You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வயநாடு நிலச்சரிவு: தொடரும் மீட்புப் பணி - இரண்டாவது நாள் நிலவரத்தை காட்டும் புகைப்படங்கள்
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கனமழை மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மேப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜூலை 30ம் தேதி அன்று அதிகாலை அடுத்தடுத்து நிகழ்ந்த நிலச்சரிவில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் மண்ணோடு மண்ணாக புதையுண்டனர். மூன்று கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடுமையான பாதிப்புகளையும் சந்தித்துள்ளனர்.
ராணுவம், பேரிடர் மீட்புப் படையினர், மாநில தீயணைப்புத் துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு தமிழ்நாடு, சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளன.
வயநாட்டில் தொடர் மழை மற்றும் நிலச்சரிவு பெரும் அதிர்ச்சியை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. மன உளைச்சலுக்கு ஆளான நபர்கள் தங்களுக்கான ஆலோசனைகளை பெற 24 மணி நேர ஆலோசனை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
அலைபேசி மூலம் இந்த உதவிகளை பெற்றிட, டெலி மானாஸ் மையத்தை 14416 என்ற எண்ணிலும், மாநில கட்டுப்பாட்டு மையத்தை 0471-2303476 & 2300208 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மன நல ஆலோசனைகள் தேவைப்படும் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை 1098 எண்ணிலும் பெறலாம்.
பாலம் உடைந்து தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில், இந்திய ராணுவத்தின் பொறியாளர்கள் தற்காலிக பாலம் அமைத்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்ற இந்த தருணத்தில், டெலிபோன் மற்றும் மின் இணைப்பு தரும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது கேரள அரசு. சூரல்மலை பகுதிவரை மின் இணைப்புகளை சீர் செய்து தருவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
அமைச்சர்கள் அளவில் இன்று வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் சூரல்மலை பகுதியில் தற்காலிக மருத்துவ முகாம் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அனைத்துவிதமான அடிப்படை வசதிகளும் அங்கே உள்ள மக்களுக்கு ஏற்படுத்தி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து அமைச்சர்களை உள்ளடக்கிய மேற்பார்வை குழு உருவாக்கப்பட்டுள்ளது. வனத்துறை அமைச்சர் ஏ.கே. சசீந்திரன், அமைச்சர் ராமச்சந்திரன், வருவாய், பொதுப்பணி மற்றும் பட்டியல் இனம், பட்டியல் பழங்குடி துறை அமைச்சர்கள் தற்போது வயநாட்டில் மக்களுக்கு தேவையான உதவிகளை நேரில் செய்து வருகின்றனர்.
சூரல்மலையில் தற்காலிக பாலம் மூலம் 700 பேரை தீயணைப்புத் துறையினர் மீட்டுள்ளனர்.
மேப்பாடியில் இருந்து முண்டகை மற்றும் சூரல் மலை செல்வதற்கான சாலைகள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடுமையாக சேதமடைந்துள்ளன.
ராணுவம், பேரிடர் மீட்புப் படையினர், மாநில தீயணைப்புத் துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)