கிராமங்களில் சாதிப் பெயர்களை மாற்ற கேரள அரசு உத்தரவு – தமிழகத்தில் மாற்றப்படாமல் இருப்பது ஏன்?

- எழுதியவர், ச.பிரசாந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கேரள அரசு அம்மாநிலத்தின் ஊர்கள், தெருக்களில் சாதி அடையாளம் கொண்ட பெயர்களை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசு 1978-ஆம் ஆண்டே இதைச் செய்ததாகக் கூறும் நிலையில், இன்னும் பல கிராமங்களில் சாதிப் பெயர்கள் மாற்றப்படாமல் உள்ளன.
சமூக நீதிக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாகக் கூறும் தி.மு.க அரசு இந்தப் பெயர்களை மாற்ற என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
ஊர், தெருக்களில் சாதிப் பெயர்கள்
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய தென்னிந்திய மாநிலங்கள் மட்டுமின்றி, இந்தியா முழுவதிலும் பல மாநிலங்களில் கிராமம், ஊராட்சி மற்றும் தெருக்களில் சாதிப் பெயர்கள் இருப்பதைக் காண முடிகிறது.
இந்தப் பெயர்களை மாற்ற வலியுறுத்தி இந்தப் பெயர்களால் பாதிக்கப்பட்டவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பல தரப்பினரும், அந்தந்த மாநில உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுத்துள்ளனர். ஆனால், இன்று வரை பல இடங்களில் சாதியப் பெயர்கள் நீடிக்கவே செய்கின்றன.
இப்படியான நிலையில், கேரள அரசு, அம்மாநிலத்தின் கிராமங்கள், தெருக்களில் உள்ள சாதி அடையாளம் உள்ள பெயர்கள், சாதியைக் குறிப்பிடும் வகையிலான வார்த்தைகளை நீக்க உத்தரவிட்டுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
சாதிப் பெயர்களை நீக்க கேரள அரசு உத்தரவு
கேரள மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் அமைச்சராக இருந்த ராதாகிருஷ்ணன், மக்களவைத் தேர்தலில் ஆலத்தூர் தொகுதியில் வென்று எம்.பி-யாக தேர்வாகியுள்ளார்.
அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்பு, "கேரளாவில் பழங்குடியினர் மற்றும் பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளில், ‘காலனி, சங்கேதம், ஊரு’ போன்ற பெயர்கள் அகற்றப்படும். இவை அவர்களை இழிவுபடுத்தும் வகையிலும், சாதியைக் குறிக்கும் வகையிலும் உள்ளது. இவற்றுக்கு மாற்றாக நகர், உன்னதி போன்ற வார்த்தைகளும், வேறு பெயர்களும் சூட்டப்படும்," எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காலனி என்ற சொல் காலனித்துவத்தின் அடையாளம், காலனித்துவ அடிமைத்தனம். மக்களின் சாதியில் பாகுபாடு பார்க்கும் காலனி, ஊரு, மற்றும் இதர சாதியப் பெயர்கள் மாற்றப்படும்," என்று காட்டமாகப் பேசியிருந்தார்.
இந்த உத்தரவு கேரளாவில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மற்ற மாநிலங்களும் இதை உடனடியாக அமல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கைகளும் எழுந்து வருகின்றன.

பட மூலாதாரம், Dilli Babu
தமிழ்நாடு கிராமங்களில் இன்னமும் சாதியப் பெயர்கள்
இந்நிலையில், தமிழ்நாட்டில் சாதியப் பெயர்கள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளனவா? தமிழ்நாட்டின் நிலை என்ன என்பதை அறிந்துகொள்ள முயன்றபோது, தமிழ்நாட்டில் சமூக நீதி என்பதே கேள்விக்குறியாக உள்ளதாகத் தாம் கருதுவதாக சமூகச் செயற்பாட்டாளர்கள் சிலர் கூறினர்.
பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டில்லி பாபு, "காலனி, சேரி, பள்ளம், பதி போன்ற பல பெயர்களில் பட்டியலின, பழங்குடியின மக்களின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் கிராமங்களின் பெயர்கள் உள்ளன. அதுதவிர, நேரடியான சாதிப் பெயர்களும் உள்ளன," என்கிறார்.
இதற்காகச் சில கிராமங்களில் உள்ள பெயர்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
"தருமபுரி மாவட்டம் அரூர் அருகே பறையப்பட்டிபுதுார் என்ற பெயரில் ஒரு ஊராட்சியே இருக்கிறது. தருமபுரியில் செங்கிலிப்பட்டி, திருப்பத்தூர் மாவட்டத்தில் குறும்பர் வட்டம், குறும்பேரி என பட்டியலின மக்களின் சாதிப் பிரிவுகளின் பெயர்களிலேயே கிராமங்கள் உள்ளன. இதுதான் தமிழ்நாட்டின் நிதர்சனம்," என்கிறார் டில்லி பாபு.
இவை எல்லாம் சில எடுத்துக்காட்டுகள்தான் எனவும், தமிழ்நாடு முழுவதிலும் பல கிராமங்களில், தெருக்களில் சாதியப் பெயர்கள் உள்ளதாகவும் வருந்துகிறார் டில்லிபாபு.
இந்தப் பெயர்களால் கிராமத்தில் வசிக்கும் பட்டியல் சாதி மக்கள் மட்டுமின்றி, இதர சாதி மக்களும் கிராமத்தின் பெயரைப் பயன்படுத்தவே தயங்குகிறார்கள் எனவும், இது மக்களுக்கு உளவியல் ரீதியில் மோசமான நிலை எனவும் அவர் தெரிவிக்கிறார்.
மேலும் தொடர்ந்த டில்லி பாபு, "கேரள அரசு சாதிப் பெயர்களை அகற்றி உத்தரவிட்டது மிகவும் முற்போக்குத்தனமானது. சமூக நீதியை நிலைநாட்ட தமிழ்நாடு அரசு இந்தப் பெயர்களை உடனடியாக நீக்க வேண்டும்," என்கிறார் அவர்.

‘வழக்கு தொடுத்தும் தீர்வு இல்லை’
நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தும் இதற்குத் தீர்வு இல்லை என்கிறார், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சிவகாமி.
சமூக சமத்துவப்படை நிறுவனரான அவர், "நிலவியல் ரீதியாக இதர மக்கள் வாழும் பகுதியில் இருந்து தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களைப் பிரித்து வெகுதூரத்தில் அவர்களைக் குடியமர்த்தியுள்ளனர்,” என்கிறார்.
"அவ்விடங்களுக்கு காலனி, சேரி, குப்பம், மற்றும் இதர சாதிப் பெயர்களை வைக்கின்றனர். இது இந்திய அரசியல் சட்டத்திற்குப் புறம்பானது. இந்தப் பெயர்கள் வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை முதற்கொண்டு பல அரசு ஆவணங்களிலும் உள்ளன," என்கிறார்.
மேலும், சாதியப் பெயர்களான காலனி, சேரி போன்றவற்றை தமிழ்நாடு அரசு மாற்ற வலியுறுத்தி, 2015-ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தேன். அரசின் பார்வைக்குச் சென்றும் இதுவரை தீர்வு இல்லை," என்கிறார் அவர்.
‘பழங்குடி என்பதால் வேலை கிடைக்கவில்லை’
உண்மையில் சாதிப் பெயருள்ள கிராமத்தினர் எப்படி உணர்கிறார்கள் என்று சிலரிடம் நாம் பேசினோம்.
பிபிசி தமிழிடம் பேசிய கோவை, பொள்ளாச்சியை அடுத்த நரிக்கல்பதியைச் சேர்ந்த வெங்கடேஷ், "கோவை மாவட்டத்தில் பதி, பள்ளம் என்றாலே அது பழங்குடியினர் வாழும் பகுதி என அர்த்தம். எனது ஆதார், குடும்ப அட்டை என அனைத்திலும் நரிக்கல்பதி கிராமம் என்ற பெயர் இருக்கிறது," என்றார்.
மேலும், "நான் பி.காம் படித்துள்ளேன். எங்கள் ஊரில் 120 குடும்பங்கள் இருந்தும் பட்டதாரிகள் வெறும் 15 பேர்தான். நான் ஒரு ஆடிட்டர் அலுவலகத்தில் கணக்கர் வேலை கேட்டுச் சென்றபோது, நான் பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் நிராகரிக்கப்பட்டேன்," என்றார் வருத்தத்துடன்.
"இந்தச் சம்பவத்திலிருந்து, யாராவது எனது ஊரின் பெயரைக் கேட்டால் அருகேயுள்ள காளியாபுரம் கிராமத்தின் பெயரைச் சொல்வேன்," என்கிறார் அவர்.
தனது அடையாளம் தெரியாமல் இருக்க ஊரின் பெயரை மாற்றிப் பொய் சொல்லும் நிலையில் உள்ளதாகக் கூறும் வெங்கடேஷ், இருப்பினும் அரசு ஆவணத்தில் உள்ளதை மாற்ற முடியுமா எனக் கேள்வி எழுப்புகிறார்.

‘ஊரைச் சொன்னால் சாதியை தெரிந்துகொள்வார்கள்’
திருப்பூர் அவிநாசியை அடுத்த தேவேந்திர நகரில் கடந்த பிப்ரவரியில் தீண்டாமைச் சுவர் அகற்றப்பட்டது.
இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் பிபிசி தமிழிடம் பேசும்போது, "பட்டியலினத்தின் தேவேந்திரகுல வேளாளர் பிரிவைச் சேர்ந்த 300 குடும்பங்களாக, தேவேந்திர நகரில் வசிக்கிறோம். நான் சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் படித்துள்ளேன். எங்கும் என் கிராமத்தின் பெயரைக்கூட என்னால் சொல்ல முடியாது. ஏனெனில் எனது சாதிப் பெயர்தான் என் ஊரின் பெயரிலேயே உள்ளதே. சமூக நீதி பேசும் திமுகவும் சரி, அதிமுகவும் சரி இதுவரை இதற்குத் தீர்வு காணவே இல்லை," என்கிறார்.
"தீண்டாமைச் சுவரைப் போராடி அகற்றினோம். ஆனால் ஊரின் பெயரை மாற்ற முடியவில்லை, இதுதான் எங்கள் நிலை," என வருந்துகிறார் ஜெகநாதன்.
‘சிறு முயற்சிகள் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்’
ஊர்களில், இடங்களில் இருக்கும் சாதிப் பெயர்களை மாற்றுவது போன்ற முயற்சிகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிறார், எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் கதிர்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "பட்டியல் சாதியினர், பழங்குடியினர் என்றாலே அவர்கள், மற்ற சாதியினர் வாழும் பொதுவான ஊர் பகுதியில் வாழ முடியாமல் உள்ளனர். இதற்குக் காரணம் அவர்கள் பொதுப் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டதால்தான்,” என்றார்.
“வெளியேற்றப்பட்ட அவர்கள் வாழும் பகுதியை, காலனி, சேரி, குப்பம் என சாதியப் பெயர்கள் சூட்டப்பட்டு பாகுபாடு பார்க்கப்படுகிறது," என்றார்.
குடியிருக்கும் பகுதி, தெருவில் நடக்கக்கூடாது என்பதில் துவங்கி, தனி சுடுகாடு என அனைத்திலும் இங்கு சாதிய பாகுபாடு உள்ளதாகக் கூறுகிறார் அவர்.
பள்ளிகளில் சாதியப் பாகுபாடு களைவது, கிராமம், தெரு பெயர்களை மாற்றுவது போன்ற சிறு முயற்சிகள் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படும் என்கிறார் கதிர்.

பட மூலாதாரம், Facebook/Thirumavalavan
'தமிழகத்திலும் அமல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளோம்'
நம்மிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பியுமான தொல். திருமாவளவன், "சாதியப் பெயர்களை அகற்ற வேண்டுமென்ற கேரள அரசின் உத்தரவு வரவேற்கத்தக்கது. இதை தமிழகத்திலும் அமல்படுத்த தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்," என்றார்.

‘பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம்’
முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு.
நம்மிடம் பேசிய வன்னி அரசு, "இது மிகப்பெரிய சமூகப் பிரச்னையாக உள்ளதை வலியுறுத்தி, சாதியப் பெயர்களை மாற்ற பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம். முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் பேருந்துகளிலும், சில கிராமங்களிலும் பெயர்கள் நீக்கப்பட்டன. முழுமையாக சாதியப் பெயர்களை நீக்கி சமூக நீதியை நிலைநாட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்கிறார் அவர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தமிழ்நாடு அரசின் விளக்கம் என்ன?
இதுதொடர்பாக நாம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜிடம் விளக்கம் கேட்கப் பலமுறை தொடர்பு கொண்டும், அவரிடம் விளக்கம் பெற முடியவில்லை. இதனால் அத்துறையின் செயலாளர் லட்சுமி பிரியாவிடம் பிபிசி தமிழ் விளக்கம் கேட்டது.
அப்போது பேசிய லட்சுமி பிரியா, "1978-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலுள்ள தெருக்கள் மற்றும் சாலைகள், கிராமங்களில் சாதிப் பெயர்களை நீக்க உத்தரவிடப்பட்டு அரசாணை வெளியிட்டு, பெயர்களை மாற்றியது. இந்த அரசாணையை இதுவரை இரண்டு முறை மீண்டும் வலியுறுத்தி உள்ளோம். சாதிப் பெயர்களைக் கண்டறிந்து நீக்கி வருகிறோம்," என்றார்.
அவரிடம், ‘பறையப்பட்டிபுதுார், சாக்கிலிப்பட்டி போன்ற பெயர்கள் இன்னமும் நிலவுகிறது, ஏன் மாற்றவில்லை?’ என்று பிபிசி தமிழ் கேள்வி எழுப்பியதற்கு, "அப்படி குறிப்பிட்டச் சாதியை மையப்படுத்தும் பெயர்கள் கிராமங்களில் இல்லை," என்று மறுப்பு தெரிவித்தார் செயலாளர் லட்சுமி பிரியா.
அதுகுறித்துப் பேசிய அவர், "தமிழ்நாட்டில் சாதியைக் குறிப்பிடும் வகையில் உள்ள பெயர்களை மாற்றி வருகிறோம். அப்படி ஏதேனும் இருந்தால் அது மாற்றப்படும். இதற்கென தனியாக ஒரு குழு அமைத்து நடவடிக்கை எடுப்போம், மக்கள் மனு கொடுத்தாலும் மாற்றப்படும்,” என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












