அமெரிக்காவின் 50% வரியால் இந்தியாவில் பல லட்சம் பேர் வேலைக்கு ஆபத்து - திருப்பூரில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Vishnu Vardhan, BBC News
- எழுதியவர், ஆர்ச்சனா சுக்லா, ராக்ஸி கக்டேகர் & கரிகிபதி உமாகாந்த்
- பதவி, பிபிசி நியூஸ்
இந்தியாவின் மிகப்பெரிய ஜவுளி ஏற்றுமதி மையங்களில் ஒன்றான திருப்பூரில் உள்ள என். கிருஷ்ணமூர்த்தியின் ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் ஒரு அச்சமூட்டும் மௌனம் நிலவுகிறது.
அங்கு 200 தொழில்துறை தையல் இயந்திரங்களில் ஒரு சிறிய பகுதி மட்டுமே இயங்குகிறது, மிகப் பெரிய அமெரிக்க சில்லறை விற்பனையாளர்கள் அளித்த குழந்தைகள் ஆடைகளுக்கான இறுதி ஆர்டர்களை தொழிலாளர்கள் தயாரித்துக்கொண்டிருக்கின்றனர்.
அறையின் ஒரு முனையில், புதிய வடிவமைப்புகளுக்கான துணி மாதிரிகளின் குவியல், தூசி படிந்துகொண்டிருக்கின்றது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான 50% இறக்குமதி வரிகளால் அவை பாதிக்கப்பட்டுள்ளன, இந்த வரிகள் இன்று (ஆக.27 புதன்கிழமை ) முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்தியா ஆடைகள், இறால், ரத்தினங்கள் மற்றும் நகைகள் போன்ற பொருட்களை அமெரிக்காவுக்கு பெரிய அளவில் ஏற்றுமதி செய்கிறது. ரஷ்ய எண்ணெய் மற்றும் ஆயுதங்கள் வாங்கியதற்காக 25% கூடுதல் வரி உட்பட விதிக்கப்பட்ட அதிக இறக்குமதி வரிகள், இந்திய பொருட்களுக்கு தடை விதித்ததற்கு இணையானது என வர்த்தக நிபுணர்கள் சொல்கின்றனர்.
பிபிசி செய்தியாளர்கள் இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி மையங்களுக்குச் சென்று, வர்த்தக நிச்சயமின்மை தொழிலதிபர்களையும், வாழ்வாதாரங்களையும் எப்படி பாதிக்கிறது என்பதை ஆராய்ந்தனர்.
இந்தியாவிலிருந்து டார்கெட், வால்மார்ட், கேப், மற்றும் ஜாரா போன்ற பிராண்டுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 16 பில்லியன் டாலர் (11.93 பில்லியன் பவுண்ட்) மதிப்புள்ள ஆயத்த ஆடைகளில் மூன்றில் ஒரு பங்கு வகிக்கும் திருப்பூரில் எதிர்காலம் என்ன என்ற கவலை அதிகமாக உள்ளது.
வாடிக்கையாளர்கள் அனைத்து ஆர்டர்களையும் நிறுத்திவைத்துள்ளதால் "செப்டம்பர் முதல், எந்த வேலையும் இருக்காது," என்று கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
அவர் சமீபத்தில் தனது விரிவாக்க திட்டங்களை நிறுத்திவைக்க வேண்டியிருந்ததுடன இறக்குமதி வரிகள் விதிக்கப்படுவதற்கு முன்பு பணியமர்த்தப்பட்ட 250 புதிய தொழிலாளர்களை வேலையில்லாமல் வைத்திருக்கவும் வேண்டியிருந்தது.
பெரும்பாலான ஏற்றுமதி நிறுவனங்களின் ஆண்டு விற்பனையில் பாதி கிறிஸ்துமஸ் விற்பனைக்கு முன்பு இந்த காலத்தில் நடக்கும் என்பதால் இந்த வரிவிதிப்பு அறிவிப்பின் நேரம் நிலைமையை மோசமாக்கியுள்ளது.
இப்போது இந்த நிறுவனங்கள் உள்நாட்டு சந்தையையும், இந்தியாவில் வரவிருக்கும் தீபாவளி பண்டிகையையும் நம்பியுள்ளன.
உள்ளாடைகள் தயாரிக்கும் மற்றொரு தொழிற்சாலையில், அமெரிக்க கடைகளுக்கு செல்ல வேண்டிய 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள சரக்குகள் வாடிக்கையாளர் இல்லாமல் குவிந்துள்ளன.
"இந்தியா அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று நம்பினோம். கடந்த மாதம் முழு உற்பத்தி சங்கிலியும் முடங்கியது. இது தொடர்ந்தால் தொழிலாளர்களுக்கு சம்பளம் எப்படி கொடுப்பேன்?" என்று ராஃப்ட் கார்மெண்ட்ஸ் உரிமையாளர் சிவா சுப்ரமணியம் பிபிசியிடம் கூறினார்.
50% இறக்குமதி வரி விதிப்பின் கீழ், 10 டாலருக்கு விற்கப்பட்ட இந்திய ஆடை அமெரிக்க வாடிக்கையாளருக்கு 16.4 டாலருக்கு கிடைக்கும் – இது சீனாவின் 14.2 டாலர், வங்கதேசத்தின் 13.2 டாலர், அல்லது வியட்நாமின் 12 டாலர்களை விட விலை அதிகம்.
இந்த நெருக்கடியின் பாதிப்பை தணிக்க, மூலப்பொருட்களுக்கு இறக்குமதி வரிகளை நிறுத்தி வைப்பது உட்பட அரசு சில நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. சந்தைகளை பன்முகப்படுத்த மற்ற நாடுகளுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளும் வேகம் பெற்றுள்ளன, ஆனால், பலர் இது மிகவும் குறைவன மிகவும் தாமதமான நடவடிக்கை என்று அஞ்சுகின்றனர்.
"அமெரிக்க வணிகர்கள் மெக்ஸிகோ, வியட்நாம், மற்றும் வங்கதேசத்திற்கு மாறுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்," என்று குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவின் அஜய் ஸ்ரீவாஸ்தவா கூறினார்.

பட மூலாதாரம், PUNIT PARANJPE/AFP via Getty Images
அங்கிருந்து 1,200 கிமீ (745 மைல்) தொலைவில், மும்பையில் உள்ள ஒரு ஏற்றுமதி மண்டலத்தில், நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வைரங்களை பட்டை தீட்டி, பேக் செய்கின்றனர். இது இந்தியாவின் 10 பில்லியன் டாலர் ரத்தினங்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதி வர்த்தகத்தின் ஒரு பகுதியாகும்.
ஆனால், செப்டம்பர் மற்றும் அக்டோபரில் – 3-4 பில்லியன் டாலர் மதிப்புள்ள நகைகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் காலத்தில் அமெரிக்காவின் இறக்குமதி வரிகளால் விற்பனை பாதிக்கப்படும் என்று நகை பிராண்டுகள் அஞ்சுகின்றன.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுடனான இந்தியாவின் புதிய வர்த்தக கூட்டாண்மைகள் வாய்ப்புகளைத் திறந்துள்ளன. ஆனால், அமெரிக்க சந்தையில் பல ஆண்டுகள் கஷ்டபட்டு உருவாக்கிய இடத்தை சில மாதங்களில் இழக்க நேரிடும் என்று தனது வைரம் பதித்த நகைகளில் 90%-ஐ அமெரிக்காவுக்கு விற்பனை செய்யும் கிரியேஷன் ஜுவல்லரியின் அதில் கோட்வால் அஞ்சுகிறார்.
அவர் 3-4% என்ற குறைந்த லாப வரம்பில் வேலை செய்கிறார். எனவே, 10% கூடுதல் இறக்குமதி வரி விகிதத்தைக்கூட தாங்குவது கடினம். "இந்த இறக்குமதி வரிகளை யார் தாங்கிக்கொள்ள முடியும்? அமெரிக்க சில்லறை விற்பனையாளர்களாலும் இதைச் செய்ய முடியாது," என்று கோட்வால் பிபிசியிடம் கூறினார்.
கோட்வால் வைரக்கற்களை அருகிலுள்ள குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் இருந்து பெறுகிறார். உலகின் வைரம் வெட்டுதல் மற்றும் பட்டை தீட்டும் மையமான சூரத்தில், வரிவிதிப்புக்கு முன்பே உலகளாவிய தேவை குறைவு மற்றும் ஆய்வகத்தில் உருவாக்கப்படும் வைரங்களின் போட்டியால் நெருக்கடி உருவாகியுள்ளது.
இப்போது அமெரிக்காவின் இறக்குமதி வரிகள் இரட்டை அடியாக அமைந்துள்ளன.
அமெரிக்க வாடிக்கையாளர்கள் காணாமல் போய்விட்டனர், ஏறக்குறைய 50 லட்சம் பேருக்கு வாழ்வாதாரமாக திகழ்ந்த தொழிற்சாலைகள் இப்போது ஒவ்வொரு மாதமும் 15 நாட்கள் மட்டுமே இயங்குகின்றன. நூற்றுக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்கள் காலவரையற்ற விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர்.

புறநகரில் உள்ள ஒரு மங்கலான வைர பட்டைதீட்டும் பட்டறையில், தூசி படிந்த பயன்படுத்தப்படாத மேசைகள் வரிசையாக நீண்டு செல்கின்றன. அருகில், செயல்படாத கணினிகள் சிதறிக் கிடக்கின்றன.
"இந்த இடம் ஒரு காலத்தில் பரபரப்பாக இருந்தது," என்று ஒரு தொழிலாளர் கூறுகிறார். "சமீபத்தில் பலர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். எங்களுக்கு என்ன நடக்கும் என்று தெரியவில்லை."
இந்த பட்டறையை உருவாக்கிய ஷைலேஷ் மங்குகியா, ஒரு காலத்தில் 300 தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியதாக கூறுகிறார். இப்போது 70 பேர் மட்டுமே உள்ளனர். ஒவ்வொரு மாதமும் பட்டைதீட்டப்படும் வைரங்களின் எண்ணிக்கை 2,000 இலிருந்து 300 ஆகக் குறைந்துவிட்டது.
இங்குள்ள தொழிலாளர்கள் "குறையும் ஊதியங்கள், கட்டாய விடுப்பு, மற்றும் குறையும் மாத வருமானம்" ஆகியவற்றை எதிர்கொள்கின்றனர் என்று உள்ளூர் தொழிற்சங்க தலைவர்களான பாவேஷ் டேங்க் போன்றோர் சொல்கின்றனர்.

பட மூலாதாரம், Bloomberg via Getty Images
இந்தியாவின் பல இறால் விவசாயிகள், இந்த அடியைத் தாங்க மற்ற பொருட்களுக்கு மாறுவதை பரிசீலிக்கின்றனர். இந்தியா உலகின் மிகப்பெரிய இறால் ஏற்றுமதியாளர்களில் ஒன்றாகும், அமெரிக்கா அதன் முக்கிய சந்தைகளில் ஒன்றாக உள்ளது.
மற்ற வரிகளுடன் சேர்த்து, இறால்களுக்கு மொத்த இறக்குமதி வரி இப்போது 60%க்கு மேல் உயர உள்ளன – இது இந்தத் துறைக்கு பெரும் அடியாகும்.
"இது அமெரிக்க வியாபாரிகள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விற்பனைக்கு தயாராகும் உச்ச காலம். இங்குள்ள விவசாயிகள் தங்கள் புதிய வளர்ப்பு சுழற்சியைத் தொடங்கியுள்ளனர். டிரம்பின் இறக்குமதி வரிகள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. எங்களால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை," என்று ஏற்றுமதியாளர் தோடா ஜகதீஷ் பிபிசியிடம் கூறினார்.
இதன் விளைவாக குஞ்சு பொறிப்பக (ஹேட்சரி) உரிமையாளர்கள், இறால் லார்வா உற்பத்தியை கணிசமாக குறைத்துள்ளனர்.
"முன்பு, ஆண்டுக்கு சராசரியாக 100 மில்லியன் இறால் லார்வாக்களை உற்பத்தி செய்தோம். இப்போது, 60-70 மில்லியன் கூட அடையவில்லை," என்று வீரவசரம் நகரத்தில் உள்ள ஸ்ரீமன்னாராயண ஹேட்சரீஸின் எம்.எஸ். வர்மா கூறினார்.
இவை அனைத்தும், அரை மில்லியன் இறால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கலாம், மேலும் 2.5 மில்லியன் பேர் மறைமுகமாக பாதிக்கப்படலாம் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே வேலை உருவாக்கத்தில் நீடித்த நெருக்கடியால் தள்ளாடும் இந்தியாவில், இந்த எண்கள் கவலையளிப்பவையாக இருக்கின்றன.

பட மூலாதாரம், Getty Images
இந்தியா, அமெரிக்கா இடையிலான இழுப்பறி தொடர்கிறது. இன்னும் சொல்லப்போனால் வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கான சூழல் கடந்த வாரங்களில் மேலும் கணிசமாக மோசமடைந்துள்ளது.
இந்த வாரம் டெல்லியில் தொடங்கவிருந்த வர்த்தக பேச்சுவார்த்தை தள்ளிவைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிகாரிகள், இந்தியாவை பெய்ஜிங்குடன் "நெருக்கமாகி வருவதாகவும்," ரஷ்யாவுக்கு "சுய சேவை சலவை மையமாக" (ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கி சுத்திகரித்து ஏற்றுமதி செய்வது)(லாண்ட்ரோமேட்) மாறியதாகவும் கடுமையாகவும் விமர்சித்துள்ளனர்.
"இந்தியா-அமெரிக்க பேச்சுவார்த்தைகளின் எதிர்காலம் இப்போது உள்நாட்டு மற்றும் ரஷ்யா, சீனா போன்றவற்றில் டிரம்ப் நிர்வாகத்தின் முன்னுரிமைகளை பொறுத்துள்ளது," என்று ஆசியா குரூப் ஆலோசனை நிறுவனத்தின் கோபால் நடூர் பிபிசியிடம் கூறினார்.
"சுயசார்பை அதிகரி, சந்தை வாய்ப்புகளை பன்முகப்படுத்து, எந்த வாய்ப்பையும் விட்டுவிடாதே' என்பதே இந்தியாவின் கொள்கை உருவாக்குபவர்களும் வணிகத் தலைவர்களும் பின்பற்ற வேண்டிய மந்திரமாக இருக்கும்."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












