You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அந்தகன்: நடிகர் பிரசாந்துக்கு 'கம்-பேக்' படமாக அமைந்ததா?
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
இந்தியில் தபு நடித்து வெளிவந்த 'அந்தாதூன்' திரைப்படத்தின் ரீ-மேக்கான 'அந்தகன்' திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. அந்தப் படம் குறித்து ஊடகங்கள் என்ன சொல்கின்றன?
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தபு, ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்த 'அந்தாதூன்' திரைப்படம், 2018-ஆம் ஆண்டில் வெளியானது. ஆகாஷ் ஷராஃப் மற்றும் சிமி ஆகிய இரண்டு முக்கியப் பாத்திரங்களை மையமாகக் கொண்டு இந்தக் கதை உருவாக்கப்பட்டிருந்தது.
பியானோ கலைஞரான ஆகாஷ், கண் தெரியாதவரைப் போல நடிக்கிறார். ஒரு தருணத்தில் சிமி தன் காதலனோடு சேர்ந்துகொண்டு, கணவரைக் கொலை செய்திருப்பதைப் பார்த்துவிடுகிறார். ஆனால், தொடர்ந்து கண் தெரியாதவரைப் போல நடிக்கிறார். ஆனால், சிமிக்கு சந்தேகம் வந்துவிடுகிறது.
இதற்குப் பிறகு நடக்கும் திருப்பங்களே கதை. ஆகாஷ் ஷராஃபாக ஆயுஷ்மான் குரானாவும் சிமியாக தபுவும் நடித்திருந்தனர். இவர்கள் தவிர, ராதிகா ஆப்தேவும் படத்தில் இடம்பெற்றிருந்தார்.
'சுவாரசியமான திரைக்கதை'
இந்தியில் 'அந்தாதூன்' படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய சாதனையைப் படைத்தது.
தமிழில் இப்படத்தின் ரீ-மேக் வெளியாவதற்கு முன்பாவே, தெலுங்கில் நிதின், தமன்னா ஆகியோர் நடிப்பில் 'மாஸ்ட்ரோ' என்ற பெயரிலும் மலையாளத்தில் பிருத்விராஜ், மம்தா மோகன்தாஸ், ராஷி கண்ணா ஆகியோர் நடிப்பில் 'ப்ரமம்' என்ற பெயரிலும் ரீ-மேக் செய்யப்பட்டது.
இந்தப் படத்தை தமிழில் ரீ-மேக் செய்வதற்கான உரிமையை 2019-இல் நடிகரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் வாங்கினார். ஆரம்பத்தில் வேறு இயக்குநர்கள் இதனை இயக்குவதாக இருந்தது. பிறகு, படத்தை தியாகராஜனே இயக்க முடிவுசெய்தார்.
படத்தின் திரைக்கதையை தியாகராஜனும் பட்டுக்கோட்டை பிரபாகரும் சேர்ந்து எழுதினர். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
அந்தகன் படத்தில் ஆயுஷ்மான் குரானா நடித்திருந்த பாத்திரத்தில் பிரசாந்தும், தபு நடித்திருந்த பாத்திரத்தில் சிம்ரனும் நடித்திருக்கிறார்கள். ராதிகா ஆப்தே நடித்திருந்த பாத்திரத்தில் ப்ரியா ஆனந்த் நடித்திருக்கிறார். கார்த்திக், சமுத்திரக்கனி, ஊர்வசி, யோகிபாபு, கே.எஸ். ரவிக்குமார் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்.
"நல்ல நகைச்சுவைக் காட்சிகளுடனும் சுவாரசியமான திரைக்கதையையும் கொண்டுள்ள அந்தகன் திரைப்படத்தை கண்டிப்பாகத் திரையரங்குகளில் கண்டுகளிக்கலாம்," என்கிறது தினமணி நாளிதழின் விமர்சனம்.
வன்முறைக் காட்சிகள் எப்படி உள்ளன?
"விறுவிறுப்பான கதையும் படமெங்கும் காமெடி காட்சிகளும் நீண்ட நாள்களுக்குப் பின் நல்ல திரை பொழுதுபோக்கு அனுபவத்தைத் தருகின்றன. இந்தியில் 'அந்தாதூன்' திரைப்படம் பார்த்திருந்தீர்களானால் இந்த படத்தின் உண்மையான சுவாரசியம் குறைய வாய்ப்பு உள்ளது.
"ஏனெனில் ஆரம்பம் முதல் கடைசி வரை அப்படியே மாறாமல் எடுக்கப்பட்டுள்ளது இந்த 'அந்தகன்'. ஆனால் 'அந்தாதூனி'ல் ஹீரோவை அறிமுகப்படுத்தும் விதத்திலிருந்த அழகும், ஹீரோயின் உடனான யதார்த்த அறிமுகமும் இருவருக்குமிடையே மெதுவாக உண்டாகும் நெருக்கமும் அந்தகனில் 'மிஸ்' ஆகின்றன எனலாம். ஆனால் அது மிகப்பெரிய குறையாகத் தெரியவில்லை.
படத்தில் கொலை, சண்டைக் காட்சிகள் இடம்பெற்றாலும், தற்போது வலம்வரும் முகம் சுழிக்கும் கொடூரக் காட்சிகள் எதுவும் இடம்பெறாதது பாராட்டுக்குரியது. வன்முறையை ரசித்துக் காண்பிக்கும் போக்கை தொடராததற்கு இயக்குநர் தியாராஜனுக்கு பாராட்டுகள்," என்கிறது தினமணி.
இது பிரசாந்தின் ‘கம் பேக்’ படமா?
மேலும், "கதையின் நாயகனாக பிரசாந்த் நன்றாக நடித்துள்ளார். கண் தெரியாதவர்களைப் போன்ற கமர்ஷியல் நடிப்பும், கொலையாளிகளிடம் பயத்தைக் காட்டிக்கொள்ளாமல் நடிப்பதும், அவர்களிடமிருந்து தப்பித்தவுடன் அவரின் பயந்த நடிப்பும், நடிப்பில் அவரது கம்-பேக்கை உறுதி செய்கின்றன.
"சிம்ரன், பிரியா ஆனந்த ஆகியோர் தேவையான நடிப்பை வழங்கி கவனம் பெறுகின்றனர். சிம்ரனின் நடிப்பு ஆங்காங்கே அதிகமாக இருந்தாலும், கதை நகர நகர அவரும் கச்சிதமான நடிப்பால் கவர்கிறார்.
"யோகிபாபு, ஊர்வசி காம்போவும், கம்பீரமான போலீஸாக வரும் சமுத்திரக்கனியும் அவரது மனைவியாக வரும் வனிதா விஜய்குமார் காம்போவும் போட்டிபோட்டு திரையரங்கை குலுங்கவைக்கின்றனர்," என்கிறது அந்த நாளிதழ்.
ஆனால், "இசைக் கலைஞராக வலம் வரும் கதாநாயகனுக்கு ஏற்ற பாடல்களை இசையமைப்பாளர் வழங்கவில்லை. கதையில் இசையும் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில் படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் தனித்துவம் பெற்றதாக இல்லை.
ஹீரோவின் இசைத் திறமையைப் பார்த்து பலர் பாராட்டும் காட்சிகளில் 'இந்த பாட்டுக்கு ஏன் இவ்ளோ பாராட்டு’ என எண்ணத் தோன்றுகிறது," என்றும் தினமணி விமர்சித்துள்ளது.
மற்ற நடிகர்களின் நடிப்பு எப்படி?
டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ், 'அந்தாதூன் படத்தின் துல்லியமான ரீ -மேக்' என இந்தப் படத்தைக் குறிப்பிட்டிருக்கிறது.
"காட்சியமைப்பு, இசை, உடல் பாணிகள் ஆகியவற்றின் மூலம் திரைக்கதையில் மர்ம உணர்வை ஏற்படுத்துகிறார் இயக்குநர் தியாகராஜன். ஒளிப்பதிவு குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. குறிப்பாக நாயகனின் பார்வை கேள்விக்குள்ளாகும் காட்சிகளில் பார்வையாளர்களின் கண்ணோட்டத்துடன் விளையாடும் புத்திசாலித்தனமான ஃப்ரேமிங் ரசிக்க வைக்கிறது. யோகி பாபு, ஊர்வசி ஆகியோரின் நகைச்சுவை, போலீஸாக வரும் மனோபாலாவின் 'டைமிங்' வசனங்கள் ஆகியவை பதற்றமான திரைக்கதைக்கு நெகிழ்ச்சியை வழங்குகின்றன," என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா.
பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, கே.எஸ். ரவிக்குமார் ஆகியோர் சிறப்பான நடிப்பை வழங்கியிருப்பதாகச் சொல்லும் 'டைம்ஸ் ஆஃப் இந்தியா', கார்த்திக் சிறிது நேரமே வந்தாலும் படத்திற்கு விறுவிறுப்பேற்றுகிறார் எனக் குறிப்பிட்டுள்ளது.
சஸ்பென்ஸ் மற்றும் நகைச்சுவையின் கலவையாக வெளிவந்துள்ள 'அந்தகன்', படம் நெடுக பார்வையாளர்களின் ஈடுபாட்டைத் தக்க வைக்கிறது என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா பாராட்டியுள்ளது.
குறைகள் என்ன?
ஒரிஜினல் திரைப்படத்திற்கு இணையாக எடுக்கப்பட்ட ஒரு சில திரைப்படங்களில் 'அந்தகன்' திரைப்படமும் ஒன்று என இந்தியா டுடே இதழ், இந்தப் படத்தைப் பாராட்டியுள்ளது.
"பெரும் வெற்றிபெற்ற ஒரு திரைப்படத்தை ரீ-மேக் செய்வது எளிதான காரியமல்ல. ஒரிஜினல் படத்தோடு ஒப்பிடப்படும் என்பதோடு, அந்தப் படம் ஏற்படுத்திய தாக்கத்தை ஏற்படுத்துவதும் கடினம். 2021-இல் வெளியான தெலுங்கு ரீ -மேக்கான 'மாஸ்ட்ரோ' நல்ல வரவேற்பைப் பெற்றது. 'அந்தகன்' திரைப்படம் சற்றுத் தாமதமாக வெளியானாலும் பல விஷயங்களில் சரியாக அமைந்திருக்கிறது.
"அந்தகன் திரைப்படம், ஒவ்வொரு காட்சியும் துல்லியமாக ரீ - மேக் செய்யப்பட்ட ஒரு படம். அதனாலேயே இந்தப் படம் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பல ஆண்டுகளாகத் தயாரிப்பில் இருந்தாலும், நடிகர்களின் நடிப்பாலும் சிறந்த தயாரிப்பாலும் 'அந்தகன்' ஒரு புத்துணர்வைத் தரும் படமாக அமைந்திருக்கிறது. 'அந்தாதூன்' படத்தைப் பார்க்காதவர்களுக்கு, இந்த தமிழ் ரீ - மேக், நிறைய திருப்பங்களுடன் கூடிய ஒரு த்ரில்லராக அமையும்" என்கிறது இந்தியா டுடே.
மேலும், நடிகர்களின் தேர்வும் மிகச் சிறப்பாக இருப்பதாக இந்தியா டுடே பாராட்டியுள்ளது. "அந்தாதூன் படத்தின் சாரத்தை இயக்குநர் தியாகராஜன் இந்தப் படத்தில் தக்க வைத்துள்ளார். மிகச் சிறப்பான நடிகர்களை நடிக்க வைத்ததன் மூலம் கூடுதல் பாராட்டுதல்களையும் பெறுகிறார். நாயகனான கிருஷ்ஷின் பாத்திரத்தில் சிறப்பாகப் பொருந்துகிறார் பிரசாந்த். பல ஆண்டுகளாக தமிழ்த் திரையில் தோன்றாமலிருந்த பிரசாந்த்திற்கு இந்தப் படம் பொருத்தமான ஒரு 'கம் - பேக்'. தபு நடித்த பாத்திரத்திற்கு சிம்ரன் மிகச் சரியான தேர்வு. ராதிகா ஆப்தேவின் பாத்திரத்தில் ப்ரியா ஆனந்த் நன்றாகப் பொருந்துகிறார்.
"மூத்த நடிகரான கார்த்தி, 90-களில் வந்த அவரது திரைப்படங்களை நினைவூட்டுகிறார். மனோவாக வரும் சமுத்திரக்கனியின் பாத்திரமும் சிறப்பாக இருக்கிறது. யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ். ரவிக்குமார் ஆகியோரின் நடிப்பும் ரசிக்கத்தக்கதாக இருக்கிறது.
"ஆனால், திருமணம் தாண்டிய உறவுக்கு பெண்களைக் குறை சொல்வது, அவர்களை அதற்காக மோசமாகச் சித்தரிப்பது போன்ற சில குறைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், இந்தத் திரைப்படம் ஒரு ரசித்து, மகிழத்தக்க படம்," என்கிறது அந்த இதழின் விமர்சனம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)