கமலா ஹாரிஸ் ஒரே வார்த்தையால் அமெரிக்க தேர்தல் களத்தை புரட்டிப் போட்டது எப்படி?

அமெரிக்கா: கமலா ஹாரிஸ் சொன்ன ஒரே வார்த்தை அதிபர் தேர்தல் களத்தை புரட்டிப் போட்டது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பில் மெக்கவுஸ்லேண்ட்
    • பதவி, பிபிசி செய்தி, நியூயார்க்

"விசித்திரமானவர்கள்"

அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்த எளிய விமர்சன வார்த்தையுடன் கமலா ஹாரிஸ் செய்து வரும் பிரசாரம் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது. இந்த வாக்கியம் அதிபர் ஜோ பைடனின் பலவீனங்கள் பற்றிய உரையாடலை திசை மாற்றியிருப்பதுடன், அவரது போட்டியாளரான டொனால்ட் டிரம்ப் மீது கவனத்தை திருப்பியுள்ளது.

இந்த வாரம் நடந்த பிரசார பேரணிகளில் கமலா ஹாரிஸின் தொனியில் காணப்பட்ட மாற்றம் தெளிவாக தெரிந்தது. அவர் தனது துணை அதிபர் வேட்பாளரான மினசோட்டா கவர்னர் டிம் வால்ஸுடன் பிரசாரத்தில் தோன்றினார்.

"பியோனஸ் ஃப்ரீடம்” என்னும் பாடலின் பின்னணி இசையுடன் மேடையில் தோன்றிய இந்த ஜோடி அமெரிக்க மக்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்கத் தயாராக இருப்பதாகக் கூறியது.

பிலடெல்பியாவில் ஒரு உற்சாகமான கூட்டத்திற்கு மத்தியில் "நாங்கள் பின்வாங்கமாட்டோம்," என்று சூளுரைத்தார் கமலா ஹாரிஸ். அவரின் முழக்கம் மக்கள் மத்தியில் எதிரொலித்தது. அதுவே பிரசாரத்தின் முழக்கமாகவும் மாறியது.

டிரம்பின் செல்வாக்கை புரட்டி போட்ட ஒற்றை வார்த்தை! - கமலா ஹாரிஸ், டிம் வால்ஸ் ஜோடியின் பிரசார பாணி

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இது இதற்கு முந்தைய தேர்தலில் டிரம்பை "ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்" என்ற பைடன் விமர்சனத்தின் சற்று இலகுவான பதிப்பாகும். இது முன்னாள் அதிபர் டிரம்பை அமெரிக்காவின் யதார்த்தத்திலிருந்து மாறுப்பட்டவர் என்ற பிம்பத்தை காட்டுகிறது.

அதிபர் பைடனுக்கு துணை அதிபராக பணிபுரிந்த போது, கமலா ஹாரிஸ் வெளியிட்ட பிரசார செய்திக்குறிப்புகள் கூட, ஆழ்ந்த தீவிரமான தொனியில் இருந்து இன்னும் லேசான தொனிக்கு மாறுவதைப் பிரதிபலிக்கின்றன.

பைடன் தேர்தலில் இருந்து ஒதுங்கிய ஐந்து நாட்களுக்குப் பிறகு, கமலா ஹாரிஸின் செய்தித் தொடர்பாளர் டிரம்ப் பற்றி பேசுகையில் "அவரின் பேச்சு நீங்கள் உணவகத்தில் அருகில் உட்கார விரும்பாத ஒருவரின் பேச்சு போல ஒலித்தது” என்று கேலி செய்யும் தொனியில் குறிப்பிட்டார்.

டிரம்பை விசித்திரமானவர் போன்று சித்தரிக்கும் இந்த புதிய பிரசாரம், கமலா ஹாரிஸுக்கு வாக்களிப்பது ஒரு விவேகமான தேர்வாக மக்களை நினைக்க வைக்கிறது என்று பிரசார உத்தியாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால், சமீப காலம் வரை, அமெரிக்க வாக்காளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகப் போராடிய துணை அதிபர் கமலா ஹாரிஸ் மீது உருவாகியிருக்கும் நல்லெண்ணம், நவம்பர் தேர்தல் நாள் வரை நீடிக்குமா என்று கூறுவது கொஞ்சம் கடினம். இவ்வளவு சீக்கிரமாக அதனை முடிவு செய்ய முடியாது.

அமெரிக்க அதிபர் தேர்தல், கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம், Getty Images

கமலா ஹாரிஸை நெருங்கிய நண்பராகக் கருதும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கலிபோர்னியா லெப்டினன்ட் கவர்னர் எலினி கவுனலகிஸ், இந்தப் பிரசாரத்தின் புதிய சொல்லாடல், ஹாரிஸின் "சிறந்த நகைச்சுவை உணர்வையும்", "அடிப்படை அளவில் ஒரு நல்ல பேச்சாளராகவும்" இருக்கும் அவரது திறனையும் பிரதிபலிக்கிறது என்றார்.

"உண்மை என்னவென்றால், இந்த விஷயங்கள் அவருடைய பலம் என்பதை நிரூபிக்கின்றன, மேலும் அவருடைய உற்சாகமான பேச்சுகள், டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது துணை அதிபர் வேட்பாளரின் அச்சுறுத்தும் தொனியினால் உருவாகும் இருளை உடைக்கிறது" என்றார்.

பதிலடி தர முடியாமல் தவிக்கும் டிரம்ப்

இதற்கிடையில், 2016 அதிபர் தேர்தல் பிரசாரத்தின் வாயிலாக அரசியலில் நுழைந்ததில் இருந்து ஆற்றல் மிக்க பிரசாரகர், குறிப்பாக அரசியல் எதிரிகள் பற்றி அவதூறாக பேசி தனிப்பட்ட தாக்குதல்களை மேற்கொள்வதில் திறன் பெற்றவர் என்று நீண்ட காலமாக அறியப்பட்ட டிரம்ப், கமலா ஹாரிஸின் "விசித்திரமானவர்" என்ற விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்க முடியாமல் திணறுகிறார்.

“அவர்கள் தான் விசித்திரமானவர்கள். இதுவரை என்னை யாரும் விசித்திரமாக நடந்து கொள்கிறேன் என்று சொன்னதே இல்லை. என்னை பலவாறாக விமர்சிக்கலாம். ஆனால் ’`weird’ என்று என்னை சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன்” என்று கடந்த வாரம் கன்சர்வேட்டிவ் வானொலி தொகுப்பாளர் கிளே டிராவிஸுக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் கூறினார்.

டிரம்பின் செல்வாக்கை புரட்டி போட்ட ஒற்றை வார்த்தை! - கமலா ஹாரிஸ், டிம் வால்ஸ் ஜோடியின் பிரசார பாணி

பட மூலாதாரம், Getty Images

ஊடகங்களில் கவனம் பெறும் கமலா ஹாரிஸ்

அதிபர் தேர்தலில் டிரம்பை பின்னுக்கு தள்ளி கமலா ஹாரிஸ், தற்போது முன்னணியில் இருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஆகஸ்ட் 4-6 தேதிகளில் நடத்தப்பட்ட சமீபத்திய `YouGov’ கருத்துக் கணிப்பு, கமலா மக்கள் வாக்கெடுப்பில் வெற்றி பெறுவார் என்பதை பிரதிபலித்தது. கருத்துக் கணிப்பில் பதிலளித்தவர்களில் 45% பேர் நவம்பரில் கமலா ஹாரிசுக்கு வாக்களிப்பதாகக் கூறினர், டிரம்பிற்கு 43% ஆதரவு இருந்தது.

இது ஒரு முக்கியமான திருப்பம். திசை மாறியுள்ளது. கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கு முன்பு `YouGov’ நடத்திய இதேபோன்ற கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் மூன்று புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்றார்.

புளோரிடாவின் குடியரசுக் கட்சி ஆளுநர் ரான் டிசாண்டிஸின் 2024 அதிபர் தேர்தல் பிரசாரத்தின் துணை பிரசார மேலாளராகப் பணியாற்றிய டேவிட் பாலியாங்க்ஸி, டிரம்பின் சொந்த களத்தில் அவரை ஹாரிஸ் தோற்கடித்ததால் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறினார்.

அவர் முதன்முதலில் அதிபர் பதவிக்கு போட்டியிட்டதில் இருந்து, டிரம்ப் நாட்டின் மு க்கிய அரசியல் பிம்பமாக இருந்து கவனம் பெற்று வருகிறார். ஊடகங்களில் அவரை பற்றிய செய்திகள் தலைப்பு செய்திகளாகின.

ஆனால், தற்போது ஊடகங்களின் கவனம் கூட ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு சில வாரங்களுக்கு முன்பில் இருந்து கமலா ஹாரிஸின் பக்கம் திரும்பியுள்ளது. சமீபத்திய வாரங்களில் தலைப்புச் செய்திகளிலும் அவர் இடம்பிடித்துவிட்டார். அவரை பற்றிய செய்திகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அவர் எந்த ஒரு பெரிய ஊடகத்துக்கும் நேர்காணல் கொடுக்காமலே இந்த பெயரை சம்பாதித்துவிட்டார்.

துணை அதிபர் தேர்வால் உற்சாகமான அரங்கம்

சமீபத்தில் ஒரு படுகொலை முயற்சியை எதிர்கொண்ட முன்னாள் அதிபர் டிரம்பை மேடையேற்றுவது அவ்வளவு சாதாரண விஷயமல்ல என்று பாலியன்ஸ்கி கூறினார். "இது மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்," என்று அவர் கூறினார்.

வால்ஸை தனது துணை அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுத்ததன் மூலம் கமலா ஹாரிஸ் பிரசாரம் மேலும் உற்சாகமாகிவிட்டது.

இந்த பிரசாரங்கள் மக்கள் மத்தியில் என்ன விளைவை ஏற்படுத்தி உள்ளது என்பதை இவ்வளவு சீக்கிரம் கணித்துவிட முடியாது. ஆனால் அரிசோனா, நெவேடா மற்றும் ஜார்ஜியா போன்ற முக்கிய மாநிலங்களில் அரசியல் ஆய்வாளர்கள் குடியரசுக் கட்சிக்கு சாதகமாக சூழல் இருப்பதாக கணித்துள்ளனர்.

உண்மையில், வால்ஸ் தான், கமலா ஹாரிஸின் புதிய வேட்புமனுவுக்கு ஆதரவாக பேச கடந்த மாதம் ஊடகங்களில் தோன்றியபோது "விசித்திரமான" என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். ஹாரிஸுடன் சேர்ந்து பிலடெல்பியா பேரணியில் குடியரசுக் கட்சியின் எதிர்ப்பாளர்களைப் பற்றி பேசும்போது அவர் அதை மீண்டும் அழுத்தமாக பயன்படுத்தினார்: "இவர்கள் மிகவும் விசித்திரமானவர்கள் மற்றும் வினோதமானவர்கள்." என்றார்.

வால்ஸின் பிரசார பாணி பிபிசியிடம் பேசிய பல வாக்காளர்களிடம் எதிரொலித்தது. மினசோட்டா கவர்னர் வெளிப்படையாக பேசக் கூடியவர் என்பதால் அவரைப் பிடித்திருப்பதாக அவர்கள் சொன்னார்கள்.

புளோரிடாவின் செயின்ட் அகஸ்டின் நகரில் விடுமுறையில் இருக்கும் ஓஹியோ மாகாண வாக்காளர் டைலர் ஏங்கல், வால்ஸ் "ஒரு சாதாரண மனிதர், இயல்பானவர் போல் தெரிகிறது" என்று கூறினார்.

"இந்த நாட்டுக்கு மிகவும் தேவையான ஒன்று, இயல்பாக, சாதாரணமாக இருக்கும் ஆட்சியாளர்கள் தான்" என்று ஏங்கல் மேலும் கூறினார்.

மற்றொரு வாக்காளர், பென்சில்வேனியாவின் ஜான் பேட்டர்சன், "வால்ஸ் மிகவும் உண்மையான நபர்" என்று கூறினார்.

வாக்காளர்களின் மனதில் இடம் பிடித்த அந்த வார்த்தை

சில அரசியல் ஆலோசகர்கள் "விசித்திரமான" என்னும் வார்த்தையின் செயல்திறனைக் கண்டு வியந்தனர். இது இயல்பாக அனைவரின் மனதிலும் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய வார்த்தை.

ட்ரம்ப் மற்றும் ஜே.டி.வான்ஸை "விசித்திரமானவர்கள்" என்று அழைப்பது, அதிபர் பைடனின் "ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்" என்ற கருப்பொருளை "மிகவும் புரிந்துகொள்ளக்கூடிய இலகுவான மற்றும் பேச்சுவழக்கு வார்த்தை என்று பிரையன் ப்ரோகாவ் கூறினார். இவர் கமலா ஹாரிஸின் பிரசாரங்கள் மற்றும் 2020 இல் அவரது அதிபர் பிரசாரத்தை ஆதரித்த சூப்பர் பிஏசியை நடத்தியவர்.

அவரைப் பொறுத்தவரை, ஜோ பைடனின் நான்கு ஆண்டுகள் பதவியில் இருந்ததைப் பற்றிய விமர்சனத்திலிருந்து பிரசாரத்தின் மையத்தை மாற்றுவதற்கு இந்த வார்த்தை உதவியது.

குடியரசுக் கட்சி கருத்துக்கணிப்பாளர் ஃபிராங்க் லண்ட்ஸ் அவரின் கட்சியின் செயல்பாடு மீதான சந்தேகம் உணர்வை வெளிப்படுத்தினார்.

செவ்வாயன்று பிபிசி நியூஸ்நைட்டில், ஹாரிஸை முன்னணி போட்டியாளராக குறிப்பிட்டார், கமலா ஹாரிஸ் ஒரு புதிய "வேகத்தை" பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டார்.

ஆனால் அவர் "விசித்திரமான" என்னும் முத்திரையை நிராகரித்தார், இது வாக்காளர்கள் மத்தியில் எதிரொலிக்கவில்லை என்று கூறினார்.

பிபிசி நேர்காணல் செய்த பல நடுநிலையான வாக்காளர்கள் மத்தியில் கமலா ஹாரிஸின் சொல்லாடல் தாக்கம் ஏற்படுத்தி இருப்பது போல் தெரிகிறது.

அட்லாண்டாவைச் சேர்ந்த ஒரு சுயாதீன வாக்காளர் ஜேக்கப் ஃபிஷர், டிரம்ப் மற்றும் வான்ஸை "விசித்திரமானவர்கள்" என்று அழைப்பது பொருத்தமானது என்று கூறினார்.

"இது நியாயமானது என்று நான் நினைக்கிறேன்," ஃபிஷர் கூறினார்.

"இது மிகவும் கடுமையான விமர்சனம் என்று நீங்கள் சொல்ல முடியாது, ஏனென்றால் குடியரசுக் கட்சியினர் மிகவும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர்” என்றார்.

இருப்பினும், டிரம்பை ஆதரிப்பதாகக் கூறிய வாக்காளர்கள் பலர் பிரசாரத்தின் சமீபத்திய வார்த்தைகளால் ஈர்க்கப்படவில்லை.

பைடன்-ஹாரிஸ் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்கா "நரகத்திற்குச் செல்கிறது" என்ற கருத்தை இல்லினாய்ஸின் ஃபிராங்க் மற்றும் தெரசா வாக்கர் பகிர்ந்து கொண்டனர். புளோரிடாவில் டிரம்ப் ஆதரவு வாக்காளரான ஜெம் லோவரி ஹாரிஸின் சொல்லாடல் பிடிக்கவில்லை என்று கூறினார்.

"ஜனநாயகக் கட்சியினர் தான் வித்தியாசமானவர்கள். எனவே குடியரசுக் கட்சியினரை 'விசித்திரம்’ என்று அழைப்பது சரியானது அல்ல " என்று லோரி பிபிசியிடம் கூறினார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)