'குழந்தையின் சடலம் என நினைத்தேன்; ஆனால் வயது 47' - வயநாட்டில் பிபிசி செய்தியாளர் கண்டது என்ன?

(வயநாடு நிலச்சரிவு குறித்து கடந்த மூன்று தினங்களாக அங்கு செய்தி சேகரித்து வரும் பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன் தான் நேரில் கண்ட அனுபவங்களை இங்கு வழங்குகிறார்.)

நானும் ஒளிப்பதிவாளர் ஜனார்த்தனன் மாதவனும் புதன்கிழமை காலை வயநாட்டுக்கு சென்றோம். நிலச்சரிவில் முதன்மையாக பாதிக்கப்பட்ட இரண்டு பகுதிகள் சூரல்மலை மற்றும் முண்டகை. தமிழ்நாட்டிலிருந்து வயநாட்டுக்கு செல்லும் போது முதலில் சூரல்மலை தான் வரும். நிலச்சரிவு பேரழிவின் கோரத்தாண்டவம் நிகழ்ந்த மூன்றாம் நாள் அது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் அதிகளவில் வரத்தொடங்கியிருந்தன.

சூரல்மலையில் பெரும்பாலான வீடுகள், கடைகள் என எல்லாமே அவை இருந்த சுவடுகூட இல்லாமல் நிலச்சரிவில் காணாமல் போயிருந்தன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சூரல்மலையிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் முண்டகை பகுதி உள்ளது. சூரல்மலையில் உள்ள பாலம் வாயிலாகத்தான் முண்டகைக்கு செல்ல முடியும். ஆனால், அந்த பாலம் அடித்துச் செல்லப்பட்டதால், சூரல்மலையிலிருந்து முண்டகைக்கு செல்ல முடியாத நிலை இருந்தது. (தற்போது அங்கே தற்காலிக பாலம் கட்டப்பட்டுள்ளது.)

அந்த பாலம் இருந்த இடத்திற்கு சென்று பார்த்தால் மிகவும் கொடூரமாக இருந்தது. மீட்புப் பணிகளில் ஈடுபடுவோர் மட்டுமே சென்றுவர முடிந்தது. ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்டோர் கயிறு கட்டி ஆற்றை கடந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஊடகவியலாளர்கள் அவ்வழியாக முண்டகை கிராமத்திற்கு செல்ல முடியாத நிலை இருந்தது. அதனால், முண்டகையில் என்ன நடக்கிறது என்பதை எங்களால் அப்போது அறிய முடியவில்லை.

ஆனாலும், சூரல்மலையில் நாங்கள் கண்ட காட்சிகளே இந்த இயற்கை பேரிடரின் துயரத்தை விவரிக்க போதுமானவையாக இருக்கின்றன.

உயிருடன் மீட்கப்பட்டவர்களின் நிலை

சூரல்மலையில் பெரும்பாலான வீடுகள் முழுவதும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. அங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள மேப்பாடி அரசு மருத்துவமனையில் தான் இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்தன. அங்கு தங்களின் அன்புக்குரியவர்களின் உடல்கள் இருக்கின்றனவா என தேடி வருபவர்களின் துயரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

காணாமல் போன உறவினர்களின் புகைப்படங்களுடன் அங்கு வருபவர்களை கண்கொண்டு காண முடியாத நிலைதான் இருந்தது.

அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள அரசுப்பள்ளியில் தான் நிலச்சரிவிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் பலர் தங்கள் உறவினர்களை இழந்தவர்கள்.

சான்றிதழ்கள், பணம், பொருட்கள், தங்களின் கடைகள், வீடுகள் என அனைத்தையும் இழந்தவர்கள் அவர்கள். எதுவுமே இல்லாமல் தங்களது வாழ்க்கையை பூஜ்யத்தில் இருந்து தொடங்க வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். கையில் பணம் இல்லாமல் தங்கள் உறவினர்களை கூட தேட முடியாத நிலை அவர்களுடையது.

வேதனையை மறைத்து மீட்புப்பணி

இரவு நேரத்தில் ஒருவர் இறந்த உடல் ஒன்றை ஏந்தியபடி சென்றுகொண்டிருந்தார். அவருடைய கையில் இருந்த உடல் குழந்தையுடையது என நினைத்து, ‘என்ன குழந்தை, என்ன வயது?’ என கேட்டேன். அப்போதுதான் தெரிந்தது அந்த உடல் குழந்தையுடையது அல்ல, 47 வயதான ஆண் ஒருவருடையது என்று. பாதி மட்டுமே அவரது உடல் கிடைத்ததால் அந்த அளவில் இருந்துள்ளது. தன் உறவினரின் பாதி உடலை மட்டுமே சுமந்து சென்றவருக்கு எவ்வளவு துயரமாக இருந்திருக்கும்?

பாலம் அடித்துச் செல்லப்பட்டிருந்ததால், முண்டகையில் இருந்து சூரல்மலைக்கு நடந்து வந்துகொண்டிருந்தோம். அப்போது வந்த ஒரு ஜீப்பில் இருந்தவர்கள் எங்களை ஏற்றிக்கொண்டனர். எனக்கு அருகில் மீட்புப்பணியில் ஈடுபட்ட ஒரு வீரர், முண்டகையை சேர்ந்தவர். நிலச்சரிவில் சிக்கிய அவருடைய சகோதரியின் சடலம் இன்னும் கிடைக்கவில்லை. தன் வலியை பொருட்படுத்தாமல் அவர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகிறார்.

“நம்பிக்கை இழக்காதீர்”

திங்கட்கிழமை நள்ளிரவில் நிலச்சரிவு ஏற்பட்ட போது, அதில் சிக்கிக் கொண்ட ஒருவர் உடனடியாக தாசில்தாரை மொபைல் வாயிலாக அழைத்துள்ளார். அப்போது, “நம்பிக்கை இழக்காதீர்” என தாசில்தார் கூறியுள்ளார். மொபைல் இணைப்பை துண்டித்த 20 நிமிடங்களில், நள்ளிரவு 2.15 மணிக்கெல்லாம் தீயணைப்பு வாகனங்களுடன் மீட்புப்படையினர் வந்துள்ளனர்.

நிலச்சரிவிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டவர்கள் தங்கியிருக்கும் முகாமில் படுக்கை, உணவு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளை சேர்ந்தவர்களும் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள சிலருக்கு தகவல் பரிமாற்றத்திற்காக செல்போனும் தரப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை அன்று சடலங்கள் அவ்வளவாக மீட்கப்படவில்லை. உடல்கள் மீட்கப்படுவது படிப்படியாக குறைந்து வருகிறது. இனி வரும் நாட்களில் உயிருடன் இருப்பவர்கள் குறித்த சமிக்ஞைகள் ஏதும் உள்ளதா என்பதை அறியும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபடுவார்கள் என நினைக்கிறேன்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)