குஜராத் கலவர வழக்கில் தண்டனை பெற்றவர் மகள் பாஜக வேட்பாளராக போட்டி

- எழுதியவர், ரஜ்னீஷ் குமார்
- பதவி, பிபிசி செய்தியாளர்
2002ஆம் ஆண்டு நிகழ்ந்த குஜராத் கலவரத்தின் போது பாயல் குக்ரானிக்கு எட்டு வயது.
2002 கலவரத்தில் பங்கு வகித்ததற்காக பாயலின் தந்தை மனோஜ் குக்ரானிக்கு நீதிமன்றம் 2012இல் ஆயுள் தண்டனை விதித்தது.
2002 பிப்ரவரி 28 ஆம் தேதி, அகமதாபாத்தில் உள்ள நரோதா பாட்டியா என்ற முஸ்லிம் குடியிருப்பு பகுதியில் 97 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் படுகொலையின் குற்றவாளிகளில் மனோஜ் குக்ரானியும் அடங்குவார்.
ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே நரோதா பாட்டியா சட்டப்பேரவைத் தொகுதியில் மனோஜ் குக்ரானியின் மகள் பாயலை தனது வேட்பாளராக பாஜக நிறுத்தியுள்ளது.
மனோஜ் குக்ரானி உடல்நல காரணங்களுக்காக தற்போது ஜாமீனில் உள்ளார். தனது மகளுக்காக பிரசாரம் செய்து வருகிறார்.
2002 பிப்ரவரி 28 ஆம் தேதி, முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நரோதா பாட்டியா பகுதியில் வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தியதில் 97 பேர் கொல்லப்பட்டனர்.
இதில் சில பாலியல் வன்கொடுமை மற்றும் தீ வைப்பு விவகாரங்களும் பதிவு செய்யப்பட்டன. 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தில் ஒரே இடத்தில் இவ்வளவு உயிர்கள் பலியான சம்பவம் இங்குதான் நடந்தது.
பாதிக்கப்பட்ட முஸ்லிம் குடும்பங்களின் கோபம்
பாயல் குக்ரானி பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பதால் நரோதா பாட்டியாவைச் சேர்ந்த சில பாதிக்கப்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் கடும் கோபத்தில் உள்ளன.
சலீம் ஷேக்கின் சகோதரியின் ஒரு பெண் மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகளை கலவரக்காரர்கள் கொன்றனர். பாயல் குக்ரானி பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவர் என்ன நினைக்கிறார் என்று சலீம் ஷேக்கிடம் கேட்டோம்.
“நான் மனோஜுக்கு எதிராக சாட்சியம் கூட அளித்தேன். அவர் தண்டனையும் பெற்றார். தற்போது தனது மகளுக்காக பிரசாரம் செய்து வருகிறார். மனோஜ் குக்ரானி ஒரு குற்றவாளி. எனவே பாஜக அவருக்கு வாய்ப்பு கொடுக்க முடியாது. ஆகவே பாஜக குடும்ப உறுப்பினருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. மனோஜ் குக்ரானி 2002இல் ஏழை முஸ்லிம்களைக் கொல்வதற்காக உழைத்தார். பாரதிய ஜனதா கட்சி அவரை ஒரு புரட்சியாளராக பார்க்கிறது. அதனால்தான் ஊக்கமளிக்கும் விதமாக பாஜக அவருடைய மகளை தேர்தலில் நிறுத்தியுள்ளது,” என்று அவர் கூறினார்.
"இங்கே ஒரு கட்சி தாவூத் இப்ராகிமின் மகளுக்கு வாய்ப்பு கொடுத்தால் எப்படி இருக்கும் என்று நீங்கள் பாஜகவினருடன் பேசினால் கேளுங்கள்,” என்றார் அவர்.

பாஜகவின் குஜராத் செய்தித் தொடர்பாளர் யமல் வியாஸிடம் சலீம் ஷேக் கேட்ட இதே கேள்வியை கேட்டோம்.
“பாயல் எம்.டி படித்த ஒரு மருத்துவர். அவர் ஓர் இளம்பெண். கட்சிக்காக கடுமையாக உழைக்கிறார். கட்சிக்காரரான இவருக்கு சீட்டு கொடுக்கப்பட்டுள்ளது. கலவர விஷயம் மிகவும் பழையது. குஜராத் அதை மறந்து விட்டது,” என்று அவர் பதில் அளித்தார்.
”குஜராத் மக்கள் அனைவரும் மறந்துவிட்டனர். 20 வருடங்கள் ஆகிவிட்டது. பாயலை வேட்பாளராக நிறுத்தியிருப்பதால் எந்தப் பிரச்னையும் இல்லை என்று நான் கருதுகிறேன். நீதிமன்றம் என்ன செய்யவேண்டுமோ அதை செய்துவிட்டது. குற்றவாளிகளும் தண்டிக்கப்பட்டனர். இப்போது குஜராத் மக்கள் இதைத் தாண்டிச் சென்றுவிட்டனர். குஜராத் நிறைய வளர்ச்சி அடைந்துள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.
”குஜராத்தில் ஒவ்வொரு சமூகமும் நிறைய வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பகுதியான நரோதா பாட்டியாவுக்குச் சென்றால், அங்கு எங்குமே வளர்ச்சி தென்படவில்லை,” என்று யமல் வியாஸ் கூறினார்.
இன்றும் இந்தப்பகுதி அழுக்கான குடிசைப்பகுதி போல உள்ளது. நரோதா பாட்டியா முஸ்லிம் குடியிருப்பு பகுதிக்கு எப்போதாவது சென்று எவ்வளவு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று பார்த்தீர்களா என்று யமலிடம் கேட்டோம்.
இந்தக் கேள்விக்கு பதிலளித்த அவர், “பாருங்கள், இது உங்கள் எண்ணமாக இருக்கலாம். ஆனால் குஜராத்தில் மக்கள் வளர்ச்சியின் அடிப்படையில் மட்டுமே எங்களுக்கு துணை நிற்கிறார்கள். ஒட்டுமொத்த குஜராத் மாநிலமும் வளர்ச்சி அடைந்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி தனது வேட்பாளரை ஒரு செயல்முறையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறது,” என்றார்.
'இது நீதியல்ல'
“எனது உறவினர்கள் 19 பேர் உயிரிழந்தனர். குற்றவாளிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுகிறது. இது என்ன நியாயம்? குற்றம் செய்தவருக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறது,” என்று அதே பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஃபாத்திமா பீபி குறிப்பிட்டார்.
”குற்றம் செய்தவரின் மகள்தான் கட்சிக்கு கிடைத்ததா? யாருக்கு எதிராக அநீதி இழைக்கப்பட்டதோ அந்த குடும்பத்தார்களை அவர்கள் பொருட்படுத்தவில்லை. இது என்ன குருட்டு சட்டம்? எங்கள் காயங்களில் உப்பைத் தூவி இருக்கிறார்கள்.”
இதையெல்லாம் சொல்லியவாறே ஃபாத்திமா அழ ஆரம்பித்தார்.
"மக்கள் விலங்குகளை கொல்லும்போது கூட யோசிக்கிறார்கள். ஆனால் அவர்கள் மனிதர்களைக் கொன்றனர். குழந்தைகளை உயிரோடு எரித்தனர். எனக்கு இப்போதும்கூட பலமுறை இரவில் தூக்கம் வருவதில்லை. கோத்ரா எங்கே, பாட்டியா எங்கே? இன்று வரை கோத்ராவுக்கு நான் சென்றதுகூட இல்லை. எந்த பகுதியில் அது உள்ளது என்று கூட தெரியாது,”என்று அவர் அழுதுகொண்டே கூறினார்.

”நான் பாட்டியாவில் 50 வருடங்களாக இருக்கிறேன். நாங்கள் உதவிக்காக கெஞ்சினோம். இப்போது தேர்தலில் நிற்கவைக்கப்பட்டுள்ளவரின் தந்தை கலவரத்தில் ஈடுபட்டதை எங்கள் கண்களால் பார்த்திருக்கிறோம். பாகிஸ்தானுக்கு ஓடுங்கள், இங்கு வாழ உங்களுக்கு உரிமை இல்லை என்று இவர்கள் சொன்னார்கள். நாங்கள் இந்தியப் பெண்கள் இல்லையா? இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க நாங்கள் தியாகம் செய்யவில்லையா? இன்றும் எங்களை துயரப்பட வைக்கும் காட்சிகளை நாங்கள் பார்த்திருக்கிறோம்,” என்று இந்தப் பகுதியைச் சேர்ந்த ஜூலேகா பானோ தெரிவித்தார்.
“பாஜக வந்தாலும் சரி, காங்கிரஸ் வந்தாலும் சரி, எங்களுக்கு யாரிடமும் எதிர்பார்ப்பு இல்லை. எங்கள் ஆட்களை வேட்பாளராக நிறுத்தக்கூடாதா என்ன? பாதிக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காதா? குற்றம் செய்பவர்கள்தான் இங்கு வாழ முடியுமா?”என்று அவர் கேள்வி எழுப்பினார்.
“குஜராத் கலவரம் நடந்தபோது எனக்கு 20 வயது. என் தம்பி அப்போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான், அவன் மாற்றுத்திறனாளி. கலவரக்காரர்கள் அவன் மீதும் இரக்கம் காட்டவில்லை. மனோஜ் குக்ரானி போன்றவர்கள் பாஜகவின் வீரர்கள். அவர்கள் மற்றவர்களுக்கு கெட்டவர்களாக இருந்தாலும், பாஜகவுக்கு நல்ல வேலையை செய்திருக்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், அவர்களுக்கு வெகுமதி கிடைக்கத்தானே செய்யும்,” என்று பாட்டியாவைச் சேர்ந்த பாபு சையத் கூறினார்.
2002 கலவரத்தில் நரோதா பாட்டியா முஸ்லிம்களின் வாழ்வாதாரமும் குறிவைக்கப்பட்டது. அப்போது பாபு சையத் ஓட்டல் நடத்தி வந்தார், அவரது ஓட்டலுக்கும் தீ வைக்கப்பட்டது. கடந்த பத்து வருடங்களாக அவர் ஒரு சிறிய கடையை நடத்தி வருகிறார்.
நரோதா பாட்டியா படுகொலை வழக்கில் மொத்தம் 32 பேரை குற்றவாளிகள் என அகமதாபாத்தின் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நரேந்திர மோதி அரசில் அமைச்சராக இருந்த மாயா கோட்னானி மற்றும் பஜ்ரங்தள தலைவர் பாபு பஜ்ரங்கி ஆகியோரும் இதில் அடங்குவர்.
முஸ்லிம்களுக்கு என்ன செய்தி சொல்ல பாஜக விரும்புகிறது?

1984ல் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஜெகதீஷ் டைட்லரை, தில்லி மாநகராட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் குறித்து முடிவெடுக்கும் குழுவில் காங்கிரஸ் கட்சி சென்ற வாரம் சேர்த்தது. அது சீக்கியர்களின் காயத்தில் உப்பு தூவியது போன்றது என்று பாஜக கூறியது.
ஆனால் இப்போது மனோஜ் குக்ரானியின் மகளை வேட்பாளர் ஆக்கியிருப்பதை பாஜக நியாயப்படுத்துகிறது. மனோஜ் குக்ரானியின் மகளுக்கு சீட்டு கொடுத்ததன் மூலம் பாஜக என்ன செய்தியை சொல்கிறது?
“சர்தார் படேல் இந்து தேசம் என்பது பைத்தியக்காரர்களின் கருத்து என்று கூறுவார். பாயல் குக்ரானிக்கு சீட்டு கொடுத்ததன் மூலம் தான் எந்த எல்லைக்கும் செல்ல முடியும் என்ற தெளிவான செய்தியை பாஜக தருகிறது. பில்கிஸ் பானோவை பாலியல் வல்லுறவு செய்தவர்களை விடுவிப்பதையும் அக்கட்சி ஆதரித்தது. இந்த நாட்டில் உள்ள அமைப்பு தங்களின் விசுவாசிகளுக்கு மட்டுமே என்ற தெளிவான செய்தியை அவர்கள் கொடுக்கிறார்கள். விசுவாசமாக இல்லாதவர்கள் தனிமைப்பட்டு இருக்க வேண்டும்,” என்று சிமன்பாய் படேல் இன்ஸ்டிடியூட் இயக்குநர் டாக்டர் ஹரி தேசாய் குறிப்பிட்டார்.
குஜராத்தில் கடந்த பல சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக முஸ்லிம்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை. 1980 முதல் இப்போதுவரை, 1998ஆம் ஆண்டு மட்டுமே ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளருக்கு பாஜக சீட்டு வழங்கியது.
குஜராத்தில் முஸ்லிம் மக்கள் தொகை 9.97 சதவிதம். மக்கள் தொகை விகிதாச்சாரத்தைப் பார்த்தால், 18 முஸ்லிம் எம்எல்ஏக்கள் இருக்க வேண்டும். ஆனால் அது எப்போதுமே நடக்கவில்லை.
1980ல் குஜராத்தில் அதிகபட்சமாக 12 முஸ்லிம் எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவையில் முஸ்லிம் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள 25 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.
நரேந்திரமோதி முதல்வராக பதவியேற்ற பிறகு குஜராத்தில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக பார்க்கப்படவில்லை. மாநிலத்தில் சிறுபான்மையினர் நலத்துறையைக் கூட நரேந்திர மோதி உருவாக்கவில்லை. இந்தமுறையும் பாஜகவின் வேட்பாளர் பட்டியலில் இதுவரை எந்த முஸ்லிமும் இடம்பெறவில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்









