You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வயநாடு: காத்திருக்கும் ஆபத்துகள், மலைமீது மோதும் மேகங்கள் - என்னதான் தீர்வு? எச்சரிக்கும் நிபுணர்கள்
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
கடந்த சில ஆண்டுகளில் கேரளாவின் வயநாட்டில் தொடர்ந்து நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. நிலப் பயன்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் தவிர, காலநிலை மாற்றமும் இதற்கு முக்கியக் காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் ஜூலை மாத இறுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 350-ஐ நெருங்கி வருகிறது. இந்த நிலச்சரிவில் முண்டகை, சூரல்மலை பகுதியில் இருந்த வீடுகள், கட்டடங்களின் பெரும்பகுதி மொத்தமாக அடித்துச் செல்லப்பட்டிருக்கிறது.
ஆனால், வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பாகவும் பல முறை நிலச்சரிவு ஏற்பட்டு, பலர் உயிரிழந்திருக்கிறார்கள். அதுவும் கடந்த சில ஆண்டுகளில் நிலச்சரிவின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்திருக்கிறது.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
வயநாட்டில் கடந்த சில ஆண்டுகளில் நடந்த நிலச்சரிவுகள்
ஆகஸ்ட் 8, 2019: வயநாட்டின் மேப்படி பகுதிக்கு அருகிலுள்ள புத்துமலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கிருந்து 290 மீட்டர் உயரத்தில் இருந்த மலையில் சுமார் 20 ஹெக்டேர் நிலம் சரிந்து விழுந்தது. நிலச்சரிவுக்கு முந்தைய 24 மணிநேரத்தில் 25.9 செ.மீ. மழை பதிவாகியிருந்தது. இது நிலச்சரிவுக்குக் காரணமாக அமைந்தது. இந்த நிலச்சரிவில் 100 ஏக்கர் தேயிலைத் தோட்டம் அடித்துச் செல்லப்பட்டது. இதில் 12 பேர் கொல்லப்பட்டனர். ஐந்து பேர் காணாமல் போயினர்.
ஆகஸ்ட் 9, 2018: அந்த ஆண்டு ஆகஸ்ட் 8, 9ஆம் தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக வயநாட்டின் குறிச்சியார்மலை பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. வைத்திரி, மக்கிமலை, வெள்ளாரம்குன்னு, பால்சுரம் ஆகிய பகுதிகளிலும் நிலச்சரிவு இருந்தது.
வழக்கமாகப் பெய்வதைவிட இருமடங்கு அதிகமாகப் பெய்த மழை இந்த நிலச்சரிவுக்குக் காரணமாக அமைந்தது. இதில் வெவ்வேறு இடங்களில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
ஆகஸ்ட் 7, 2020: இந்த ஆண்டில் பெய்த கனமழையின் காரணமாக முண்டகை பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பலர் இடமாற்றம் செய்யப்பட்டதால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
ஜூலை 1, 1984: இந்த ஆண்டு முண்டகை பகுதியில் ஒரு நிலச்சரிவு ஏற்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து 1,240 மீட்டர் உயரத்தில் இந்த நிலச்சரிவு துவங்கியது. அருணபுழா ஆற்றின் வழியாக இந்த நிலச்சரிவால் ஏற்பட்ட மண் அடித்து வரப்பட்டு, வழியில் இருந்த பகுதிகளை நாசமாக்கியது. 14 பேர் இதில் உயிரிழந்தார்கள். அப்போதும் அதீதமான மழைப்பொழிவால்தான் நிலச்சரிவு ஏற்பட்டது. 24 மணிநேரத்தில் 34 செ.மீ. மழை அங்கு பதிவானது.
வயநாட்டில் ஏன் இப்படி நடக்கிறது?
நிலச்சரிவுகளைப் பொறுத்தவரை, கேரளாவின் வயநாட்டில் மட்டுமல்ல மழைக் காலத்தில் இந்தியா முழுவதுமே நடக்கிறது என்றாலும் இங்கு ஏற்படும் நிலச்சரிவின் தாக்கம் அதிகமாக இருப்பதோடு, உயிரிழப்புகளும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருக்கின்றன.
இப்பகுதியில் நிலச்சரிவு ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் காலநிலை மாற்றம்தான் என்கிறார் ‘ஹூம் சென்டர் ஃபார் ஈக்காலஜி’யின் இயக்குநரான சி.கே. விஷ்ணுதாஸ்.
"இப்படி நிலச்சரிவுகள் நடப்பதற்கு முக்கியமான காரணம், காலநிலை மாற்றம்தான். கடந்த பத்து ஆண்டுகளில் காலநிலை மாற்றத்தால் மழை பெய்யும் விதமே முற்றிலுமாக மாறியிருக்கிறது. எங்கள் சென்டர் மூலம் 200 இடங்களில் மழைமானிகளைப் பொறுத்தியிருக்கிறோம். அதை வைத்து இதனைத் தெளிவாகச் சொல்ல முடியும்,” என்கிறார்.
மேலும், “காலநிலை மாற்றத்தின் காரணமாகத் தென்கிழக்கு ஆசியப் பகுதிகள் முழுவதுமே அதிக மழையை எதிர்கொள்கின்றன. குறிப்பாக அரபிக் கடல் பகுதி அதிக வெப்பமடைகிறது. இதனால் மிகப்பெரிய செங்குத்தான மேகங்கள் உருவாகின்றன. 2 கி.மீ. உயர மேகங்கள் உருவாகி, மேகவெடிப்பும் அடிக்கடி நிகழ்கிறது. இந்தப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட இதுவொரு முக்கியக் காரணம்," என்கிறார் சி.கே. விஷ்ணுதாஸ்.
அதுதவிர முண்டகைக்கே உரித்தான மலை அமைப்பும், அதீதமான மழைப் பொழிவும் நிலச்சரிவுக்கும் காரணமாக அமைகிறது என்கிறார் அவர்.
"முண்டகை பகுதியில் ஒட்டகத்தின் முதுகுபோன்ற மலையமைப்பு இருக்கிறது. அரபிக்கடல் பகுதியில் உருவாகும் மேகங்கள் இதில் மோதுவதால், அந்தப் பகுதி அதிக மழைப்பொழிவைப் பெறுகிறது," என்கிறார் விஷ்ணுதாஸ்.
நிலப் பயன்பாட்டில் மாற்றம்
வயநாட்டைச் சேர்ந்த சூழலியலாளரான என். பாதுஷா, வேறு சில காரணங்களை முன்வைக்கிறார்.
"வயநாட்டில் நிலச்சரிவுகள் அதிகரிப்பதற்கு முக்கியமான காரணம், நிலப் பயன்பாடு மாறியதுதான். உள்ளூர் ஆட்சியாளர்களிடம் இருந்து நிலத்தை வாங்கிய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மலையின் உச்சிப் பகுதியில் ஏதும் செய்யவில்லை. அதற்குக் கீழே இருந்த பகுதிகளில் ஏலக்காய் பயிர் செய்தனர். அதற்கும் கீழே உள்ள பகுதிகளில் தேயிலை பயிர் செய்தனர்,” என்கிறார்.
மேலும், “இந்தியா சுதந்திரமடைந்த பிறகு, இந்தப் போக்கு முழுவதுமாக மாறியது. ஏலக்காய் பயிர்கள் இருந்த இடங்களில், அந்தப் பயிர்கள் மாற்றப்பட்டு, அங்கும் தேயிலை பயிரிடும் போக்கு துவங்கியது.
இந்த நிலையில், 1971இல் The Private Forest (Vesting and Assignment) Act என்ற ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. இது தனியார் காடுகளை அரசு கையகப்படுத்த வழிவகுத்தது. ஆனால், அந்தச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு, காடுகளைத் தனி உடைமையாக வைத்திருந்தவர்கள் நிலத்தைத் தங்கள் வசமே வைத்துக்கொள்ள தங்கள் வசமிருந்த காடுகளில் இருந்த மரங்களை வெட்டித் தள்ளினர்,” என்கிறார்.
“இதற்குப் பிறகு, கடந்த 25 ஆண்டுகளாக இந்தப் பகுதியில் சுற்றுலா பிரபலமாக ஆரம்பித்தது. இதனால், மலை முகடுகளில் எல்லாம் சுற்றுலா விடுதிகள், விளையாட்டு அரங்கங்கள், சட்டவிரோத கட்டுமானங்கள் போன்றவை வர ஆரம்பித்தன. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பே இது துவங்கியது என்றாலும் கடந்த பத்தாண்டுகளில் இது மிக வேகமாக அதிகரித்தது," என்கிறார் பாதுஷா.
வயநாடு பகுதியில் நிலப் பயன்பாடு மாறியதும் நிலச்சரிவால் ஏற்படும் சேதம் அதிகரிப்பதற்கு முக்கியக் காரணம் என பாதுஷா சொல்வதை வழிமொழிகிறார் விஷ்ணுதாஸ்.
"வயநாட்டைப் பொறுத்தவரை, பிற மலைகளைப் போலன்றி மண் அளவு அதிகம். அதாவது பாறைக்கு மேல், 11 - 15 மீட்டர் உயரத்திற்கு மண் இருக்கிறது. பல இடங்களில் முழு மலையுமே மண்ணால் ஆனது.
மழை தொடர்ந்து பெய்யும்போதோ, பெரிய அளவில் பெய்யும்போதோ, அவை மண்ணுக்குள் இறங்கி வெளியேறுகின்றன. ஆனால், ஓரிடத்தில் மண்ணை வெட்டி, அங்கு கட்டடம் கட்டிவிட்டால் நீர் வெளியேறுவது நின்று, அந்த நிலப்பகுதியில் நீர் சேர ஆரம்பிக்கிறது. அது அந்தப் பகுதியை நிலையற்றதாக மாற்றிவிடுகிறது," என்கிறார் விஷ்ணுதாஸ்.
''பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மலைச்சரிவுகளில் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன என்றாலும் பள்ளத்தாக்குப் பகுதிகளில் குளங்கள், புதர்கள் போன்றவையே இருந்தன. ஆனால், தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கப்பட்ட பிறகு அதில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்காக பள்ளத்தாக்குப் பகுதிகளில் வீடுகள் கட்டப்பட்டன. தோட்டங்கள் அதிகரிக்க அதிகரிக்க, மக்கள் தொகையும் அதிகரித்தது. இது தவிர, கடந்த 15 ஆண்டுகளில் சுற்றுலா சார்ந்து பெரிய அளவிலான முதலீடுகள் இந்தப் பகுதியில் செய்யப்பட்டிருக்கின்றன'' என்கிறார் அவர்.
இதற்கு உதாரணமாக புத்துமலை நிலச்சரிவு, ஒரு தேயிலைத் தோட்டத்தின் எல்லையில் துவங்கியதைச் சுட்டிக்காட்டுகிறார் அவர்.
"தேயிலைத் தோட்டங்கள் நிலத்தை பிடித்து வைப்பதில்லை," என்கிறார் விஷ்ணுதாஸ்.
இதற்கு என்னதான் தீர்வு?
"காலநிலை மாற்றம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. காலநிலை மாற்றத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்படும் பகுதியாக வயநாடு மாறிவிட்டது. இங்கு பள்ளத்தாக்குப் பகுதிகளில் வசிப்பவர்களை வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். அல்லது தற்காலிக குடியிருப்புகளைக் கட்டி, மழைக் காலத்திலாவது அவர்களை அங்கே தங்க வைக்க வேண்டும். அடுத்ததாக, சிறப்பான மழை கண்காணிப்பு மையங்களையும் முன்கூட்டியே எச்சரிக்கை அளிக்கும் அமைப்புகளையும் உருவாக்க வேண்டும். அதற்கு இதுதான் சரியான தருணம்," என்கிறார் விஷ்ணுதாஸ்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)