You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பொன்னியின் செல்வன்-1: தேசிய விருது வென்ற நடிகர், நடிகைகளுக்கு பரிசுத்தொகை விவரங்கள்
கடந்த 2022ஆம் ஆண்டுக்கான 70வது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.
பொன்னியின் செல்வன் முதல் பாகம் சிறந்த தமிழ் படத்திற்கான விருதை வென்றது.
சிறந்த தெலுங்கு படத்திற்கான விருதை கார்த்திகேயா-2 பெற்றது.
சிறந்த நடிகைக்கான விருது இந்த முறை இரண்டு நடிகைகளுக்குக் கிடைத்தது. தமிழ் படமான திருச்சிற்றம்பலம் படத்திற்காக நித்யா மேனனும், குஜராத்தி படமான கட்ச் எக்ஸ்பிரஸ் படத்திற்காக மானசி பரேக்கும் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றனர்.
கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி காந்தாரா படத்திற்காகச் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.
கன்னடத்தில் கே.ஜி.எஃப் இரண்டாம் பாகம் சிறந்த படம் விருதை வென்றது. சிறந்த இந்தி படத்திற்கான விருதை மனோஜ் பாஜ்பாய் மற்றும் ஷர்மிளா தாகூர் நடித்த குல்மோகர் வென்றது.
பிரம்மாஸ்திரா பாகம் 1 படத்திற்காக இசையமைப்பாளர் ப்ரீதம் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதையும், தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் பாகம் 1 பின்னணி இசைக்காக ஏ.ஆர்.ரகுமான் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதையும் வென்றனர்.
பிரம்மாஸ்திரா திரைப்படத்தின் முதலாம் பாகத்தில் கேசரியா பாடலுக்காக அர்ஜித் சிங் சிறந்த ஆண் பாடகர் விருது பெற்றார்.
இந்தி படமான நகாய் படத்திற்காக சூரஜ் பர்ஜாத்யா சிறந்த இயக்குருக்கான விருதை வென்றார்.
சிறந்த படத்துக்கான தேசிய விருதை மலையாள திரைப்படமான ‘ஆட்டம்’ பெற்றது.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பரிசுத்தொகை எவ்வளவு?
சிறந்த தமிழ்த் திரைப்படமான பொன்னியின் செல்வன் பாகம் ஒன்றின் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் இயக்குநர் மணிரத்னம் ஆகியோருக்கு வெள்ளி தாமரை விருதுடன் தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும்.
சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்ட ஆட்டம் திரைப்படத்தின் தயரிப்பு நிறுவனமான ஜாய் மூவி புரொடக்ஷன்ஸ் மற்றும் இயக்குநர் ஆனந்த் ஏகர்ஷி ஆகியோருக்கு பொற்தாமரை விருதுடன் (கோல்டன் லோட்டஸ்) தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும்.
சிறந்த நடிகை பிரிவில் நித்யா மேனன் மற்றும் மானசி பரேக் ஆகியோருக்கு வெள்ளித் தாமரை விருது மற்றும் 2 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும்.
சிறந்த நடிகருக்கான விருதை வென்ற ரிஷப் ஷெட்டிக்கு வெள்ளி தாமரை விருது மற்றும் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும்.
சிறந்த இயக்குநருக்கான விருதை வென்ற சூரஜ் பர்ஜாத்யாவுக்கு பொற்தாமரை விருதும் ரூ.3 லட்சம் பரிசும் வழங்கப்படும்.
சிறந்த தெலுங்கு திரைப்படமான கார்த்திகேயா பாகம் இரண்டின் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ், பீப்பிள் மீடியா ஃபேக்டரி மற்றும் இயக்குநர் சந்து மொண்டேட்டி ஆகியோருக்கு வெள்ளித் தாமரை விருதுடன், தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும்.
கன்னடத்தில் சிறந்த படமான கே.ஜி.எஃப் பாகம் 2, வெள்ளித் தாமரை விருதையும், தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் மற்றும் இயக்குநர் பிரசாந்த் நீல் ஆகியோர் தலா ரூ.2 லட்சம் பரிசு பெறுவார்கள்.
சிறந்த ஹிந்தி படமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள குல்மோகருக்கு வெள்ளித் தாமரை மற்றும் தயாரிப்பு நிறுவனமான ஸ்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் இயக்குநர் ராகுல் வி சித்தேலா ஆகியோருக்கு தலா ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும்.
பொன்னியின் செல்வன் பாகம் 1
மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது.
இந்தப் படம் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாகக் கொண்டது. பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியானது.
பொன்னியின் செல்வன் ஒரு வரலாற்றுப் புனைகதை. ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி (1899-1954) எழுதியது. இந்த நாவலை 1950 முதல் மூன்று ஆண்டுகள் தொடர் வடிவில் தனது ‘கல்கி’ இதழுக்காக அவர் வெளியிட்டார்.
ராஜராஜ சோழன் காலத்து சில வரலாற்று நிகழ்வுகளை வைத்து கல்கி இந்த நாவலை எழுதினார்.
கல்கி எழுதிய இந்த நாவலில் வரலாற்றுக் கதாபாத்திரங்களும் கற்பனைக் கதாபாத்திரங்களும் உள்ளன.
புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர்களான கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியின் ‘தி சோழாஸ்’ ('The Cholas') புத்தகம், டி.வி. சதாசிவ பண்டாரத்தரின் 'பிற்காலச் சோழர்களின் வரலாறு', ஆர். கோபாலன் எழுதிய 'காஞ்சியின் பல்லவர்கள்' புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு கல்கி இந்நாவலை எழுதினார்.
இந்த நாவலுக்காக சோழர்கள் ஆண்ட பல பகுதிகளுக்கு கல்கி பயணம் செய்தார். தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர் மற்றும் இலங்கைக்கு பயணித்தார்.
அவருடன் மணியன் என்ற ஓவியரும் சென்றார். கல்கி இதழில் வெளியான அனைத்து சித்திரங்களையும் பொன்னியன் செல்வனின் நாவலுக்காக வரைந்தவர் மணியன். இந்நாவல் 2,400 பக்கங்கள் கொண்டது. இது 5 பகுதிகளாக எழுதப்பட்டது.
கே.ஜி.எஃப் 2 திரைப்படம்
‘பாக்ஸ் ஆபிஸ்’ வசூலை உலுக்கி, பாலிவுட்டில் புயலைக் கிளப்பிய படம் கேஜிஎஃப். இதன் இரண்டாம் பாகமாக கேஜிஎஃப் 2 படத்தை பிரஷாந்த் நீல் தயாரித்து வெளியிட்டார்.
தங்கச் சுரங்கப் பேரரசான நாராச்சியை மும்பை நகரத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண சிறுவன் எப்படிக் கைப்பற்றினான் என்பதை கே.ஜி.எஃப் 1-இல் பார்த்தோம்.
சாம்ராஜ்ஜியத்தை வென்ற பிறகு என்ன நடந்தது என்பதை இரண்டாம் பாகத்தில் இயக்குநர் காட்டினார்.
கார்த்திகேயா 2
இந்து புராணங்களில் பல கதாபாத்திரங்கள் உள்ளன. எண்ணற்ற ஆச்சரியங்கள் அக்கதாபாத்திரங்களைச் சுற்றித் தோன்றும்.
அவர்களைப் பற்றிப் பல கேள்விகளும் கதைகளும் உள்ளன. பல இயக்குநர்கள் இதிகாசங்களை வைத்து திரைப்படங்களை எடுத்துள்ளனர்.
கார்த்திகேயா 2 படமும் அப்படிப்பட்ட கதைதான். துவாரகை என்ற பெரிய நகரம் தண்ணீரில் மூழ்கியதாக இந்து புராணங்கள் கூறுகின்றன.
“இது உண்மைதான்” என்று தொல்லியல் துறை விஞ்ஞானிகள் சிலர் கூறுகின்றனர். மூழ்கிய துவாரகையில் பல மர்மங்கள் மறைந்துள்ளன.
துவாரகையைச் சுற்றிப் பல கேள்விகள் உள்ளன.
அதில் ஒரு கேள்வி… "கிருஷ்ணரின் கால் விரல்கள் குறித்தது."
அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் புராணப் புதையலைத் தேடி கதாநாயகர் களம் இறங்கினால் எப்படி இருக்கும் என்பதுதான் இந்தப் படத்திபடத்தின் கதை.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)