப்பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய தொண்டரணி அமைப்பாளராக இருந்த பரசுராமன் என்கிற பொன்னிவளவன், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேவையான உதவிகளை, ஊர் எதிர்ப்பையும் மீறி செய்திருக்கிறார்.

கோத்தகிரி இளைஞரின் ஆய்வு

இந்த ஆய்வறிக்கையை தனது 'தலித் முரசு' பத்திரிகையில் அதன் ஆசிரியர் புனித பாண்டியன் வெளியிட்டுள்ளார். இந்த சம்பவத்தையும் தமிழ்நாடு முழுவதும் பட்டியலின பிரிவுகளுக்குள் நடக்கும் மோதல்கள் குறித்தும், 'எகனாமிக்கல் அண்ட் பொலிட்டிகல் வீக்லி' இதழில், ரவிச்சந்திரன் பத்ரன் என்பவர் விரிவான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

இக்கட்டுரையை மேற்கோள் காட்டி, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் ஆய்வுகள் தலைப்பில் இந்த சம்பவம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது

இந்த கட்டுரையை எழுதிய ரவிச்சந்திரன் பத்ரன் (எ) ரைஸ் முகமது நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் செப்டிக் டேங்க் கிளீனிங் சர்வீஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது மனைவி கற்பகம், கோத்தகிரி பேரூராட்சியில் கவுன்சிலராக இருக்கிறார்.

ரவிச்சந்திரன் பத்ரன்
படக்குறிப்பு, 'எகனாமிக்கல் அண்ட் பொலிட்டிகல் வீக்லி' இதழில் விரிவான கட்டுரை எழுதிய ரவிச்சந்திரன் பத்ரன்

சென்னை பல்கலைக்கழகத்தில், மொழி அறிவியல் துறையில் உதவிப் பேராசிரியராக இருந்த இவர், கொரோனா காலத்துக்குப் பின் செப்டிக் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணிக்குத் திரும்பிவிட்டதாக கூறுகிறார். தான் எழுதிய கட்டுரை குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ரைஸ் முகமது,

"பட்டியலின பிரிவுகளுக்குள் பாகுபாடு உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் கட்டுரை அது. இதற்காக, அப்போது உண்மை அறியும் குழுவில் இடம்பெற்றிருந்த வழக்கறிஞர் பொ.ரத்தினத்தை நேரில் சந்தித்துப் பேசினேன். மாநிலம் முழுவதும் பரவலாக அருந்ததியர் சந்திக்கும் பிரச்னைகளை அவரிடம் கேட்டு, கட்டுரை எழுதினேன்" என்கிறார்.

உண்மை கண்டறியும் ஆய்வை நடத்திய 'தலித் முரசு ஆசிரியர் புனிதபாண்டியன், "அங்கு நாங்கள் ஆய்வு நடத்தியபோது, 'அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை' என பறையர் சமூக மக்கள் மறுத்தனர். ஆதிக்க சமூகத்தினர் எப்படி நடந்து கொள்வார்களோ, அப்படியே அவர்களும் நடந்து கொண்டனர். ஒட்டுமொத்த சமூகமும் அருந்ததியர்களை ஒதுக்கி வைத்திருந்ததைப் போல, பறையர் சமூக மக்களும் சக பிரிவை சேர்ந்த மக்களை ஒதுக்கி வைத்துள்ளதை அறிய முடிந்தது" என்கிறார்.

தொல். திருமாவளவன்

பட மூலாதாரம், THIRUMA OFFICIAL FACEBOOK page

படக்குறிப்பு, 'அம்மக்களுக்கு நாம் உதவியாக இருக்க வேண்டும்' என திருமாவளவன் தன்னிடம் கூறியதாக பொன்னிவளவன் தெரிவிக்கிறார்.

சம்பவம் நடந்ததைக் கேள்விப்பட்ட வி.சி.க., தலைவர் திருமாவளவன், 'அம்மக்களுக்கு நாம் உதவியாக இருக்க வேண்டும்' எனக் கூறி, தேவைப்படும் உதவிகளை செய்யுமாறு தன்னிடம் தெரிவித்ததாகவும் தானும் உதவிகளை செய்ததாகவும் அவர் கூறுகிறார்.

ஆதாரம் இல்லை

உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்துப் பேசிய ரைஸ் முகமது, "உள்ஒதுக்கீடு என்பது தூய்மைப் பணியாளர்களுக்கும் தூய்மைப் பணி அல்லாதவர்களுக்கும் இடையே நடக்கும் விவகாரம். 'உள்ஒதுக்கீடு கொடுப்பது பட்டியலின மக்களைப் பிரித்துவிடும்' என்கின்றனர். அப்படியானால், அவர்கள் இதுவரையில் சேர்ந்து வாழ்ந்ததற்கான ஆதாரம் இருக்கிறதா?" என்கிறார்.

"தமிழ்நாட்டில் அருந்ததியர் உள்ஒதுக்கீடு வந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. அருந்ததியர்கள் படித்து மேலே வருவது பெரிய விஷயம். உள்ஒதுக்கீட்டால் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் கிடைத்தாலும் சமூகரீதியாக அவர்கள் பின்தங்கியுள்ளனர்.

தமிழ்நாட்டில் பெரியார், திராவிடம், இடதுசாரிகள் இருப்பதால் நிலைமை நன்றாக இருக்கிறது. வடஇந்தியாவில் அப்படி இல்லை. குஜராத், ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் இதேபோல் பாகுபாடு நடப்பதை நீதிபதிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்" என்கிறார், ரைஸ் முகமது.

பட்டியலின பிரிவுகளுக்குள் பாகுபாடு

"தலித் மக்கள் வசிப்பிடங்களில் அருந்ததியர் இருப்பிடம் என்பது அதே பகுதியில் கடைசி தெருவில்தான் இருக்கும். அதை சக்கிலியர் தெரு, தோட்டி தெரு என அழைப்பார்கள். அவர்களிடம் இதர பட்டியல் சமூத்தினர் பெண் எடுப்பதோ, கொடுப்பதோ கிடையாது" என்கிறார் 'தலித் முரசு' பத்திரிகையின் ஆசிரியர் புனிதபாண்டியன்.

 'தலித் முரசு' பத்திரிகையின் ஆசிரியர் புனிதபாண்டியன்
படக்குறிப்பு, புனிதபாண்டியன்

"மலம் அள்ளுவது, தூய்மைப் பணிகள் போன்றவற்றில் அருந்ததியர்கள் ஈடுபடுவதால், சொந்த சமூகத்தினரால் மோசமாக பார்க்கப்படுகின்றனர். இந்தப் பாகுபாடுகள் சமூகரீதியாக இருப்பதால் அவர்களால் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுக்கு வர முடியவில்லை" என்கிறார் புனித பாண்டியன்.

"இதன் காரணமாக, அவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக இருந்தது. பட்டியலின சமூகத்துக்குள் தான் அருந்ததிய சமூக மக்களும் வருகின்றனர். பட்டியல் சமூகத்துக்கு வெளியே சென்று தனி இடஒதுக்கீடு வழங்க முடியாது. பெரும்பாலான பதவிகளை பட்டியலில் உள்ள பறையர் மற்றும் தேவேந்திரர்களே அனுபவிப்பதை காண முடிகிறது" என கூறுகிறார் அவர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)